Sunday, April 16, 2017

புடாபெஷ்ட் விமான நிலையத்திலிருந்து

ஹங்கேரியில் 4 நாட்கள்.. இடையில் ஒரு நாள் ப்ராட்டிஸ்லாவா என பயணம் இனிதாகக் கழிந்தது.
மழை பெய்யாததால் நான் பட்டியலிட்டிருந்த முக்கிய இடங்களுக்கெல்லாம் சென்று பார்த்து வர முடிந்தது.
ஹங்கேரியின் வரலாறு மேடு பள்ளங்களை இம்மக்கள் அதிகம் சந்தித்துள்ளதைக் காட்டுகின்றது.
இங்கே புடாபெஷ்டில் பொதுவாகனங்கள் புழக்கம் மிக அருமை. செல்போனில் GPS செட் பண்ணி செல்லவேண்டிய இடங்களுக்கு உடனுக்குடன் செல்ல முடிகிறது.
புடாபெஷ்ட் தவிர்த்து புற நகர்களில் ஏழ்மை தெரிகிறது. பண வீக்கம் அதிகரித்திருப்பதால் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்தாலும் கூட யூரோவிற்கு இவர்களால் மாறமுடியவில்லை.
அனேகமாக எல்லா பாலங்களின் கீழும் கம்பளியைப் போர்த்திக் கொண்டு சிறு பைகளை வைத்துக் கொண்டு பியர் குடித்து உறங்கும் ஆண்களைக் காண முடிகின்றது.
பிரமாண்டமான அரண்மனை போன்ற கட்டிடங்களில் உள்ள அருங்காட்சியகங்கள் அனைத்தும் பொக்கிஷங்கள்.
நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் 11%. ஜெர்மானிய மொழி பேசுவதால் சிலர் வேலை தேடி ஜெர்மனிக்கு வருகின்றனர்.
உணவு எனும் போது..இத்தாலிய மற்றும் துருக்கிய, அனைத்துலக வகை உணவுக் கடைகளே உள்ளன. சில ஹங்கேரிய உணவுக் கடைகளும் உள்ளன. ஆனால் என்னை அவை ஈர்க்கவில்லை.
இயற்கை எழில் மனதைக் கவர்கிறது. பசுமையும் டனூப் நதியின் பிரம்மாண்டமும் மனதைக் கொள்ளை கொள்கின்றது.
நகரப்பகுதி மிகத்தூய்மையாக உள்ளது. புற நகர்ப்பகுதியில் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் சில குப்பைகள்.
பிரம்மாண்டத்துடன் சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் இருந்த ஒரு நாட்டில் இன்று பெரும்பாண்மை மக்கள் நடுத்தர வர்க்கத்திற்கும் கீழ் இருப்பதைக் காண முடிகின்றது.
பயணிகளுக்குப் பாதுகாப்பு உள்ளது. உள்ளூர் மக்கள் அன்புடனும் நேசத்துடனும் பழகுகின்றனர்.
ஆக மொத்தம், ஹங்கேரி எளிமையும் பிரம்மாண்டமும் கலந்த வரலாற்றுச் சிறப்புக்கள் நிறைந்த ஒரு நாடு.
புடாபெஷ்டிலேயே எனது அலுவலக நண்பர்கள் சிலர் இருக்கின்றார்கள். அவர்களிடமும் சொல்லிக்கொள்ளாமல் தனிமையில் இந்த நகரைச் சுற்றிப்பார்த்தது இனிய அனுபவம் தான். :-)
-சுபா, புடாபெஷ்ட் விமான நிலையத்திலிருந்து.


டனூப் நதி - ஹங்கேரியில் மீண்டும்

டனூப் நதி..
ஐரோப்பாவின் 2வது நீண்ட நதி.
ஜெர்மனியில் ஊற்றாகித் தொடங்கி ஆஸ்திரியா, சுலோவாக்கியா, ஹங்கேரி, புல்காரியா, ரொமேனியா...என 10 நாடுகளின் குறுக்கே பாய்ந்து செல்லும் நதி. இந்த நதிக்கரையோரத்தில் பிறந்தவைதாம் பல வடிவங்களைக் கண்ட கெல்ட் மக்களின் நாகரிகம்.
...இனிமையான உணர்வுகளை எனக்குத் தந்த நதி இது..!

https://www.facebook.com/subashini.thf/videos/1951566131753441/








நான் பகிர்ந்து கொண்ட டனூப் நதி படங்களைப் பார்த்து தமிழகத்தில் இப்படி இல்லையே என சிலர் வருந்துகின்றனர்.
எனக்கும் இந்த வருத்தம் மிக அதிகமாக உண்டு.
தமிழகம் ஒரு வளமான நாடு. ஆனால் சரியாகப் பராமரிக்கப்படாததால் அதன் இயற்கை வளங்கள் சீரழிந்து விட்டன.
தமிழகத்தில் உள்ள ஆறுகளில் நடக்கும் மணல் கொள்ளைகளை தடுக்கவும், ஆறுகள், ஏரி, குளங்களை தூர்வாரி நீரைத் தேக்கவும் பொது மக்கள் இவ்வகையில் இயங்கும் சமூக நல அமைப்புக்களுடன் இணைந்து செயல்பட வேண்டும். ஏனெனில் தமிழக அரசுக்கு இத்தகைய மக்கள் நலன் சார்ந்த விசயங்களில் சிறிதும் அக்கறை இல்லை. அவர்கள் கவனம் வேறு திசையில் மட்டுமே.
மக்கள் சக்தி இணைந்தால் நாட்டு வளங்களை மீட்டெடுக்க முடியும். வளமான தமிழகத்தை விரைவில் காண முடியும்.
இதற்கு முதல்கட்ட நடவடிக்கையாக ஒவ்வொருவரும் எல்லா இடங்களிலும், அது மிகச் சிறிய குப்பையானாலும் சரி, அதனை குப்பை தொட்டியில் மட்டும்தான் போடுவேன் என மனதில் உறுதி எடுத்து அதன் படி செயல்பட வேண்டும்.
மாற்றத்தை பிறரிடம் எதிர்பார்க்காமல் நம்மிடமே அது தொடங்க வேண்டும். முடியுமா?

