Monday, September 14, 2015

விரும்பாமல் சென்று.. விரும்பிய டர்பன்..! - 30

ஆரம்பம் என்று ஒன்றிருந்தால் அதற்கு முடிவு என்ற ஒன்று தவிர்க்க முடியாதது. அதே போலத்தான் பயணமும். சுற்றுப் பயணம் செய்து விட்டு அங்கேயே இருந்து விட முடியுமா? ஊர் திரும்பி சகஜமான பணிகளில் மீண்டும் மூழ்கத்தானே வேண்டும்?


எனது தென்னாப்பிரிக்கப் பயணமும் இறுதி நாளை எட்டியது. ஏப்ரல் 9ம் தேதி காலை 8 மணிக்கு டர்பனிலிருந்து ஜொஹான்னஸ்பெர்க் பயணம் செய்து அங்கு 2 மணி நேரம் காத்திருந்து எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் எடுத்து எத்தியோப்பிய தலை நகரான அடிஸ் அபாபா வந்தடைந்தேன். ஏறக்குறைய 3 மணி நேரங்கள் அங்கு காத்திருந்து அடுத்த விமானத்தில் ஃப்ராங்பர்ட் வந்தடைந்தது நான் பயணித்த விமானம்.நான் கொண்டு வந்திருந்த "பண்டைத் தமிழக வரைவுகளும் குறியீடுகளும்" என்ற நூலை வாசித்துக் கொண்டே வந்ததில் பயணக் களைப்புத் தெரியவில்லை. ஜொஹான்னஸ்பெர்க் விமான நிலையத்தில் ரெஸ்டாரண்டில் களைப்பு தீர நல்ல காபியிம் பெரிய மஃப்பினும் வாங்கிச் சாப்பிட்டதும் உடலுக்கு புத்துணர்ச்சி தருவதாக இருந்தது.


​​

தென்னாப்பிரிக்கா மட்டுமன்றி முழுமையான ஆப்பிரிக்க கண்டத்திற்கும் இந்திய நாட்டிற்கும்  அதிலும் குறிப்பாக தமிழகத்திற்கும் நீண்ட நெடிய தொடர்பு  இருக்கின்றது. ஆயினும் இன்று உலக மக்களால் தென்னாப்பிரிக்கத் தமிழர்கள் என்று குறிப்பிடப்படுவோர் ஆங்கிலேய காலணித்துவ ஆட்சியின் போது கரும்புத்தோட்டங்களில் பணிபுரிய வந்த ஒப்பந்தத் தொழிலாளர்களின் வாரிசுகளே. 1860 முதல் ஆரம்பித்த இந்த நிகழ்வு படிப்படியாக தென்னிந்திய மக்கள், அதிலும் குறிப்பாக தமிழர்கள் ஆப்பிரிக்கா புலம்பெயர காரணமாகியது. அதிலும் குறிப்பிடத்தக்க முக்கிய வரலாற்று விஷயமாக நாம் கருத வேண்டிய ஒன்றாக அமைவது,  ஒப்பந்தத் தொழிலாளர்களாக முதலில் டர்பன் வந்தடைந்தவர்கள் அப்போதைய மதராஸிலிருந்து வந்த 342 ஒப்பந்தத் தொழிலாளர்கள் தாம்.

இன்றைய நிலையில் தென்னாப்பிரிக்கத் தமிழர்கள் தொழில் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் நிலையான ஓரிடத்தைப் பெற்றவர்களாக இருக்கின்றனர்.  அரசுப் பணிகளிலும் நாடாளுமன்றத்திலும் இடம் வகிக்கும் நிலையையும் சிலர் பெற்றவர்களாக இருக்கின்றனர். இது தென்னப்பிரிக்கத் தமிழர்கள் தாம் புலம்பெயர்ந்த மண்ணில் காலூன்றி விட்டமையைக் காட்டும் அடையாளங்களாக இருக்கின்றன.

ஆங்காங்கே இருக்கும் இந்து சமய ஆலயங்கள் இத்தமிழ் மக்கள் தங்கள் சமய வழிபாட்டு சடங்குகளையும் பண்பாட்டு விழுமியங்களையும் மறவாமல் வழி வழியாக தமது இளம் தலைமுறையினருக்கும் வழங்குவதில் காட்டும் ஆர்வத்தைப் பிரதிபலிப்பதாகவே உள்ளது. ஆயினும் மனதை உறுத்தும்  ஒரு விசயம் இல்லாமலில்லை.

தென்னாப்பிரிக்கத் தமிழர்களில் விரல் விட்டு எண்ணக் கூடியவர்களே தமிழ் மொழியை ஓரளவேனும் சரளமாகப் பேசக் கூடியவர்களாக இருக்கின்றனர். ஏனையோர் ஒரு சில வார்த்தை பேசுபவர்களாகவும் பெரும்பாலோர் தமிழ் மொழியின் தொடர்பு அற்ற  வகையிலும் இருக்கின்றனர் என்பதுதான் உண்மை நிலவரமாக இருக்கின்றது.

தமிழ் மொழியில் பயிற்சி பெற வேண்டும், பாண்டித்தியம் பெற வேண்டும் என்ற எண்ணமும் ஆர்வமும் இவர்கள் மனதில் ஆழ வேறூன்றி இருக்கின்றது என்பதையும் மறுப்பதற்கில்லை. ஆயினும் எவ்வகையான முயற்சிகள் இவர்களுக்குப் பலனளிக்கும் என்பது தான் மிக முக்கிய விடயமாக இருக்கின்றது. அர்த்தம் புரியாமலேயே தமிழ்ப்பாடல்களைப் பிழையின்றி பாடக்க்கூடியவர்கள் இருக்கின்றனர். தமிழ் சினிமா பாடல்கள் தமிழை இவர்கள் மத்தியில் வழக்கில் தக்க வைக்க  உதவுகின்றன என்பதனை மறுப்பதற்கில்லை.

எளிமையான முறையில் தமிழ் மொழி சொல்லித்தரக்கூடிய வழிமுறைகளை கையாளவேண்டியது அவசியமாகின்றது. இன்னிலையில், பேச்சுத்திறனை வளர்க்கும் வகையிலான தமிழ் மொழி பாடத்தினை திட்டமிட்டு செயல்படுத்த வேண்டியது தான்  அதி முக்கிய, அதி அவசர தேவை என நான் கருதுகின்றேன்.

தென்னாப்பிரிக்காவில் தமிழ் மரபு அறக்கட்டளையின்  கிளை அமைக்கும் செயல்பாட்டினை வித்திட்டு வந்திருக்கின்றேன். அடுத்தடுத்த ஆண்டுகளில் இம்முயற்சி வளர்ந்து வேறூன்றி தென்னப்பிரிக்க தமிழ் மக்களின் வரலாற்றை பதிந்து வைக்கும் முயற்சிகள் செழித்து வளர வேண்டும் என்பதே என் கனவு. அது நடைபெறும்; நம்பிக்கை  உள்ளது!முற்றும் !!

Sunday, September 13, 2015

விரும்பாமல் சென்று.. விரும்பிய டர்பன்..! - 29

தாமரைக் குளம் நிறைய படர்ந்த  இலைகளுடன் தாமரையும் அல்லியும் குளத்தை நிறப்பியதில் அந்தக் காட்சி மனதைக் கொள்ளை கொள்ள,  உடனே ஆங்காங்கே நின்று நண்பர்கள் நாங்கள் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம். ஒரு அழகிய காட்சியைக் காணும் போது அதனோடு நம்மையும் ஐக்கியப்படுத்திக் கொண்ட நிகழ்வை பதிவாக்கி வைக்கவே நாம் எல்லோரும் புகைப்படங்கள் எடுக்கின்றோம். பல நாட்கள் கழிந்து மீண்டும் அதே புகைப்படங்களைக் காண நாம் முயற்சிக்கும் போது அந்த அழகிய இடத்தில் நாம் இருந்த அந்தக் கணங்கள் மனதில் மீண்டும் ஆழ்மனத்திலிருந்து வெளிப்பட்டு நிகழ்காலத்தின் நிகழ்வு போல மனதில் தோன்றி அதே உணர்வுகளை ஏற்படுத்தும். இன்றைக்கு 10 ஆண்டுகளுக்கு முன்னர் ஒப்பிடுகையில் தற்காலத்தில் புகைப்படம் எடுத்தல் என்பது மிக எளிமையான ஒன்றாகத் தான் மாறியுள்ளது. அதிலும் செல்போனிலேயே செல்ஃபி எடுத்துக் கொள்ளும் அளவிற்கு நமக்கு தொழில் நுட்பம் வசதியைக் கொடுத்துள்ளது. இதனால் நமது பயணங்களின் பதிவுகளை நம்மால் தரமானதாகவும் ஆதாரத்தன்மை மிக்க வகையிலும் பதிவாக்கம் செய்ய முடிகின்றது.


