Monday, April 2, 2012

கிருஷ்ணகிரிக்கு போகலாம் வாங்க...! - 14

ஒவ்வொரு ஊருக்குச் செல்லும் போதும் ஒவ்வொரு அனுபவம். அதிலும் நல்ல நண்பர்களும் சேர்ந்து விட்டால்..... பயணத்தில் குதூகலத்திற்குக் குறைவிருக்காது, இல்லையா?

எங்கள் இரண்டு நாள் கிருஷ்ணகிரிப் பயணம் பல புதிய விஷயங்களையும் அனுபவங்களையும் எங்கள் அனைவருக்குமே வழங்கியது.

மல்லிகார்ஜுனர் கோயிலில் பதிவை முடித்து வழிபாட்டையும் முடித்துக் கொண்டவுடன் நாங்கள் தர்மபுரியிலிருந்து ஈரோடு செல்ல பயணமானோம். தர்மபுரியிலிருந்து ஈரோடு செல்ல இரண்டு பஸ்கள் மாறி மாறிச் செல்ல வேண்டும். தர்மபுரியிலிருந்து முதலில் சேலத்திற்குச் செல்லும் பஸ்ஸில் பயணம் செய்து பின்னர் சேலத்திலிருந்து ஈரோடு செல்ல வேண்டும். அப்போதே மணி மாலை 7 ஆகிவிட்டது.

செல்வமுரளி, ஸ்வர்ணா ஆகியோரையும் வழி அனுப்பி விட்டு நானும் கண்ணனும் சேலம் செல்லும் பஸ்ஸில் ஏறிக்கொண்டோம். இப்போது பஸ்ஸில் பயணம் செல்ல தயக்கம் இல்லாமல் போய்விட்டது. சேலத்திற்குச் சென்றதும் அங்கிருந்து எங்களை ஈரோடு செல்லும் பஸ்ஸிற்குச் செல்லும் வழியைக் காட்டும் படி பஸ் ஓட்டுநரிடம் சொல்லி விட்டு முன் வரிசை சீட்டிலேயே உட்கார்ந்து கொண்டோம் நானும் கண்ணனும்.

பஸ்ஸில் பயணம் சுவாரஸியமாக இருந்தது. ஓட்டுநரிடமும் பேசிக் கொண்டே பயணித்தோம். ஒரு மணி நேரம் பயணம் செல்வதே தெரியாமல் பயணம் அமைந்திருந்தது. சேலம் வந்து சேர்ந்ததும் எங்கள் பெட்டிகளை இறக்கிக் கொண்டதும் பஸ் ஓட்டுனரே எங்களை ஈரோடு செல்லும் பஸ் இருக்கும் இடம் வரை வந்து காட்டி அனுப்பி வைத்து விட்டுச் சென்றார். நல்ல மனிதர்களையே எல்லா இடங்களிலும் பார்ப்பதற்கும் கொடுத்து வைத்திருக்க வேண்டுமல்லவா? இதனை நினைத்துக் கொண்டே அடுத்த ஊருக்குப் பயணமானோம்.

நண்பர்களே.. எனது கிருஷ்ணகிரி பயணம் தொடர் பகிர்வு இத்துடன் நிறைவடைகின்றது. என்னுடன் நீங்களும் இந்த நிழல் வெளியில் பயணம் செய்திருப்பீர்கள் என்றே நினைக்கின்றேன். இந்தப் பயணம் உங்கள் மனதையும் கவர்ந்திருக்கும் என்றே கருதுகின்றேன். இதுவரை கிருஷ்ணகிரி சென்றிராவிட்டால்.. உங்கள் பயண பட்டியலில் இந்த ஊரை கட்டாயம் சேர்த்துக் கொள்ளுங்கள்.

முற்றும்.



அன்புடன்
சுபா

Sunday, April 1, 2012

கிருஷ்ணகிரிக்கு போகலாம் வாங்க...! - 13


கிருஷ்ணகிரி பயணத்தில் சிகரம் வைத்தார் போல அமைந்தது எங்கள் சாம்பல் பள்ளத்திற்கான பயணம் என்றால் அது மிகையாகாது.

கிருஷ்ணகிரி பயணத்தின் முதல் மாலையின் இறுதி அங்கமாக இந்தப் பயணம் ஏற்பாடாகியிருந்தது. ஐகொந்தம் சென்று வந்து பின்னர் சற்று கிருஷ்ணகிரி நகர மையத்தில் ஒரு சில முக்கிய காரியங்களுக்காக 2 மணி நேரத்தை செலவாக்கிய பின்னர் சாம்பல் பள்ளத்தை நோக்கி எங்கள் பயணம் தொடர்ந்தது. நாங்கள் செல்ல ஆரம்பித்தபோதே மணி ஏறக்குற்றைய மாலை ஐந்தை நெருங்கி விட்டது. ஒரு வேனில், கண்ணன், செல்வா, திரு.சுகவனம் முருகன், சக்தி, திரு.முருகானந்தம், ப்ரகாஷ் சுகுமாரன் ஆகியோருடன் நானும் புறப்பட்டேன்.

சாலையில் வாகனங்களின் செரிசல் அதிகரிக்க ஆரம்பித்து விட்டது. ஆகினும் சாம்பல் பள்ளம் சென்று அங்கு கல்தட்டைகளைப் பார்த்து வர வேண்டும் என்ற எங்கள் முடிவில் மாற்றம் இல்லாமல் எங்கள் பயணத்தைத் தொடர்ந்தோம்.

