Friday, June 22, 2018

கம்போடியா - அங்கோரில் சில நாட்கள் - 18

அங்கோரில் சில நாட்கள் - 16
18.மே.2018

தமிழகத்து சேர சோழ பாண்டிய மன்னர்களின் வரலாறு போல கம்போடியாவை ஆட்சி செய்த பேரரசுகளின் வரலாறும் சுவாரசியமானது. ஃபூனான், சென்லா பேரரசுகளுக்குப் பின்னர், மன்னன் 2ம் ஜெயவர்மனின் ஆட்சி காலம் தொடங்குகின்றது. க்மெர் பேரரசின் தொடக்கப்புள்ளியாக இது அமைகின்றது. கி.பி.800லிருந்து கி.பி 1000 வரையிலான காலகட்டத்தை இதில் குறிப்பிடலாம்.

மன்னன் 2ம் ஜெயவர்மனின் சிலைகள் சியாம் ரீப் நகரின் பல இடங்களில் காணப்படுகின்றன. நாட்டின் வீரச்சின்னமாக, க்மெர் பண்பாட்டின் அடிப்படையை அமைத்த நாயகனாக மன்னன் 2ம் ஜெயவர்மன் கம்போடிய மக்களால் கருதப்படுகின்றான். இவனது ஆட்சி காலத்தில் தான் இந்த நாடு கம்பூஜதேசம் அல்லது கம்போடியா என்ற பெயரைப் பெறுகின்றது என்பது முக்கியச் செய்தி. அதோடு, மன்னர்களுக்கெல்லாம் மன்னனான மாமன்னன் எனத் தன்னைப் பிரகடனப்படுத்திக் கொள்கின்றான் 2ம் ஜெயவர்மன். மாமன்னன் என்பவன் இறைவனின் பிரதிநிதி என்றும் அதனால் பல சடங்குகள் மாமன்னனுக்கு நடைபெறும் என்ற கலாச்சார அமைப்பையும் இவனே அதிகாரப்பூர்வமாக கட்டமைக்கின்றான். நாம் முந்தைய பதிவில் பார்த்த ஆக் யூம் கோயில் இந்த 2ம் ஜெயவர்மன் காலத்தில் உருவாக்கப்பட்டது என்றே வரலாற்றாசிரியர்கள் பதிகின்றனர்.

மாமன்னன் 2ம் ஜெயவர்மன் கி.பி 790லிருந்து 835 வரை ஆட்சி புரிந்தான். புனோம் குலேன் பகுதியை மேரு மலையாகப் பாவித்து அதற்கு மகேந்திரப்பர்வதம் எனப்பெயர் சூட்டினான். அவனுக்குப் பட்டாபிஷேகம் மகேந்திரப்பர்வதத்தில் நடைபெற்றது. அப்பகுதியில் ஓடும் நீர்நிலைகளில் 1000 லிங்கங்கள் வடிவமைத்தான். மகாலெட்சுமியுடன் அமர்ந்த நிலையில் மகாவிஷ்ணு, பிரம்மா, வெவ்வேறு வடிவிலான சிவலிங்கங்கள் என இப்பகுதியே ஒரு கோயில்வளாகமாகத் திகழ்கின்றது. அருகிலேயே பௌத்த மடாலயம் ஒன்றும் அமைந்துள்ளது.

எங்கள் பயணத்தின் 2ம் நாளில் புனோம் குலேன் பகுதியில் ஓடும் ஆற்றில் செதுக்கப்பட்ட இந்த 1000 லிங்க வடிவங்களையும் ஆற்றின் நீர்பரப்பின் கீழ் கற்பாறையில் செதுக்கப்பட்ட விஷ்ணு, மகாலட்சுமி வடிவங்களையும் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. உலக அதிசயங்களில் ஒன்று இப்பகுதி எனக் குறிப்பிட்டால் அது மிகையில்லை.

மாமன்னன் 2ம் ஜெயவர்மனுக்குப் பின் அவனது சந்ததியினர் தொடர்ந்து ஆட்சிப்பொறுப்பைத் தொடர்கின்றனர்.

மூன்றாம் ஜெயவர்மன்
முதலாம் இந்திரவர்மன்
முதலாம் யசோவர்மன்
முதலாம் ஹர்ஷாவர்மன்
இரண்டாம் ஈசானவர்மன்
நான்காம் ஜெயவர்மன்
இரண்டாம் ஹர்ஷாவர்மன்
முதலாம் ராஜேந்திரவர்மன்
ஐந்தாம் ஜயவர்மன்
எனத் தொடரும் இந்தப் பட்டியலில் உதயாதித்தவர்மனும் ஜெயவீரவர்மனும் இறுதியில் வருகின்றனர். ஆனால் மிகக் குறுகிய கால ஆட்சியாகவே இது குறிப்பிடப்படுகின்றது.

இதற்குப் பின்னர் முதலாம் சூரியவர்மனின் ஆட்சிகாலம் கி.பி.1006ல் தொடங்குகின்றது. இது சூரியப் பேரரசு என்றே அடையாளப்படுத்தப்படுகின்றது.

2ம் ஜெயவர்மன் காலத்தில் உருவாக்கப்பட்ட க்மெர் பேரரசின் முக்கிய மதங்களாக சிவ வழிபாடும், விஷ்ணு வழிபாடும் முதன்மை பெறுகின்றன. பௌத்தம் ஓரளவு ஆங்காங்கே பரவி வழக்கில் இருந்தமையைச் சில கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன. ஆனால் முதலாம் சூரியவர்மனின் காலம் தொடங்கி கம்போடியாவின் அதிகாரப்பூர்வ அரச மதமாக பௌத்தம் தன்னை நிலைநாட்டிக் கொள்ளும் வரலாற்று மாற்றத்தின் தொடக்கத்தைக் காணமுடிகின்றது.