போட்டானிக்கல் கார்டன்ஸில் முழுதும் சுற்றிப்பார்த்து நாங்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு வெளியே வருவதற்கும் எங்கள் டாக்ஸி வாசலில் வந்து நிற்பதற்கும் சரியாக இருந்தது. அங்கிருந்து புறப்பட்டு எங்கள் தங்கும் விடுதிக்கு வருவதற்கு முன்னர் அருகாமையில் இருந்த ஷோப்பிங் காம்ப்ளேக்ஸ் சென்று மதிய உணவை எல்லோரும் சேர்ந்து சாப்பிடுவது என்று முடிவு செய்து கொண்டோம்.

அழகான அந்த வர்த்தக மையத்தில் கடைகள் ஒரு புறத்திலும் உணவுக் கடைகள் ஒரு புறத்திலும் எனக் காணமுடிந்தது. நாங்கள் தென் ஆப்பிரிக்க உணவு தான் சாப்பிட வேண்டும் என நான் சொல்லியிருந்தேன். ஆக தென்னாப்பிரிக்க உணவைத் தேடும் பணி எனதானது. அங்கும் இங்கும் சுற்றித் தேடியதில் தென்னாப்பிரிக்காவின் சிறப்பு உணவான பன்னி (Bunny)  விற்கும் ஒரு உணவகத்தைக் கண்டதும் அங்கு நண்பர்களை அழைத்துச் சென்றேன். எல்லோரும் விரும்பிய வகையில் South African Bunny  வாங்கிக் கொண்டு அதனைச் சுவைத்தோம். 

மதிய உணவை முடித்து தங்கும் விடுதி திரும்பியதும் உடன் மலேசிய நண்பர்கள் புறப்பட வேண்டிய நிலை. ஆதலால் மலேசிய நண்பர்கள் அனைவருக்கும் நானும் இந்துவும் கனடா ராஜரட்னமும் பிரியாவிடை சொல்லி டாக்ஸியில் ஏற்றி வழி அனுப்பி வைத்தோம். அதே வேளை எங்கள் மூவரையும் அவர்கள் இல்லத்திற்கு அழைத்துச் செல்ல திரு.திருமதி சின்னப்பன் வந்திருந்தனர். அவர்கள் வாகனத்தில் எங்கள் பயணப்பெட்டிகளை  ஏற்றிக் கொண்டு ஹோட்டலிருந்து அவர்கள் இல்லத்திற்குப் புறப்பட்டோம்.
 


அப்படிப் போகும் வழியில் சிறிது நேரம் டர்பன் கடற்கரைப் பகுதிக்குச் செல்ல விருப்பம் உள்ளதா என கோகி கேட்டது எனக்கு வியப்பளித்தது. காரணம், "அருகாமையில் எல்லா இடங்களையும் பார்த்து விட்டோம். டர்பன் கடற்கரையில் நடந்து இந்தியப் பெருங்கடல் வந்து சேரும் மணல் பகுதியில் கால்வைத்து நடந்து செல்ல மனதில் விருப்பம் இருந்தாலும் நேரம் சரியாக அமையவில்லையே" என்று என் மனதில் ஓடிக்க் கொண்ட்ருந்த எண்ண அலைகளைப் படம் பிடித்தார் போல கோகி சொன்னது என்னை ஆச்சரியப்படுத்தாமல் எப்படி இருக்கும்?ஆக எல்லோரும் கடற்கரைப் பகுதிக்குச் சென்றோம். வாகனத்தைப் பார்க் செய்து விட்டு அருகாமையில் இருக்கும் ஐஸ்க்ரீம் கடையில் நண்பர்களுக்கு ஐஸ் க்ரீம் வாங்கிக் கொடுத்து நானும் வாங்கிக் கொண்டேன். ஐஸ்க்ரீம் சாப்பிட்டுக் கொண்டே தென்னாப்பிரிக்க கடற்கரையில் கடல் நீரில் கால் வைத்து நடந்து கொண்டே சென்ற தருணங்கள் இனிமையானவை.​​
செல்லும் வழியில் ஒரு தென்னாப்பிரிக்க இளைஞர் மணலில் சில வடிவங்களைச் செய்து வருவோர் விரும்பும் பெயர்களை எழுதி பணம் சம்பாரித்துக் கொண்டிருந்தார். நான் என் விருப்பத்திற்காக THF  என்ற எழுத்தை எழுதச் சொல்லி அவருக்கு சிறு சன்மானம் கொடுத்தேன். 


இப்படி நடந்து செல்லும் போதே சின்னப்பன்-கோகி  தம்பதியினருடன் தென்னாப்பிரிக்காவில் தமிழ் மரபு அறக்கட்டளையின் நடவடிக்கைகளை விரிவாக்கும் பணி பற்றி பேசினோம். தமிழ் மொழி பண்பாடு வரலாறு என்ற வகையில் பல கோணங்களில் ஆய்வுப் பூர்வமான நடவடிக்கைகளுக்குத் தேவை இருக்கின்றது என்றும் எவ்வகையில் தமிழ் மரபு அறக்கட்டளை அப்பணிகளில் ஈடுபடலாம் என்ற வகையிலும் எங்கள் பேச்சு அமைந்திருந்தது.

ஏறக்குறைய 1 மணி நேர கடற்கரை நடைக்குப் பிறகு சின்னப்பன்-கோகி தம்பதியர் இல்லம் திரும்பினோம். இரவு எங்களுக்கு புளியஞ்சாதம், தயிர்சாதம், சப்பாத்தி, குருமா பாயசம் என வயிறும் மனமும் நிறைய நிறைய விருந்தளித்து மகிழ்ந்தனர் சின்னப்பன்-கோகி தம்பதியினரும் அவர்களது புதல்வி சிவானியும்.

மறு நாள் காலை 8 மணிக்கு எங்கள் விமானப் பயணம். அதனால் காலை 5 மணிக்கு வரச்சொல்லி டாக்ஸிக்கு தொலை பேசி விட்டு மேலும் தென்னாப்பிரிக்கத்தமிழர் தொடர்பான விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்து விட்டு உறங்கச் சென்றோம்.

தொடரும்

சுபா

Thursday, August 27, 2015

விரும்பாமல் சென்று.. விரும்பிய டர்பன்..! -28

விஷ்ணு எங்களிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். பொட்டேனிக்கல் கார்டன்ஸ் ஊழியர் அவர். வருகையாளர் விரும்பினால் கட்டணம் செலுத்தி விட்டு தோட்டத்தைச் சுற்றிப் பார்க்கும் வாகனத்தில் எங்களுக்கு பொட்டானிக்கல் கார்டன்சில் உள்ள சிறப்புக்களைச் சொல்லி விளக்கமளிக்க முடியும் என தெரிவிக்க நாங்களும் ஒவ்வொருவரும் எங்களுக்கான டிக்கெட்களை கட்டணம் செலுத்தி பெற்றுக் கொண்டு விஷ்ணு வாகனம் ஓட்ட அதில் ஆப்பிரிக்காவின் மிகப் பழமையான வாழும் நந்தவனத்தைப் பார்க்க கிளம்பி விட்டோம்.

​விஷ்ணு

எனக்கு இயற்கையாகவே செடிகள் என்றால் கொள்ளைப் பிரியம். அதிலும் காட்டு வகை கரும்பச்சை நிறத்து பல்வகையான செடிகளைப் பார்க்கப் பார்க்க மனம் எல்லையில்லா மகிழ்ச்சியில் லயித்திருந்தது. ஒவ்வொரு பகுதிக்கும் சென்று புகைப்படம் எடுத்துக் கொள்ள எங்கள் அனைவருக்குமே விருப்பம். ஆனால் விஷ்ணு சில முக்கியமான இடங்களில் வாகனத்தை நிறுத்தி மரங்களையும் செடிகளையும் எங்களுக்குக் காட்டி விளக்கமளித்துக் கொண்டே வந்தார். அதனால் அவ்வப்போது கிடைக்கும் அவகாசத்தில் சில புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம்.பனைமர வகைகளில் பற்பல வகைகள், ஆர்க்கிட் செடிகளுக்கென்று தனிப்பகுதி, காட்டு வகைச் செடிகள் பற்பல என ஒன்றிலிருந்து மற்றொன்று மாறுபட்ட வகையில் இங்கு ஒவ்வொரு வகைச் செடிகளும் கண்களுக்கு விருந்தாக அமைந்திருக்கின்றன.  பனை மரத்தில் மட்டும் 130 பனை வகைகள் இங்கு இருக்கின்றன என்பது ஆப்பிரிக்கக் காடுகளின் செழுமையை நமக்கு ஓரளவு புரிந்து கொள்ள உதவும் அல்லவா?.