Chain Bridge, Budapest - ஹங்கேரியில் மீண்டும்

Chain Bridge, Budapest
325மீட்டர் பாலம். புடாவையும் பெஷ்டையும் இணைக்கும் பாலங்களில் மிகப் பிரபலமான பாலம் இது.

























புடாபெஷ்ட் டுக் டுக் - ஹங்கேரியில் மீண்டும்

சுற்றுப்பயணிகளுக்காக ஆட்டோ போன்ற புடாபெஷ்ட் டுக் டுக் வாகனங்களும் இயங்குகின்றன.


ஹங்கேரியின் Zero KM - ஹங்கேரியில் மீண்டும்



ஹங்கேரியின் Zero KM இருக்கும் இடம் இதுதான். புடா பகுதியில் Chain bridge முடியும் இடத்தில் உள்ளது.


13ம் நூற்றாண்டு ஆவணங்கள்- ஹங்கேரியில் மீண்டும்

13ம் நூற்றாண்டு ஆவணங்கள் சிலவற்றை இன்று அருங்காட்சுயகத்தில் பார்த்தேன். அதில் ஒன்று இது.
இது போன்ற ஆனால் முழு புத்தக வடிவில் செக் தலைநகர் ப்ராகில் நான் 1999ல் கண்ட ஒரு 12ம் நூ. லத்துன் நூல் தான் எனது தமிழ் ஓலைச்சுவடி தேடலுக்கு தொடக்கப்புள்ளியானது.


ரோமன் பேரரசின் தாக்கம் - ஹங்கேரியில் மீண்டும்

ரோமன் பேரரசின் தாக்கம் ஐரோப்பிய நாடுகளில் பிரிக்கமுடியாதது. ஹங்கேரியில் உள்ள ரோமானிய குடியிருப்பு ஒன்று..
கி.மு 3-2 என அறியப்படுவது.
தொல்லியல் மற்றும் அகழ்வாய்வுகளில் ஆர்வம் உள்ளோர் காண்க.
சிறிய வீடியோ பகிர்வு.

https://www.facebook.com/subashini.thf/videos/1951193868457334/

ரோமன் பேரரசின் தாக்கம்- ஹங்கேரியில் மீண்டும்

ரோமன் பேரரசின் தாக்கம் ஐரோப்பிய நாடுகளில் பிரிக்கமுடியாதது. ஹங்கேரியில் உள்ள ரோமானிய குடியிருப்பு ஒன்று..
கி.மு 3-2 என அறியப்படுவது.
சில புகைப்படங்கள். பின்னர் இதன் சிறப்புக்களை விரிவாக எழுதுகிறேன்.










ஸ்டாலினின் இரும்பு சிலை - ஹங்கேரியில் மீண்டும்

1956ம் ஆண்டு நடைபெற்ற புரட்சியின் போது ஸ்டாலினின் இரும்பு சிலை ஒன்று தகர்க்கப்பட்டது. அதில் சிதறிய சிலையின் கைப்பகுதி மட்டும்...
ஹங்கேரிய தேசிய அருங்காட்சியகம்.


கம்யூனிச சித்தாந்தம் பரவிய வேளையில் -- ஹங்கேரியில் மீண்டும்

கம்யூனிச சித்தாந்தம் பரவிய வேளையில்..1950க்குப் பிறகு...
ஹங்கேரிய தேசிய அருங்காட்சியகம்







ஸ்டாலினுடன் - ஹங்கேரியில் மீண்டும்

ஸ்டாலினுடன் ..
1951ம் ஆண்டு ஹங்கேரியின் தலை நகரில் வைக்கப்பட்ட ஸ்டாலின் செம்புச்சிலை. தற்சமயம் ஹங்கேரிய தேசிய அருங்காட்சியகத்தில்.



நாடுகள்


உலகின் ஒவ்வொரு நாடும் அதன் நிலப்பகுதியும் இயல்பாகவே அழகும் வளமும் நிறைந்துதான் இருக்கின்றது.
ஒரு நாட்டின் அழகையும், வளத்தையும் பாதுகாப்பதும், வளர்ப்பதும் மேண்மைப்படுத்துவதும் அந்தந்த நாட்டு மக்களின் கைகளில்தான் இருக்கின்றது.
அதேபோல ஒரு நாட்டின் அழகைச் சிதைப்பதும், இயற்கை வளத்தை அழிப்பதும், சிறப்புக்களை அழிப்பதும் கூட அந்தந்த நாட்டு மக்களின் கைகளில்தான் உள்ளது!
-சுபா