Tuesday, November 24, 2009

மலாகா(ஸ்பெயின்) சுற்றுலா - செப்ட்-அக்டோபர் 2009 - 13

14 நாட்கள்  பயணம். மலாகாவிலிருந்து இப்போது என் விமானம் மயோர்க்கா சென்று பின்னர் அங்கிருந்து ஸ்டுட்கார்ட் வந்து சேர்ந்தேன்.





ஸ்பெயின் நகரின் தீவுகளான க்ரான் கனேரியா, டெனரிபா, லா கொமேரா ஆகியவற்றிற்கு நான் முன்னரே பயணித்திருக்கிறேன். இருந்த போதிலும் அண்டலூசிய பயணம் மிக முக்கியமான, மறக்க முடியாத ஒரு பயணம் என்றே நான் நினைக்கிறேன். எனக்கு அடிப்படையிலேயே சரித்திர வரலாற்று பின்னனி, தொல்பொருள் ஆய்வு, ஒரு இனத்தின் மரபு பற்றிய விஷயங்கள் போன்றவற்றில் மிகுந்த ஆர்வம் இருப்பதால் மிகப் பிரமாண்டமான சரித்திரப் பின்னனியைக் கொண்டிருக்கும் ஸ்பெயின் என் கவனத்தைக் கொள்ளை கொண்டதில் எந்த சந்தேகமுமில்லை. மீண்டும் ஒரு முறை அண்டலூசிய செல்ல எனக்கு திட்டம் இருக்கிறது. அதன் பொழுது அண்டாலூசியாவின் தலை நகரமான செவியா, மற்றும் காடிஸ் மற்றும் சரித்திரப் புகழ்பெற்ற கோர்டோபா நகரங்களுக்குச் செல்ல வேண்டும் என்று மனதில் நினைத்துக் கொண்டிருக்கிறேன். அது சாத்தியப்பட்டால் அடுத்த அண்டலூசிய பயணக் கட்டுரையும் நிச்சயம் உருவாக்கம் பெரும்.



குறிப்பு: முதல் இரண்டு ஸ்பெயின் வரைப்படங்களைத் தவிர ஏனைய படங்கள் உரிமை சுபாஷினி .

Monday, November 23, 2009

மலாகா(ஸ்பெயின்) சுற்றுலா - செப்ட்-அக்டோபர் 2009 - 12

அதனைத் தொடர்ந்து செல்லும் போது நுணுக்கமான கைவினைப் பொருட்கள் செய்யும் சிறிய பட்டறைகள்; அவற்றில் தொடர்ந்து வேலை நடந்து கொண்டிருப்பதையும் காணமுடிந்தது. இந்த இஸ்லாமியக் கோட்டைக்குள் முதலில் சுற்றுப் பயணிகளை வரவேற்கும் மண்டபம் அன்னா மரியா தேவாலயம். 1492ல் கிரானாடா முஸ்லிம் ஆட்சியாளர்களிடமிருந்து கத்தோலிக்க ஆட்சியாளர்கள் வசம்
வீழ்ந்திருக்கின்றது. அப்போது தொடங்கி பல இஸ்லாமிய கட்டிடங்கள் மதமாற்றம் செய்யப்பட்டுள்ளன. இதற்கு அல்ஹம்ராவும் விதிவிலக்கல்ல.







இந்த தேவாலயத்தை அடுத்து பிரமாண்டமான ஒரு மாளிகை. இது தற்போது தொல்பொருள் கண்காட்சி ஆய்வு நிலையமாக பாதுகாக்கப்பட்டு பல அரும் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.







இந்த மளிகையை அடுத்து பூந்தோட்டத்தைக் கடந்து நடந்தால் மேலும் சில கோட்டைகள். போர் வீரர்கள் தங்குவதற்காக உருவாக்கப்பட்ட கட்டிடங்கள். இவற்றின் ஓரமாக அழகிய பூந்தோட்டம்.







இவையெல்லாவற்றையும் பார்த்த பின்னர் அடுத்ததாக அரண்மனைக்குச் செல்ல வேண்டும். அரண்மனை மட்டுமே ஒரு குட்டி நகரம் போல இருந்ததை உள்ளே நுழைந்ததும் பார்த்து வியந்தேன். பூந்தோட்டம். விதம் விதமான மலர்கள். கண்களைக் கொள்ளை கொள்ளும் காட்சி. இதனைக் கடந்து வந்தால் அரண்மனை மாளிகைகள். ஒன்றை அடுத்து ஒன்றாக.