​உலகின் மிகப் பழமையான மர வகை சைக்காட்ஸ் - 1849 முதல் இங்கே இருக்கும் மரம் இது

சைக்காட்ஸ்  cycads எனப்படும் ஒரு வகை பனை மரம் உலகில் அழிந்து வரும் பனை வகை. டர்பனின் இந்த பொட்டானிக்கல் கார்டன்ஸில் இருக்கும் ஒரு சைக்காட்ஸ் வகை மரம் இந்த பொட்டானிக்கல் கார்டன்ஸ் அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்ட நாளிலிருந்து இங்குள்ளது. உலகில் வாழும் மிகப் பழமையான மரம் என்ற சிறப்பு கொண்டது இந்த சைக்காட்ஸ் வகை மரம். உலகிலேயே ஆக மொத்தம் 308 மரங்கள் தான் இவை உள்ளன. இங்கு கொண்டு வந்து வளர்க்கப்படும் இந்த மரம் 1849ம் ஆண்டு தொடங்கி இங்கே உள்ளது. இந்த  ஒரு மரத்திலிருந்து அறிவியல் வழி க்ளோனிங் செய்து மேலும் ஒரு சைக்காட்ஸ் மரத்தை உருவாக்கி இருக்கின்றனர். அந்த மரமும் அருகாமையிலேயே வளர்ந்து வருகின்றது.

​க்ளோன் செய்யப்பட்ட குட்டி சைக்காட்ஸ் வளர்ந்து வருகின்றது

இந்த பொட்டானிக்கல் கார்டன்ஸின் மற்றுமொரு தனிச்சிறப்பு  fern  வகைச் செடிகளாகும்.  ஒரு ஆள் உயரத்திற்கு இருக்கும் fern செடிகளும் இங்கிருக்கின்றன. எங்களை இப்பகுதிக்கு அழைத்துச் சென்ற விஷ்ணு அங்கு படர்ந்து வளர்ந்திருக்கும் பல்வேறு வகை fern செடிகளைக் காட்டி விளக்கமளித்தார். எங்கள் அனைவரையும் அங்கு புகைப்படமும் எடுத்துக் கொடுத்து ஜூராசிக் பார்க் படத்தில் வரும் காட்சி போல இருக்கின்றதல்லவா எனச் சொல்லி எங்களை மகிழ வைத்தார்.குளம் இல்லாத ஒரு நந்தவனமா?


படர்ந்து வளர்ந்த பெரு மரங்களையும் செடிகளையும் பார்த்து  வியந்து கொண்டு வந்த  நாங்கள் கண் முன்னே தென்பட்ட தாமரைக் குளத்தை பார்த்ததும் அதன் அழகில் மயங்கி லயித்துப் போய் நின்றோம்.தொடரும்..
சுபா

Tuesday, August 25, 2015

விரும்பாமல் சென்று.. விரும்பிய டர்பன்..! -27

ஏப்ரல் 8ம் தேதி.

அன்று எங்களுடன் இருந்த மலேசிய நண்பர்கள்  ​மதியம் ஊருக்குப் புறப்பட வேண்டியிருந்தது. நானும் என்னுடன் ஜெர்மனியிலிருந்து வந்திருந்த இந்துவும்  கனடாவிலிருந்து வந்திருந்த ராஜரட்ணம் அவர்களும் மட்டும் மறுநாள் 9ம் தேதி டர்பனிலிருந்து புறப்படும் வகையில் திட்டம்.

ஆக, அன்றைய 8ம் தேதியில் எங்கு சென்று என்ன பார்த்து வரலாம் என்று முதல் நாள் மாலையே திட்டம் ஒன்றினை தயாரித்திருந்தேன். அதன் படி காலை உணவுக்குப் பின்னர் ஹோட்டலிலிருந்து புறப்பட்டு டர்பனின் புதிய ஸ்டேடியம் சுற்றிப்பார்த்து விட்டு டர்பனின் புறநகர்ப்பகுதியில் இருக்கும் பொட்டேனிக்கல் கார்டனில் சில மணி நேரங்களைச் செலவிடலாம் என்பது என் திட்டம். முதல் நாள் எங்களை அழைத்துச் சென்ற அதே டாக்ஸி ஓட்டியைத் தொடர்பு கொண்டு அவரையே இந்த பயணத்திற்கு முன் பதிவு செய்திருந்தேன்
.


2010 அனைத்துலகக் காற்பந்துப் போட்டி நிகழ்ந்த  ஸ்டேடியம் இது. 54,000 பேர் அமரக்கூடிய இட வசதி கொண்டது. மோஸஸ் மபீடா ஸ்டேடியம் என்பது இதன் பெயர். பிரத்தியேகமாக உலகக் காற்பந்து போட்டி நிகழ்வுக்காக கட்டப்பட்டது இந்த ஸ்டேடியம்.ஸ்டேடியம் மட்டுமல்லாது இந்த ஸ்டேடியத்தின் முன் பகுதியில் அமைந்திருக்கும் கேபிள் கார் வழி பயணித்து மேலே சென்று அங்கிருந்து டர்பன் நகரை பார்த்து ரசிக்கலாம். நாலா புறமும் டர்பன் நகரத்தின் தோற்றத்தைத் தெளிவாகக் காணும் வகையில் இந்த மேற்பகுதி அமைந்துள்ளது. இங்கு செல்வதற்கென்று   கட்டணம் கட்டி டிக்கட் பெற்றுக் கொள்ள வேண்டும்.  இந்த கேபிள் காரில் ஒரு பயணத்தில் ஏறக்குறைய 16 பேர் செல்லும் வகையில் இட வசதி உண்டு.நாங்கள் அடுத்து பொட்டேனிக்கல் கார்டன்ஸ் செல்ல வேண்டிய அவசரம் மனதில் இருந்ததால் ஏறக்குறைய 15 நிமிடங்கள் அங்கே எங்கள் நேரத்தைச் செலவழித்து டர்பனின் அழகிய காட்சியைக் கண்டு ரசித்து விட்டு அங்கிருந்து புறப்பட்டோம். பொட்டானிக்கல் கார்டன்ஸ்  டர்பனின் க்வாசூலு-நாட்டல் பகுதியில் அமைந்துள்ளது.  37 ஏக்கர் நிலப்பரப்பு அளவைக் கொண்டது இது.

ஆப்பிரிக்காவின் மிகப் பழமையான வாழும் பொட்டானிக்கல் கார்டன்ஸ் என்ற பெருமை இதற்கு உண்டு.

இவ்வளவு பெரிய நிலப்பகுதியைச் சுற்றிப் பார்க்க நிச்சயம் 2 மணி நேரங்கள் தேவைப்படும் என முடிவு செய்து கொண்டோம்.முதலில் உள்ளே நுழைந்ததுமே எப்படி .. எங்கு தொடங்கி எங்கு முடிப்பது என ஒவ்வொருவரும் யோசித்துக் கொண்டு நிற்க எங்களை நாடி வந்தார் விஷ்ணு.

விஷ்ணு பெருமான் அல்ல..  அங்கு பணி புரியும் தமிழ் பின்புலத்தைக் கொண்ட ஒரு இளைஞர்.


தொடரும்..
சுபா

Thursday, August 13, 2015

விரும்பாமல் சென்று.. விரும்பிய டர்பன்..! -26

சந்தைக்குச் சென்று பொருள் வாங்கப் பிடிக்காதவர்கள் யாரும் இருக்கின்றார்களா?  எந்த ஊராகட்டும், எந்த இனமாகட்டும் எந்த நாடாகட்டும்.
மனிதர்களுக்குப் புதிய பொருட்களை வாங்குவது என்பதில் அலாதிப் பிரியம் உண்டு என்பதை யாரும் மறுக்க முடியாது.

பெரும்பாலும் ஷாப்பிங் செல்வது என்றாலே ஏதோ பெண்களுக்கான விசயம் போல ஒரு சிலர் கேலி செய்து பேசுவதை நான் கேள்விப்பட்டிருக்கின்றேன். அது என்னவோ.. எனது நட்புச் சூழலில் உள்ளவர்களும் சரி.. புதிதாக இணைந்து கொள்பவர்களும் சரி. ஆண் பெண் என்ற பாகுபாடு இன்றி ஷாப்பிங் செய்வதில் விருப்பம் உள்ளவர்களாகவே இருக்கின்றனர். இந்த முறை பயணத்திலும் அப்படித்தான்.