ஒரு வழியாக 45 நிமிட பயனத்திற்குப் பின்னர் சாம்பல் பள்ளம் வந்து சேர்ந்தோம். மாலை இருட்டுவதற்குள் சென்றாக வேண்டும் என்று சொல்லி திரு.சுகவனம் முருகன் எங்களை அவசர அவசரமாக அழைத்துச் சென்றார். சாலை ஓரத்தில் எங்கள் வாகனத்தை நிறுத்தி விட்டு காட்டுக்குள் புகுந்து அங்கிருந்த ஒற்றையடிப் பாதையில் வேகமாக நடக்க ஆரம்பித்தோம். ஏறக்குரைய ஓடினோம் என்று சொன்னாலும் தகும்.

சற்று மாலை நேரமானதால் இடையில் செல்லும் குறுக்குப் பாதையைப் பார்த்து அதில் கொஞ்சம் நேரம் சென்று வழி தவறி மீண்டும் சரியான பாதைக்கே வந்து மீண்டும் பயனத்தைத் தொடர்ந்தோம். சரியாக 20 நிமிடங்களில் சாம்பல் பள்ளம் மலைப்பகுதிக்கு வந்து சேர்ந்தோம்.

அங்கு நாங்கள் பார்த்த காட்சி எங்களை அப்படியே மலைக்க வைத்தது.



எங்கெங்கு பார்த்தாலும் கற்கால கல்திட்டைகள்.

மனிதர்கள் நாகரிகத்தின் வளர்ச்சியில் புதைகுழிகள் என்பன முக்கிய அங்கம் வகிப்பவை. இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்தலில் பின்பற்றப்படும் வழி முறைகள் என்பன காலத்திற்குக் காலம் சமுதாயத்திற்குச் சமுதாயம் மாறுபாடு உடையது என்றாலும் பல ஒற்றுமைகளையும் கொண்டது என்பதை மறுக்க முடியாது.

மலைப்பாறையில் ஏறி கல்திட்டைகளைச் சென்று கண்டு அவற்றைப் படங்கள் எடுத்தும் வீடியோ கேமராவிலும் பதிவு செய்து கொண்டேன். எங்கள் எல்லோருக்கும் இந்தக் கல்திட்டைகள் பற்றிய தகவல்களையும் திரு.சுகவனம் முருகன் தொடர்ந்து வழங்கிக் கொண்டிருந்தார்.





ஒரு பாறையிலிருந்து அடுத்த பாறையைப் பார்த்தால் அங்கும் பல கல்திட்டைகள்.

இதில் என்ன பரிதாபம் என்றால் இதே இடத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்னர் திரு.சுகவனம் முருகன் ஆய்விற்காக வந்த சம்யம் இங்கே 400க்கும் மேற்பட்ட கல்திட்டைகள் இருந்தனவாம். ஆனால் நாங்கள் சென்ற சமையம் அங்கே ஏறக்குறைய 50 கல்திட்டைகள் அதிலும் பாதில் வடிவம் சிதைந்து காணப்பட்டன.



இதை நினைத்துப் பார்த்த போது மனம் சொல்ல முடியாத வேதனையைத் தான் அடைந்தது. சென்ற ஆண்டு நான் அயர்லாந்து சென்றிருந்த போது அங்கு ஒரு மலைப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த ஒரு கல்திட்டையப் பார்த்தேன். அயர்லாந்து அரசாங்கம் அதனை ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு இடமாக பெயரிட்டு பாதுகாப்புக்களை அமைத்து அதனை சுற்றுலா தலங்களில் ஒன்றாகப் பிரகடனப்படுத்தியும் வைத்திருக்கின்றது. ஒரு கல்திட்டைக்கு இத்தனைச் சிறப்பு அளிக்கப்படிருக்கின்றது அங்கே. இங்கே 400க்கும் மேற்பட்டு அமைந்திருந்த இடத்தில் ஒரு சில மட்டுமே எஞ்சியிருப்பது என்பது நமது சமூகத்தில் வரலாற்றுச் சின்னங்களுக்கு சமுதாயத்தில் உள்ள அக்கறையின்மையை மிகத் தெளிவாக எடுத்துக் காட்டுவதாகத் தான் உள்ளது.

இந்த கல்திட்டைகளின் ஓடுகளைப் பெயர்த்தெடுத்து தங்கள் வீடுகளுக்கு ஓடுகளாக சிலர் மாற்றிக் கொள்ள எடுத்துச் சென்று விடுகின்றனராம். என்ன கொடுமை இது!

மாலை இருட்டிய பின்னரே ஒரு வழியாக மீண்டும் காட்டுவழியே வேக வேகமாக நடந்து வந்து மலையின் கீழ்ப்பகுதியை அடைந்தோம். இந்தச் சிறப்பான பகுதியை அரசாங்கம் பாதுகாக்க வேண்டும். ஒரு வரலாற்றுச் சுற்றுலா தலமாக பிரகடனப்படுத்தவும் வேண்டும்.. இது எனக்கு மட்டுமல்ல.. இப்படங்களைப் பார்க்கும் அனைவருக்கும் நிச்சயம் மனதில் தோன்றும் எண்ணம் என்பதில் சந்தேகம் இல்லை!





எங்கள் குழு



கல்திட்டையின் உள்ளே உள்ள எழுத்துக்கள் (குறியீடுகள்) மேலே கிறுக்கி வைத்திருக்கின்றனர்.


தொடரும்..

அன்புடன்
சுபா