இந்த அரண்மனை மாளிகை ஒவ்வொன்றும் கலை நயத்திற்கு ஒரு எடுத்துக் காட்டு. http://en.wikipedia.org/wiki/Alhambra




இஸ்லாமிய சமய சின்னங்கள், அராபிய எழுத்துக்கள், மலர்கள் இலைகள் என பல்வேறு சின்னங்கள் மிக நுணுக்கமாக சிற்பிகளால் வடிவமைக்கப்பட்டுள்ளன.







சுவர்கள் மட்டுமல்ல; தூண்கள், மதில்கள், நடை பாதை என எல்லா பகுதியுமே கலை வண்ணம் காட்டி பிரமிக்க வைப்பவை.







மாளிகைக்கு இடையிடையே பூந்தோட்டங்கள், அழகிய குளங்கள். பார்த்தது போதும் என நினைத்து நடந்தால் மேலும் சில பகுதிகள். மீண்டும் பெரும் தோட்டம், மேலும் மாளிகைகள் என 4 மணி நேரம் அரண்மனையைச் சுற்றுவதிலேயே கழிந்தது.







அல்ஹம்ரா கோட்டையை மட்டுமே ஒரு நாள் என்னால் தரிசிக்க முடிந்தது. இந்தக் கோட்டை மட்டுமல்லாது கிரானாடா அதன் வெள்ளை கிராமத்திற்கும், இயற்கை அழகிற்கும், சரித்திர சுவடுகளுக்கும் மிகப் புகழ் பெற்ற ஒரு நகரம். இப்பகுதிக்கு சென்ற என் பயணம் மறக்க முடியாத ஒரு இனிய அனுபவமாகவே அமைந்தது.







கிரானாடாவிலிருந்து எஸ்டாபோனா பயணம் மீண்டும் ஏறக்குறைய 240 கிமீ பயணம்.




கிராணாடா பயனத்திற்குப் பின்னர் இரண்டு நாட்கள் மீண்டும் எஸ்டாபோனா நகரிலேயே என் பொழுதை கழித்து சற்று ஓய்வெடுத்துக் கொண்டேன்

Friday, November 20, 2009

மலாகா(ஸ்பெயின்) சுற்றுலா - செப்ட்-அக்டோபர் 2009 - 11

12ம் நாள் - கிரானாடா



கிப்ரால்டாவில் என் பயணம் சோர்வை ஏற்படுத்தியதால் இடையில் ஒரு நாள் ஓய்வுக்குப் பின்னர் கிரானாடா நோக்கி என் பயணத்தைத் திட்டமிட்டோம்.







எஸ்டாபோனாவிலிருந்து கிரானாடா ஏறக்குறைய 240 கி.மி தூரம். கிராணாடா அதன் பெயர் எதிரொலிப்பது போல (Grand, Granada) பிக பெரிய ஒரு நகரம். நகர் முழுதையும் சுற்றிப் பார்க்க குறைந்தது 4 நாட்கள் தேவைப்படும். ஆனால் இந்த நகரின் மிகப் பிரசித்தி பெற்ற அல்ஹம்ரா கோட்டையை மட்டும் பார்த்து வருவது என்பது தான் நோக்கமாக இருந்ததால் ஒரு நாள் பயணம் மேற்கொண்டோம். எஸ்டாபோனாவிலிருந்து வடக்கு நோக்கிய பயணம். மலைபகுதியைக் கடந்து செல்லும் போது சாலையின் இரு பகுதியிலும் ஏக்கர் ஏக்கராக ஆலிவ் மரங்கள். இப்படி ஒரு பெரும் ஆலிவ் பயிரீட்டை நான் இதுவரைப் பார்த்ததில்லை என்பதால் ஆச்சரியத்திலும் அதன் அழகிலும் என்னை மறதேன் என்றுதான் சொல்ல வேண்டும்.




