Saturday, August 30, 2014

காண்டெபெரி - யாத்திரை செல்வோமா..! - 3

கண்டெபரி நகர் யூனெஸ்கோவினால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு பாதுக்கக்கப்பட வேண்டிய வரலாற்று நகர் என்ற சிறப்பைப் பெறுகின்றது. இரண்டாயிரம் ஆண்டு பழமை.. வரலாற்றுச் சின்னங்கள் நகர் முழுதும் இருக்கின்றன. இங்கு வருகின்ற சுற்றுப் பயணிகளுக்குக் காண்டெபெரி  பல அரிய தகவல்களை வழங்கக் காத்திருக்கின்றது.

கி.பி.5ம் நூற்றாண்டின் ஆரம்ப காலகட்டத்தில் ரோமானியப் பேரரசின் தாக்கம் படிப்படியாக பலமிழக்க ஜெர்மனியின் வடக்குப் பகுதியிலிருந்து குடியேறிய யூட்டஸ் இனக்குழு மக்களின் ஆதிக்கம் அதிகரிக்க ஆரம்பித்தது. ஜெர்மனியில் மிக முக்கிய இனக்குழுக்கள் யூட்டஸ், ஏங்கல்ஸ், சாக்ஸன் ஆகியவை.  ஆக இந்த  யூட்டஸ், ஏங்கல்ஸ், சாக்ஸன் இனக்குழுவினர் இங்கிலாந்திற்கு கடல் மார்க்கமாகப் பயணித்து இப்பகுதிக்கு வந்து குடியேற்றம் செய்து தங்கள் ஆளுமை விரிவாக்கியிருந்தனர்.


சாக்ஸன், யூட்டஸ் ஏங்கல்ஸினக்குழுக்கள் ஜெர்மனியிலிருந்து இங்கிலாந்திற்கு புலம் பெயர்வதைக் காட்டும் வரைபடம்
நன்றி (படம்) http://www.cglearn.it/mysite/civilization/uk-culture/history-of-britain/


ரோமானியப் படைகளின் முக்கியத்துவத்தைப் பின் தள்ளி  யூட்டஸ் குழுவினரின் ஆட்சி இங்கிலாந்தில் தலையெடுக்க ஆரம்பித்தது. இந்த ஆட்சி தொடங்கியது கெண்டபரியில். The kingdom of Kent  கெண்ட் பேரரசு ஆரம்பத்தில் பேகன் சடங்கு முறைகளை அதிகாரப்பூர்வ சடங்கு முறையாக தனது ஆட்சியில் நடைமுறை வழக்கத்தில் கொண்டிருந்தது. ஆனால் 5ம் நூற்றாண்டில் நிகழ்ந்த வரலாற்று நிகழ்வொன்று கெண்ட் பேரரசு கத்தோலிக்க மதத்தை தழுவும் நிலையை ஏற்படுத்தியது.

கெண்ட் பேரரசின் முழுமையான மதமாற்றத்தினால் இங்கிலாந்து முழுமையும் கத்தோலிக்க மதத்தை பின்பற்றும் நிலை உருவாகியது.

சரி.. இந்த வரலாற்று நிகழ்வு என்ன என்று தெரிந்து கொள்ள ஆரவ்ம் இருக்கின்றது தானே.. இது ஒரு ராஜா ராணி கதை.. அதனை அடுத்து சொல்கிறேன்..:-)

தொடரும்

சுபா

Sunday, August 24, 2014

புத்தரின் பூமி....தாய்லாந்து! பயணத் தொடர் - 10


​​வாட் ப்ரா சி சன்பெட் புத்த விகாரை மற்றும் பர்மிய படையினரால் சேதம் செய்யப்பட்ட அரச மாளிகை, புத்த ஆலய வளாகம், மடங்கள் இருந்த பகுதிகளுக்கு நேர் வடக்குப் ப்குதியில் அமைந்திருப்பது தான் ப்ரா மங்கோன் போபிட் விகாரை.




இந்த பௌத்த ஆலயத்தை முதலில் பார்த்த போது இதுவரை பார்த்த ஏனைய பிரமாண்டமான ஆலயங்களை விடவும் சிறியதாகவும் வடிவத்தில் புதியதாகவும் இருப்பதை அறியவும் உணரவும் முடிந்தது.  புதிய முன் மண்டப வடிவம் இக்கோயிலுக்கு அமைந்திருந்தாலும் கூட இதுவும் ஒரு பழமையான ஆலயம் தான்.

