Friday, May 23, 2014

புத்தரின் பூமி....தாய்லாந்து! பயணத் தொடர் - 7

சாவ் ப்ராயா

சாவ் ப்ராயா, தாய்லாந்தின் மத்திய நிலத்தில் பாய்ந்தோடும் ஒரு நதி. வடக்கே நக்கோன் ஸ்வான் வட்டாரத்தில் பிங், நான் ஆகிய இரண்டு நதிகளின் சங்கமத்தில் உருவாகும் நதி இது.  சாவ் ப்ரயா நதிக்கு இன்னொரு பெயரும் தாய் மொழியில் உண்டு.  மீ நாம் என்பது இந்த மற்றொரு பெயர்.  மி என்பது அன்னை என்ற பொருளிலும் நாம் என்பது நதி என்ற பொருளிலும் அடையாளம் காணப்படுவது. இணைத்து வாசிக்க அன்னை நதி என பொருள் பெறுகின்றது. தாய்லாந்தின் வடக்கு தொடங்கி பாங்காக் நகரைக் கடந்து 372கிமீ தூரம் பயணித்து தாய் குடாவில் கலக்கின்றது சாவ் ப்ராயா நதி.

சாவ் ப்ரயா நதி  பல நூற்றாண்டுகளாக தாய்லாந்து நாட்டின் பசுமைக்குக் காரணமாக இருப்பது. விவசாயமே தாய்லாந்தின் மிக முக்கிய தொழில் என்பது நாம் அறிந்ததே. ஆக மக்களின் வாழ்வாதாரத்திற்கு அடிப்படையான விவசாயம் செழிக்க உதவும் வற்றாத நீரை வழங்கும் இச்சவ் ப்ராயா பகுதியில் அதிகமாக மக்கள் குடியேற்றம் நிகழ்ந்தது என்பதும் அதன் பொருட்டு சாம்ராஜ்ஜியங்களும் அரசாட்சிகளும் இவ்விடங்களை மையமாகக் கொண்டு அமைந்தன என்பதனையும் காண முடிகின்றது. இப்படி சாவ் ப்ராயா நதிக்கருகில் இருக்கும் ஒரு நகரம் தான் அயோத்தையா!


வாட் யாய் சாய் மொங்கோன் புத்த விகாரையில்


14ம் நூற்றாண்டு தொடங்கி 18ம் தூற்றாண்டு வரை கிழக்காசியப் பகுதியில் தனிச்சிறப்பும் புகழும் பெற்று விளங்கிய நகரமாக அயோத்தையா விளங்கியது. பல ராஜ்ஜியங்களை உள்ளடக்கிய பேரரசுக்குத் தலைநகரமாக இக்காலகட்டத்தில் அயோத்தையா விளங்கியது- இந்நகரத்தில், அதிலும் குறிப்பாக சாவ் ப்ராயா நதிக்கருகே பல ப்ரமாண்டமான கோயில்களும் கட்டிடங்களும் உருவாக்கப்பட்டன. 1350ம் வருஷம் ராமாதிபோதி எனும் மன்னரால் (1351 - 1369)  அயோத்தையாவின் தலைநகரம் உருவாக்கப்பட்டது.

அயோத்தையாவுக்கு அருகில் இருக்கும் நகர் லோப் பூரி. இந்த நகரில் அக்காலகட்டத்தில் மிக விரிவாக அம்மை நோய் பரவியது. நோய்க்கு மருந்து கிடைக்காது பலர் இப்பகுதியை விட்டு வெளியேறினர்.  அப்பகுதியின் மன்னர் யூ தோங், லோப் பூரி நகரில் விரிவாகப் பரவிய அம்மை நோயிலிருந்து தன்னையும் தன்னை சார்ந்திருந்த மக்களையும் காக்கும் பொருட்டு அங்கிருந்து வெளியேறி புதிய ஓரிடத்திற்கு வந்தடைந்தார். இங்கு தனது பெயரை ராமாதிபோதி என அமைத்துக் கொண்டு தான் வந்தடைந்த நகரான அயோத்தையாவில் தனது ராஜ்ஜியத்தை அமைத்து தலைநகரை உருவாக்கி  அப்பகுதியை ஆட்சி செய்ய ஆரம்பித்தார் என்பது வரலாறு.