கிரானாடா சரித்திர புகழ்பெற்ற ஒரு நகரம். ஸ்பெயின் வருபவர்கள் அனைவரும் கான விரும்பும் ஒரு நகரம். சியாரா நவேடா மலச்சிகரங்களின் பனிமலத்தொடரை ஒட்டி அமைந்த நகரம் இது. கிரானாடா டாரோ நதி இரண்டாகப் பிரிக்கும் இரண்டு மலைத்தொடர்களான அல்ஹம்ரா அல்பைசின் இரண்டையும் கொண்டுள்ளது. அல்பைசின் மிகப் பழமை வாய்ந்த ஒரு நகரம். 2300 ஆண்டுகளுக்கு முன்னரே எலிபிர்ஜெ (Elibyrge) எனச் சொல்லப்படும் குடியினர் இபேரியன் (Iberian) நாகரிகத்தை இங்கு தோற்றுவித்துள்ளனர். இப்பகுதி முழுவதுமே பல்பவேறு தருணங்களில் ரோமானியர்கள், அரேபியர்கள், கத்தோலிக்க ஆட்சிக்குட்படுத்தப்பட்டவை. போர், மற்றும் மதம் சார்ந்த விஷயங்கள் விட்டுச் சென்றுள்ள தடங்கள், இன்னமும் அழியாமல் பாதுகாக்கப்படுவது பெறும் சிறப்பு.







அல்ஹம்ரா - இந்த அரச நகரம் அரேபியர்கள் காலத்தில் கட்டப்பட்டது. மிகப் பிரமாண்டமான கோட்டை. சொர்ண மலை (Cerro de la Sabika) எனும் மலையில் இந்த பெறும் கோட்டை அமைந்துள்ளது. ஸ்பெயின் நாட்டின் கட்டிடக் கலை பெறுமைக்கு மிகப் பெரிய சான்றாக இந்த கோட்டை இன்று விளங்குகின்றது. இந்தக் கோட்டையின் கட்டுமான பணி முன்னூறு ஆண்டுகள் நடைபெற்றுள்ளது. அரேபிய சித்திரக் கலை கட்டுமானக் கலையை மிக நுணுக்கமான வேலைப்பாடுகளைக் கொண்ட சுவர்கள், விசாலமான தோட்டம் என ஒரு குட்டி நகருக்குள் பிரவேசிப்பது போன்ற அனுபவத்தை இந்தக் கோட்டை வழங்குகின்றது.







இந்தக் கோட்டையைச் சுற்றிப்பார்க்க 13 யூரோ கட்டணம். காலை 8 மணியிலிருந்து இங்கு சுற்றிப் பார்க்க அனுமதி வழங்கப்படுகின்றது. விடுமுறை காலங்களில் இந்த கோட்டைக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால் முன்னதாகவே இணையத்தின் வழி நுழைவுச் சீட்டு எடுத்துக் கொள்வதற்கும்
வாய்ப்புள்ளது.




உள்ளே நுழையும் போது முதலில் நீளமான பச்சை பசேலென கம்பளம் விரித்தார் போன்ற புல்வெளியும் தோட்டமும்.





Wednesday, November 18, 2009

மலாகா(ஸ்பெயின்) சுற்றுலா - செப்ட்-அக்டோபர் 2009 - 10

10ம் நாள் - கிப்ரால்டா







இடையில் இரண்டு நாட்கள் ஓய்வின் போது கடற்கரை அழகை ரசிப்பதிலும் புத்தகத்தை வாசிப்பதிலும் எங்கள் பொழுதுகள் கழிந்தன.



எங்கள் பயணப் பட்டியலில் இருந்த அடுத்த நகரம் கிப்ரால்டா. கிப்ரால்டா ஸ்பெயினின் ஒரு தீபகற்பமாக இருந்தாலும் இது இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு நகரம்(நாடு). துறைமுகம் பாதுகாப்பு போன்ற முக்கிய காரணங்களுக்காக இந்த சிறிய தீபகற்ப பகுதியை இங்கிலாந்து ஸ்பெயினிற்கு விட்டுக் கொடுக்காமல் தானே வைத்திருக்கின்றது.







எஸ்டாபோனாவிலிருந்து ஏறக்குறைய 120 கிமி தூரத்தில் கிப்ரால்டா உள்ளது. உள்ளே செல்ல பாஸ்போர்ட் நிச்சயமாக வேண்டும். ஸ்பெயின் மொழியிலிருட்ந்து ஆங்கிலத்திற்கு எல்லாமே எனும் திடீர் மாற்றத்தை நன்றாக உணர முடிந்தது.







கிப்ரால்டா ஒரு மிகச் சிறிய நாடு என்று தான் சொல்ல வேண்டும். ஒரு நாளில் ஏறக்குறைய எல்லாவற்றையும் பார்த்து விடலாம். உள்ளே பாதுகாப்பு பகுதியைத் தாண்டி வாகனத்தைச் செலுத்தியதுமே குறுகிய சாலைகளைக் கடந்து கிப்ரால்டா பாறையில் அமைந்துள்ள பகுதிகளைக் காண முடிவெடுத்து பயணித்தோம்.