தாய்லாந்தில் அமர்ந்த நிலையில் நாம் பார்க்கக் கூடிய மிகப் பெரிய புத்தர் சிலைகளிலில் இக்கோயிலில் இருப்பதும் ஒன்று. புத்தரின் முழு வடிவம் மட்டுமே 9.5மீ உயரத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது. புத்தரின் முகத்தை நிமிர்ந்து தலையை உயர்த்தித் தான் பார்க்க முடியும். அடித்தளப்பகுதியில் இருந்து கணக்கிட்டால் 12.5மீ உயரம் இந்தச் சிலை. ஆக எவ்வளவு பிரமாண்டமாக இச்சிலை அமைந்திருக்கும் என கற்பனை செய்து பாருங்கள்.




இந்த பௌத்த விகாரை 1797ம் ஆண்டு பர்மிய படையினரால் முழுமையாக அழிக்கப்பட்டது. 1956ம் ஆண்டில் நிகழ்ந்த மறுசீரமைப்பின் போது இக்கோயில் புது வடிவம் பெற்று சிறப்புடன் தற்சமயம் அமைந்துள்ள வடிவத்தை பெற்றது. தாய்லாந்தின் பண்டைய ஆலய கட்டிட அமைப்பிலிருந்து மாறுபட்டு, எளிய புதிய வடிவத்தில் இக்கோயில் அமைப்பு அமைந்திருக்கின்றது என்பதே ஒரு பெரிய வித்தியாசம் தான்.

ஆலயத்தின் மையத்தில் அமைந்திருப்பது இந்த உயரமான 12.5மீ உயரமுள்ள வெண்கலச் சிலை. ஆலத்தின் பின்புறங்களில் வரிசையாக சற்றே சிறிய வடிவங்களில் வெண்கலச் சிலைகள் சில அமர்த்தப்பட்டிருக்கின்றன. சிலைகளின் மேல் பக்தர்கள் தங்கக் காகிதங்களை வாங்கி ஒட்டி தங்கள் வேண்டுதலை தெரிவித்து வணங்கிச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். ஒவ்வொரு தினமும் இப்படி இந்த புத்தர் சிலைகளின் மேல் ஒட்டப்பட்டும் தங்கக் காகிதங்கள் அனைத்தும் அவ்வப்போது தூய்மைப்படுத்தப்படுகின்றன.




இதே ஆலயக் கட்டுமான வடிவில் அமைந்திருப்பதுதான் மலேசிய நாட்டின் பினாங்கு மானிலத்தில் அமைந்திருக்கும் புத்தர் ஆலயம். பினாங்கைப் பொருத்தவரை இந்த Reclining Buddha  ஆலயம் தாய்லாந்து கட்டிடக் கலைக்கு உதாரணமாக அமைந்திருப்பதையும் இங்கு குறிப்பிடவேண்டும்.

பழமையான கோயில்களில் நாம் பார்ப்பது போன்று ஆங்காங்கே சிறிய சிறிய ஸ்தூபாக்களை உருவாக்காமல் ஒரு கட்டிடத்திற்குள் மையமாக ஒரு சிலை மட்டுமே அமைந்தும், சில வெண்கலச் சிலைகளும், வழிபாட்டு மங்கலச் சின்னங்களான ஊதுபத்தி, தாமரை மலர்கள் ஆகியன புத்தர் சிலைக்கு முன் வைக்கப்பட்டதுமான அமைப்பயே காண முடிகின்றது.



ஆலயத்தின் வெளிப்புறத்திலும் ஊதுபத்தி ஏற்றி வழிபடுவதற்கும், சிறிய விளக்குகளை ஏற்றி வைத்து வழிபடுவதற்கும் இடங்கள் அமைக்கபப்ட்டிருக்கின்றன. ப்ராமங்கோன் போபிட் விகாரை வழிபாட்டில் இருக்கும் ஒரு ஆலயமாகவும் இருப்பதால் சுற்றுலா பயணிகள் மட்டுமல்லாது வழிபாட்டிற்காக வரும் உள்ளூர் மக்களும் கோயிலுக்கு வருவதால் கோயில் முழுமைக்கும் கூட்டம் அலைமோதிக் கொண்டிருப்பதை காண்போம்.


