Monday, March 10, 2025

இங்கிலாந்தில் சில நாட்கள் -3



இங்கிலாந்தில் சில நாட்கள் -3
நேற்று ஞாயிற்றுக்கிழமை. வசந்த காலம் என்றாலும் தட்பவெட்ப நிலை 18 டிகிரி வரை உயர்ந்து இருந்தது. தேம்ஸ் நதிக்கரை சார்ந்த பகுதிகளில் நடக்கும் போது வீசிய குளிர் காற்று இன்னும் முழுமையாக குளிர்காலத்தில் இருந்து நாம் விடுபடவில்லை என்பதை உணர்த்திக் கொண்டிருந்தது.
முதல் நாள் இசைஞானி இளையராஜாவின் சிம்ஃபொனி இசை பிரமாண்ட கச்சேரி. மறுநாள் காலையிலிருந்து தொலைபேசியில் பேசிய நண்பர்களும் இங்கு லண்டன் நகரில் சந்தித்த தமிழ் நண்பர்களும் இதைப் பற்றியே உரையாடிக் கொண்டிருந்தோம். உலகில் தமிழர்கள் வசிக்கின்ற எல்லா நாடுகளிலும் இசைஞானி இளையராஜாவின் சிம்ஃபொனி இசை கச்சேரி நடைபெற வேண்டும் என்பதாக எங்கள் உரையாடல் அமைந்திருந்தது. லண்டன் நகரம் கலை மற்றும் நாடக வடிவத்திற்குப் பெரும் முக்கியத்துவம் கொடுக்கின்ற ஒரு நகரம். அங்கு தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்கின்ற பல்வேறு இசை நாட்டிய நாடக நிகழ்ச்சிகள் பற்றிய செய்திகள் விளம்பரங்கள் பார்க்கின்ற இடங்களில் எல்லாம் கண்களுக்குத் தென்பட்டன.
நேற்று முழுவதும் நகரில் முக்கியமான வரலாற்று சின்னங்களைப் பார்வையிடலாம் என திட்டமிட்டிருந்தோம். முதலில் Tower of London. குறிப்பிடத்தக்க கொலைகள் நிகழ்த்தப்பட்ட ஒரு பகுதி என்பதால் ஒரு வகையில் பேய்கள் ஆக்கிரமித்து இருக்கும் பகுதி எனவும் "செல்லமாக" அழைக்கப்படும் பகுதி இது.
இங்கு சிறை வைக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட முக்கியமான ஏழு பேரில் மன்னன் எட்டாம் ஹென்றியின் இரண்டாம் மனைவி Anne Boleyn அவனது ஐந்தாம் மனைவி Catherine Howard மற்றும் Lady Jane Grey ஆகியோரைக் குறிப்பிடலாம். மன்னர்கள் தங்களுக்குப் பிடிக்காத மனைவியைப் "போட்டு தள்ளிவிட" ஏதாவது சூழ்ச்சி செய்து விடுகின்றார்கள். அடுத்து திருமணம் செய்து கொள்ள இடம் தயாராகிவிடும். 🙂
லண்டன் நகர உருவாக்கம் பற்றி அறிந்து கொள்ள விரும்பினால் இந்தப் பகுதியில் அமைந்திருக்கின்ற லண்டன் கடிகாரத்தைத் தான் பார்க்க வேண்டும். கிபி 49 இல் ரோமானியப் படையெடுப்பு தொடங்கி வரிசையாக எவ்வாறு லண்டன் வளர்ச்சி கண்டது, அதன் மக்கள் தொகை, லண்டன் மக்கள் சந்தித்த தீ விபத்துக்கள், பெருந்தொற்றுகள் என எல்லா முக்கிய வரலாற்று செய்திகளையும் ஆண்டு வரிசையில் தரையிலேயே வட்ட வடிவில் செப்பு தகட்டில் காட்சிப் படமாக தயாரித்திருக்கின்றார்கள். இங்கு சூரிய வெளிச்சம் நமக்கு துல்லியமான கடிகார நேரத்தையும் காட்டும்.
எங்கள் சுற்றுப்பயணத்தில் நேற்று மீண்டும் நண்பர் பாஸ்கர் இணைந்து கொண்டார். அங்கிருந்து போட் எடுத்து நாங்கள் கிரீன்விச் பகுதிக்கு சென்று சேர்ந்தோம். கிரீன்விச் பகுதியில் உள்ள வானியல் கூடம் லண்டன் நகரில் அமைந்திருக்கும் மிக முக்கியமான ஒரு கட்டிடம் எனலாம். இப்பகுதியில் உள்ள வெவ்வேறு அரசு கட்டிடங்கள் மற்றும் கடற்பயண அருங்காட்சியக வளாகம் ஆகியவற்றை புல்வெளியில் நடந்து கொண்டு பார்த்த ரசித்தோம்.