St.Michael's Cave - இந்த குகை பல நூற்றாண்டுகளாக மனிதர்கள் இருந்ததற்கான தடயங்களைக் கொண்ட ஒரு பகுதி.








குகையின் உள்ளே பிரமாண்டமாக இயற்கையாக உருவாகியுள்ள stalactites மற்றும் stalagmites இயற்கையின் அதிசயத்திற்கு ஒரு உதாரணம்.








இங்கு குகையின் உள்ளே கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன என்ற கேள்வியுற்றபோது மலைப்பாக இருந்தது.







இந்தக் குகையைப் பார்த்து கீழே வரும் போது சாலையில் குரங்குகளின் பவனியையும் ரசிக்கலாம். இவை மிக அன்பான குரங்குகள் என்று தான் சொல்ல வேண்டும்.







யாரையும் தொந்தரவு செய்யாமல் கொழு கொழுவென்று மிகப் பெரிதாக குழந்தை குடும்பம் என்று கூட்டமாக சுவர்களில் சாலை ஓரத்தில் அமர்ந்து கொண்டு இவை இருப்பதை ரசிக்காமல் செல்ல முடியாது.







இதனை அடுத்து மூரிஷ் கோட்டை, போர் குகை, தேவாலயம் எனப் பார்த்து விட்டு கீழே இறங்கி மதிய உணவு சாப்பிட்டு பின்னர் சாலையில் நடந்து வருகையில் அழகான ஒரு யூத சினோகக் மற்றும் ஒரு ஹிந்து ஆலயத்தையும் பார்த்து அன்று மாலையே எஸ்டாபோனா திரும்பினோம்.







கிப்ரால்டா முதலாம் உலகப் போர், இரண்டாம் உலகப் போர் மட்டுமல்லாமல் பல முறை போர் காரணங்களுக்காக முக்கிய பாதிப்பினை எதிர்நோக்கிய ஒரு பகுதியாகவே இருந்திருக்கின்றது. தெற்கு நோக்கினால் ஆப்பிரிக்க கண்டம். துனேசியா, மரோக்கோ என ஆப்பிரிக்க நாடுகள். வடக்கில் ஸ்பெயின் மேற்கில் போர்த்துகல். இந்தப் பகுதி அமைந்துள்ள இடமும் மிக முக்கியமான ஒரு காரணமாக அமைவதால் பல நாடுகள் கிப்ரால்டாவை தங்கள் வசப்படுத்திக் கொள்வதில் ஆர்வம் காட்டியிருப்பது ஆச்சரியமளிக்கும் ஒன்றல்ல.





Monday, November 16, 2009

மலாகா(ஸ்பெயின்) சுற்றுலா - செப்ட்-அக்டோபர் 2009 - 9

ரோண்டா மலைப்பகுதியில் அமைந்த ஒரு நகரம். சுற்றுப் பயனிகள் மலைகளின் அழகை ரசிக்க ஏதுவாக இந்தகரின் முக்கியப் பகுதி சாலைகளும் நடைப்பாதைகளும் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. இயற்கை அழகை ரசிப்பது மட்டுமல்லாது இசையயும் ரசிக்கும் வகையில் ஆங்காங்கே தென்படும் கலைஞர்கள் வேறு. இவற்றை ரசித்துக் கொண்டு மலைச் சுவரின் அழகினைக் காண முடிகின்றது.







தொடர்ந்து நடந்து வந்தால் 'புதிய பாலம்' உள்ள பகுதியை வந்தடையலாம். 18ம் நூற்றாண்டின் இறுதியில் கட்டப்பட்ட பாலம் இது. இந்நகரின் மிக முக்கிய சின்னமாகவும் இப்பாலம் அமைகின்றது. பாலத்தின் இருபுரமும் மிகப்பிரமாண்டமான இயற்கைக் காட்சிகள். இதனைப் பார்த்துக் கொண்டே நடக்கும் போது நேரம் செல்வதே தெரிவதில்லை.







பாலத்தின் ஓரத்திலேயே உணவருந்த ஏதுவாக நல்ல உணவகங்கள்.







இந்த உனவகத்திலிருந்து கீழே நோக்கினால் தென்படும் ஆற்றை மூரிஷ் அரசரின் இல்லத்திலிருந்து அடைந்து விடலாம். அங்கு தான் எங்கள் அடுத்த பயனம்.




