Monday, November 2, 2009

மலாகா(ஸ்பெயின்) சுற்றுலா - செப்ட்-அக்டோபர் 2009 - 2

விடுமுறையில் புத்தகங்கள் வாசிப்பதும் எனக்கு மிகப் பிடித்தமான ஒன்று. இம்முறையை விடுமுறையில் வாசிக்க இரண்டு புத்தகங்களைக் கொண்டு வந்திருந்தேன். ஒன்று Sam Bourne எழுதிய The final reckoning மற்றொன்று Dan Brownனின் புதிய நாவல் The lost Symbol. The final reckoning விமானத்திலேயே படிக்கத் தொடங்கி விட்டேன். ஆரம்பமே மிக சுவாரசியமானது. நியூ யோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கு வரும் ஒரு வயதான மனிதர் பாதுகாப்புப் படைகளால் தீவிரவாதி என தவறாக நம்பப்பட்டு கொல்லப்படுகின்றார். இதனைத் தொடர்ந்து நடைபெறும் விஷயங்களை மிகச் சுவையாக விவரித்துச் செல்லும் நாவல் இது. இது உண்மை சம்பவங்களை அடிப்படையில் கொண்டு பின்னப்பட்ட நாவல். 2ம் உலகப் போருக்கு முன்னர் 1939, 1940களின் ஆரம்பத்தில் லித்துவானியா, போலந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளில் யூத மக்கள் எதிர்கொண்ட பிரச்சனைகளை ஆயிரக் கணக்கான யூதமக்கள் பல்வேறு தருணங்களில் ஆயிரம் ஆயிரமாக கொல்லப்பட வரலாற்று செய்தியைப் படிப்படியாக பல குடியிருப்புக்களில் (ghettoes
) வைக்கப்பட்டிருந்த யூத மக்களைக் குழுக்களாகக் கொன்று குவித்த விதத்தை இந்த நூல் விவரிக்கின்றது. அக்கால கட்டத்தில் அக்குழுக்களில் இந்தக் கொடுமைகளை அனுபவித்த சில இலைஞர்கள் Dam Israel Nokeam (DIN) என்ற ஒரு இரகசிய அமைப்பை உருவாக்கி அதன் வழி செய்திகள் பரிமாற்றம் செய்தது, மற்றும் 2ம் உலகப்போருக்குப் பின்னர் இக்குழுவினர் நாஸி பழைய உயர் அதிகாரிகளில் சிலரை மிகத் தந்திரமாகக் கொன்றது என பல உண்மைத் தகவல்களைச் சில பெயர் மாற்றங்களோடு இந்த நூல் மிக மிக சிறப்பாக விளக்கிச் செல்கின்றது.இந்த நாவலில் வரும் DIN இயக்கத் தலைவர் உண்மையான யூத குழுவினர் தலைவரான Abba Kovne ஐ மையமாகக் கொண்டு புனையப்பட்டுள்ளது. யூத மக்களின் மனித உரிமைப் போராட்டம், நாடிழந்து மக்கள் பட்ட கஷ்டங்கள், பின்னர் படிப்படியாக இஸ்ரேல் தனி யூத நாட்டை உருவாக்க நடந்த சில முக்கியச் செய்திகளை மிகக் கொஞ்சம் கதைகளோடும் பல் உண்மைச் சம்பவங்களோடும் சேர்த்து ஆசிரியர் எழுதியிருக்கின்றார். இந்த நாவலின் முக்கிய கதாபாத்திரமான கெர்ஷோன் மாட்ஸ்கின் என்பது புனைப்பெயர் என்றாலும் இவரும் ஒரு உண்மையான ஒரு முக்கிய நபரின் சித்தரிப்பு. 2ம் உலகப் போருக்குப் பின்னர் DIN அமைப்பு ஜெர்மானிய நாஸி அதிகாரிகளில் தண்டனைகளிலிருந்து தப்பிய பலரை ஒழிக்க முயன்ற தந்திர முயற்சிகளில் திட்டமிடப்பட்ட 'plan A', 'plan B' எனக் குறிப்பிடப்படும் இரண்டும் மிக விரிவாக இந்த நாவலில் விவரிக்கப்படுகின்றன. இதில்
plan B என்பது விஷத்தை உணவில் கலந்து சிறையில் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்த ஜெர்மன் நாஸி அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டதும் அதனால் 2300 ஜெர்மானிய நாஸிகள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டதும் பதிவில் உள்ள உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டவை. இதில் எத்தனை ஜெர்மானிய நாஸிகள் இறந்தனர் என்ற தகவலை அரசாங்கம் சரியாக வெளியிட வில்லை என்ற போதிலும் DIN செயல்படுத்திய இந்தத் தாக்குதல் ஓரளவுக்கு பாதிப்பை அப்போது ஏற்படுத்தியிருக்கின்றது. ஆனாலும் 2ம் உலகப் போருக்குப் பின்னர் முழு கவனமும் தனி இஸ்ரேல் நாடு எனும் ஒருமித்த கருத்தை அடைப்படையாக கொண்டு இயங்கியதால் DIN தனது செயல்பாடுகளைப் படிப்படியாக முடக்கிக் கொண்டது. ஆனாலும் DIN வழி ஏறக்குறைய 50 இளைஞர்களும் இளைஞிகளும் தங்கள் வாழ்க்கையை பணயம் வைத்து இவ்வகைப் பழிதீர்க்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர் என்னும் சரித்திர உண்மையை இந்நாவலைப் படிப்பவர்களுக்ப் புரிய வைத்திருக்கின்றார் நாவலாசிரியர். இவரது முந்தைய வெளியீடான The Last Testament கூட மிக அருமையான ஒரு நாவல்.ஐக்கிய நாடுகள் சபையில் ஒரு சில ஆண்டுகள் சமாதான அமைப்புப் பிரிவில் உயர் அதிகாரியாக பணியாற்றிய அனுபவம் பெற்ற இந்நாவலாசிரியர் தான் சந்தித்த, கேட்ட பார்த்த அனுபவித்த உண்மை சம்பவங்களை நாவலில் திறம்பட சேர்த்து விவரித்து படிப்பவர்களுக்கு நல்ல தகவல் விருந்து அளிக்கக்கூடியவர் என்பது இவரது இரண்டு நாவல்களை வாசித்தவர்களுக்கு நிச்சயம் தெரியும்.

No comments:

Post a Comment