முதலாம் சூரியவர்மன் மஹாயான பௌத்த மரபைப் பின்பற்றியவன். தேரவாத பௌத்த மரபும் அவன் காலத்தில் வழக்கில் இருந்தமையைக் கல்வெட்டுச் சான்றுகள் சொல்கின்றன.

குறிப்புக்கள்:
The civilization of Angkor by Charles Higham
https://en.wikipedia.org/wiki/Monarchy_of_Cambodiaதொடரும்..
சுபா

Wednesday, June 20, 2018

கம்போடியா - அங்கோரில் சில நாட்கள் - 17

அங்கோரில் சில நாட்கள் - 16
18.மே.2018
மெக்கோக் நதி, தொன்லே சாப் மற்றும் வளமான ஆறுகள் பாயும் பகுதிகள், இன்றைய அங்கோர் நகர் அமைந்திருக்கும் பகுதிகள் ஆகியவை பெரிய பேரரசுகள் ஆட்சி செய்து நகரங்களை அமைத்த பகுதிகளாகத் திகழ்கின்றன. நதிகளைச் சார்ந்தவாறு நாகரிகங்கள் உருவாக்கம் பெறுவது உலக நாகரிகங்கள் அனைத்திற்கும் உள்ள ஒரு இயல்பான கூறுதான். நைல் நதிக்கரை நாகரிகம், சிந்துவெளி நாகரிகம், வைகை நதி நாகரிகம், டனூப் நதி நாகரிகம் என இப்படி பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம்.
கம்போடியாவில் ஆற்றங்கரைப் பகுதிகளில் நிகழ்த்தப்பட்ட தொல்லியல் அகழ்வாய்வுகளில் குறிப்பிடத்தக்க கல்வெட்டுக்களும் கிடைத்துள்ளன. அவற்றுள் பல சிதைந்த நிலையில் காணப்பட்டாலும் ஒரு சில செய்திகளை அடையாளம் காணக்கூடிய வகையில் இருப்பது பண்டைய கம்போடிய வரலாற்றை அறிய உதவும் சான்றாக அமைகின்றது. உதாரணமாக கோதாப் (Go Thap) பகுதியில் கிடைத்த கி.பி.5ம் நூற்றாண்டு சமஸ்கிருத கல்வெட்டு ஒன்று ”ஜெயவர்மன்” என்பவன் ”வீர(அல்லது வீரா)” என்ற ஒருவனோடு போர் புரிந்ததைக் குறிப்பிடுகிறது. நாக் தா டம்பாக் டெக் (Nak Ta Dambang Dek) பகுதியில் கண்டெடுக்கப்பட்ட மற்றுமொரு கல்வெட்டு புத்தருக்காக அமைக்கப்பட்ட வாசகங்களைக் கொண்டிருக்கின்றது. ஜெயவர்வமன் என்ற மன்னன் மன்னன் பற்றியும் அவனது மகன் ருத்ரவர்மன் பற்றியும் இதே கல்வெட்டு குறிப்பிடுகிறது.

இதே கல்வெட்டு மன்னனின் போர் வெற்றிகளையும் குறிப்பிடுகிறது. இந்தக் கல்வெட்டு ஒரு குடியிறுப்புப் பகுதியை மன்னன் ஜெயவர்மன் உருவாக்கியதையும், அணை ஒன்றினைக் கட்டியதையும் அவனது மனைவி “குலபிரபாவதி” என்பவரைப் பற்றியும் குறிப்பிடுகிறது. ஆக கி.பி 480-520 கால வாக்கில் கம்போடியாவின் அங்கோர் மற்றும் நதிக்கரை பகுதிகளில் தொடர்ச்சியாகப் போர்கள் நடந்தமையும் ஜெயவர்மன் என்ற ஒரு மன்னன் ஆட்சி செய்தான் என்ற விபரங்களையும் அறிய முடிகின்றது. மன்னன் ருத்ரவர்மனின் கி.பி674ம் ஆண்டு கல்வெட்டுக்கள் அவனைப் பற்றிய தகவல்களையும் வழங்குகின்றன. இந்தக் கால கட்டம் க்மெர் பேரரசு தோன்றாத காலகட்டமாகும்.

க்மெர் பேரரசு தோன்றுவதற்கு சில நூற்றாண்டுகளுக்கு முன் கம்போடியாவை ஆட்சி செய்த அரசுகள் இரண்டு. ஃபூனான் (Funan) அரசின் ஆட்சி கி.பி 550 வரையான காலகட்டம். அதன் பின்னர் கி.பி 550 முதல் 800 வரை சென்லா என்ற இன்றைய வியட்நாம் நிலப்பரப்பை பூர்வீகமாகக் கொண்ட மன்னர்களின் ஆட்சியில் கம்போடியா இருந்தது. கல்வெட்டுக்களின் தகவல்கள் அடிப்படையில் கி.பி 600ல் இன்றைய மத்திய கம்போடிய பகுதியில் மன்னன் மகேந்திரவர்மன் ஆட்சிப்பொறுப்பை ஏற்கின்றான். அதன் பின்னர் கி.பி 615 முதல் ஆட்சி பொறுப்பேற்று கி.பி. 637ல் மன்னன் முதலாம் ஈசானவர்மன் இறந்தான் என்றும் அதன் பின்னர் கி.பி.635-80 காலகட்டத்தில் முதலாம் ஈசானவர்மனின் பேரன் முதலாம் ஜயவர்மன் ஆட்சி செய்தான் என்ற தகவல்களும் கிட்டுகின்றன. இக்காலகட்டத்தில் கற்கோயில்கள் பல உருவாக்கபப்ட்டன. சிவ லிங்க வழிபாடு முதன்மை பெற்ற காலகட்டம் இது. இயற்கையான மலைகள் லிங்க வடிவங்களாக அடையாளபப்டுத்தப்பட்டு மலைப்பகுதிகள் புண்ணியத்தலங்களாக போற்றப்பட்டன.