La Casa del Rey Moro - The Mine, the moorish King's house. - மூரிஷ் அரச இல்லத்தில் பார்ப்பதற்கு இரண்டு மிக முக்கிய அம்சங்கள் உள்ளன. முதலாவது குகை வழியாக இல்லத்திற்குச் செல்லும் பாதை. அடுத்தது ப்ரெஞ்சு கலைஞர் ஒருவர் வடிவமைத்துள்ள பூந்தோட்டம். குகைப்பாதைக்குச் செல்ல முதலில் நாம் பூந்தோட்டத்தைக் கடந்து தான் செல்ல வேண்டும்.







இந்த மூரிஷ் அரச இல்லம் 14ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஒன்று. (மூரிஷ் அரசர் அபோமெலிக் (Abomelic)). குகையின் கீழ்பகுதி அரச குடும்பத்தினர் நீராடவும் தனிமையில் இருக்கவும் தகுந்த வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ஏறக்குறைய 250 படிகளைத் தாண்டி கீழே வந்தால் இந்த ஆற்றினையும் அதனை ஒட்டியுள்ள மலைகளின் பிரமாண்டமான சுவர்களையும் ரசிக்கலாம்: இந்தகரின் பேரழகில் இதுவும் ஒன்று என்றால் மறுக்க முடியாது.







படிகள் பாம்பு போல வளைந்து வளைந்து வருபவை, முழுதும் இருள் வேறு. ஆனாலும் பாதுகாப்பாக வைத்திருப்பதால் பிரச்சனையின்றி கீழ் பகுதி வரை வந்து செல்ல முடிகின்றது. கீழ்பகுதியை அடைந்ததும் இளம் பச்சையிலான நீரோடையைக் கண்டு ரசிக்க முடிந்தது. இது கொள்ளை அழகு. இதனை சுற்றிப்பார்க்க இருவருக்கு 4 யூரோ கட்டணம் வசூலிக்கப்படுகின்றது.







இந்த குகையின் கீழ்ப்பகுதியில் ஒரு பாதுகாப்பு அரங்கம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. அதோடு sala de secretos - Room of secrets எனப்படும் பகுதியில் பக்கத்திலே போர்க்கருவிகள் வைக்கும் இடமும் உள்ளது. sala de secretos ல் சுவருக்குப் பின்னர் பேசினால் சுவருக்கு அடுத்த பகக்த்தில் உள்ளவர்களுக்கு கேட்காதாம். இதுவும் ஒரு முக்கிய ரகசிய இடமாக மூரிஷ் மன்னர் காலத்தில் பயன்பாட்டில் இருந்துள்ளது.







கீழே ஆற்றிலிருந்து மேலே செல்ல 60 மீட்டர் உயரம் நடக்க வேண்டும். ரோண்டா மட்டுமல்ல, அண்டாலூசியாவில் பார்க்க வேண்டிய முக்கிய இடங்களில் இதுவும் ஒன்று.







இப்பகுதியைக் கடந்து தொடர்ந்து நடந்து வரும் போது இடது புறத்தில் புதிய பாலம் செல்வதற்கான் வழி உள்ளது. இதன் முகப்பில் இருப்பது பிலிப் வளையம் (The Arch of phillip V).







இடது புறம் செல்லாமல் வலது பக்கமாக நடக்க ஆரம்பித்தால் மார்க்கீஸ் மாளிகையைக் (Palace of the marquis de Salvatiera) காணலாம்.







தொடர்ந்து நடந்து வரும் போது இடையிடயே சாலைகளின் இரு பக்கங்களிலும் உள்ள கடைகள், வெள்ளை வர்ணத்திலான வீடுகள் போன்றவற்றைப் பார்த்தவாறே நடந்து நகராண்மைக் கழக கட்டிடம் இருக்கும் இடம் வரைக்கும் வந்தால் இந்தகரின் மிக முக்கிய சின்னமான அன்னை சாந்த மரியா தேவாலயத்தை அடையலாம்.










இந்த தேவாலயம் இந்நகர கட்டிட கலைகளின் மையம் என்று தான் நான் சொல்வேன். இயற்கை அழகை பார்க்கின்ற நம் கண்களுக்கு கலை அழகையும் கொட்டிக் கொடுக்கும் வகையில் இந்த தேவாலயம் அமைந்துள்ளது.







தேவாலத்திற்கு நுழைவுக் கட்டனம் 4 யூரோ. உள்ளே செல்லும் போது தேவையான ஒரு ஐரோப்பிய மொழியில் விளக்கம் தரும் கருவியை எடுத்துச் சென்று ஒவ்வொரு பகுதியிலும் விளக்கப்படும் செய்திகளைக் கேட்டு தகவல் தெரிந்து கொள்ளலாம்.