நாங்கள் மதிய உணவு முடித்து விக்டோரியா சாலை சந்தைக்கு வாகனத்தை செல்லக் கேட்டுக் கொண்டோம். அங்கே 90 நிமிடங்கள் செலவிடலாம் என்ற வகையில் திட்டமிட்டிருந்தோம்.

முதலில் நாங்கள் உள்ளே நுழைந்ததுமே கைவினைப்பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளே அதிகம் இருந்தன அதில் ஒரு கடைக்குள் அனைவருமே நுழைந்தோம்.அதில் குறிப்பாக எல்லோரையும் மிகக் கவரந்தவை எனச் சொன்னால் பெண்கள் கழுத்தில் அணியும் ஆப்பிரிக்க மணிச்சரங்கள் தாம்  எல்லோருமே ஒவ்வொருவருக்கும் பிடித்தவைகளை பார்த்து விலை பேரம் பேசி  எடுத்துக் கொண்டோம். கனடாவிலிருந்து வந்த நண்பர் ராஜரட்ணம் தன் துணைவியாருக்கும் சேர்த்து என்னை தேர்ந்தெடுக்கச் சொன்னார். நான்கைந்து வர்ணங்களில் நீண்ட சரம் போன்ற கழுத்து மணிகளை எனக்கும் வாங்கிக் கொண்டேன்.அதே கடையிலேயே ஆப்பிரிக்க கைவினைப் பொருட்களும் இருந்தமையால் பொன்னியும் திரு,சண்முகமும் மனித உருவச் சிற்பங்களை தேர்ந்தெடுகக் விரும்பினர். அவர்களுக்குத் தேவையானதையும் தேடிப் பார்த்து பலவிதமான பொம்மை சிற்பங்களைப் பார்த்து எவை பொருத்தமாக இருக்கும் என தேடுவது சற்றே சிரமமாக இருந்தது. ஏனெனில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையானவை. நானும்  என் வீட்டு அலங்காரத்திற்காக ஒரு ஜோடி ஆப்பிரிக்க மனிதர் சிலைகளை வாங்கிக் கொண்டேன். இவை மரத்தால் செய்யப்பட்டவை.

பின்னர் அங்கிருந்து அடுத்த பகுதிக்குச் சென்றால் முதல் கடையை விட இங்கேமேலும் பல கைவினப் பொருட்கள் முந்தைய கடையை விட விலை  குறைவாக இருந்தமையை உணர்ந்தோம். இங்கே ஏறக்குறைய எல்லோருமே வாழை இலைகளால் செய்யப்பட்ட சுவர் ஓவியங்களை வாங்கிக் கொண்டோம். இவை எளிமையாக அதே வேளை மிக வித்தியாசமான கைவினைப்ப்பொருட்களாக இருந்தமையால் எங்கள் அனைவரின் கவனத்தையும் இவ்வோவியங்கள் ஈர்த்தன.

ஒவ்வொரு  நாட்டிலும் அந்த நாட்டு மக்களின் தனித்துவத்தை வெளிப்படுத்தும் கைவினைப்பொருட்கள் சுற்றுப்பயணிகளைக் கவரும் அம்சங்களில் ஒன்று. அதிலும் தென்னாப்பிரிக்கா போன்ற இயற்கை வளம் நிறைந்த நாட்டில் இயற்கை வளங்களைக் கொண்டு செய்யப்பட்ட கைவினைப்பொருட்கள் கண்களையும் கருத்தையும் கவர்பவை
.


அதே விக்டோரியா சாலை சந்தையில் ஒரு கடையில் தென்னாப்பிரிக்க தமிழ்பெண்மனி ஒருவரின் கடைக்கும் சென்றோம். அவர் மளிகைப் பொருட்கள் விற்கும் கடையை நடத்தி வருகின்றார். அவருக்குத் தமிழ் பேசத்தெரியாது ஆங்கிலத்தில் மட்டுமே எங்களுடன் உரையாடினார்.மேலும் சில நிமிடங்கள் எனச் சுற்றிப் பார்த்து விட்டு சந்தையிலிருந்து புறப்பட்டோம். அன்றைய ஒரு நாள் பயணம் மாறுபட்ட அனுபவங்களை எங்களுக்கு வழங்கியிருந்தது.

மாலை ஆறு மணியளவில் எங்கள் தங்கும் விடுதிக்கு வந்து சேர்ந்தோம். மாலைப் பொழுது அங்கேயே நண்பர்களுடன் கதை பேசிக் கொண்டிருந்ததில் மிக இனிமையாகக் கழிந்தது.

தொடரும்..

சுபா

Saturday, August 8, 2015

விரும்பாமல் சென்று.. விரும்பிய டர்பன்..! -25

டர்பன் நகரிலேயே  10 நிமிட வாகன பயணத்தில் அடையும் தூரத்தில் தான் அந்த இந்திய உணவகம் இருந்தது. எங்களுடன் வந்த திரு.சண்முகம் மட்டும் கீழே இருந்த  Fish & Chips  சாப்பிட சென்று விட ஏனைய 8 பேரும் மேலே இந்திய உணவகத்துக்கு சென்று சேர்ந்தோம். சுமாரான அலங்காரம் எனக் குறிப்பிடும் வகையில் உணவகத்தின் அலங்காரம் இருந்தது.

எங்கள் ஒவ்வொருவருக்கும் தேவையான உணவை ஆர்டர் செய்து விட்டு நாங்கள் ஆர்வத்துடன் பேச ஆரம்பித்தோம். அங்கிருந்த 8 பேரில் 4 பேர் மலேசிய தமிழர்கள். நான் மலேசிய தமிழர் தான் என்ற போதிலும் வாழ்வது ஜெர்மனி என்ற வகையிலும் கடந்த ஏறக்குறைய 17 ஆண்டுகள்  மலேசிய மண்ணை விட்டு அயலகத்திலேயே வாழ்வதாலும் மலேசிய சமூக நிலை அரசியல் என்பது பற்றி பேச ஆரம்பித்தோம்.

நான் மலேசியாவில் பிறந்து வளர்ந்த காலத்தில் தமிழ்ச்சமூகத்தின் பிரிவுகள் எனும் போது இலங்கைத் தமிழர்கள் இந்தியத் தமிழர்கள் என்ற வகையிலான குறிப்பிடத்தக்க, மிகத் தெளிவான பாகுபாடு இருக்கும்.  இதைத் தவிர சாதி அமைப்புக்களின் வேறுபாடு என்பது குறிப்பிடத்தக்க வகையில் அப்போது இருக்கவில்லை. ஆனால் தற்சமயம் நிலை மிக மாறி விட்டது. பல சாதி அமைப்புககள் மிக வெளிப்படையாகவே சாதிப்பெயரை வைத்து சங்கங்கள் நடத்துவதும் அதனால் பல குழுச்சண்டைகள் எழுவதும் என்ற வகையிலான சமூகக் கேடு மலேசியாவின் சில குறிப்பிடத்தக்க மானிலங்களில் சூழ்ந்திருக்கின்றது.

மலேசியாவைப் பொறுத்தவரை மலேசிய தமிழர்கள் தமிழக நிலை அதன் தாக்கம் என்பதை மிக ஆழமாக உள்வாங்கும் சமூகமாக  இருக்கின்றனர். பொருளாதார நிலையும் வாழ்க்கைத் தரமும் வேறுபாடானது என்ற போதிலும் பல மலேசியத் தமிழர்கள் இந்தியா வந்து இறைவழிபாட்டு நேர்த்திக்கடன் செய்வதும், ஆண்டு இறுதி இசை விழாவில் கலந்து கொள்வது, திருமணத்திற்கோ அல்லது வேறு குடும்ப வைபவங்களுக்கோ துணிமணிகள் வாங்குவதற்கும்  என்ற நிலை இருக்கின்றது. ஒரு சில மலேசியர்கள் தங்கள் மகன்களுக்கு தமிழகத்துப் பெண்களை மணமுடிப்பதும் இப்பொழுதும் நடைமுறையில் இருப்பதுதான்.