கம்போடிய வரலாற்ரில் ஜெயவர்மன் என்ற பெயர் மீண்டும் மீண்டும் வருவதைக் காண்கின்றோம். கி.பி 6 நூற்றாண்டில் குறிப்பிடப்படும் மன்னன் ஃபூனான் பேரரசை ஆண்ட ஜெயவர்மன். பின்னர் கி.பி.7ம் நூற்றாண்டில் குறிப்பிடப்படுபவன் சென்லா பேரரசை ஆண்ட முதலாம் ஜெயவர்மன். பின்னர் மீண்டும் ஒரு ஜெயவர்மன் பெயர் முக்கியத்துவம் பெறுகிறது. அவனே இரண்டாம் ஜெயவர்மன். இவனே அங்கோர் நகரை உருவாக்கி க்மெர் பேரரசை நிறுவிய மாமன்னன்.

இந்த மன்னர்களின் பெயர் பட்டியலை வாசிக்கும் போது பொறிதட்டும் ஒரு விசயம் கம்போடிய பேரரசுகளுக்கும் தமிழகத்தை ஆண்ட பல்லவ பேரரசை ஆண்ட மன்னர்கள் பெயர்களுக்கும் இருக்கும் பெயர் ஒற்றுமை. கம்போடிய சென்லா பேரரசை கி.பி 600ல் ஆட்சி செய்தவன் பெயர் மன்னன் மகேந்திரவர்மன். தமிழகத்தில் பல்லவ பேரரசின் ஈடு இணையற்ற மாமன்னனாக கி.பி600 – 630 ஆட்சி செய்தவன் பெயரும் மகேந்திரவர்மன். சிந்திக்க வேண்டிய, ஆராய்ச்சிக் குறிய ஒன்றல்லவா..??


குறிப்புக்கள்: The civilization of Angkor by Charles Higham

தொடரும்..
சுபா

Tuesday, June 19, 2018

கம்போடியா - அங்கோரில் சில நாட்கள் - 16


18.மே.2018

இன்று நமக்குக் கிடைக்கின்ற கம்போடியாவைப் பற்றிய வரலாற்றுத் தகவல்கள் கம்போடியா மற்றும் மெக்கோங் நதிக்கரைப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் அகழ்வாய்வுப் பணிகளில் கிடைத்த சான்றுகளின் அடிப்படையில் வழங்கப்படுபவை. கம்போடியாவில் கடந்த நூற்றாண்டில் நிகழ்த்தப்பட்ட அகழ்வாய்வுப் பணிகள் விரிவான பல செய்திகளையும் க்மெர் அரசின் மன்னர்களைப் பற்றியும் கல்வெட்டுச் சான்றுகளை வழங்கியதால் தான் கம்போடிய அங்கோர் நாகரிகம் 'கம்போடியர்களால்' தான் உருவாக்கப்பட்டது என்ற உண்மை உலகிற்கு வெளிச்சமாகியது.

அதற்கு முன்னர், அங்கோர் நகருக்கு வந்த ஐரோப்பியர்கள் இவை ரோமானியப் பேரரசின் கட்டுமானப் பணி என நம்பினர். கம்போடியர்களுக்கு இத்தகைய மாபெரும் கட்டுமானங்களை கட்டக் கூடிய தொழில்நுட்ப அறிவும் திறனும் இருக்க வாய்ப்பில்லை என்பதே அவர்களது சிந்தனையாக இருந்தது. இந்த சிந்தனையை அகழ்வாய்வுக் கண்டுபிடிப்புக்களே மாற்றின. அங்கோர் நகர நாகரிகம் கம்போடியர்களால் கட்டப்பட்டது என்பதும், இங்கு மாபெரும் ஒரு பேரரசு ஆட்சி செய்தது என்றும், அந்தப் பேரரசு கலையையும் விவசாயத்தையும், வளர்த்தது என்பதையும் உலகமறிய தொல்லியல் அகழ்வாய்வுகளே ஆதாரமாகின.

இதே போன்ற நிலையைத்தான் தமிழர்கள் நாமும் அனுபவிக்கின்றோம். கீழடியில் நிகழ்த்தப்பட்ட அகழ்வாய்வுப் பணி இன்றைக்கு 2300 ஆண்டுகளுக்கு முன்னரே நகர நாகரிகம் ஒன்று கீழடியில் இருந்தது என்பதை உறுதி செய்கிறது. மக்களின் உயர் நாகரிக வாழ்க்கை நிலையை விவரிக்கும் 5000க்கும் மேற்பட்ட அகழ்வாய்வுத் தொல்சான்றுகள் இங்கு கண்டு பிடிக்கப்பட்டன. நிகழ்த்தப்பட்ட 110 சதுர அடிப்பகுதியில் கிடைத்த ஆதாரங்களே கீழடியின் உயர் தனி வாழ்வியல் முறை நாகரிகத்தை உலகுக்குக் காட்டும் கண்ணாடியாக அமைந்திருக்கின்றதென்றால் இன்னும் விரிவாக இப்பகுதியில் அகழ்வாய்வுகள் நிகழ்த்தப்படும் போது தமிழின் தொண்மையை விளக்கும், தமிழரின் நாகரிகத்தின் பெருமையை உயர்த்தும் பல சான்றாதாரங்கள் ஆய்வுலகுக்கு கிட்டும். ஆனால் கீழடி அகழ்வாய்வுப் பணிகள் எதிர்நோக்குகின்ற சிக்கல்களோ ஒன்றுக்குப் பின் மற்றொன்றாக முளைப்பதும், பல தடைகள் இப்பணி தொடர முடியாதவாறு ஏற்படுவதும் இச்சான்றுகள் வெளிவருவதில் தடைகளை ஏற்படுத்தும் திட்டங்கள் பின்னனியில் இயங்குவதைத் தான் காட்டுகின்றன.