உள்ளே நுழைந்ததும் முதலில் நம் கண்களில் படுவது 25 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள தங்க பூச்சிலான அன்னை மேரியின் மேடை. நுனுக்கமான கைவேலைப்பாடு, இலைகள் பூக்கள், கனிகள் என பல சின்னங்கள் பொறிக்கப்பட்ட தங்கப் பூச்சிலான மேடையின் நடுவே சாந்தா மரியா (Santa Maria) காட்சியளிக்கும் தோற்றம்.







இந்து ஆலயங்களைப் போல ஒவ்வொரு பக்கத்திலும் பல விக்கிரகங்கள்.





பிரமாண்டமான ஓவியங்கள் சுவர்களில். ஒவ்வொரு ஓவியங்களும் கிற்ஸ்துவ கத்தோலிக்க சமயத்தின் கதைகளைப் பிரதிபலிப்பனவாக உள்ளன.





Saturday, November 14, 2009

மலாகா(ஸ்பெயின்) சுற்றுலா - செப்ட்-அக்டோபர் 2009 - 8

ரோண்டாவில் முதலை நம்மை வரவேற்பது அல்கஸாபா கோட்டை. இதனை முதலில் பார்க்காமல் தொடர்ந்து நகரின் மையத்திற்குச் சென்று வாகனத்தை வைத்து விட்டு ஒவ்வொரு இடங்களாகப் பார்த்து வரலாம் என திட்டமிட்டோம். ரோண்டா முழுவதையும் ஒரு நாளில் பார்த்து முடிக்க முடியாது. குறைந்தது மூன்று நாட்களாவது வேண்டும்.







அதன் இயற்கை எழிலை ரசிக்க மலைகளின் ஓரத்தில் அமைக்கப்பட்டுள்ள குறுகிய பாதைகளில் நடந்து செல்ல வேண்டும்.







இதற்குக் கூட நிச்சயம் ஒரு நாள் போதாது. ஆதலால் சில முக்கிய இடங்களாக மனதைக் கவர்வனவற்றை மட்டும் பார்ப்பது என முடிவெடுத்து நடக்க ஆரம்பித்தேன்.







ரோண்டாவைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள இந்த வலைப்பக்கங்கள் நிச்சயம் உதவும். http://www.andalucia.com/ronda/home.htm . அதே போல http://images.google.com/images?hl=en&source=hp&q=ronda+spain&rlz=1R2ADBS_en&um=1&ie=UTF-8&ei=QcTqSp7vGsqvsAbG2vSxCw&sa=X&oi=image_result_group&ct=title&resnum=5&ved=0CCsQsAQwBA பகுதியில் உள்ள படத்தொகுப்பும் இந்த நகரின் இயற்கை எழிலைப் பற்றி அறிந்து கொள்ள உதவும். பழமை வாய்ந்த சரித்திரப் பின்னனியை அறிந்து கொள்வதும் சுவையான விஷயம் அல்லவா? அதற்கு http://www.andalucia.com/ronda/history.htm பக்கம் செல்லவும்.







Plaza el Toros el Ronda - வட்ட வடிவிலான குதிரை ஓட்ட காளை அடக்கு மைதானம். இது முதலில் 1572ல் அரச பரம்பரையினரால் கட்டப்பட்டு
குதிரைகள் ஓட்டப் பயிற்சிக்காக என பயன்படுத்தப்பட்டு வந்தாலும் 18ம் நூற்றாண்டில் காளை அடக்கு மைதானமாக பிரசித்தி பெற்று விளங்க ஆரம்பித்தது. இதுவே அண்டாலூசியாவின் முதல் காளை அடக்கு மைதானமாக குறிப்பிடப்படுகின்றது. அதுமட்டுமல்லாமல் உலகிலேயே முதன் முதலாக காளை அடக்கு போட்டிக்காக பிரத்தியேகமாக ஒரு மைதானம் அமைக்கப்பட்டு இப்போட்டி ஆரம்பிக்கப்பட்டதும் இங்கு தான் என்று இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது.







இன்னமும் இங்கு குதிரை ஓட்டப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. உள்ளே நுழைந்ததுமே முகப்பை அடுத்து முதலில் வரவேற்பது குதிரை லாயம். இதனைத் தாண்டிச் சென்றால் மூடப்பட்ட விசாலமான ஒரு பகுதியில் குதிரைப் பயிற்சி நடைபெற்று கொண்டிருப்பதைக் காணலாம். இதனை அடுத்து குறுகிய பாதையின் வழியாக கடந்து சென்றால் வட்ட வடிவிலான மையப் பகுதியை அடையலாம்.