எங்களை அழைத்து வந்த பயண வழிகாட்டி 25 நிமிடங்கள் கோயிலைப் பார்க்க அனுமதி வழங்கி விட்டு ஒரு குறிப்பிட்ட இடத்தைத் தெரிவித்து அங்கு எல்லோரும் மீண்டும் சந்திப்போம் எனச் சொல்லி சென்று விட நாங்கள் நடக்க ஆரம்பித்தோம். இதற்கு முன்னரே கோயில்களைச் சுற்றிப் பார்த்த களைப்பு வேறு. ஆக கோயிலின் முன் பகுதியில் விற்கப்படும் இளநீரை வாங்கிப் பருகி இளைப்பாறிக் கொண்டு கோயிலின் உட் சென்று முழுமையாக பார்த்து வழிபட்டு புகைப்படங்களும் எடுத்துக் கொண்டு வெளியேறினோம்.



கோயிலை விட்டு வெளியே வந்து சாலைப் பகுதியை அடைய அமைக்கப்பட்டுள்ள சாலையில் இரு பகுதிகளிலும் உணவுப் பொருட்கள் விற்கும் சிறு வியாபாரிகள் கடைகளைப் போட்டிருந்தார்கள். பல வர்ணங்களில் பல உணவு வகைகள். தாய்லாந்து உணவு வகைகளையும் வெவ்வேறு வகையான இப்பதார்த்தங்களையும், சிலர் நேராக சுடச் சுட உணவுப் பொருட்களைத் தயாரிப்பதையும் பார்த்துக் கொண்டே நடந்தோம்.

தொடரும்

Friday, August 22, 2014

காண்டெபெரி - யாத்திரை செல்வோமா..! - 2

ரோமானியப் பேரரசு மூன்று முறை இங்கிலாந்தைக் கைப்பற்ற முயற்சிகள் மேற்கொண்டன. முதலில் ஜூலியஸ் ஸீசர் கிமு.55 ஆண்டு இந்த முயற்சியை மேற்கொண்டார். இதற்காக அப்போதைய இங்கிலாந்திற்கு வர்த்தகம் செய்ய வருவோரை அணுகி இந்த நிலப்பரப்பின் செய்திகளை அறிந்து கொண்டு படையெடுத்துச் சென்று கைப்பற்ற என்ன செய்யலாம் என்ற தயாரிப்பு வேலைகளை எல்லாம் செய்து கொண்டு இங்கிலாந்தின் கெண்ட் கவுண்டி இருக்கும் பகுதிக்கு ரோமானியப் படைகள் வந்து சேர்ந்தன.

ஆனால் இந்த முயற்சி பலனளிக்கவில்லை.  ரோமானியப் படைகள் வெற்றி காணாமலேயே திரும்பின. இக்காலகட்டத்தில் இங்கிலாந்து செல்ட்டிக் இனக்குழுக்களின் ஆளுமையில் தான் இருந்தது. செல்ட்டிக் சமூகத்தில் வெவ்வேறு இனக்குழுக்கள் அவரவர் குழுத் தலைவர்களின் தலைமைத்துவத்துடன் இயங்கி வந்தன.

இங்கிலாந்தையும் ரோமானிய பேரரசுக்குள் இணைத்து பெரிய பேரரசை நிர்மாணிக்க ஜூலியஸ் ஸீசர் கண்ட கனவு நிறைவேறவில்லை. மீண்டும் கி.மு. 54ம் ஆண்டு 30,000 படை வீரர்களைத் திரட்டிக் கொண்டு கெண்ட் நகரை வந்தடைந்தது ரோமானியப் படை. அங்கே இனக்குழுத் தலைவர்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து போரை எதிர்கொள்ளத் தயாராக தேர்களுடன் இருப்பதைக் கண்டு பின்வாங்கி கிமு.54 செப்டம்பர் மாதம் வெற்றியின்றியே திரும்பியது ஸீஸரின் ரோமானியப் படை.