கி.பி.16ம் நூற்றாண்டில் ரோமன் கத்தோலிக்க சமயத்தைப்பரப்பும் பணிக்காக ஆசிய நாடுகள் பலவற்றிற்கு வந்த போர்த்துக்கீசியர்களில் ஒரு சிறிய குழு கம்போடியா வருகின்றனர். இக்குழுவில் இருந்த வர்த்தகர்களும் சமயப்போதகர்களும் காட்டுக்குள் சிதலமடைந்து கிடக்கும் அங்கோர் வாட் கோயில் வளாகத்தையும் மற்றும் இந்த நகரத்தின் பெரும்பகுதியையும் கண்டு வியக்கின்றனர். அவர்களில் ஒருவர் அந்தோனியோ ட மெக்டலெனா (Antonio da Magdalena). மூன்றாண்டுகளுக்குப் பின்னர் இவர் ஆசிய நாடுகளுக்கான அதிகாரப்பூர்வ வரலாற்றாசியராக அன்று நியமிக்கப்பட்டிருந்த டியாகோவிற்கு (Diago do Couto) தான் கம்போடியாவில் பார்த்த அங்கோர் நகரைப் பற்றி விவரிக்கின்றார். அதற்குப் பின் கம்போடியா, சியாம் ஆகிய நாடுகளுக்கு வந்து சென்ற மதம் பரப்பும் பணியாளர்களும் அங்கோர் நகரைப்பற்றியும் அங்கு காட்டுக்குள் புதைந்து கிடக்கும் அங்கோர் கோயில்கள் பற்றியுமான குறிப்புக்களை எழுதி வைக்கின்றனர். ஆனால் ஒருவர் கூட இந்தக் கோயில் நகரம் உள்ளூர் கம்போடியர்களால் கட்டப்பட்டிருக்கலாம் என்ற எண்ணம் சிறிதும் இல்லாமல் மாமன்னன் அலெக்சாண்டர் வந்து கட்டியிருக்கலாம் என்ற எண்ணத்திலேயே பதிந்து சென்றிருக்கின்றனர். இது, இத்தகைய மாபெரும் கட்டுமானத்தை கம்போடியர்கள் கட்டவா முடியும், என்ற ஒரு வித மேற்குலக உயர்குல சிந்தனையின் வெளிப்பாடு தானேயன்றி வேறு என்னவாக இருக்க முடியும்??

இன்று நாம் காணும் அங்கோர் நகர் என்பது குலென் மலைப்பகுதியிலிருந்து தொன்லே சாப் ஏரி வரைக்கும் விரிந்திருக்கும் நிலப்பகுதி. அங்கோர் என்ற சொல் நகரா, நகரம் என்ற சமஸ்கிருதச் சொல்லிலிருந்து தோன்றியது என எங்கள் பயண வழிகாட்டி விளக்கமளித்தார். இணையத்திலும் நூல்களிலும் கூட நகரா என்ற சொல்லின் அடிப்படையில் உருவாகியிருக்கலாம் என தகவல்கள் குறிப்பிடுகின்றன. நகரா என வழக்கில் இருந்ததா, அல்லது நாகர் என வழக்கில் இருந்ததா என ஆராய வேண்டியது அவசியமாகின்றது. ஏனெனில், அங்கோர் கோயிலின் பல பகுதிகளில்  நாக வடிவங்களைக் காண முடிகின்றது. பாயோன் கோயிலிலும் அங்கோர் சின்னங்கள் பலவற்றிலும் இறைவடிவங்களிலும் நாகத்தின் சின்னம் இணைந்து காணப்படுகின்றது. நாகர் இனமக்களின் வழிதோன்றல்களே இன்றைய இந்தியா முழுமைக்கும் இருந்த பூர்வகுடிகள் என்பதை ஆய்வுகள் வழி அறிகின்றோம். கம்போடிய பூர்வகுடிகளும் நாகர் வழித்தோன்றல்களாக இருந்திருக்கலாம் என்றும், அதன் ஒரு கூறாக நாக வழிபாட்டினை ஏற்றுக் கொண்ட, பிரதிபலிக்கின்ற சமய நிலையை உள்ளடக்கிய பண்பாடாக க்மெர் பண்பாடு வளர்ந்திருக்கின்றதோ என்பதும் அதன் அடிப்படையில் நாகர் என்ற சொல் வழக்கில் இருந்து அது படிப்படியாக அங்கோர் என மறுவியதோ என்றும் சிந்திக்க வேண்டியுள்ளது. இது ஆராய்ச்சிக்குட்படுத்தப்பட வேண்டிய ஒன்று.

குறிப்புக்கள்: The civilization of Angkor by Charles Higham
தொடரும்..
சுபா

Monday, June 18, 2018

கம்போடியா - அங்கோரில் சில நாட்கள் - 15

18.மே.2018
என் கம்போடிய பயணத்தின் இரண்டாம் நாள். அங்கோரிலிருந்து ஏறக்குறைய 50கிமீ வடக்கு நோக்கிய பயணமாக அன்றைய பயணம் அமைந்தது.

புனோம் குலேன் பகுதிக்கு வாகனத்திலேயே புறப்பட்டோம். இது ஒரு மலைப்பகுதி. கம்போடியாவின் தெய்வீகத்தன்மை பொருந்திய ஒரு மலைப்பகுதியாக இது அடையாளப்படுத்தப்படுகின்றது. சைவ, வைணவ சமயங்களும் பௌத்த சமயம் சார்ந்த வழிபாட்டுத் தலங்களும் நிறைந்த கம்போடியாவின் ஒரு புண்ணிய பூமி தான் புனோம் குலேன். இதனை குலேன் என்றும் குள்ளன் என்றும் கூட அழைக்கின்றனர். தமிழில் நாம் குள்ளன் மலை என்றும் வைத்துக் கொள்ளலாம்.