இந்த மேடையில் முதல் போட்டி 1785ல் நடைபெற்றுள்ளது.







இரண்டு கண்காட்சி மையங்கள் இந்த அரங்கின் உள்ளேயே அமைக்கப்பட்டுள்ளன.







காளை அடக்கு விளையாட்டு அருங்காட்சியகம் - இங்கே இவ்விளையாட்டினை விளக்கும் தகவல்கள், பாடம் செய்யப்பட்ட காளைகள், கொம்புகள், காளை மாடுகள் பற்றிய விவரங்கள், உலக சரித்திரத்தில் அதிலும் குறிப்பாக ரோமானிய சரித்திரத்தில் காளைகளின் தடயங்கள், சுமேரிய காலத்தில் காளைகள் அடக்கும் போட்டி, அதன் முக்கியத்துவங்கள் என பல விஷயங்கள் சொல்லப்படுகின்றன. உலகில் முதன் முதலாக சுமேரிய நாகரிகத்தில் காளை மாடு அடக்கும் போட்டி இருந்ததாகவும் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது.







அடுத்ததாக உள்ள அருங்காட்சியகத்தில் குதிரை மற்றும் காளையடக்கும் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் அணியும் உடைகள், வாள், துப்பாக்கிகள், அரச பரம்பரையினர் பயன்படுத்திய பல்வேறு அணிகலன்கள் ஒவ்வொன்றும் பெயர்கள் குறிப்பிடப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.








Thursday, November 12, 2009

மலாகா(ஸ்பெயின்) சுற்றுலா - செப்ட்-அக்டோபர் 2009 - 8

7ம் நாள் - ரோண்டா



அண்டாலூசியாவின் இயற்கை அழகை பிரதிபலிக்கும் நகரங்களில் ரோண்டா முக்கிய இடத்தைப் பெறுகிறது. எஸ்டாபோனாவிலிருந்து ஏறக்குறைய 70 கி.மீ தூரத்தில் உள்ள நகரம். மலைகளைச் சுற்றி வளைந்து செல்ல வேண்டியுள்ளதால் ஏறக்குறைய ஒன்றேகால் மணி நேரம் பயணத்திற்கு தேவை.







வரலாற்று ஆசிரியர்கள் இந்த நகரில் 25,000 ஆண்டுகளுக்கு முன்னிருந்தே மக்கள் இங்கு வாழ்ந்துள்ளமையை இங்குள்ள குகை சித்திரங்கள் மற்றும் பல தடயங்கள் வழி நிருபிக்கின்றனர்.







ஏறக்குறைய 50 கி.மீ தூரத்திற்கு பயணம் மலைகளைச் சுற்றியே. பரந்து விரிந்த மலைகள். தற்சமயம் இங்கு மிக விரிவாக கோல்வ் விளையாட்டு மையமும் அதனைச் சார்ந்த சுற்றுப்பயனமும் அடிவாரப் பகுதிகளை ஆக்கிரமித்திருக்கின்றன. வழியில் செல்லும் போது ஆங்காங்கே கோல்வ் பந்துகளை விற்பனை செய்யும் சாலையோர வியாபாரிகளைப் பார்த்தவாரே பயணித்தோம்.







ரோண்டாவின் இயற்கை எழிலை அதிகரிப்பது மலைத்தொடரும் அதன் பாறைகளும். ஒன்றை அடுத்து மற்றொன்று என மலைகள் தொடர்ந்து பரவி மிகப் பிரமாண்டமாக காட்சியளிக்கின்றன. முதலில் கொஞ்சம் பச்சை பசேலென இந்த நிலத்துக்கே உரிய தாவர வகைகளுடன் மலைகள் காட்சியளிக்கின்றன. படிப்படியா மேலே உயர செல்லச் செல்ல பெறும் பாறைகள் வெள்ளை கற்களாய் ஜொலிக்க மிக அழகான மலத்தொடராக உயர்ந்து நிற்கின்றன.