மலேசிய தமிழர்களைப் பொறுத்தவரையில் தமிழக சினிமாவின் தாக்கம் என்பது மிக மிக ஆழமானது. வாரம் ஒரு தமிழ்ப்படம் மலேசிய தொலைக்காட்சியில் ஒலிபரப்பாவது மட்டுமன்றி சினிமா தியேட்டர்களிலும் தமிழ்ப்படங்கள் கோலாலம்பூர், பினாங்கு, ஈப்போ, போன்ற பெரிய நகரங்களில் திரையிடப்படுகின்றன. தமிழ்ப்படங்களை மிக ஆழமாக உள்வாங்கும் சமூகமாக மலேசிய தமிழர்களில் பெரும்பாலோர் இருக்கின்றமை மறுக்கமுடியாத உண்மை. பலருக்கு தமிழ்ச்சினிமாக்கள் தான் தத்துவக் கூடங்கள், அதில் கூறப்படும் வசனங்கள், நீதிகள் மக்கள் நீதியாக பலர் மனதில் ஆழப்பதிய வைத்துக் கொள்கின்றனர். இதனால் வேண்டத்தகாத சில விசயங்கள் குறிப்பாக சாதிப்பெருமை பேசி பிரிவினை வளர்ப்பது, இளைஞர்கள் மத்தியில் தவறு இழைப்பவனும் ஒரு கதாநாயகனாகலாம் என்ற ஒரு எண்ணம் ஆகியவை தற்சமயம் வளர்ந்திருக்கும் சமூகக் கேடுகள்.


பேசிக்கொண்டிருக்கும் போதே உணவு வந்து விட்டது. உணவின் சுவை மிக நன்றாகவே அமைந்திருந்தது. அப்போதைய பசிக்கு அந்தச் சுவையான உணவு தேவாமிர்தம் போலத்தான் எங்களுக்கு இருந்தது.

மதிய உணவை முடித்து அங்கிருந்து புறப்பட்டோம். அன்றைய நாளின் எங்கள் பயணத்தின் இறுதி நிகழ்வாக என் பட்டியலில் இருந்தது விக்டோரியா சாலை சந்தை.

தொடரும்

சுபா

Thursday, August 6, 2015

விரும்பாமல் சென்று.. விரும்பிய டர்பன்..! -24

சில நிமிடங்களில் நாங்கள் பயணித்து வந்த இரு வாகனங்களிலும் ஏறி டர்பனின் மற்றொரு மையச் சாலையில் இருக்கும் Old Court House  அருங்காட்சியகம் வந்து சேர்ந்தோம்.

பழமையான கட்டிடம். ஆயினும் மிக நேர்த்தியாகவே காட்சியளித்துக் கொண்டிருக்கின்றது. டர்பன் நகரின் மிகப் பழமையான பொது மக்களுக்கான பயன்பாட்டில் இருந்த கட்டிடம் என்ற பெருமையும் இதற்கு உண்டு.இந்த கட்டிடத்தில் தான் முன்னர்  ஆப்பிரிக்க மக்கள் டர்பன் நகருக்குள் வருவதற்கான அனுமதியும் நகரை விட்டு வெளியே செல்வதற்கான அனுமதியும் வழங்கப்பட்டது. இது என்ன கொடுமை என்று கேட்கத் தோன்றுகின்றது அல்லவா? கருப்பின மக்களின் அவர்களது சொந்த நாட்டில் உள்ள ஒரு நகரத்தில் அவர்கள் வந்து செல்ல ஆங்கிலேய காலணித்துவ அரசின் அதிகாரிகளிடம் அதிகாரப்பூர்வ அனுமதி பெற்றே அவர்கள் இருக்க வேண்டிய சூழல் அன்று நிலவியது.இக்கட்டிடம் ஒரு நீதிமன்றமாகவும் முன்னர் இயங்கியது. இதே கட்டிடத்தில் தான் ஒரு சமூக சீர்திருத்தவாதியாக இருந்த  காந்தியை அவர் தலையில் முண்டாசு (Turban)   கட்டியிருந்தார் என்பதற்காக அறையை விட்டு வெளியேறும்படி அவரை விசாரித்த நீதிபதி உத்தரவிட்ட நிகழ்வும் நடந்தேறியது.

இந்த  அருங்காட்சிகத்தின் சிறப்பு விசயங்களாக இரண்டினை நான் குறிப்பிடுவேன்.

ஒன்று ஆப்பிரிக்க மக்களுக்கும் வெள்ளையர்களுக்கும் இடையில் இருந்த நிற பேதத்தை அலசும் வகையிலான பல பத்திரிக்கை சான்றுகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. அதில் ஆச்சரியப்படுத்தும் பல தகவல்கள் இருக்கின்றன. உதாரணமாக

  • கருப்பர்கள் வெள்ளையர்களை வெறுக்கின்றார்களா? 
  • வெள்ளையர்களுக்கு நடைபெற்ற திருமணத்தில் கலந்து கொண்ட ஒரு கருப்பின மாணவ தம்பதியர் பற்றிய செய்தி
  • வெள்ளையர்கள் கருப்பர்களை வெறுக்கின்றார்களா?

என்பது போன்ற செய்திகள் அடங்கிய பத்திரிக்கைச் செய்திகளைக் குறிப்பிடலாம்.கீழ்த்தளத்தில் இவ்வகையான பல செய்தித்தாட்கள் மட்டுமின்றி ஆப்பிரிக்க நாட்டின் கைவினைப் பொருட்கள் சின்னங்கள் ஆகியனவும் இருகின்றன. அதில் உலகக் காற்பந்து நிகழ்வில் ஆப்பிரிக்க மக்களை மட்டுமன்றி உலக மக்கள் அனைவரையும் கவர்ந்த ஊவுஸெல்லாவும் இருக்கின்றது.

மேல்தளத்தில் இருக்கும் கண்காட்சிப் பகுதி மிகப் பிரமாண்டமானது. அக்கால நிலையில் மக்கள் குடியிறுப்புப் பகுதி, மருத்துவ அறை, விவசாயத்தைக் காட்டும் வகையிலான  காட்சி அமைப்பு, அறிவியல் கூடம். தையல் நிலையம் என்பது போன்ற அமைப்புக்களை உருவாக்கி வைத்திருக்கின்றனர். இப்பகுதி இந்த அருங்காட்சியகத்திற்கு வரும் அனைவருக்கும் நிச்சயமாகப் பார்க்கப் பிடிக்கும் ஒரு பகுதி என்றே கூறுவேன்.நாங்கள் இங்கிருந்து ஒவ்வொரு அறையாகச் சென்று பார்த்துக் கொண்டிருக்கும் போது திடீரென்று மின்சாரம் நின்றுவிட்டது. அருங்காட்சியகக் கட்டிடம் முழுமையும் இருட்டாக ஆகிவிட மெதுவாக ஒவ்வொருவராக படிகளில் இறங்கி வர ஆரம்பித்தோம். கீழ்ப்பகுதியில் அதற்குள் கதவுகள் திற்க்கப்பட்டு வெளிச்சம் உள்ளே வந்ததால் பிரச்சனையின்றி கீழிறங்கி வந்து சேர்ந்தோம்.இந்த அருங்காட்சியகம் தென்னாப்பிரிக்க மக்களின் ஏறக்குறைய 200 ஆண்டுகளுக்கு முன்பான    செய்திகளை அறிந்து கொள்ள உதவியது என்பதில் மறுப்பேதுமில்லை. டர்பன் வருபவர்கள் ஆப்பிரிக்க மக்களின் சமூக நிலை மாற்றங்கள் படிப்படியாக மாற்றம் கண்டமையை அறிந்து  கொள்ள இங்குள்ள ஆவணங்களைப் பார்த்து ஆராய்ந்து அறியலாம்.

மணி ஏறக்குறைய மதியம் ஒன்றரை  தாண்டியிருந்தது. எங்கள் எல்லோருக்குமே பசி. ஒரு இந்திய உணவகமாக தேடிச் செல்வோம் என எல்லோருமே சொல்ல நண்பர் சாம் விஜய் தனது ஆப்பிரிக்க நண்பர் ஒருவருக்கு தொலைபேசியில் அழைத்து பக்கத்தில் இருக்கும் நல்ல உணவகத்தைப் பற்றி விசாரித்தார். அவர் குறிப்பிட்ட முகவரியில் இருந்த உணவகத்திற்கு  எங்கள் பயணம் தொடர்ந்தது.


தொடரும்

சுபா

Saturday, July 25, 2015

விரும்பாமல் சென்று.. விரும்பிய டர்பன்..! -23

குவாமூல அருங்காட்சியகத்தில் நாங்கள் கண்டும் வாசித்தும் தெரிந்து கொண்ட விசயங்கள் மனதில் ஒரு வித தாக்கத்தை தராமல் இல்லை. கருப்பர் இன மக்களின் அடிப்படை மனித  உரிமை என்னும் ஒரு விசயம் இங்கிலாந்தின் காலணித்துவ ஆட்சியின் போது ஒரு பொருட்டாகக் கருதப்படாது அவர்களை வேலை செய்யும் இயந்திரங்களாகவே கருதியமையை வெளிப்படுத்தும் வகையில் இருந்தது என்பதே உண்மை.