அடர்ந்த காடுகள் நிறைந்த மலைப்பகுதி இது. புனோம் குலேன் கம்போடிய அரசினால் பாதுகாக்கப்படும் ஒரு பகுதியும் கூட. மலைப்பகுதியின் வாசலில் காவல்துறையின் அதிகாரிகளின் கூடாரங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. முன்பகுதியிலேயே உள்ளூர் மக்கள் சிறு சிறு கூடாரங்களை அமைத்து உள்ளூர் பழங்களை விற்பனை செய்கின்றனர். இங்கே நாவல்பழம், லைச்சி, வாழைப்பழம் ஆகியவற்றோடு பலகாரங்களையும் தயாரித்து விற்பனை செய்து கொண்டிருக்கின்றனர். இம்மலைப்பகுதியில் அதிகமாக லைச்சி பழங்கள் கிடைப்பதால் இம்மலைக்கு லைச்சி மலை என்ற ஒரு பெயரும் இருக்கின்றது.

எங்களுக்கு வழிகாட்டியாக வந்திருந்த திரு.பெய் புனோம் குலேன் பற்றியும், இங்கு ஓடும் ஆற்றில் 1000 லிங்கங்கள் அமைக்கப்பட்டிருப்பதையும், மலைப்பகுதியில் உள்ள புத்தர் கோயில் பற்றியும், நீர் வீழ்ச்சி பற்றியும் விளக்கிக் கொண்டே வந்தார். வாகனத்தில் மலையைச் சுற்றி சுற்றி எங்கள் பயணம் சென்று கொண்டிருந்தது.

கம்போடியா இன்று ஒரு ஏழை நாடு. ஆயின், இன்றைக்கு சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் இந்தோசீனா எனும் பெரும் பகுதியை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த க்மெர் பேரரசு ஆட்சி செய்த ஒரு நாடு இது என்பதை வரலாறு காட்டுகின்றது. க்மெர் பேரரசர்கள் ஒவ்வொருவரும் கோயில் கலையையும், சிற்பக் கலையையும், நாட்டியக் கலையையும், போர்க்கலையையும் ரசித்து வளர்த்திருக்கின்றனர்; தங்கள் ஆட்சியில் ரசித்து வாழ்ந்திருக்கின்றனர். இதற்குச் சான்றுகளாக இந்த வரலாற்றுப் புராதனச் சின்னங்கள் இன்று உலகிற்குக் காட்சியளிக்கின்றன.

பயணங்கள் நாம் ஏற்படுத்தி வைத்திருக்கும் குறிப்பிட்ட ஒரு எல்லையை விரிவாக்கும் பண்பு கொண்டவை. பயண அனுவங்கள் ஒவ்வொன்றுமே நம் உலக அறிவை விசாலப்படுத்துகின்றன. இந்த உலகில் நாம் தனியாக வாழவில்லை. உயிர்கள் அனைத்தும் ஒன்றை ஒன்று சார்ந்தே வாழ்கின்றன. மனிதர்கள் சக மனிதர்களைச் சார்ந்தும் விலங்குகள், தாவரங்கள், பிற உயிர்கள் ஆகியவற்றோடு இயற்கையைச் சார்ந்தே வாழ்கின்றன. இதனை அனுபவப்பூர்வமாக உணர்வது நூல்களை வாசிப்பதனால் மட்டும் கிடைக்கக்கூடியதல்ல. மாறாக, பயணித்து ஏனைய மக்களையும் பார்த்து, ஏனைய இன, சமூக, மக்களின் வாழ்வியல் கூறுகளை அப்படியே உணர்ந்து கொள்ள முயற்சிப்பதன் வழி தான் அது சாத்தியப்படும்.பயணங்கள் நாம் நமக்குள்ளேயே ஏற்படுத்தி வைத்திருக்கும் சமூகம் பற்றிய நமது சிந்தனையை நாமே அலசிப்பார்க்கும் அனுபவமாக அமையும் போது நமது கற்றல் வளம் பெறுகிறது. ’நான் இப்படித்தான். நான் இதைத்தான் செய்வேன்; நான் இதைத்தான் சாப்பிடுவேன். நான் தான் தூய்மை; ஏனையோர் தூய்மையற்றவர்கள்; ஏனையோர் கலாச்சாரமும் பண்பும் தெரியாதவர்கள். எனது பண்பும் எனது சிந்தனையும் தான் சிறந்தது. என் நலன் மட்டும் தான் முக்கியம். நான் நினைத்தபடிதான் உலகம் இயங்க வேண்டும். எனக்குத் தான் எல்லாம் தெரியும் ... எனக்கு எனக்கு எனக்கு.. நான் .. நான் நான்.. ’ என்ற குறுகிய வட்டத்திலிருந்து நமது பார்வை வெளிவர வேண்டுமென்றால் அது நமது சிந்தனையை நாமே சுயபரிசோதனை செய்யும் போது தான் சாத்தியப்படும். அதற்கு களனாக பயண அனுபவங்கள் என்றுமே உதவுவன.


தொடரும்..
சுபா

Friday, June 15, 2018

கம்போடியா - அங்கோரில் சில நாட்கள் - 14


17.மே.2018

ஒரு விசயத்தில் தீவிர நாட்டம் இருப்பவர்களுக்கு அந்த விசயத்தைச் செய்து முடித்து விட்டால் ஒரு நிம்மதி பெருமூச்சு வரும் அல்லவா? அப்படித்தான் அன்று மாலை எனக்கும் இருந்தது. 