இங்கிலாந்து வந்த ரோமானியப் படைகளின் போர் கப்பல் 
தங்கத்தில் செய்யப்பட்ட வடிவம் இது.
லண்டன் அருங்காட்சியகத்தில் உள்ளது



ஆனால் ஏறக்குறைய அதற்கு 100 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் ரோமானியப் படைகள் இங்கிலாந்தைக் கைப்பற்றி ஆள எண்ணம் கொண்டு இதே கெண்ட் பகுதிக்கு வந்து சேர்ந்தன. அப்போது ரோமானியப் பேரரசராக இருந்தவர் க்ளவ்டியஸ். இம்முறை கெண்ட் பகுதி தொடங்கி இங்கிலாந்தின் தெற்குப் பகுதி அனைத்தையும் ரோமானியப் பேரரசு வெற்றி பெற்று தமது ஆளுமைக்குள் கொண்டு வந்தது.



ரோமானியப் பேரரசர் க்ளவ்டியஸ் தனது வெற்றியைக் கொண்டாடும் காட்சி. இது தங்கத்தால் செய்யப்பட்ட வடிவம்.
இது லண்டன் அருங்காட்சியகத்தில் உள்ளது


​ரோமானியப் படைகள் இந்த மூன்றாம் முறை எளிமையாக இங்கிலாந்தின் தெற்குப் பகுதியை கைப்பற்றவில்லை என்பது உண்மை. ஆனால் சில செல்டிக் இனக்குழுக்களின் தலைவர்கள் ரோமானியப் படைக்கு சாதகமாக இயங்கி​ நட்பு பாராட்டி ரோமானிய படையின் வெற்றிக்கு வழி வகுத்துக் கொடுத்தனர்.

ஒரு சில இனக்குழுக்களின் தலைவர்களோ ரோமானியப் படைகளை எதிர்த்துப் போரிட்டனர். ஆயினும் ரோமானியப் படையே இறுதியில் வெற்றி பெற்று இங்கு ரோமானிய ஆட்சியை முதன் முறையாகத் தொடங்கப்பட்டது. இது நடந்தது கி.பி.51ம் ஆண்டு.

ரோமானிய படையினருக்கும் செல்ட்டிக் இனக்குழு மக்களின் படையினருக்கும் நடந்த போரின் சான்றாக கிடைக்கும் போர்க்கருவிகள், மனித எலும்புக் கூடுகள் ஆகியவை கெண்ட் நகரில் ஆங்காங்கே அகழ்வாய்வின் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அப்படிப்பட்ட ஒரு இடம் தான் இன்றைய காண்டபெரியும்.

இங்குள்ள ரோமன் அருங்காட்சியகத்தில் இங்கே கண்டுபிடிக்கப்பட்ட போர்க்கருவிகள், மனித எலும்புக் கூடுகள் போன்றவை பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

தொடர்வோம்....

சுபா

Wednesday, August 20, 2014

காண்டெபெரி - யாத்திரை செல்வோமா..! - 1

கருத்தரங்கத்திற்காக இங்கிலாந்தின் தென் கிழக்கு நகரான காண்டபெரி வந்த எனக்கு இந்த நகரின் முழு விபரங்களையும் ஒவ்வொன்றாக அறிந்து கொள்ளும் போது ஆச்சரியத்தில் மூழ்கிப் போகின்றேன். இங்கிலாந்தின் மிக முக்கிய வரலாற்று நகர் காண்டபெரி என்பதும், ரோமன் அரசு இங்கிலாந்தில் இங்கு தாம் முதன் முதலில் தனது ஆட்சியை நிறுவியது என்பதையும், 6ம் நூற்றாண்டில் கெண்ட் நகரின் அரசியார் பெர்தாவின் தேவைக்காக ரோம் நகரிலிருந்து போப் இங்கு செயிண்ட் அகஸ்டின் பாதிரியாரை  அனுப்பி கிறிஸ்துவ மதம் பரவ வழியேற்படுத்தினார் என்பதும் வரலாறு.

