Tuesday, November 3, 2009

மலாகா(ஸ்பெயின்) சுற்றுலா - செப்ட்-அக்டோபர் 2009 - 3

3ம் நாள்: புவன்ஜிரோலா, மிஹாஸ்



சரி நாவலிலிருந்து சுற்றுப் பயண விபரங்களுக்கு வருவோம். மூன்றாம் நாள் எங்கள் திட்டத்தில் புவன்ஜிரோலாவும் மிஹாசும் இருந்தன.







புவன்ஜிரோலா எஸ்டாபோனாவிலிருந்து ஏறக்குறைய 30 கிமி வடக்கே உள்ள கடற்கரை நகரம். எங்கள் தங்கும் விடுதி இருக்கும் எஸ்டாபோனாவிலிருந்து இங்கு செல்ல ஏறக்குறைய 35 நிமிடங்கள் தேவை. எஸ்டாபோனாவிலிருந்து செல்லும் போது புவன்ஜிரோலாவிலிருந்து முதலில் நம்மை வரவேற்பது சோகாயில் மாளிகை (Sohail Castle). சோகாயில் எனும் இப்பெயர் இஸ்லாமியர்கள் இந்த நகரை ஆட்சி செய்த போது இக்கோட்டைக்கு இட்ட பெயர். சோகாயில் என்பது அரபு மொழியில் ஒரு பிரகாசமான நட்சத்திரத்தைக் குறிப்பது என்ற குறிப்பும் இந்த கோட்டையின் வாசலில் உள்ள விளக்கச்சுவரொட்டியில் குறிக்கப்பட்டுள்ளது.







கடற்கரையோரத்தில் ஒரு சிறிய குன்றின் மீது இந்தக் கோட்டை கட்டப்பட்டுள்ளது. ரோமானியர்கள் மற்றும் பலர் இப்பகுதியை ஆட்சி செய்துள்ளனர். ஏறக்குறைய 12ம் நூற்றாண்டின் இறுதியில் கட்டப்பட்ட மாளிகை இது. ஒரு பாதுகாப்புச் சுவரும் இந்த மாளிகையைச் சுற்றி உள்ளது. இதுவும் 12ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது தான். இந்தக் கோட்டையின் ஒரு கோபுரமும் சுவர்களின் பெரும் பகுதியும் பின்னர் நெப்போலியனால் தகர்ப்பட்டுள்ளன. புவன்ஜிரோலா டவுன் ஹால் சரித்திர மாணவர்கள் இந்தக் கோட்டையைத் தற்போது புணரமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதோடு அவ்வப்போது கலை நிகழ்ச்சிகளையும் ஏற்படுத்தி இக்கோட்டைக்கு மக்களை அழைப்பதில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர் என்ற செய்தியை இங்குள்ள தகவல் மையத்திலிருந்து தெரிந்து கொள்ள முடிந்தது. தற்போது இந்த மண்டபத்தில் பல ஒன்று கூடல் நிகழ்வுகள், இசை நடன நிகழ்ச்சிகள் அவ்வப்போது நிகழ்கின்றன.







புவன்ஜிரோலா சுற்றுலா விடுதிகள் நிறைந்த பகுதி. ஏறக்குறை 10 கிமி தூரத்திற்கு ஒன்றை அடுத்து ஒன்றாக தங்கும் விடுதிகள், சுற்றுலா பயணிகளுக்கான விற்பனைப் பொருட்கள் அடங்கிய வியாபார ஸ்தலங்கள், உணவு விடுதிகள் என கடைகள் வலது புறத்திலும், கடற்கரை மணலில் இதமான சூழலை ரசித்துக் கொண்டிருக்கும் பயணிகளையும் பார்க்க முடிகின்றது. எண்ணிலடங்கா தங்கும் விடுதிகள். ஒன்றை அடுத்து மற்றொன்று. பெரும்பாலும் அபார்ட்மண்ட் வகையிலான தங்கும் விடுதிகள் இங்கு அதிகமாக காணப்படுகின்றன.







அடுத்து புவன்ஜிரோலா நகரின் மையப் பகுதி. சாலையின் இரு மருங்கிலும் பற்பல கடைகள். உள்ளூர் மக்களுக்குத் தேவையான பொருட்களும் சுற்றுறுலா பயணிகளைக் கவரும் கடைகளும் பல இங்குள்ளன. அழகான ஆனால் குறுகிய சாலைகள். சாலையின் இரு பகுதியிலும் குட்டையான மரங்களும் ஆங்காங்கே மக்கள் அமர்ந்து ஓய்வெடுக்க நாற்காலிகளும் பல சாலையின் இரு பக்கத்திலும் வைக்கப்பட்டு மிக ரம்மியமான காட்சி அளிக்கும் நகர்ப்பகுதி இது.







பழைய சுவடுகளைப் பிரதிபலிக்கும் கோட்டை மதில்கள் இருந்தாலும் பெரும்பாலும் இந்த நகரைச் சுற்றியிருக்கும் அடுக்குமாடி கட்டிடங்கள் சுற்றுப் பயணிகளைக் குறிவைத்து இயங்கும் வர்த்தக நிலையங்கள் இந்த நகரை ஒரு சுற்றுப் பயணிகளுக்கானப் பிரத்தியேக நகரம் என்பதையே காட்டி நிற்கின்றன.






No comments:

Post a Comment