குவாமூல அருங்காட்சியகத்திலிருந்து புறப்பட்டு டர்பன் நகரிலேயே இருக்கும் Old Court House  அருங்காட்சியகத்திற்குப் புறப்பட்டோம். அது தான் எனது பட்டியலில் இருந்த அடுத்து பார்க்க வேண்டிய இடமாகவும் இருந்தது. இதற்கு இடையே மதிய உணவை முடித்துக் கொள்ளலாமா என்றும் நண்பர்களுடன் கலந்து பேசியதில் அனைவரும் அடுத்த அருங்காட்சியகத்தைப் பார்துது விட்டு சேர்ந்தே சாப்பிடுவோம் என சம்மதம் தெரிவித்து விட்டனர்.


குழுவாகப் பயணம் செய்யும் போது திட்டமிடுதலில் அவ்வப்போது சில  பிரச்சனைகள் எழலாம். ஒருவருக்கு பிடித்த விஷயம் இன்னொருவருக்குப் பிடிக்காமல் இருக்கலாம். ஒருவர் நீண்ட நேரம் பார்க்க விரும்பும் ஒரு விசயத்தை மர்றொருவர் சிறிது நேரம் மட்டுமே பார்த்து விட்டு செல்ல வேண்டும் என அவசரப் படுத்தலாம். ஒரு சிலர் குறைசொல்லிக் கொண்டே கூட வருவார்கள். இப்படி பல சங்கடங்கள் குழுவாக இணைந்து செல்லும் போது ஏற்பட வாய்ப்பு உண்டு. ஆனால் இந்தப் பயணத்தில் அனைவருமே ஒருமித்த கருத்தோடு எல்லா இடங்களையும் பார்த்து வந்தோம் என்பது மகிழ்ச்சியுடன் குறிப்பிட வேண்டிய விசயம். இந்த பயணத்தில் என்னுடன் இணைந்து கொண்ட எட்டு பேருக்குமே எனது பார்க்க வேண்டிய இடங்களின் பட்டியல் தேர்வுகளும் பிடித்திருந்தது. நான் ஒவ்வொரு இடத்திற்கும் திட்டமிட்ட கால அவகாசமும் அவர்களுக்குப் பிடித்திருந்தது. இது எனக்கு மட்டுமல்லாது வாகனமோட்டிகளுக்கும் உதவுவதாக அமைந்தது.


ஆக, நினைத்தது போலவே மதிய உணவை சற்று தாமதமாகச் சாப்பிடலாம் என முடிவெடுத்துப் புறப்பட்டோம்.டர்பன்  நகர சாலையில் இருக்கும் கட்டிடங்களில் சில இங்கிலாந்தின் லண்டன் நகர கட்டிடங்களின் கட்டுமான அமைப்பை ஒத்ததாகவே அமைந்திருக்கின்றன.சாலைகள் விரிவாக தூய்மையாக மிகத் தரமாக அமைந்துள்ளன. ஒரு சாதாரண வார நாளை பிரதிபலிக்கும் வகையில் சாலைகளில் வாகனங்களும் நிறைந்திருந்தன.
ஏறக்குறைய ஏழு நிமிட நேரத்திற்குள் அடுத்த அருங்காட்சியகத்திற்கு  வந்து சேர்ந்தோம். Old Court House - இது தென்னாப்பிரிக்க சூலு கருப்பின மக்கள் கடந்த காலங்களில் அனுபவித்த அவலங்களை வெளிப்படுத்தும் ஆவணங்கள் அடங்கிய  மேலும் ஒரு அருங்காட்சியகம். இங்கு நான் வாசித்து அறிந்து கொண்ட விசயங்கள் அக்கால சூழலில் சூலு கருப்பின மக்கள், ஆங்கிலேயர்,  இந்தியர் ஆகிய மூன்று இனங்களும் வாழ்ந்த சூழலைக் காட்டுவதாக அமைந்தது.

உதாரணமாக,
சூலு கருப்பின மக்கள் ஆங்கிலேயர்களை திருமணம் செய்து கொள்வதும் நிகழ்ந்திருக்கின்றது.
ஆங்கிலேயர்கள் இந்தியர்களை திருமணம் செய்து கொள்வதும் நிகழ்ந்திருக்கின்றது.
ஆனால் மிக மிக அரிதாகவே சூலு கருப்பின மக்கள் இந்தியர்கள் திருமண உறவு நிகழ்ந்தது என்பதை உணர முடிந்தது.

இது யோசிக்க வேண்டிய ஒரு விசயம் தான் அல்லவா?


தொடரும்
சுபா

Wednesday, July 8, 2015

விரும்பாமல் சென்று.. விரும்பிய டர்பன்..! -22

சாதியை வைத்து தீண்டாமை என்னும் கருத்தை வளர்ப்பது ஒரு சமூகக் கேடு. நம் தமிழ்ச் சமூகத்தில் இன்றும் அந்த அவல நிலையை நாம் தினம் தினம் ஏதாவது ஒரு வகையில் ஊடகங்களின் வழியாகவோ அல்லது சுற்று வட்டாரத்திலேயும் கூட கேட்டும் பார்த்தும் அறிந்து வரும் நிலையிலிருந்து விடுபடவில்லை. எல்லா மனிதருக்கும் DNA அறிவியல் கூற்றுப்படி, உடலில் இருக்கும் வித்தியாசங்கள் என்பது மிக மிக மிக சிறியது. விபத்தில் அடிபட்டு உயிருக்குப் போராடும் போதோ, அல்லது உடலில் ஏதாகினும் ஒரு பாகம் சீர் கெட்டு அதனை மாற்ற வேண்டும் என்ற நிலை தோன்றினாலோ அங்கும் கூட சாதி வித்தியாசத்தைப் பார்த்து தனக்கு தன் உயிர் வேண்டாம் என ஒதுக்கி விடவா போகின்றார்கள் சாதிப் பற்றாளர்கள்? சாதிக்கொள்கை.....அதனை கடைபிடிப்போருக்கு சாதியால் தேவைப்பாடும் தீண்டாமை என்னும் கொள்கை ஆகியவை மிகக் கொடுமையானவை. நம் சமூகத்தில் நடைபெறும் அவலங்களுக்கு முக்கிய காரணமாக அமைவதும் சாதி என்னும் இந்தப் பிற்போக்குச் சிந்தனை மனதில் ஆழமாகப் பதிந்திருப்பதே. இந்த சாதிக் கொடுமையைப் போல ஆப்பிரிக்க கருப்பின மக்கள் அனுபவித்த அப்பார்தேட் (Apartheid) பிரிவினைவாதம் என்பதும் ஒரு சமூகக் கேடே!


ஆப்பிரிக்க தேசத்தில் ஆப்பிரிக்க தேசத்து கருப்பின மக்களுக்கு வெள்ளையர்கள் நிறப்பிரிவினையைக் கற்பித்து பல கொடுமைகளைத் தங்களது காலணித்துவ ஆட்சியின் போது இழைத்தனர் என்பது வரலாறு. இதனை எதிர்த்து அம்மக்களுக்காகப் போராடிய நெல்சன் மண்டேலா ஆப்பிரிக்க மக்களின் மனதில் மட்டுமல்லாது உலகில் எல்லோரும் ஒரு குலமே என நினைக்கும் அனைத்து மக்கள் மனதிலும் குடியிருப்பவர் என்பதை நன்கு அறிவோம்.தென்னாப்பிரிக்க கருப்பின மக்கள்  அப்பார்தேட் கொடுமைகளால் பட்ட அவலங்களை வெளிப்படுத்தும் ஒரு அருங்காட்சியகமே க்வாமூல அருங்காட்சியகம். இந்த அருங்காட்சியகமே எனது பட்டியலில் அடுத்து சென்று காண வேண்டிய ஒன்றாக இருந்தது.

நாங்கள் உம்கேனி சிவாலயத்திலிருந்து புறப்பட்டு டர்பன் மைய நகருக்குள் நுழைந்தோம். மைய நகரின் வளர்ச்சியை வெளிப்படுத்தும் பெரிய உயர்ந்த கட்டிடங்கள், விளையாட்டு மைதானங்கள், வரிசை வரிசையான கடைகள் என இப்பகுதி அந்தநேரத்தில் மிக பிசியாகவே இருந்தது.