இங்கு முதலில் கத்தோலிக்க மதம் பரவ ஆரம்பித்ததும் வழிபாட்டிற்காக தேவாலயம் எழுப்பப்பட்டது. தற்போது இருக்கும் கேத்திட்ரல் 11ம் நூற்றாண்டை சேர்ந்த வடிவம் என்றாலும் இதன் முதல் வடிவம் 6ம் நூற்றாண்டில் இங்கு அமைக்கப்பட்டு கத்தோலிக்க கிறிஸ்துவ மதம் பரவ விரிவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இன்று நேரம் கிடைத்தமையால் காலையில் கேத்திட்ரல், ரோமன் அருங்காட்சியகம், ஹெரிட்டேஜ் அருங்காட்சியகம், ஆகியன சென்று பார்த்து தகவல்கள் சேகரித்து வந்தேன்.

ஆர்ச்பிஷப் தோமஸ் பெக்கட் வரலாறு இந்த நகருக்கு மிக முக்கிய மாற்றத்தை 12ம் நூற்றாண்டு முதல் வழங்கியது.

இக்கதையைப் பற்றி விரிவாக தொடர்ந்து சொல்கின்றேன். முதலில் ...

கத்தோலிக்க கிறிஸ்துவர்களுக்கு புனித யாத்திரை செல்லும் இடங்கள் எனக் குறிப்பிடும் போது மிக முக்கியமாக அடையாளம் காட்டப்படும் 3 நகரங்கள் ஜெரூசலம், சண்டியாகோ டி கொம்பொஸ்டெலா (ஸ்பெயின்), காண்டெபெரி (இங்கிலாந்து)  ஆகியவை.

தோமஸ் பெக்கட்தான் கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் மிக முக்கிய புனித யாத்திரை நகராக இந்த நகரம் உருவாகக் காரணமாக இருந்தவர் என்பதோடு தொடங்குகின்றேன்.

இங்கு காணப்படுவது காத்திட்ரலில் ஆர்ச்பிஷப் தோமஸ் பெக்கட் 4 அரச வீரர்களால் (Knights) 1170ம் ஆண்டு கொல்லப்பட்ட இடம்.

தொடரும்..

Tuesday, August 12, 2014

வைல் டெர் ஸ்டாட் நகர் உலா..!

பாடர்ன் உர்ட்டென்பெர்க் மானிலமே பல அழகிய கிராமங்கள் சூழ்ந்ததோர் மானிலம்.

இங்கு பசுமைக்குக் குறைவில்லை. நெக்கார் நதி பாயும் பகுதிகள் மட்டுமன்றி ஆங்காங்கே பல ஓடைகள், ஆறுகள் இங்கே கண்களுக்கு குளிர்ச்சி.

இருவாரங்களுக்கு முன் திலகேஸ்வரி என்னைக் காண வந்திருந்த சமயம் யொஹான்னஸ் கெப்லர் அருங்காட்சியகம் அழைத்துச் சென்று பின்னர் இந்தச் சிறு கிராமத்தைச் சுற்றி வந்தோம்.

அன்று சீதோஷ்ண நிலையும் எங்கள் உலாவிற்கு ஒத்துழைக்கத் தவறவில்லை.

நடைப்பயணம் முடித்து திரும்பும் வழியில் ஒரு பழமையான மண்டபப்பகுதியில் ஒரு சிலர் பண்டைய கிராமிய உடையணிந்து கூட்டமாகக் கூடி சிறு விருந்து கொண்டாடிக் கொண்டிருந்தனர். அங்கு ஓரமாகச் சென்று அக்கடிடத்தைப் புகைப்படம் எடுத்துக் கொண்டு திரும்பி நடந்து வரும் சமயம் அக்கூட்டத்திலிருந்து ஒருவர் எங்களை அழைத்துக் கொண்டு ஓடிவந்தார். தன்னை இந்தப் பகுதி மேயர் என அறிமுகப் படுத்திக் கொண்டு இன்று ஒரு திருமணம் நடப்பதாகவும் நாங்களும் அந்த விருந்தில் கலந்து கொள்ளலாம் என்றும் கூறி எங்களை வியப்பில் ஆழ்த்தி அழைத்துச் சென்றார்.

மணமக்கள் மட்டுமன்றி வந்திருந்த விருந்தினர் அனைவரும் பிரத்தியேகமாக ஐரோப்பிய கற்கால நாகரிக உடை அணிந்திருந்தனர். அவர்கள் வழங்கிய சிறு உணவை உண்டு புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு அவர்களுக்கு வாழ்த்து சொல்லி விடைபெற்றுக் கொண்டு அடுத்த ஊருக்கு வாகனத்தில் ஏறி பயணமானோம் நானும் திலகேஸ்வரியும்.