Wednesday, November 11, 2009

மலாகா(ஸ்பெயின்) சுற்றுலா - செப்ட்-அக்டோபர் 2009 - 7

6ம் நாள் - மலாகா



மலாகா விமான நிலையத்தில் நாங்கள் வந்திருங்கியிருந்தாலும் 6ம் நாள் வரை இந்த நகரத்திற்கு நாங்கள் வரவில்லை. மலாகா ஒரு பழம் நகரம். உலகப் புகழ்பெற்ற ஓவியர் பிக்காஸோ பிறந்த நகரம். பல நூற்றாண்டுகளாக ஸ்பெயினின் முக்கிய துறைமுகமாக விளங்கி வருகின்றது இந்த நகரம்.







நகரின் உள்ளே வந்ததுமே வாகனத்தை ஓரிடத்தில் வைத்து விட்டு நடக்கத் தொடங்கினோம். மலாகாவின் எல்லா முக்கிய இடங்களையும் சுற்றுலா பேருந்து ஏறி சுற்றி வரலாம். இதற்கு 8 யூரோ கட்டணம்.







இதில் அமர்ந்து ஒவ்வொரு இடங்களாக பார்க்க ஆரம்பித்தோம். இடையில் சில நிறுத்தங்களில் இறங்கி பார்க்க வேண்டிய இடங்களைப் பார்த்து விட்டு மீண்டும் பேருந்தில் ஏறி அடுத்த இடத்திற்குச் செல்லலாம்- ஒரே கட்டணத்தில்.







முதலில் நாங்கள் பார்க்க விரும்பிய இடம் அரேபிய கோட்டையான அல்கஸாபாவும் கிப்ரால்பாரோவும். இது 12ம் நூற்றாண்டு வாக்கில் கட்டப்பட்ட ஒரு கோட்டை.







இந்த கோட்டையைச் சுற்றி பார்த்த பின்னர் அடுத்ததாக மெட்ரோபோலிட்டன் தேவாலத்திற்குச் சென்றோம். மிக மிகப் பிரமாண்டமான தேவாலயம். இந்த தேவாலயம் ஒரு மசூதியின் மேல் அமைக்கப்பட்டுள்ளது. மசூதி இடிக்கப்படு பின்னர் இந்த தேவாலயம் கிறிஸ்துவ ஆட்சியாளர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. இங்கேயும் மூல விக்ரகம் அன்னா மரியா தான்.










இந்த தேவாலயம் நுண்கலைக்கு ஒரு எடுத்துக் காட்டு. மிக உயரமான மதில்கள். சுவர்களில் அலங்கார விலக்குகள்; பூஜைக்குரிய சிறப்பிடம்; அங்கு பாதிரியார்கள், தேவாலய முக்கியஸ்தர்கள் அமர்வதற்கான இடங்கள் போன்றவை ஒவ்வொன்றும் திட்டமிடப்பட்டு செதுக்கிய வடிவங்கள். எனது கேமராவில் படங்கள் எடுத்து எனக்கு அலுத்துப் போய்விடும் அளவிற்கு ஒவ்வொரு முக்கிய இடங்களாக எனது கேமாராவில் கிளிக் செய்து கொண்டேன். ஆனால் நேரில் பார்ப்பதில் இருக்கும் அனுபவத்தில் ஒரு சிறிதளவினைத்த்தான் புகைப்படங்களில் பார்க்கும் போது கிடைக்கின்றது.










இந்த தேவாலயத்தில் பூஜைகளும் நடந்து வருகின்றன; இது வெறும் சுற்றுலா மயம் மட்டுமல்ல.







இதனைப் பார்த்த பிறகு சற்று நடந்து துறைமுகம் அருகில் வந்து சேர்ந்தோம். பல சிறிய பெரிய கப்பல்கள். மலாகாவின் வியாபார பலத்தையும் ஆளுமையையும் இவை காட்டுவனவாக அமைந்திருந்தன.







பிறகு மீண்டும் பேருந்தில் ஏறி மலாகா நகர மையத்திற்குள் வந்து சேர்ந்தோம். சாலைகளின் இரு பகுதிகளிலும் கடைகள். இங்கு மிருகங்களின் தோலினால் செய்யப்பட்ட பொருட்கள் மிகப் பிரசித்தி பெற்றவை. தோல்பைகள், காலணிகள் போன்றவற்றை நல்ல விலைக்கு வாங்கி மகிழலாம்.







நடந்த களைப்பில் மதிய உணவை ஒரு உணவகத்தில் முடித்த பின்னர் மேலும் தொடர்ந்து சில இடங்களைப் பார்க்க நடந்தோம். மாலை முழுவதும் வேறு பல இடங்களையும் பார்த் பின்னர் அன்றைய திட்டம் நிறைவேறிய மகிழ்ச்சியில் எஸ்டாபோனா திரும்பினோம்.