மன்னர் யூதோங் பற்றி மற்றுமொரு கதையும் உண்டு. இவர் சீனதேசத்தைப் பூர்வீகமாக கொண்ட ஒரு வர்த்தகர் என்றும் தற்போதைய பாங்காக் நகர் இருக்கும் பெட்சாபூரி மாவட்டத்தைச் சார்ந்தவர் என்றும் வர்த்தக நோக்கில் அயோத்தையா நகர் இருக்கும் பகுதிக்கு வந்து பின்னர் மன்னரானவர் என்றும் கூறப்படுகின்றது.


வாட் யாய் சாய் மொங்கோன் புத்த விகாரையில்


15ம் நூற்றாண்டு வாக்கில் அயோத்தையா தனது ஆட்சி நிலப்பரப்பையும் ஆளுமையையும் விரிவாக்கி இப்பிராந்தியத்தில் மிகப் பிரபலமான ஒரு இடமாக உருவாகியது. அக்காலத்தில் மற்றொரு புகழ்வாய்ந்த நகரமும் மிகப் பெரிய ராஜ்ஜியமுமாக விளங்கிய  சுக்கோத்தை பேரரசியும் 15ம் நூற்றாண்டின் மத்தியில் அயோத்தையாவின் ஆட்சிக்குக் கீழ் கொண்டு வந்தது. உள்ளூரிலும் ஏனைய ஆசிய நாடுகளிலும் மட்டுமல்லாது, ஐரோப்பிய நாடுகளிலும் வர்த்தகத்தை வளப்படுத்தும் முயற்சியில் இறங்கியதன் பலனாக ஐரோப்பிய வர்த்தகர்களின் வருகை அயோத்தையாவிலும் ஏற்பட்டது. இது அயோத்தையாவின் செல்வச் செழிப்பை மென்மேலும் அதிகரித்த வண்ணம் புகழ் பெறச் செய்தது.

தாய்லாந்திற்கு முன்னர் சியாம் அல்லது சயாம் என்ற பெயர் இருந்தது என்பதை நம்மில் பலர் அறிவோம். இப்பெயர் குறிப்பிடப்படும் நிலப்பகுதி அயோத்தையா தான்.

1767ல் நடைபெற்ற போரில் அயோத்தையா மிக மோசமாக பர்மிய படையினரால் சேதப்படுத்தப்பட்டது. அரச மாளிகைகள் தகர்க்கப்பட்டன. இதன் பொருட்டு தலைநகர் அயோத்தையாவிலிருந்து மாற்றம் செய்யப்பட்டு தற்போதைய பாங்காக் நகருக்கு பெயர்ந்தது. அது முதல் பாங்காக் நகரமே தாய்லாந்தின் பரந்த நிலப்பரப்பின் தலைநகரமாக விளங்கி வருகின்றது.


வாட் யாய் சாய் மொங்கோன் புத்த விகாரையில்


அயோத்தையாவின் பெயர் நமக்கு அயோத்தியை ஞாபகப் படுத்தலாம்.

இந்திய நிலப்பரப்பில் ராம ராஜ்ஜியம் விளங்கிய நகரான அயோத்தியின் பெயர் அடிப்படையில் அமைந்தது தான் தாய்லாந்தின் அயோத்தையா நகரம்.  ராமாயணக் காப்பியம் தாய்லாந்தில் ராமாக்கியன் என்ற பெயரில் சற்றே மாறுபட்ட கதையம்சங்களுடன் மக்கள் வாழ்வில் ஏற்றக்கொள்ளப்பட்ட ஒரு அம்சமாகத் திகழ்கின்றது. தாய்லாந்தின் மன்னர்கள் பெயர்களைப் பார்க்கும் போது, பல நூற்றாண்டுகளாக ராமா என்ற பெயர் மன்னர்களின் பெயருடன் இணைந்திருப்பதை நன்கு காண முடியும்.

தாய்லாந்து அரச பரம்பரையில் மன்னராக முடிசூடும் நாளில் அம்மன்னன் தன்னை ராமராக நினைத்து தான் அமைக்கும் ராஜ்ஜியம் ராமராஜ்ஜியமாக இருக்கும் என உறுதி மொழி கூறி ஆட்சிப்பொறுப்பை எற்கின்றார். இங்கு தெய்வமும் அரசரும் இரு வேறு பொருளாக இருந்தாலும் இரண்டும் இணைந்த முக்கியத்துடன் திகழ்வதாக உருவாக்கம் செய்யப்பட்டு ராம அவதாரமே மன்னர் என்ற நிலையில் மக்கள் மன்னரை மரியாதை செலுத்தும் பண்பு அமைந்திருக்கின்றது. மன்னரின் சமயமாக ஹிந்து மதத்தின் பல அம்சங்கள் கலந்த வடிவிலான புத்த மதமே திகிழ்கின்றது.

