Sunday, August 24, 2014

புத்தரின் பூமி....தாய்லாந்து! பயணத் தொடர் - 10


​​வாட் ப்ரா சி சன்பெட் புத்த விகாரை மற்றும் பர்மிய படையினரால் சேதம் செய்யப்பட்ட அரச மாளிகை, புத்த ஆலய வளாகம், மடங்கள் இருந்த பகுதிகளுக்கு நேர் வடக்குப் ப்குதியில் அமைந்திருப்பது தான் ப்ரா மங்கோன் போபிட் விகாரை.
இந்த பௌத்த ஆலயத்தை முதலில் பார்த்த போது இதுவரை பார்த்த ஏனைய பிரமாண்டமான ஆலயங்களை விடவும் சிறியதாகவும் வடிவத்தில் புதியதாகவும் இருப்பதை அறியவும் உணரவும் முடிந்தது.  புதிய முன் மண்டப வடிவம் இக்கோயிலுக்கு அமைந்திருந்தாலும் கூட இதுவும் ஒரு பழமையான ஆலயம் தான்.

தாய்லாந்தில் அமர்ந்த நிலையில் நாம் பார்க்கக் கூடிய மிகப் பெரிய புத்தர் சிலைகளிலில் இக்கோயிலில் இருப்பதும் ஒன்று. புத்தரின் முழு வடிவம் மட்டுமே 9.5மீ உயரத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது. புத்தரின் முகத்தை நிமிர்ந்து தலையை உயர்த்தித் தான் பார்க்க முடியும். அடித்தளப்பகுதியில் இருந்து கணக்கிட்டால் 12.5மீ உயரம் இந்தச் சிலை. ஆக எவ்வளவு பிரமாண்டமாக இச்சிலை அமைந்திருக்கும் என கற்பனை செய்து பாருங்கள்.
இந்த பௌத்த விகாரை 1797ம் ஆண்டு பர்மிய படையினரால் முழுமையாக அழிக்கப்பட்டது. 1956ம் ஆண்டில் நிகழ்ந்த மறுசீரமைப்பின் போது இக்கோயில் புது வடிவம் பெற்று சிறப்புடன் தற்சமயம் அமைந்துள்ள வடிவத்தை பெற்றது. தாய்லாந்தின் பண்டைய ஆலய கட்டிட அமைப்பிலிருந்து மாறுபட்டு, எளிய புதிய வடிவத்தில் இக்கோயில் அமைப்பு அமைந்திருக்கின்றது என்பதே ஒரு பெரிய வித்தியாசம் தான்.

ஆலயத்தின் மையத்தில் அமைந்திருப்பது இந்த உயரமான 12.5மீ உயரமுள்ள வெண்கலச் சிலை. ஆலத்தின் பின்புறங்களில் வரிசையாக சற்றே சிறிய வடிவங்களில் வெண்கலச் சிலைகள் சில அமர்த்தப்பட்டிருக்கின்றன. சிலைகளின் மேல் பக்தர்கள் தங்கக் காகிதங்களை வாங்கி ஒட்டி தங்கள் வேண்டுதலை தெரிவித்து வணங்கிச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். ஒவ்வொரு தினமும் இப்படி இந்த புத்தர் சிலைகளின் மேல் ஒட்டப்பட்டும் தங்கக் காகிதங்கள் அனைத்தும் அவ்வப்போது தூய்மைப்படுத்தப்படுகின்றன.
இதே ஆலயக் கட்டுமான வடிவில் அமைந்திருப்பதுதான் மலேசிய நாட்டின் பினாங்கு மானிலத்தில் அமைந்திருக்கும் புத்தர் ஆலயம். பினாங்கைப் பொருத்தவரை இந்த Reclining Buddha  ஆலயம் தாய்லாந்து கட்டிடக் கலைக்கு உதாரணமாக அமைந்திருப்பதையும் இங்கு குறிப்பிடவேண்டும்.

பழமையான கோயில்களில் நாம் பார்ப்பது போன்று ஆங்காங்கே சிறிய சிறிய ஸ்தூபாக்களை உருவாக்காமல் ஒரு கட்டிடத்திற்குள் மையமாக ஒரு சிலை மட்டுமே அமைந்தும், சில வெண்கலச் சிலைகளும், வழிபாட்டு மங்கலச் சின்னங்களான ஊதுபத்தி, தாமரை மலர்கள் ஆகியன புத்தர் சிலைக்கு முன் வைக்கப்பட்டதுமான அமைப்பயே காண முடிகின்றது.ஆலயத்தின் வெளிப்புறத்திலும் ஊதுபத்தி ஏற்றி வழிபடுவதற்கும், சிறிய விளக்குகளை ஏற்றி வைத்து வழிபடுவதற்கும் இடங்கள் அமைக்கபப்ட்டிருக்கின்றன. ப்ராமங்கோன் போபிட் விகாரை வழிபாட்டில் இருக்கும் ஒரு ஆலயமாகவும் இருப்பதால் சுற்றுலா பயணிகள் மட்டுமல்லாது வழிபாட்டிற்காக வரும் உள்ளூர் மக்களும் கோயிலுக்கு வருவதால் கோயில் முழுமைக்கும் கூட்டம் அலைமோதிக் கொண்டிருப்பதை காண்போம்.


எங்களை அழைத்து வந்த பயண வழிகாட்டி 25 நிமிடங்கள் கோயிலைப் பார்க்க அனுமதி வழங்கி விட்டு ஒரு குறிப்பிட்ட இடத்தைத் தெரிவித்து அங்கு எல்லோரும் மீண்டும் சந்திப்போம் எனச் சொல்லி சென்று விட நாங்கள் நடக்க ஆரம்பித்தோம். இதற்கு முன்னரே கோயில்களைச் சுற்றிப் பார்த்த களைப்பு வேறு. ஆக கோயிலின் முன் பகுதியில் விற்கப்படும் இளநீரை வாங்கிப் பருகி இளைப்பாறிக் கொண்டு கோயிலின் உட் சென்று முழுமையாக பார்த்து வழிபட்டு புகைப்படங்களும் எடுத்துக் கொண்டு வெளியேறினோம்.கோயிலை விட்டு வெளியே வந்து சாலைப் பகுதியை அடைய அமைக்கப்பட்டுள்ள சாலையில் இரு பகுதிகளிலும் உணவுப் பொருட்கள் விற்கும் சிறு வியாபாரிகள் கடைகளைப் போட்டிருந்தார்கள். பல வர்ணங்களில் பல உணவு வகைகள். தாய்லாந்து உணவு வகைகளையும் வெவ்வேறு வகையான இப்பதார்த்தங்களையும், சிலர் நேராக சுடச் சுட உணவுப் பொருட்களைத் தயாரிப்பதையும் பார்த்துக் கொண்டே நடந்தோம்.

தொடரும்

No comments:

Post a Comment