இனிய தோழி ரஞ்சனா அவர்கள் ஓர் இலங்கைத் தமிழர். அவர் லண்டன் தமிழ் அருங்காட்சியகம் எனும் ஓர் அரிய தமிழ் முயற்சியைத் தொடங்கி செயல்படுத்திக் கொண்டிருக்கின்றார்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் இணையத்தில் ஒரு தமிழ் அருங்காட்சியத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு என்னைத் தொடர்பு கொண்டார். அவரும் அவரது குழுவினரும் என்னோடு ஒரு சில கலந்துரையாடல்களை நிகழ்த்திய பின்னர் படிப்படியாக கணினி வல்லுனர்களைக் கொண்டு இணைய வழி தமிழ் அருங்காட்சியத்தை உருவாக்கும் பணியைத் தொடங்கினார்கள். இன்று இந்த இணைய லண்டன் தமிழ் அருங்காட்சியகம் மிக விரிவான அருங்காட்சியமாக வளர்ச்சி கண்டு வருகிறது. இது தமிழ்நாடு, இலங்கை தொடர்பான வரலாறு மற்றும் அயலக தகவல்களும் இணைந்த வகையில் இணையத்திலேயே அரும் பொருட்களைக் காணும் வகையில் இந்த முயற்சி மிகச் சிறப்பாக வளர்ந்து கொண்டிருக்கின்றது என்பது நமக்குப் பெருமை தரும் ஒன்று.
இதே போல இத்திட்டத்தில் பணியாற்றும் பேராசிரியர் டாக்டர் ஸ்ரீகாந்தன் அவர்கள் நியூரோ சயின்ஸ் துறையில் வல்லுனர். பல்கலைக்கழகத்தில் இத்துறையில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இப்போது லண்டனில் உள்ள சில பல்கலைக்கழகங்களில் தொடர்ந்து பாடங்களை நிகழ்த்தி வருகின்றார்.
நாங்கள் வெம்ப்ளி பகுதியில் சந்திக்கலாம் என ஏற்பாடாகி இருந்தது. காலை உணவு ஒரு தமிழ் உணவகத்தில் வைத்துக் கொள்ளலாம் என்ற திட்டத்துடன் சென்றிருந்தோம்.
Palm Beach Restaurant எனப் பெயர் கொண்ட இந்த உணவகம் வெம்ப்ளி மையச்சாலையில் இருக்கின்றது. இது இந்திய, இலங்கை தமிழ் மக்களின் உணவை வழங்கும் ஒரு உணவகமாகத் திகழ்கிறது. இங்குதான் ஆரிய பவன், வசந்த பவன் போன்ற ஏனைய இந்திய உணவகங்களும் இருக்கின்றன.
நாங்கள் முதலில் வடை மற்றும் நூல் பரோட்டா ஆர்டர் செய்தோம். சூடான வடை சுவையாக இருந்தது. நூல் பரோட்டா என்பது மிக மெல்லிய நூல் போல ஒவ்வொரு மடிப்பும் நூல் போல வருவது போல நேர்த்தியாக செய்யப்பட்ட பரோட்டா. இதனைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது மேலும் இட்லி, தோசை, இடியாப்பம் என அடுத்தடுத்து உணவை ஆர்டர் செய்து விட்டார்கள். காலை உணவு என்பதிலிருந்து மதிய உணவு என்ற வகையில் brunch ஆக இது விரிவடைந்தது.
நீண்ட நேரம் உரையாடல். தமிழ் அருங்காட்சியகத்தின் தற்போதைய நிலை பற்றி பேசினோம். இலங்கையில் இருந்து தமிழர் புலம்பெயர்வு பற்றி பேசினோம். இங்கு கணினித்துறை வளர்ச்சி மற்றும் நியூரோ சைன்ஸ் ஆய்வுகள் தொடர்பிலும் உரையாடினோம். நேரம் போனதே தெரியவில்லை நண்பகல் 12க்கு மேல் ஆகிவிட்டது.