இதன் ஒரு கட்டிடத்தில் அமைந்திருக்கின்றது The Queen's House. மகாராணியின் எல்லா கலைப் பொருட்களின் சேகரிப்பும் இங்குதான் பாதுகாக்கப்படுகின்றன. வருகின்ற பொதுமக்கள் அனைவரும் வந்து பார்க்க வேண்டும் என இந்தப் பகுதிக்கு எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை. அரச பரம்பரையின் மிக முக்கியமான அனைத்து கலை படைப்புகளும் இங்கு பல்வேறு அறைகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மிக பிரம்மாண்டமான, நாமெல்லாம் பொதுவாக இணையத்திலும் நூல்களிலும் பார்த்திருந்த முதலாம் எலிசபெத் மகாராணியின் ஓவியம் இங்குதான் பாதுகாக்கப்படுகிறது. இங்குள்ள கலை பொக்கிஷங்களின் சேகரிப்புகளில் இங்கிலாந்து படைகள் நிகழ்த்திய போர்கள், கைப்பற்றிய நாடுகள் பற்றிய பல ஓவியங்களும் அடங்கும். உள்நாட்டில் இருந்தும் வெளிநாட்டில் இரந்தும் ஏராளமான பொதுமக்கள் இந்த கலைக்கூடத்தில் உள்ள பொருட்களைக் காண வருகின்றார்கள்.
இங்கிலாந்தில் தேம்ஸ் நதியில் போட்டில் பயணிப்பதற்கு ஏறக்குறைய ஒருவருக்கு ஒரு பயணத்தில் 10 பவுண்டு செலவாகின்றது. இதுவே பேருந்தில் பயணித்தால் 1.75 பவுண்டு பணம் தேவைப்படும். ட்யூப் மெட்ரோ ரயில்களில் பயணிக்கும் போது ஏறக்குறைய 3-4 பவுண்டு ஒரு பயணத்தில் செலவாகின்றது, செல்ல வேண்டிய தூரத்தை பொறுத்து. லண்டன் நகருக்குள் பேருந்து, ட்யூப், போட் என மூன்று வகை பொதுப் போக்குவரத்தையும் மக்கள் பயன்படுத்துகின்றார்கள்.
மதிய உணவிற்கு லண்டன் பிரிட்ஜ் போரோ மார்க்கட் செல்லலாம் என நடக்கத் தொடங்கினோம். இப்பகுதியில் விதவிதமான உணவுப் பொருட்கள் சூடாகத் தயாரித்து விற்கப்படுகின்றன. இங்கிலாந்தின் முக்கிய உணவான fish and chips இங்கு பிரபலமானது. கடைகளில் கிடைக்கின்ற பொருட்களை விற்கும் வியாபாரிகள் கூவிக் கூவி அழைத்து தங்கள் பொருட்களை விளம்பரம் செய்வதையும் இங்கு காணலாம். ஜுன் 2017 ஆம் ஆண்டில் இங்கு இப்பகுதியில் தீவிரவாதத் தாக்குதல் நடந்தது என்பது பலருக்கும் நினைவிருக்கலாம். ஒவ்வொரு ஆண்டும் இதனை நினைவு கூறும் நிகழ்வும் இங்கு நடைபெறுகிறது.
அங்கிருந்து புறப்பட்டு தேம்ஸ் நதிக்கரையில் உள்ள பல கட்டிடங்களைப் பார்வையிட்டு நடந்து வந்தோம். ஷேக்ஸ்பியர் நாடகங்கள் நடத்தப்படும் ஷேக்ஸ்பியர் ஹவுஸ் இங்கு தான் அமைந்திருக்கின்றது. லண்டன் நகரில் ஆங்கிலேய இலக்கிய பழமையான ஷேக்ஸ்பியர் படைப்புகள் தொடர்பான நினைவுகளை ஒவ்வொரு நாளும் இங்கு வருகின்ற மக்களுக்கு வெளிப்படுத்தும் வகையில் இக்கட்டிடம் திகழ்கிறது.
இதற்கு அருகாமையிலேயே அமைந்திருக்கின்றது Southwark Cathedral. லண்டன் நகரில் அமைந்திருக்கும் மிகப் பழமையான ஒரு தேவாலயம் இது. கிபி 606இல் ஒரு கான்வென்ட் பள்ளியாக உருவாக்கும் பெற்றது. பின்னர் 1740 ஆம் ஆண்டு வாக்கில் தேவாலயமாக வளர்ச்சி கண்டது. இன்று லண்டன் நகரில் கத்தோலிக்க சமய முக்கியத்துவம் பெறுகின்ற ஒரு தேவாலயமாக இது திகழ்கிறது.
