Friday, August 22, 2014

காண்டெபெரி - யாத்திரை செல்வோமா..! - 2

ரோமானியப் பேரரசு மூன்று முறை இங்கிலாந்தைக் கைப்பற்ற முயற்சிகள் மேற்கொண்டன. முதலில் ஜூலியஸ் ஸீசர் கிமு.55 ஆண்டு இந்த முயற்சியை மேற்கொண்டார். இதற்காக அப்போதைய இங்கிலாந்திற்கு வர்த்தகம் செய்ய வருவோரை அணுகி இந்த நிலப்பரப்பின் செய்திகளை அறிந்து கொண்டு படையெடுத்துச் சென்று கைப்பற்ற என்ன செய்யலாம் என்ற தயாரிப்பு வேலைகளை எல்லாம் செய்து கொண்டு இங்கிலாந்தின் கெண்ட் கவுண்டி இருக்கும் பகுதிக்கு ரோமானியப் படைகள் வந்து சேர்ந்தன.

ஆனால் இந்த முயற்சி பலனளிக்கவில்லை.  ரோமானியப் படைகள் வெற்றி காணாமலேயே திரும்பின. இக்காலகட்டத்தில் இங்கிலாந்து செல்ட்டிக் இனக்குழுக்களின் ஆளுமையில் தான் இருந்தது. செல்ட்டிக் சமூகத்தில் வெவ்வேறு இனக்குழுக்கள் அவரவர் குழுத் தலைவர்களின் தலைமைத்துவத்துடன் இயங்கி வந்தன.

இங்கிலாந்தையும் ரோமானிய பேரரசுக்குள் இணைத்து பெரிய பேரரசை நிர்மாணிக்க ஜூலியஸ் ஸீசர் கண்ட கனவு நிறைவேறவில்லை. மீண்டும் கி.மு. 54ம் ஆண்டு 30,000 படை வீரர்களைத் திரட்டிக் கொண்டு கெண்ட் நகரை வந்தடைந்தது ரோமானியப் படை. அங்கே இனக்குழுத் தலைவர்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து போரை எதிர்கொள்ளத் தயாராக தேர்களுடன் இருப்பதைக் கண்டு பின்வாங்கி கிமு.54 செப்டம்பர் மாதம் வெற்றியின்றியே திரும்பியது ஸீஸரின் ரோமானியப் படை.


இங்கிலாந்து வந்த ரோமானியப் படைகளின் போர் கப்பல் 
தங்கத்தில் செய்யப்பட்ட வடிவம் இது.
லண்டன் அருங்காட்சியகத்தில் உள்ளது



ஆனால் ஏறக்குறைய அதற்கு 100 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் ரோமானியப் படைகள் இங்கிலாந்தைக் கைப்பற்றி ஆள எண்ணம் கொண்டு இதே கெண்ட் பகுதிக்கு வந்து சேர்ந்தன. அப்போது ரோமானியப் பேரரசராக இருந்தவர் க்ளவ்டியஸ். இம்முறை கெண்ட் பகுதி தொடங்கி இங்கிலாந்தின் தெற்குப் பகுதி அனைத்தையும் ரோமானியப் பேரரசு வெற்றி பெற்று தமது ஆளுமைக்குள் கொண்டு வந்தது.



ரோமானியப் பேரரசர் க்ளவ்டியஸ் தனது வெற்றியைக் கொண்டாடும் காட்சி. இது தங்கத்தால் செய்யப்பட்ட வடிவம்.
இது லண்டன் அருங்காட்சியகத்தில் உள்ளது


​ரோமானியப் படைகள் இந்த மூன்றாம் முறை எளிமையாக இங்கிலாந்தின் தெற்குப் பகுதியை கைப்பற்றவில்லை என்பது உண்மை. ஆனால் சில செல்டிக் இனக்குழுக்களின் தலைவர்கள் ரோமானியப் படைக்கு சாதகமாக இயங்கி​ நட்பு பாராட்டி ரோமானிய படையின் வெற்றிக்கு வழி வகுத்துக் கொடுத்தனர்.

ஒரு சில இனக்குழுக்களின் தலைவர்களோ ரோமானியப் படைகளை எதிர்த்துப் போரிட்டனர். ஆயினும் ரோமானியப் படையே இறுதியில் வெற்றி பெற்று இங்கு ரோமானிய ஆட்சியை முதன் முறையாகத் தொடங்கப்பட்டது. இது நடந்தது கி.பி.51ம் ஆண்டு.

ரோமானிய படையினருக்கும் செல்ட்டிக் இனக்குழு மக்களின் படையினருக்கும் நடந்த போரின் சான்றாக கிடைக்கும் போர்க்கருவிகள், மனித எலும்புக் கூடுகள் ஆகியவை கெண்ட் நகரில் ஆங்காங்கே அகழ்வாய்வின் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அப்படிப்பட்ட ஒரு இடம் தான் இன்றைய காண்டபெரியும்.

இங்குள்ள ரோமன் அருங்காட்சியகத்தில் இங்கே கண்டுபிடிக்கப்பட்ட போர்க்கருவிகள், மனித எலும்புக் கூடுகள் போன்றவை பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

தொடர்வோம்....

சுபா

No comments:

Post a Comment