இன்றும் கூட பாங்காக் நகரில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் மன்னர் பூமிபோல் 8ம் ராமா என்ற பெயரிலேயே அழைக்கப்படுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மக்கள் மனதில் மிக ஆழமான அன்புடன் இவர் விளங்குகின்றார். இவர் மக்கள் நலனுக்காக பல முயற்சிகளைச் செய்தவர். இவரும் இவரது துணைவியாரும், மகளும் உள்ளூர் மக்களால் மிக விரும்பப்படுபவர்கள். சேவை மன்ப்பான்மை மிக மிக அதிகமாக உடையவர்கள். இதில் விதி விலக்காக மன்னரின் மகன் கருதப்படுகின்றார். ஆயினும் பொதுமக்கள், மன்னர், பேரரசியார், இளவரசியார் பெயரில் கொண்டிருக்கும் மதிப்பும் அன்பும் அளவற்றது என்பதை நேரில் நான் அங்கிருந்த பொழுதில் உணர்ந்தேன். குறிப்பாக வடக்கு தாய்லாந்தில் மலைப்பகுதியில் ஒரு பயணத்தின் போது அங்கு ஒரு முறை வந்திருந்த அரசியாரை தெய்வமாக மக்கள் வணங்கி அவரை வரவேற்று  உபசரித்து மக்கள் மகிழ்வித்தார்கள் என்பதைக் கேள்விப்பட்டு ஆச்சரியம் கொண்டேன்.


வாட் யாய் சாய் மொங்கோன் புத்த விகாரையில்

எங்கள் அயோத்தையா பயணத்தில் முதலில் வாட் யாய் சாய் மொங்கோன் சென்றடைந்தோம். அப்போது காலை மணி ஏறக்குறை 10.40 ஆகியிருந்தது. இந்த வாட் யாய் சாய் மொங்கோன் என்ப் பெயர்க் கொண்ட புத்த விகாரை பல வெவ்வேறு பகுதிகளாக அமைந்தவை. ஒவ்வொன்றாகக் காண சற்றே நேரம் எடுக்கும் என்பதால் 10 நிமிடங்கள் எங்களுக்கு விளக்கமளித்து விட்டு 30 நிமிடங்கள் ஆலயத்தை முழுதாகச் சுற்றிப் பார்த்து வர அனுமதி அளித்தார் எங்கள் பயன வழிகாட்டி. ஆலயத்தின் அழகில் நான் என்னை மறந்தேன்!

தொடரும்

Sunday, May 11, 2014

புத்தரின் பூமி....தாய்லாந்து! பயணத் தொடர் - 6

அயோத்தையாவுக்குச் செல்வோமா?

டிசம்பர் 14ம் தேதி நான் ஆர்ட்ரியம் ஹோட்டலுக்கு வந்தவுடனேயே ரிஷப்ஷனில் என் பெயரைச் சொல்லி நான் பதிவு செய்திருந்த பயணக் குழுவைப் பற்றி விசாரித்து மறு நாள் காலை சரியாக 7 மணிக்கு எங்கள் பேருந்து புறப்படும் என்றும் அதற்கு 15 நிமிடங்களுக்கு முன்னரே நாங்கள் காலை உணவை முடித்து தயாராகி வாசலில் காத்திருக்க வேண்டும் என்ற தகவல் கிடைத்தது.



பாங்காக் நகர டுக் டுக் வண்டிகள் (ஆட்டோ போல)