கம்போடியாவின் சியாம் ரீப் வரப்போகின்றோம் என முடிவெடுத்தவுடன் நான் கட்டாயம் பார்க்கவேண்டும் எனத் தயாரித்து வைத்த  பட்டியலில் முதலில் இருந்தது அங்கோர் தேசிய அருங்காட்சியகம். ஆக முதல் நாளே இதனைப் பார்த்து நீண்ட நாள் ஆவலைப் பூர்த்தி செய்து விட்டோம் என்ற மகிழ்ச்சி எனக்கு அன்று மாலை மனதில் நிறைந்திருந்தது. எல்லோருமாக முதலில் கட்டுமரம் உணவகத்திற்குத் திரும்பினோம். 

நண்பர் ஒரிசா பாலுவும் அவர் துணைவியார் ராஜியும் சியாம் ரீப் வந்து விட்டார்கள் என்ற செய்தி கிட்டியது.   அவர்கள் தங்கியிருந்த   தங்கும் விடுதிக்கு டுக் டுக் வண்டியிலேயே நாங்கள் புறப்பட்டோம்.  அங்கே வாசலிலேயே எனது பேஸ்புக் நண்பர்களில் ஒருவரான  பத்திரிக்கையாளர் பொன்ரங்கன் தன் நண்பர்களுடன் நின்றுகொண்டிருந்தார். உடனே எனது பேட்டி ஒன்று அவர்கள் நடத்தும் இணையத் தொலைகாட்சிக்கு வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.   

நண்பர் ஒரிசா பாலுவையும், அவர் துணைவியார் ராஜியையும் பார்த்துப் பேசி அலவளாவிவிட்டு தேநீரும் அருந்தினோம். கம்போடிய உலகத்தமிழர் மாநாட்டில் ஒரிசா பாலு அவர்களின் பங்கு மகத்தானது. இத்தகைய ஒரு மாநாடு உருவாக வேண்டும் என்ற கருத்தை ஏற்படுத்தி அது பற்றி விரிவாக உலகம் முழுதும் வாழும் தமிழர்களை ஒன்றிணைக்கும் முயற்சிகளையும் மிகத் தீவிரமாகச் செயல்படுத்தி வருபவர் அவர். ஐயை, தென்புலத்தார் என்ற பெயர்களில் வாட்சப் குழுமங்களை ஏற்படுத்தி உலகளாவிய  தமிழர் கூட்டமைப்பு முயற்சிகளைத் தொடர்ந்து செயல்படுத்தி வரும் செயல் வீரர்.

நண்பர் பொன்ரங்கன் கேட்டுக் கொண்டபடி ஒரு 30 நிமிட தொலைக்காட்சி பேட்டி ஒன்றினை அங்கேயே தங்கும்விடுதியில் வழங்கினேன்.  எங்கள் அருகிலேயே இசைக்கருவியை வாசித்துக் கொண்டு ஒரு இளம் கம்போடியப் பெண் அமர்ந்திருந்தார். அவர் வாசித்த இசைக்கருவி எழுப்பிய இசை மனதை வருடிச் செல்லும் இனிய இசை. இந்த இசைக்கருவியின் பெயர் கிம் என்பதாகும்.

கம்போடியா, லாவோஸ், தாய்லாந்து ஆகிய நாடுகளின் பண்பாட்டில் கலந்துவிட்ட ஒரு இசைக்கருவிதான் கிம். மூங்கில் குச்சிகளால் நரம்புக்ளை மீட்டி இசைக்கப்படுவது. நாம் அறிந்த சந்தூர் இசைக்கருவி போன்றது.    பண்டைய பெர்ஷியாவில் இந்த இசைக்கருவி பயன்பாட்டில் இருந்ததாகவும் பின்னர் 14ம் நூற்றாண்டு வாக்கில் சீனாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்டதென்றும் பின்னர் சீனா வழியாக கம்போடியா, லாவோஸ், தாய்லாந்து வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு அறிமுகமாகியது என்றும் குறிப்புக்கள் சொல்கின்றன.

கம்போடியாவின் சியாம் ரீப் நகரம் வரலாற்றுச் சிறப்பு மிக்கதொரு நகரம். எனது முதல் நாள் பயணத்தில் பல வரலாற்றுச் செய்திகளை அறிந்து கொண்டதும், நேரில் சென்று பார்த்து வந்ததும் மனதிற்கு நிரைவளிப்பதாக இருந்தது. மறுநாள் காலை தங்கும் விடுதியில் காலை உணவருந்திவிட்டு எங்கள் சுற்றுப்பயணத்திற்கு காலை எட்டு மணிக்கு தயாராக இருக்க வேண்டும் என்று திரு.ஞானம் கூறியிருந்தார். மறுநாள் பார்க்கப்போகும் இடங்களைப் பற்றி யோசித்தவாறே முதல் நாள் இரவு கம்போடியாவின் அங்கோர் நகரத்தில் இனிதே கடந்து கொண்டிருந்தது.தொடரும்..
சுபா

Wednesday, June 13, 2018

கம்போடியா - அங்கோரில் சில நாட்கள் - 13

அங்கோரில் சில நாட்கள் - 13
17.மே.2018
கட்டுமரம் உணவகம் வந்த போது அங்கு உலகத் தமிழர் மாநாட்டிற்காக வந்திருந்த மேலும் சில நண்பர்களும் அமர்ந்திருந்தனர். எல்லோருக்குமே பசி என்பதால் மதிய உணவை ருசித்து சாப்பிட்டுக் கொண்டே ஒருவரோடு ஒருவர் அறிமுகமும் செய்து கொண்டோம். முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்தது போல சாம்பாரின் சுவையைப் பாராட்டிக் கொண்டே எங்கள் உரையாடலும் தொடர்ந்தது.