குவாமூல அருங்காட்சியகம் அமைந்திருக்கும் இக்கட்டிடம் முன்னர் அப்பார்தேட் கொடுமைகளை இழைத்த பல வெள்ளையர்களால்  வெறுக்கத்தக்க ஒரு அலுவலக கட்டிடமாக இருந்தது. இதற்குக் காரணம் இந்தக் கட்டிடமே  முன்னர் தென்னாப்பிரிக்க கருப்பின மக்களின் சமூக நல மையமாக (Department of Native Affairs)  அமைந்திருந்தது. ஆனால் இன்றோ அக்காலத்தில் நிகழ்ந்த பல மனித உரிமை மீறல் விசயங்களை வெளிப்படுத்தும் ஆவணங்களைப் பாதுகாக்கும் முக்கிய கட்டிடமாகத் திகழ்கின்றது. இதுதான் காலத்தின் கோலம்!இது ஒரு இரண்டு மாடிக் கட்டிடம்.  உள்ளே நுழைந்ததும் வலது பக்கம் அலுவலகம் அமைந்திருப்பதைக் காணலாம். இடது பக்கம் நுழைந்தால் அருங்காட்சியகத்தின் சேகரிப்புக்களைக் காணலாம். அக்கால நிகழ்வுகளை உருவகப் படுத்திக் காட்டும் காட்சிகள் இங்கு மூலைகளில் வடிவமைக்கப்பட்டும் வைக்கபப்ட்டுள்ளன. சுவர்களில் சில முக்கிய நிகழ்வுகளைப் பிரதிபலிக்கும் பழைய புகைப்படங்களும் மாட்டப்பட்டிருக்கின்றன. மேல் மாடியிலும் தொடர்ச்சியாக பலபுகைப்படங்கள், ஆவணங்கள் காட்சிப் பொருட்கள் ஆகியன வைக்கப்பட்டிருக்கின்றன.

இந்த அருங்காட்சியகத்தின் பெயர் இதன் முதல் மேலாளரான திரு JS Marwick என்பவரின் பெயரைக் கொண்டிருக்கின்றது. இவர் தான் 7000 சூலு (தென்னாப்பிரிக்க கருப்பர் சமூகத்தில் ஒரு சமூகத்தினர்) அடிமைகளை கெத்தோக்களிலிருந்து தென்னாப்பிரிக்க போரின் போது வெளியேற்றி காப்பாற்றியவர். 1927ம் ஆண்டில் இந்தக் கட்டிடம் வடிவமைக்கப்பட்டது.


ஆய்வு மாணவர்களுக்கு மட்டுமன்றி அப்பார்தேட் கொடுமைகளைப் பற்றி அறிந்து கொள்ள விழைபவர்களுக்கும் இந்த அருங்காட்சியகம் மிக முக்கிமான ஒரு இடம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

அங்கு ஏறக்குறைய 1 மணி நேரம் இருந்து பல தகவல்களை வாசித்தும் பார்த்தும் புரிந்து கொண்டும்,  புகைப்படங்களும் எடுத்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டோம். எங்கள் வாகனம் அடுத்து டர்பன் நகரிலேயே இருக்கும் மற்றுமொரு இடத்திற்குப் பயணமானது.

தொடரும்

சுபா

Monday, July 6, 2015

விரும்பாமல் சென்று.. விரும்பிய டர்பன்..! -21

காந்தி நினைவு இல்லத்திலிருந்து புறப்படும் போது எனக்கு மட்டுமல்ல. என்னுடன் வந்திருந்த ஏனைய 8 பேரும் கூட காந்தி தொடர்பான சிந்தனைகளிலேயே மூழ்கியிருந்தோம் என்று தான் சொல்ல வேண்டும். காந்தி டர்பனில் வாழ்ந்த காலங்களில் அவர் தனது வாழ்க்கைப் பாதையை புதிதாக வடித்துக் கொண்டார். ஆப்பிரிக்காவில் இந்திய மக்களுக்கு இழைக்கப்பட்ட நடைமுறை பாரபட்ஷமானது  கொடியது. அதே வேளை இந்தியாவில் மக்கள் தன் சொந்த நாட்டிலேயே கூட அன்னியரின் ஆளுமைக்கு உட்பட்டு தனது சுயமரியாதையை இழந்து அடிமையாக இருக்கும் நிலை அவரது வாழ்க்கைப் பாதையையே மாற்றி அமைத்தது. ஒரு வக்கீலாக தொழில் புரிய சென்ற காந்தி இந்திய தேசத்து மக்களை அடிமைத்தனத்திலிருந்து வெளியேற்றி மக்கள் வாழ்க்கை நலம்பெற உதவவேண்டும் என்ற சிந்தனை பெற்றவராய் 20 வருடங்கள் கடந்து புதிய மனிதராய் தான் இந்தியா திரும்பினார்.

பல வேளைகளில் நமது சொந்த இடத்திலிருந்து பெயர்ந்து புதிய இடத்தில் வாழும் போது நமக்கு நம்மைப் பற்றி கிடைக்கும் தரிசனம் மிக உன்னதமானதாகவே அமைந்து விடுகின்றது. இதனை உணர்வோர் தமக்கும் தன் நாட்டிற்கும் மக்களுக்கும் ஏதாவது ஒரு வகையில் பயன்மிக்க செயல்களைச் செய்து வாழ்க்கைக்கு ஒரு அர்த்ததை உருவாக்குகின்றனர். இதனை அறியாத சிலரோ வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்தையும்  பொருளற்றதாக்கி வீணாக்கி விடுகின்றனர்.

எங்கள் பயணம் அங்கிருந்து டர்பனின் மையப்பகுதியை நோக்கிச் செல்ல ஆரம்பித்தது. அடுத்து என் பட்டியலில் இருந்தது டர்பன் நகரில் இருக்கும் ஒரு அழகிய சிவாலயம்.(Umgeni Siva Temple) உம்கெனி சிவாலயம் டர்பன் நகரில் இருக்கும் பழமையான ஆலயங்களில் ஒன்று.  இது 1910ம் ஆண்டில் கட்டப்பட்டது. இந்த ஆலயத்தின் முகவரி 535 Umgeni Rd, Durban, 4001, South Africa.தமிழகத்தின் புதுக்கோட்டையிலிருந்து டர்பனுக்கு வந்த ராமசாமி கொத்தனார் பிள்ளை என்பவர் கட்டிய ஆலயம் இது.  1885ம் ஆண்டில் இவர் ஒரு வழிப்போக்கராக டர்பன் நகருக்கு கப்பலில் வந்து சேர்ந்தார்.  டர்பன் நகரத்தில் கட்டிட நிர்மாணிப்பாளராக பணி புரிந்து கொண்டிருந்த இவர் ஆலயங்களை வடிவமைக்கும் முயற்சியிலும் இறங்கினார். கட்டிடக் கலை என்று மட்டுமல்லாமல் கலை ஆர்வமும் இலக்கியம் படைப்பதில் ஆர்வமும் கொண்டிவராக இவர் இருந்தார். டர்பன் நகரில் இவர் நாடகங்களைத் தயாரித்து மேடையேற்றியிருக்கின்றார். 1863ல் தமிழகத்தில் பிறந்து பின்னர் 1885ம் ஆண்டில் டர்பன் வந்த பிறகு  1927 வரை இங்கேயே இருந்து மேலும் சில இந்து ஆலயங்களையும் வடிவமைத்து கட்டியிருக்கின்றார். 1927ம் ஆண்டில் மீண்டும் தமிழகம் திரும்பிய இவர் 1938ம் ஆண்டில் மறைந்தார்.

இவர் தென்னாப்பிரிக்காவில் கட்டிய ஏனைய இந்து ஆலயங்களின் பட்டியல் கீழ் வருமாறு.

1. பால சுப்ரமண்ய ஆலம் - 1910  Dundee
2.கே.ஆர்.பிள்ளை தனியார் ஆலயம் - 1924 Redhill, Durban
3.ரயில்வே  பாரெக்ஸ் ஸ்ரீ எம்பெருமான் ஆலயம் - 1924 Durban
4.சிவ சுப்ரமண்ய ஆலயம் - 1912 Mount Edgecombe
5.சிவ சுப்ரமண்ய ஆலயம்  - 1915 Pietermaritzburg
6.சிவ சுப்ரமண்ய ஆலயம் - 1893 Port Elizabeth
7.உம்பிலோ ஸ்ரீ அம்பலவாணர் ஆலயம் - சுப்ரமணியர் ஆலயம் - 1905 Durban

உம்கெனி ஆலயத்தின் வாசலில் நுழையும் போது நெடிய சிவபெருமான் உருவச் சிலை வாசலிலேயே இருப்பதைக் காணலாம்.  உள்ளே இடது புறத்தில் சிறிய பூங்காவும் வலது புறத்தில் தென்னந்தோப்பும் அமைந்திருப்பது இந்த கோயில் வளாகத்தை மிக ரம்மியமாக காட்சியளிக்கச் செய்கின்றது.ஆலயத்தின் உள்ளே புகைப்படம் எடுக்க அனுமதி கிட்டவில்லை. எனவே வெளிப்புறத் தோற்றத்தை மட்டுமே என்னால் புகைப்படம் பதிய முடிந்தது.