அறைக்குச் சென்று குளித்து தயாராகி நான் இரவு உணவு சாப்பிடச் செல்லலாம் என முடிவெடுத்து சாலையில் நடக்க ஆரம்பித்தே. பெரிய நகரங்களில் உள்ள மிகப்பெரிய பிரச்சனையே சுற்றுச்சூழல் மாசு தான், பாங்கோக் நகரின் அதிகப்படியான வாகனங்களினால் அந்த நகரமே புகை மூட்டமாகத்தான் காட்சியளிக்கின்றது. சாலைப் பகுதிகள் மிகத் தூய்மையாக இருந்த போதிலும் காற்று மிக அசுத்தமாகவே உள்ளது. எங்களுக்கு விருப்பமான சீதோஷ்ணமாக இருந்தாலும் இந்தக் காற்று அசுத்தத்தால் அதிகம் சாலையில் நடக்க இருவருக்குமே மனம் வரவில்லை. விரைவாக ஒரு ரெஸ்டாரண்டைத் தேடி அங்கே உணவை ஆர்டர் செய்தேன்.  தாய் க்ரீன் கறி (பச்சை குழம்பு) தான் எனக்குப் பிடித்திருந்தது. இது தாய் துளசி கொண்டு தயாரிக்கப்படும் ஒரு குழம்பு. சாதத்தோடு சாப்பிடப்படுவது.

மறு நாள் காலை ஆர்ட்ரியம் ஹோட்டலில் பஃப்பே வகையில் காலை உணவு. காரமான  உணவு வகைகள் கிடைத்தன.ஆசிய நாடுகள் வந்து விட்டால் கார உணவு வகைகள் தான் என்றுமே என் தேர்வு. உறைக்கின்றது என மனதில் நினைத்துக் கொண்டே விடாமல் சாப்பிடும் பழக்கம் எனக்கு. என் விருப்பத்திற்கு பிடித்தமான எல்லா வகை உணவுகளையும் கொஞ்சம் கொஞ்சம் ருசி பார்த்து முடித்தேன். என்ன ஆச்சரியம் என்றால் அங்கு வைக்கப்பட்டிருந்த பல வகை உணவுகளில் உப்புமாவும் வடையும் கூட இருந்தன.




ஏனைய பயணிகளையும் பேருந்தையும் அடையாளம் கண்டு கொள்ள நினைத்து நான்  சற்று முன்னதாகவே எனது எல்லா உடமைகளுடனும் வந்து வெளியே வந்து விட்டேன். எங்கள் பயணத்திற்காக ஒரு குளிர்சாதன வசதி கொண்ட பேருந்து, அதில் வாகன ஓட்டுனருடன் 'பஸ் போய்' என அழைக்கப்படும் உதவியாளர் ஒருவரும் எங்கள் பயண வழிகாட்டியும் இருந்தனர். என்னை அறிமுகம் செய்து கொண்டு, பாஸ்போர்ட் மற்றும் சுற்றுலா புக்கிங் ஆவணங்களையும் காட்டியவுடன் என் பெட்டிகளைப் பஸ்ஸில் ஏற்றி என்னையும் ஏனையோருக்கு அறிமுகப் படுத்தி வைத்தனர்.

என்னுடன் இப்பயணத்தில் இணைந்து கொண்டோர் மொத்தம் 22 பேர். அனைவரும் ஜெர்மானியர்கள். ஜெர்மனியில் இயங்கும் Berge & Meer  பயண நிறுவனத்தில் என்னைப் போல பதிந்தவர்கள் இவர்கள். இவர்கள் 22 பேருடனும் தான் எங்கனது அடுத்த 13 நாட்கள் பயணம்.

சிலர் தம்பதியர்.. சிலர் தனி நபர்கள்.. என்ன்னுடன்   தாய்லாந்தின் இந்த வடக்கு தெற்குப் பயணத்தை ரசிக்க வந்த ஜெர்மானியர்கள் அனைவருமே ஏறக்குறைய 40லிருந்து 60 வயதுக்குட்பட்டவர்கள்.

எங்களின் பயண வழிகாட்டி 46 வயது பெண்மணி ஒருவர். பார்ப்பதற்கு 30 வயது என்றே சொல்லலாம். அழகான, அன்பான பல வரலாற்று விபரங்களும் தகவல்களும் தெரிந்த ஜெர்மன் மொழி பேசும் தாய்லாந்து பெண்மணி அவர்.

அன்றைய எங்கள் பயணம் பாங்காக் நகரிலிருந்து நேராக அயோத்தையா சென்று பின்னர் இரவு சுக்கோத்தை நகரை அடைவது. இது 390 கிமீ தூரம். இதில் அயோத்தையாவில் சில இடங்களைப் பார்த்து விட்டு மதிய உணவு சாப்பிட்டு விட்டு சுக்கோத்தை செல்வது என்பதாக அவர் திட்டமிருந்தது.