பேஸ்புக் வழி அறிமுகமான சென்னை நண்பர் திரு.காந்தி, தென்புலத்தார் குழும நண்பர் சிவக்குமார் என மேலும் பலருடன் தமிழ் பற்றியும் உலகளாவிய தமிழர் அமைப்புக்கள் பற்றியும் எமது தமிழ் மரபு அறக்கட்டளை செயல்பாடுகள் பற்றியும் கருத்துக்கள் பரிமாறிக் கொண்டோம். அந்தக் குறுகிய நேரத்தில் அறிமுகத்தை முடித்துக் கொண்டு அவசர அவசரமாக ஒரு டுக் டுக் வண்டியை ஏற்பாடு செய்து கொண்டு அங்கோர் தேசிய அருங்காட்சியகம் செல்லப் புறப்பட்டோம்.

ஏனைய நண்பர்களும் அருங்காட்சியகம் வர ஆர்வம் காட்டவே எல்லோருமாக எங்களுக்காக திரு.ஞானம் ஏற்பாடு செய்திருந்த வாகனத்திலேயே பயணம் செல்வது என முடிவாகியது.

இந்த அங்கோர் தேசிய அருங்காட்சியகம் பற்றிய விரிவான எனது கட்டுரையை இங்கே வாசிக்கலாம் (http://subas-visitmuseum.blogspot.com/2018/05/109.html). இந்த அருங்காட்சியகத்தில் உள்ள 1000 புத்தர் சிற்பங்கள், கல்வெட்டுக்கள், அங்கோர் வாட் சரித்திரம், க்மெர் பேரரசு காலத்தைய சிற்பங்கள் என அனைத்துமே மிகச்சிறப்பானவை. பௌத்த, வைணவ, சிவ வழிபாட்டுக் கூறுகளை உள்ளடக்கிய ஏராளமான அரும்பொருட்கள் இந்த அருங்காட்சியகத்தில் உள்ளன. எட்டு அறைகளில் இங்கு கண்காட்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் தெற்குப் பகுதியிலிருந்து கம்போடியாவிற்குச் சென்ற பழம் கலைகளும் பௌத்த, வைணவ சிவ வழிபாடுகளும் தான் கம்போடியாவின் பாரம்பரியத்தின் அடித்தளத்தை வடிவமைத்த பண்பாட்டு அமைப்பாகும். கோயில் கட்டுமானம், சிற்ப வடிவமைப்பு, வழிபாட்டுக் கூறுகள் ஆகியனவற்றுள் முழுமையாகப் புதைந்து கிடக்கும் இக்கூறுகளை விரிவாக ஆராய்ச்சிக்குபடுத்தப்பட வேண்டியது மிக அவசியம். கம்போடியாவின் க்மெர் மொழியில் உள்ள பாலி, சமஸ்கிருதம், தமிழ் ஆகிய மொழிகளின் தாக்கம் பற்றிய விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். கடல்வழி வணிகத் தொடர்புகள், நில வழித் தொடர்புகள், வணிகச் சான்றுகள், ஆகியன சேகரிக்கப்பட வேண்டும். இத்தகைய முயற்சிகளில் தமிழகத்தின் கல்விக்கழகங்களில் இயங்கும் தமிழ், கடல்சார் ஆய்வு மற்றும் வரலாற்றுத் துறைகள் ஆர்வம் காட்ட வேண்டும்.

கம்போடியாவில் நடைபெற்ற உலகத் தமிழர் மாநாடு கம்போடியப் பல்கலைக்கழகம் ஒன்றில் தமிழ் இருக்கை உருவாக்கத்திற்கான தொடக்க நிலைப் பேச்சுக்களுக்கு வித்திட்டுள்ளது. இதனைச் சாத்தியப்படுத்த தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டியதும், ஒரு திட்ட ஆய்வுக்குழு உருவாக்கப்படுவதும் தேவையும் உடனடியாகச் செயல்படுத்தப்பட வேண்டியதும் ஆகும். ஒரு பல்கலைக்கழக தமிழ் இருக்கையை உருவாக்குவதன் வழி இங்கு சீரிய வகையில் கம்போடியாவிற்கும் பண்டைய தமிழகத்துக்குமான வரலாற்றுச் சமூகவியல் ஆய்வுகளை ஆய்வுத்தரத்துடன் நாம் முன்னெடுக்க வாய்ப்பு அமையும்.
தொடரும்..
சுபா