ரஞ்சனா, டாக்டர் ஸ்ரீகாந்தன் இருவரிடமும் விடை பெற மனமில்லாமல் விடை பெற்றுக் கொண்டோம்.
வெம்ப்ளி மையத்தில் இருந்து புறப்பட்டு Chalk Town ட்யூப் நிலையம் வந்தடைந்தோம். அங்கிருந்து நாங்கள் கால்நடையாக சில நிமிடங்கள் நடந்து வந்து சேர்ந்தது டாக்டர் அம்பேத்கர் அவர்கள் வாழ்ந்த லண்டன் இல்லம்.
இது 10 King Henry சாலையில் அமைந்திருக்கின்றது. இந்திய அரசின் பாதுகாப்பில் உள்ள ஒரு வரலாற்றுச் சின்னமாக இன்று திகழ்கிறது. டாக்டர் அம்பேத்கர் அவர்களது திருவுருவச் சிலை, நூல்கள், அவர் பயன்படுத்திய பொருட்கள், அவர் காலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் என டாக்டர் அம்பேத்கர் அவர்களது நினைவுகளை மீட்டெடுக்கும் வகையில் இந்த டாக்டர் அம்பேத்கர் லண்டன் இல்லம் அமைந்திருக்கிறது.
இங்கு சில மணி நேரங்கள் இருந்து விட்டு அங்கிருந்து புறப்பட்டு மீண்டும் பிரித்தானிய நூலகம் வந்தடைந்தோம்.
நாங்கள் ஏற்கனவே இரு நாட்களுக்கு முன்னால் ஆர்டர் செய்து வைத்திருந்த நூல்கள் எங்கள் பார்வைக்காக அங்கு வைக்கப்பட்டிருந்தன. இருந்த இரண்டு மணி நேரத்தில் அந்த நூல்களைப் பார்வையிட்டு தேவையான சில பகுதிகளைக் குறித்துக்கொண்டோம்.
லண்டன் நகரின் Leicester Square நாடகங்கள் அரங்கேறும் அரங்குகள் உள்ள பகுதியாகத் திகழ்கிறது. உலகப் புகழ்பெற்ற நாடகங்கள் பல இங்கு ஒவ்வொரு நாளும் அரங்கேற்றப்படுகின்றன. நாம் எல்லோரும் நன்கறிந்த Harry Potter நாடகத்தைப் பார்ப்பதற்காக இரண்டு டிக்கெட் புக்கிங் செய்து வைத்திருந்தோம். இரண்டு மணி நேர நிகழ்வு. மாலை 7 மணிக்குத் தொடங்கி இரவு 9 மணிக்கு நிறைவடைந்தது.
Harry Potter என்றாலே நமக்கு அந்த மாய உலக காட்சிகள் தான் கண்களில் வெறியும். அதனை முடிந்த அளவிற்கு இந்த நாடகத்தில் கொண்டுவர முயற்சித்திருக்கிறார்கள். பழைய நாடக மேடை போல பல அடுக்குகளில் இந்த அரங்கம் அமைந்திருக்கிறது. இங்கு அமர்ந்து இக்காட்சிகளைப் பார்ப்பதே வித்தியாசமான அனுபவமாக அமைந்தது. அரங்கம் நிறைந்த கூட்டம்.
அங்கிருந்து வெளிவந்து சாலையில் நின்று பார்க்கும்போது அந்த இரவில் இந்தக் குளிரையும் பொருட்படுத்தாது மக்கள் திறள் சாலை முழுவதும் நிறைந்திருந்தது. லண்டனின் இந்தப் பகுதி பொதுமக்களால் மிகவும் விரும்பப்படுகின்ற ஒரு பகுதி என்பதில் ஐயமில்லை. பல வகையான கேளிக்கை நிகழ்வுகளும் உணவகங்களும் நிறைந்திருக்கும் ஒரு பகுதி என்பது இதற்கு ஒரு கூடுதல் காரணமாக அமைகிறது.
No comments:
Post a Comment