சம்மொன்கோல் கோயிலில் ஒரு பகுதியில்
அயோத்தையாவில் ஏராளாமான புத்தர் கோயில்கள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒரு சிறப்பு மிக்கவை. எல்லா கோயில்களுக்கும் செல்வது என்பது சாத்தியப்படாது என்பதால் வாட் சம்மொன்கொல் மட்டும் செல்வது என்றும் நேரம் அமைந்தால்  மேலும் ஒரு புத்த விகாரையைப் பார்க்கலாம் என்று எங்கள் பயண வழிகாட்டி குறிப்பிட்டார்.

பாங்காக் நகரை விட்டு சரியாக காலை 7 மணிக்கு எந்தத் தாமதமும் இன்றி எங்கள் பஸ் புறப்பட்டது. ஏனைய பெரிய நகரங்களைப் போல உயர்ந்த கட்டிடங்களும் வர்த்தக நிலையங்களும்  பாங்காக்கிலும் காண முடிகின்றது.


பாங்காக் காலை 7 மணி வாக்கில்


பஸ்ஸில் ஏறி அமர்ந்து செல்லும் போது ஏனைய பயணிகளுடன் முதலில் எல்லோருக்குமே பேச ஒரு தயக்கம். முதல் நாள் காலையில் அவரவர் அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டு ஏதேனும் தகவல்கள் தேவைப்பட்டால் எங்கள் பயண வழிகாட்டியிடமே கேட்பது என ஒரு வித தயக்க உணர்வுடனே காணப்பட்டோம். இந்த நிலை அன்று இரவுக்குள் மாறிப் போனது. புதிய நண்பர்கள் அந்த முதல் நாள் பயணத்திலேயே ஒருவருக்கொருவர் அறிமுகமாக்கிக் கொண்டோம்.

தொடரும்...

சுபா

Monday, May 5, 2014

ஒரு நாள்... செல்வோமா ஸ்ட்ராஸ்புர்க் ? - 2

தொடர்ந்து சில படங்களைப் பகிர்ந்து கொள்ள நினைத்திருந்தேன். ​

இன்று தான் நினைவு வர... இதோ மேலும் சில படங்கள்....


கேக் வகைகள் - இவைகளைச் சாப்பிடுவதால் காலரி அதிகம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் பார்த்தால் நிச்சயம் எடை அதிகரிக்காது :-)



Inline image 1
ஐரோப்பிய ஒன்றியத்தின் பார்லிமண்ட் வாசல் பகுதி



Inline image 2
பார்லிமண்ட கட்டிடத்தின் முன்புறத்தில் நான் - பொஸைடோன் காப்பர் சிலை அருகில். கி.மு 460 ஆண்டு எனக்குறிப்பிடப்படும் இது கிரீஸின் ஏத்தன்ஸ் நகரிலிருந்து கொண்டுவரப்பட்டது. 



Inline image 3
பார்லிமண்ட் வாசலில் உறுப்பினராக அங்கம் வகிக்கும் நாடுகளின் கொடிகள்.



Inline image 4
பார்லிமண்ட் வாசலில் உறுப்பினராக அங்கம் வகிக்கும் நாடுகளின் கொடிகள்.



Inline image 5
ரைன் நதி சூழ, சிறு தீவு போல அமைந்திருக்கும் ஸ்ட்ராஸ்புர்க் நகரின் எழில் காட்சி




Inline image 10
பழங்காலத்து வீடுகள் - தரம் உறுதியாக அமைந்திருப்பதால் ஏறக்குறைய 200 ஆண்டுகளாகியும் கூட இன்னமும் நல்ல முறையில் பயன்பாட்டில் இருப்பவை. இவை Fachwerkhaus  என அழைக்கப்படுபவை. மரமும் கற்களும் வைத்து கட்டப்பட்டவை.