வைல் டெர் ஸ்டாட் பல நூற்றாண்டுகளாக மூலிகை மருத்துவத்திற்குப் புகழ்பெற்று விளங்கிய ஒரு பகுதியில் அமைந்திருக்கும் ஒரு கிராமம்.  13லிருந்து 16ம் நூர்றாண்டு வரை இங்கே வீட்டு வைத்தியம், புதுமைச் சிந்தனை என முயன்ற பெண்களை விட்சஸ் என்று சொல்லி மரத்தில் கட்டி வைத்து எரியூட்டி கொன்ற நிகழ்வுகள் நடந்தன.

அழகழகான பழமையான வீடுகள், எளிமையான தூய்மையான வீதிகள், கடைவீதிகள்.. ஆங்காங்கே விட்ச்  க்ராஃப்ட் கதைகளை நினைவூட்டும் உருவங்கள், தேவாலயங்கள் என  அழகியதோர் கிராமம் வைல் டெர் ஸ்டாட். பாடன் ஊர்ட்டென்பெர்க் மாகாணம் வருபவர்கள் நிச்சயம் இந்த கிராமத்தை வந்து பார்த்து ரசித்துச் செல்லலாம்.

சில புகைப்படங்கள்..


ஆற்றங்கரை அருகே...​

நகராண்மைக்கழக் கட்டிடம்


ஜொஹான்னஸ்கெப்லர் சிலை


நகர மையத்தில்

நகர மையத்தில்

திருமண நிகழ்வு



திருமண நிகழ்வில் நாங்கள்



நகர மையத்தில்


நகர மையத்தில்



நகர மையத்தில்



நகர மையத்தில்




நகர மையத்தில்












Saturday, August 9, 2014

படம் சொல்லும் தமிழகம் 2014 - 8



2014 ஜூன் தமிழகத்தின் மதுரையிலிருந்து திருவாதவூர் செல்லும் வழியில் சாலையில் நான் எடுத்த ஒரு புகைப்படம் இது.

மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை பிரச்சாரம் செய்து கொண்டு மாணவர்கள் அணிவகுத்துச் செல்கின்றனர்.

நண்பகல் 12 வாக்கில் இந்த மாணவர்கள் அணி சென்று கொண்டிருந்தனர். கொளுத்தும் வெயிலில் காலில் காலணி அணியாத  நிலையில் பாதி சிறார்கள்.

தரையின் சூடும் அது தரும் வலியும் அவர்கள் முகத்தில் இல்லை. அணிவகுப்பின் மகிழ்ச்சியே மனதை நிறைத்திருக்கின்றது இவர்களுக்கு.

மாணவர்களுக்கு அடிப்படை தேவைகளில் ஒன்றான காலணி அணியும் வழக்கத்தை முறைப்படுத்தி அணிவிக்கும் பழக்கத்தைப் பெற்றோர் மறந்தாலும் ஆசிரியர் வலியுறுத்த வேண்டியது அவசியம் அல்லவா? மாணவர் நலனில் ஆசிரியருக்கும் பொறுப்புண்டே.  மாணவர்களை அணிவகுத்து சாலையில் அழைத்துச் செல்லும் ஆசிரியர்களுக்கு இருக்க வேண்டிய அந்தப் பொறுப்பு இங்கே மறைந்து விட்டதே..!

காலணி அணிவது என்பது பேஷணுக்காக அல்ல.. அடிப்படை பாதுகாப்பிற்காக.. எங்கெங்கோ வேடிக்கைப் பார்த்துக் கொண்டு செல்லும் மாணவர்கள் தரையில் கிடக்கும் ஏதாகினும் ஒன்றின் மேல் பாதத்தை வைத்து புண்ணாக்கிக் கொண்டால் அது அவர்களுக்கு சுகாதாரக் கேடு என்பதோடு ஏதாகினும் பின் விளைவினையும் கூட ஏற்படுத்தலாம். ஆசிரியர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதே என் எதிர்பார்ப்பு.