Tuesday, June 12, 2018

கம்போடியா - அங்கோரில் சில நாட்கள் - 12

அங்கோரில் சில நாட்கள் - 12
17.மே.2018
ஆங் செக், ஆங் சோம் பெண் தெய்வக் கோயிலில் சுற்றுப்பயணிகள் நிறைந்திருந்தனர். வாசலில் சோதிடம் பார்ப்பவர் ஒருவர் பனை ஓலைச்சுவடிக் கட்டுக்களை வைத்துக் கொண்டு சோதிடம் பார்க்க வருபவர்களுக்காகக் காத்திருந்தார். சோதிடமும் கம்போடிய மக்களின் வாழ்க்கையில் ஒரு நம்பிக்கையாக இருக்கின்றது என அறிந்து கொண்டோம்.
அந்தப் பகுதி நகர மையப்பகுதி என்பதோடு கம்போடிய மாமன்னர் நொரோடோம் சிகாமணி (Norodom Sihamoni) அவர்களின் விடுமுறைக் கால அரசமாளிகை இருக்கும் பகுதியும் கூட. இன்றைய மாமன்னர் 2004ம் ஆண்டு அக்டோபர் மாதம் 14ம் தேதி அரசராக பதவியேற்றிருக்கின்றார். அக்டோபர் 14 எனது பிறந்த தேதி. மாமன்னரின் பெயரோ சிகாமணி. என்ன ஒற்றுமை என மனம் குதூகலிக்காமலில்லை. சிகாமணி என்ற பெயர் கம்போடியாவில் வழக்கில் இருப்பது போல பண்டைய எகிப்திலும் உண்டு. வட சூடானின் எகிப்து எல்லையில் இருந்த ஒரு கோயிலின் பெயர் சிகாமணி கோயில். இதனை ஸ்பெயின் நாட்டிற்குப் பரிசாக எகிப்து வழங்கியது. இக்கோயில் இன்று ஸ்பெயின் தலைநகர் மட்ரிட் நகரில் இருக்கின்றது. (எனது அருங்காட்சியகப் பதிவு ஒன்றில் இக்கோயிலைப் பற்றி எழுதியுள்ளேன். காண்க)
கம்போடிய மாமன்னர் நொரோடோம் சிக்கானுக்கின் மகனாக 1953ம் ஆண்டு பிறந்தவர் நொரோடோம் சிகாமணி. தனது வாழ்நாளில் பெரும்பகுதியை செக்கோஸ்லோவாக்கியாவின் ப்ராக் நகரில் கழித்தவர். இவர் ஒரு கம்போடிய பாரம்பரிய நடனக்கலை பயிற்றுநராகவும் இருக்கின்றார் என்பது ஆச்சரியம் அல்லவா. ப்ராக் ஐரோப்பாவின் கலாச்சார நகரங்களில் ஒன்று. ப்ராக் நகரம் இம்மன்னரை ஈர்த்ததில் அதன் கலைவளம் காரணமாக இருக்கலாம் என்றே கருதுகிறேன். இவர் ஆங்கிலம், க்மெர், செக், பிரஞ்சு, ருசிய மொழிகள் பேசத்தெரிந்தவர்.
நொரோடோம் சிகாமணி மன்னராக அரியணையேறிய போது அவருக்கு கீழ்க்காணும் இந்தப் பெயர் வழங்கப்பட்டது. ”Preah Karuna Preah Bat Sâmdach Preah Bâromneath Norodom Sihamoni Saman Bhumichat Sasana Rakkhata Khattiya Khmeraratrat Putthintra Mohaksat Khemareacheana Samuhobhas Kampuchea Ekareacharath Bureanasanti Subheamagala Sirivibunla Khmera Sri Bireat Preah Chao Krung Kampuchea Dhibodi (in romanized Khmer)” இதில் உள்ள சமஸ்கிருதச்சொற்களை வாசிக்கும் போதே எளிதாக அடையாளம் காண முடிகின்றதல்லவா?
மாமன்னரின் விடுமுறைகால மாளிகைக்கு முன்புறத்தில் ஒரு பூந்தோட்டத்தை அமைத்திருக்கின்றனர். இங்கு பொதுமக்களும் சுற்றுலா பயணிகளும் நிறைந்திருக்கின்றனர்.
இதே பகுதியிலேயே மைய சாலையின் நடுவில் ஒரு சிறிய கோயில் இருக்கின்றது. உள்ளே வீரன் போன்ற ஒரு வடிவத்தில் ஒரு கருங்கல் சிலையை வைத்து மக்கள் வழிபடுகின்றனர். இந்தச் சிலையை பார்க்கும் போது மதுரை வீரன், சுடலை மாடன் போன்ற கிராமப்புற வழிபாட்டுக் கூறுகளின் பிரதிபலிப்பாகவே இது தென்படுகின்றது.
பண்டைய க்மெர் பேரரசு வைணவ சைவ வழிபாட்டுக் கூறுகளை மையப்படுத்தி கோயில்கள் கட்டுமானத்தில் வைணவ, சைவக் கூறுகளை வெளிப்படுத்தின. விஷ்ணுவின் வடிவமும் சிவலிங்க வடிவங்களும், பார்வதி, லட்சுமி சிற்பங்களும் பண்டைய க்மெர் மன்னர்களின் கோயில் அமைப்புக்களில் இடம் வகித்த முக்கிய தெய்வங்களாக அமைந்தன. கி.பி.12ம் நூற்றாண்டுக்குப் பின்னர் க்மெர் பேரரசு பௌத்த மதத்தை ஏற்ற பின்னர் புத்த மத வழிபாட்டுக் கூறுகள் கோயில் கட்டுமானங்களில் பிரதிபலிக்கத் தொடங்கின. இன்று கம்போடியாவின் அரச மதம் பௌத்தம். 95 விழுக்காடு மக்கள் தொகையினர் பௌத்த மதத்தைப் பேணுபவர் என்றாலும் சிறிய எண்ணிக்கையில் கிராமப்புற நாட்டார் வழிபாடுகளும் வழக்கில் இருக்கின்றன. சியாம் ரீப் பகுதியில் பல இடங்களில் சிறிய கோயில்களில் கிராம தெய்வங்களின் சிலைகள் வைக்கப்பட்டு வழிபடப்படுவதையும் காணக்கூடியதாக உள்ளது. அந்த வகையில் அமைந்த ஒரு கிராமப்புற கோயிலைப் பார்த்து பின் அங்கிருந்து புறப்பட்டோம்.
கட்டுமரம் உணவகத்திற்குத் திரும்பி அங்கு எங்களுக்காகத் தயாராகியிருந்த மதிய உணவை சாப்பிட்டு விட்டு அங்கிருந்து நான் அங்கோர் அருங்காட்சியகம் செல்வதாகத் திட்டமிட்டிருந்தேன். ஏனெனில் கம்போடியாவில் அருங்காட்சியகங்கள் மாலை 5 மணிக்கெல்லாம் மூடிவிடுகின்றனர். ஆக, மதியம் 2 மணிக்கு முன்னராக உணவகத்திற்குத் திரும்பி விட வேண்டும் என எங்கள் பயண வழிகாட்டி திரு.பெய்யை அவசரப்படுத்த, கட்டுமரம் நோக்கி எங்கள் வாகனம் புறப்பட்டது.

குறிப்பு:https://en.wikipedia.org/wiki/Norodom_Sihamoni

தொடரும்..
சுபா