Inline image 6
ரைன் நதியில் போட் பயணம்



Inline image 7
வார இறுதி சந்தையில் பழைய உபயோகப்படுத்திய பொருட்களை வைத்துக் கொண்டு விற்பனை செய்து கொண்டிருக்கும் பொது மக்கள்



Inline image 8
கண்கவரும் பால்கனி அலங்காரம்



Inline image 9
இது பீஸா அல்ல.. ஸ்ட்ராஸ்புர்க் பகுதிக்கும் இதன் அருகாமையில் இருக்கும் ஊர்களிலும் பிரசித்தி பெற்ற ஒரு வகையான ரொட்டி வகை. மெலிதான ரொட்டியின் மேல் சீஸ், வெங்காயம், காளான் என அலங்கரிக்கப்பட்டுள்ளது. Flammkuchen என்பது இதன் பெயர். கரி அடுப்பில் சூட்டில் தயாரித்து எடுக்கப்படுவது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் பார்லிமண்ட் இங்கு இருப்பதனால் மட்டும் ஸ்ட்ராஸ்புர்க்  ஒரு முக்கிய நகரமாக விளங்குகின்றது எனச் சொல்ல முடியாது. இயற்கை அழகும், கலை அழகும் கொண்ட ஒரு நகரம் என்பதோடு, இது  பண்டைய வரலாற்று சிறப்புக்களைக் கொண்ட ஒரு நகரமும் கூட. ஐரோப்பா வருபவர்கள் ஸ்ட்ராஸ்புர்க் நகரின் பெயரையும் உங்கள் பட்டியலில் இணைத்துக் கொள்ளுங்கள். 

அன்புடன்
சுபா

Thursday, May 1, 2014

புத்தரின் பூமி....தாய்லாந்து! பயணத் தொடர் - 5

தாய்லாந்து பௌத்தம்

தாய்லாந்தின் ஏறக்குறைய 90% மக்கள் தொகையினரின் வழிபடு சமயம் பௌத்தம். அதிலும் குறிப்பாக தேரவாத பௌத்தம். இந்தியாவில் தோன்றிய புத்தம், நிலமார்க்கமாகவும் கடல் மார்க்கமாகவும் இங்கு வந்த பௌத்த பிக்குகளினால் இந்தப் பகுதியில் விரிந்து பரவ ஆரம்பித்தது.

தாய்லாந்து மட்டுமன்றி, பர்மா கம்போடியா, லாவோஸ், மலேசிய தீபகற்பம், இந்தோனிசிய தீவுகள் ஆகிய கிழக்காசிய நாடுகளில் பௌத்தமும் ஹிந்து சமயங்களும் பரவுவதற்கு முன்னர் இங்கு சிறு சிறு சமூகங்களின், பழங்குடி மக்களின் இயற்கை தெய்வ வழிபாடு என்பதே நடைமுறையில் வழக்கத்தில் இருது  வந்துது. தத்துவங்கள் சார்ந்த, வாழ்க்கைக்கு ஒரு நன்னெறி, சிந்தனைக்கு ஒரு வழிகாட்டி என்ற வகையிலான கருத்துக்களை முன்வைக்கும் ஒரு சமயம் என்பது இப்பகுதில் ஏற்பட்டிருக்கவில்லை. ஆக திடமான, தத்துவக் கருத்துக்களை அடிப்படையாக வைத்து, நெறிமுறைகளைக் கற்பிக்கும் ஒரு சமயம் என்பது இப்பகுதியில் அமைந்திருக்கவில்லை. உணவு, உடை, குடும்ப அமைப்பு என்ற அடிப்படையான தேவைகள், இயற்கையோடு இயைந்த வாழ்க்கையியல் தான் இங்கு வழக்கில் இருந்தது. இயற்கையின் பல்வேறு பரிமாணங்களே தெய்வங்களாக உருவகப்படுத்தப்பட்ட நிலையை உள்வாங்கி, மழை, காற்று. நிலம், இரவு, சூரியன் சந்திரன், புயல், வெள்ளம் என் இயற்கையைப் பார்த்து அதனோடு இணைந்த தங்கள் வாழ்க்கைத் தேவைகளுக்கு அந்த இயற்கையைத் தெய்வமாக வைத்து வழிபட்டு வந்த வாழ்க்கை என்ற நிலையோடு இப்பகுதிகளில் ஆரம்பகால சமய நிலைகள் இருந்தன. இவை சடங்குகளாகவும் புதுப் பரிமாணம் பெற்று ஆதி வாசி மக்களின் வாழ்க்கையில் இடம்பெறுவதை இன்றும் கூட மலேசிய காடுகளில் வாழும் மக்களின் வாழ்க்கையை அறிந்து கொள்ள முயற்சிக்கும் போது நாம் உணரலாம்.