அங்கு தேவாலயத்தையும் அதன் உள்ளே வைக்கப்பட்டிருக்கின்ற பழமையான கட்டிடங்களின் பகுதிகளையும் பார்வையிட்டு அங்கிருந்து புறப்பட்டோம். இடையில் சூடான காபி.
லண்டன் நகரில் பேருந்தில் பயணம் செய்வது சுவாரசியமான அனுபவம். இரண்டு அடுக்கு கொண்ட பேருந்துகள்தான் நகரம் முழுதும் வளம் வந்து கொண்டிருக்கின்றன. அங்கிருந்து புறப்பட்டு வெஸ்ட் மின்ஸ்டர் தகுதியை வந்தடைந்தோம்.
Trafalgar Square வளாகம் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு அங்கிருந்து நேராக பார்லிமென்ட் கட்டிடம் உள்ள பகுதிக்கு நடந்தோம். இப்பகுதியில் ஏராளமான வங்கிகளும் அரச கட்டிடங்களும் இரண்டு பகுதிகளிலும் நிறைந்திருக்கின்றன. அரச மாளிகைக்குச் சேவையாற்றும் பாதுகாப்பு அதிகாரிகளின் அலுவலகப் பகுதி இங்குதான் அமைந்திருக்கிறது. அங்கிருந்துதான் ஒவ்வொரு நாளும் மார்ச் செய்து கொண்டு பாதுகாப்பு அதிகாரிகள் அரண்மனை வரை செல்வார்கள், பின்னர் திரும்புவார்கள். அப்படி குதிரைகளில் அவர்கள் செல்வது பார்ப்பதற்குப் பிரம்மாண்டமான உணர்வை ஏற்படுத்தும்.
அதற்கு அருகாமையில் இருக்கின்றது இங்கிலாந்து பிரதமர் வசிக்கின்ற டௌனிங் ஸ்ட்ரீட் சாலை. இதன் முகப்பிலேயே ஆயுதம் தாங்கிய காவல் அதிகாரிகள் பாதுகாப்புக்காக நிற்கின்றார்கள். அவற்றைக் கடந்து செல்லும்போது இங்கிலாந்தில் முன்பு பயன்பாட்டில் இருந்த சிவப்பு நிற தொலைபேசி பெட்டிகள் வரிசையாக வைக்கப்பட்டிருப்பதைக் காணலாம். இன்று பயன்பாட்டில் இல்லை என்றாலும் சுற்றுப்பயணிகளைக் கவர்கின்ற ஒன்றாக இது அமைகிறது.
பார்லிமென்ட் கட்டிடத்திற்கு அருகிலேயே இருக்கின்றது வெஸ்ட் மின்ஸ்டர் தேவாலயம். இங்குதான் எலிசபெத் மகாராணியின் முடி சூட்டு விழா நடைபெற்றது என்பதை பலரும் நினைவில் வைத்திருப்போம். அக்காலத்தில் அது மிகப்பெரிய ஒரு விழாவாக தொலைக்காட்சிகளில் பிபிசி நிறுவனத்தால் நேரலை வக்ஷசெய்யப்பட்ட பிரமாண்ட நிகழ்வாக பேசப்பட்டது என்பது வரலாறு. இங்கிலாந்தின் மிக முக்கியமான விஞ்ஞானிகளும் அரசு குடும்பத்தினரும் புதைக்கப்பட்ட பகுதி கல்லறைகள் இருப்பதும் இங்குதான். உதாரணத்திற்கு சர் நியூட்டன், ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் போன்றவை குறிப்பிடலாம். எங்களுக்கு நேரம் ஆகிவிட்டதால் தேவாலயத்தில் உள்ளே சென்று காண வாய்ப்பு இல்லாமல் போனது.
இரவின் வெளிச்சத்தில் தேம்ஸ் நதி அதனைச் சுற்றியுள்ள லண்டன் ஐய், நாடாளுமன்ற கட்டிடத்தின் நதிக்கரை ஒரப் பகுதி ஆகியவை கொள்ளை அழகாக் காட்சியளித்தன.
நேற்று ஒரு நாள் லண்டனின் பல்வேறு வரலாற்று, கலை, இலக்கிய மற்றும் பொருளாதார சின்னங்களைப் பார்வையிட்டது நிறைவளிக்கும் ஒன்றாக அமைந்தது. இதமான தட்பவெப்ப சுழலும் அதற்கு உதவுவதாக அமைந்தது.
-சுபா
9.3.2025
லண்டன், இங்கிலாந்து.








































No comments:

Post a Comment