ஆலயம் மூன்று பகுதிகளாக அமைந்திருக்கின்றது. அலுவலக கட்டிடம் ஒன்றும் இடது புறத்தில் அமைந்திருக்கின்றது. நாங்கள் சென்றிருந்த சமயத்தில் ஆலய குருக்களும் உள்ளே இருந்தார். ஆகையால் சில நிமிடங்கள் அவருடன் பேசியதில் அவர் இலங்கைத் தமிழர் என்பதை அறிந்து கொண்டோம். வாசலில் இரண்டு மயில்கள் அங்கும் இங்கும் நடை பழகிக் கொண்டிருந்தன. இந்த ரம்மியமான காட்சியை பார்த்து சுவாமி வழிபாடும் செய்து  விட்டு அங்கிருந்து எனது பட்டியலில் இருந்த அடுத்த இடத்திற்குப் பயணமானோம்.


தொடரும்..
சுபா

Friday, June 26, 2015

விரும்பாமல் சென்று.. விரும்பிய டர்பன்..! -20

டர்பன் நகரிலிருந்து வடக்கு நோக்கிய பயணமாக N2 சாலையில் 177 எக்ஸிட் எடுத்து Kwamashu H’way (M25) Inanda R102  சாலையில் வந்து இடது பக்கம் தொடர்ந்து பயணிக்கும் போது சாலையின் இருபக்கமும் மகாத்மா காந்தி நினைவு இல்லம் பற்றிய விளம்பர அட்டைகள் விளக்குக் கம்பங்களில் இணைத்திருப்பதைக் காணலாம். வழிகாட்டிப் பலகையைப் பார்த்தே உள்ளே நுழைந்தால் அங்கே சுலபமாக இந்த இடத்தை நாம் அடைந்து விடலாம். ஃபீனிக்ஸ் மக்கள் குடியிறுப்புப் பகுதி என இப்பகுதி அழைக்கப்படுகின்றது.காந்தி நினைவு இல்லம் காணச் செல்கின்றோம். இந்திய வம்சாவளியினர் நிறைந்த ஒரு இடமாக இது இருக்கும் என்ற எண்ணம் மனதில் இருந்தது. ஆனால் அந்த எண்ணத்தைப் பொய்ப்பிக்கும் வகையில் சுற்றிலும் எளிமையான ஒரு ஆப்பிரிக்க இனமக்களின் கிராமம் தான் அது. ஆப்பிரிக்க சூலு இன மக்கள் சாலையில் அங்கும் இங்குமாக நடந்து கொண்டும் குழந்தைகள் விளையாடிக் கொண்டும் என இருந்தனர்.

​அச்சகம்
உள்ளே செல்லும் போது நம்மை வரவேற்பது மகாத்மா காந்தி ஆரம்பித்த அச்சத்தின் கட்டிடம்.  இது ஒரு சர்வதேச பத்திரிக்கை அச்சகம் என்ற குறிப்புடன் காணப்படுகின்றது. ஆரம்பத்தில் இங்குதான் காந்தி தனது Indian Opinion   என்ற பத்திரிக்கையைத் தொடங்கி நடத்தினார். பின்னர் இந்தப் பத்திரிக்கை Opinion எனப் பெயர் மாற்றம் கண்டது. 1903 முதல் இந்தப் பத்திரிக்கை ஆரம்பிக்கப்பட்டு பின்னர் 1961ம் ஆண்டு இப்பதிரிக்கை முயற்சி நின்று போனது.

காந்தி - கஸ்தூரிபா - பீனிக்ஸ் பகுதியில்


மகாத்மா காந்தி என அறிந்தோரால் அழைக்கப்படும் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்கள் அக்டோபர் மாதம் 2ம் தேதி 1869ம் ஆண்டில் இந்தியாவின் போர்பண்டர் என்ற பகுதியில் பிறந்தார். இளம் பிராயத்தில் உள்ளூரில் கல்வி கற்று திருமணமும் முடித்து பின்னர் 1888ம் ஆண்டில் இங்கிலாந்தின் லண்டன் நகருக்குச் சென்று அங்கு சட்டத்துறையில் பட்டம் பெற்றார். அதன் பின்னர் தென் ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு இந்திய கம்பெனிக்குச் சட்டத்துறை உதவிகள் செய்யும் பணிக்காக நியமிக்கப்பட்டு 1893ம் ஆண்டில் தென்னாப்பிரிக்கா வந்தடைந்தார். 1914ம் ஆண்டுவரை, அதாவது 20 ஆண்டுகள் தன் குடும்பத்துடன் மகாத்மா காந்தியவர்கள் தென்னாப்பிரிக்காவின் இந்த டர்பன் புறநகர் பகுதியில் இங்கே வாழ்ந்து வந்தார்.


​​

இங்கு காந்தி வாழ்ந்த இல்லத்திற்கு சர்வோதயா என்ற பெயர் அமைந்திருக்கின்றது. இந்த இல்லம் இருக்கும் இடத்தில் முதலில் காந்திக்கும் அவர் குடும்பத்திற்கும் அமைக்கப்பட்ட இல்லமானது 1985ம் ஆண்டில் இப்பகுதியில் நிகழ்ந்த இனாண்டா கலவரத்தில் தீயில் அழிக்கப்பட்டது. அதன் பின்னர் அதே இடத்தில் அதே வகையில் புதிய இல்லம் கட்டப்பட்டுள்ளது. வீட்டின் தரைப்பகுதிகள் தீயில் சேதமடையாததால் வீட்டின் மேல் பகுதியை மட்டும் புதுப்பித்து நினைவில்லமாக எழுப்பியிருக்கின்றனர். இந்த இல்லத்தின் உள்ளே மிக எளிமையான வகையில் காந்தியை நினைவூட்டும் பல சம்பவங்களின் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.வீட்டின் முன் புறத்தில் சிறிய பூங்காவனம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவனத்தின் ஒரு பகுதியில் மிக அழகான சிறிய குடில் ஒன்று அமைக்கப்பட்டு அதில் உள்ளே காந்தியின் சிலை ஒன்றும்நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அதன் அருகில் ஒரு சமூக மையம் போன்ற ஒரு  கட்டிடம் உள்ளது. இங்கே காந்தியின் பெரிய உருவப் படங்கள் சில உள்ளன.மீண்டும் முன் பகுதிக்கு வந்தால் அச்சகத்தை வந்தடைவோம். அச்சகத்தின் உள்ளே உள்ள அறையில் காந்தி வாழ்ந்த காலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களின் தொகுதிகள் அமைந்திருக்கின்றன. இவை வரலாற்றை நினைவூட்டும் ஆவணங்கள். இங்கே விரும்புவோர் காந்தி தொடர்பான நினைவுச் சின்னங்களை வாங்கிச் செல்லலாம். வருவோருக்கு இலவசமாக இந்த நினைவு இல்லம் பற்றிய ஒரு சிறு குறிப்பு அட்டையை வழங்குகின்றனர்.
நாங்கள் இந்த நினைவில்லத்திற்குச் சென்ற போது உள்ளே ஒரு அதிகாரி மட்டுமே இருந்தார். அவர் ஆப்பிரிக்க சூலு இனத்தைச் சேர்ந்தவர். எங்களுக்கு இந்த நினைவில்லம், அச்சகம், மற்ற ஏனைய பகுதிகள் அனைத்தையும் சுற்றிக் காட்டி ஆங்கிலத்தில் விளக்கமளித்தார். பொறுமையான குணமும் வருவோரை வரவேற்கும் நல்ல குணமும் கொண்டவராக இந்த அதிகாரி தோன்றினார். அங்கு ஏறக்குறைய 1 மணி நேரம் செலவிட்டு விட்டு அங்கிருந்து நாங்கள் என் பட்டியலில் இருந்த அடுத்த இடத்திற்குப் பயணமானோம்.

சூலு இன குழந்தைகளுடன்


எங்கல் வாகன்மோட்டியாக இருந்து உதவியவருடன்


என்னுடன் இணைந்து கொண்ட நண்பர்களுடன்

கஸ்தூரிபா- காந்தி


நினைவு இல்லத்தின் உள்ளே

தொடரும்..

சுபா