இந்த நிலையிலிருந்தது தான் அக்கால  தாய்லாந்து சூழலும்.  இந்தியாவிலிருந்து  வணிக நோக்கத்துடன் வந்து சேர்ந்தவர்களும், சமயத்தை விரிவாக்க வந்த புத்த பிக்குகளும்  இங்கு நடைமுறையில் இருந்த சடங்குகளிலிருந்து மாறுபட்ட சமய நெறிமுறைகளை இங்கிருந்த மக்களுக்கு அறிமுகப்படுத்த ஆரம்பித்தனர். புத்த பிக்குகளின் வாழ்வியல் நெறிகள், தோற்றம்,  கட்டுப்பாடுகள், சிந்தனை, பயிற்சிகள் ஆகியன உள்ளூர் மக்களை ஈர்த்து இப்புதிய பாதையில் தம்மையும் ஈடுபடுத்திக் கொள்ள ஆர்வத்தை ஏற்படுத்த புத்தம் இங்கு நிலையாக ஸ்தாபித்து வேறூன்றி பரவவும் ஆரம்பித்தது.


சாலையில் பூஜை பொருட்களை வாங்கும் புத்த பிக்குகள்


ஏறக்குறைய கி.மு 3ம் நூற்றாண்டு வாக்கில் தாய்லாந்துக்குப் புத்தம் வந்ததாக அறியமுடிகின்றது. புத்தம் இங்கு நிலையாகி, செழித்து வளர்ந்து மக்கள் வாழ்வில் முக்கிய அங்கம் பெற்று மக்களின் சமயமாக ஆகிப்போனது. ஆயினும் அக்கால புத்தமத வழிபாட்டு நிலையை விளக்கும் சான்றுகள் இன்றைக்கு அதிகம் கிடைக்கவில்லை. இன்று கிடைக்கும் சில பழமை வாய்ந்த சிற்பங்களும் எழுத்து ஆவணங்களும் திபேத்திய நிலைப்பகுதியிலிருந்து இங்கு வந்த புத்த பிக்குகள்.. அவர்கள் வழியாக இங்கு பரவிய பௌத்த சிந்தனை மரபை குறிப்பிடுவதாக உள்ளன. அத்தோடு இலங்கையிலிருந்து வந்த புத்த பிக்குகள் இங்கு, அதிலும் குறிப்பாக வட தாய்லாந்து பகுதிகளில் புத்த விகாரைகளை அமைத்தும் பள்ளிகள் அமைத்தும் இங்கு பாடம் நடத்தியமையும் இலங்கையிலிருந்து ஸ்தபதிகளை அழைத்து வந்து இங்கு இலங்கை கட்டுமான வடிவத்தில் புத்த விகாரைகளை அமைத்த செய்திகளையும் குறிப்பிடுவதாக அமைந்துள்ளன.

தாய்லாந்தில் மக்களின் வழக்கத்தில் இருக்கும் புத்தம் தனித்துவம் வாய்ந்ததாகவே எனக்குத் தெரிகின்றது. இது தேரவாத, மஹாயான புத்தத்தின் கலவையாகவும் அதே வேளை ஹிந்து தெய்வங்களைத் தெய்வீக வாழ்க்கையில் இணைத்துக் கொண்ட, இந்திய தேசத்தில் பரவியிருந்த காப்பியக் கதைகளை உள்வாங்கிய ஒரு சமயமாக தன்னைக் காட்டிக் கொள்கின்றது. தாந்திரீக  சடங்குகளின் நடைமுறைகளும் இந்த பௌத்தத்தில் இணைந்ததாகவும் இருக்கின்றது.  புத்தரின் வெவ்வேறு விதமான வடிவங்களை வைத்து வழிபடுவது, சடங்குகள் செய்வது, மந்திரங்கள் உச்சரிப்பது, கிரியைகளைச் செய்வது என இந்த பௌத்தம் நடைமுறையில் அமைந்திருக்கின்றது.


 புத்தமத பயிற்சியில் ஈடுபடும் இளஞ் சிறார்கள்


உலகின் பல நாடுகளில் பள்ளிப் படிப்பை முடித்த பிறகு ஒரு குறிப்பிட்ட காலகட்டம், அதாவது, ஓராண்டோ அல்லது ஈராண்டோ, அல்லது சில மாதங்களோ சமூக பணிகள் அல்லது படைகளில் சேர்ந்து பணியாற்றுவது என்ற ஒரு கோட்பாடு இருக்கின்றது. உதாரணமாக பள்ளிப் படிப்பை முடிக்கும் ஜெர்மானிய இளைஞர்கள் ஓராண்டு காலம் தம்மை படைகளில் பயிற்சி பெறுவதற்காகவோ அல்லது சமூகப் பணிகளிலோ ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.  அதன் பின்னர் பல்கலைக்கழக படிப்பு என்பதாக அமைகின்றது.

இதே போல ஒரு வழக்கம் தாய்லாந்தில் இருக்கின்றது. அதாவது ஒவ்வொரு ஆண்மகனும் மூன்றாண்டுகள் ஒரு பௌத்த பள்ளியில் தம்மை இணைத்துக் கொண்டு துறவறம் பூண்டு தீவிர பயிற்சிகளைப் பெற வேண்டும் இந்தப் பயிற்சியை அவர்கள் எந்த வயதிலும் மேற்கொள்ளலாம்.  ஆண்களுக்கு மட்டுமே இந்தக் கட்டுப்பாடு என்றாலும் இத்தகைய வகையில் பௌத்த பிக்குணிகளாக சில ஆண்டுகள் பயிற்சி மேற்கொள்ள விரும்பும் பெண்களும் இத்தகைய பணிகளில் ஈடுபடலாம்.

மூன்றாண்டு பயிற்சிகளுக்குப் பின்னர் அந்த ஆண்மகன் தொடர்ந்து புத்த பிக்குவாக இருந்து வரலாம். அல்லது அந்த பள்ளியிலிருந்து வெளியேறி சாதாரண நடைமுறை வாழ்க்கைக்கு திரும்பி வரலாம். கல்வியில் ஈடுபட்டோ, தொழிலில் ஈடுபட்டொ அல்லது அயல்நாடுகளுக்குச் சென்றோ.. எது வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளலாம்.  இந்த மாற்றத்தை ஒரு குறையாக தாய்லாந்து மக்கள் நினைப்பதுவும் கிடையாது. புத்த பள்ளியில் கற்ற கல்வி உலக அறிவை,  சமய தத்துவத்தை போதிக்கும் ஒரு பயிற்சி பெறும் கல்விக்காலம் என்றே தாய் மக்களால் இது காணப்படுகின்றது.


​தாய்லாந்து கடைகளில் கிடைக்கும் புத்த பிக்குகளின் பொம்மைகள்

மூன்று ஆண்குழந்தைகளுக்கு மேல்  ஒரு வீட்டில் இருந்தால் ஒரு குழந்தையையாவது புத்த பிக்குவாக ஆக்கிவிட தாய்லாந்து மக்கள் விரும்புவார்கள் என்று எங்களுக்கு பயண வழிகாட்டியாக வந்திருந்த பெண்மணி குறிப்பிட்டார். இதனைக் கேட்டு வியந்தேன்.

இந்த குறைந்த பட்ச மூன்றாண்டு கால புத்த மத சன்னியாச பயிற்சி என்பது அடிநிலை மக்களிலிருந்து நாட்டின் மன்னர் வரை வித்தியாசமின்றி ஒழுகப்படும் ஒரு கட்டுப்பாடு. எப்படி ஒரு சாதாரண குடிமகன் புத்த பிக்குவாக தன்னை அமைத்துக் கொண்டு நடைமுறைகளை ஒழுகி வருகின்றாரோ, அதே போல பொருளாதாரத்தில் உயர்ந்த நிலைய அடைந்த குடும்பத்தில் இருப்போராயினும் சரி, நாட்டின் மன்னராக இருந்தாலும் சரி,  இந்த நடைமுறையிலிருந்து வேறுபாடு கிடையாது.



மன்னர் பூமிபோல் புத்த பிக்குவாக பயிற்சி காலத்தில்

இன்றைய மன்னர் பூமீபோல் அவர்களும் புத்த பிக்குவாக ஒரு பள்ளியில் தம்மை இணைத்துக் கொண்டு இப்பயிற்சிகளை மேற்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. அரசாட்சியும் புத்த மதமும் இருவேறு அமசங்களாகப் பிரிக்க முடியாதவனவாகவே தாய்லாந்து மக்களால் காணப்படுகின்றது.

புத்தராக பரிமாணம் கொண்ட சித்தார்த்தனும் ஒரு அரச குடும்பத்தை சேர்ந்தவர் தானே என்ற எண்ணமும் இதனை யோசிக்கும் போது என் சிந்தனையில்  எழாமல் இல்லை!

தொடரும்...