Thursday, May 1, 2014

புத்தரின் பூமி....தாய்லாந்து! பயணத் தொடர் - 5

தாய்லாந்து பௌத்தம்

தாய்லாந்தின் ஏறக்குறைய 90% மக்கள் தொகையினரின் வழிபடு சமயம் பௌத்தம். அதிலும் குறிப்பாக தேரவாத பௌத்தம். இந்தியாவில் தோன்றிய புத்தம், நிலமார்க்கமாகவும் கடல் மார்க்கமாகவும் இங்கு வந்த பௌத்த பிக்குகளினால் இந்தப் பகுதியில் விரிந்து பரவ ஆரம்பித்தது.

தாய்லாந்து மட்டுமன்றி, பர்மா கம்போடியா, லாவோஸ், மலேசிய தீபகற்பம், இந்தோனிசிய தீவுகள் ஆகிய கிழக்காசிய நாடுகளில் பௌத்தமும் ஹிந்து சமயங்களும் பரவுவதற்கு முன்னர் இங்கு சிறு சிறு சமூகங்களின், பழங்குடி மக்களின் இயற்கை தெய்வ வழிபாடு என்பதே நடைமுறையில் வழக்கத்தில் இருது  வந்துது. தத்துவங்கள் சார்ந்த, வாழ்க்கைக்கு ஒரு நன்னெறி, சிந்தனைக்கு ஒரு வழிகாட்டி என்ற வகையிலான கருத்துக்களை முன்வைக்கும் ஒரு சமயம் என்பது இப்பகுதில் ஏற்பட்டிருக்கவில்லை. ஆக திடமான, தத்துவக் கருத்துக்களை அடிப்படையாக வைத்து, நெறிமுறைகளைக் கற்பிக்கும் ஒரு சமயம் என்பது இப்பகுதியில் அமைந்திருக்கவில்லை. உணவு, உடை, குடும்ப அமைப்பு என்ற அடிப்படையான தேவைகள், இயற்கையோடு இயைந்த வாழ்க்கையியல் தான் இங்கு வழக்கில் இருந்தது. இயற்கையின் பல்வேறு பரிமாணங்களே தெய்வங்களாக உருவகப்படுத்தப்பட்ட நிலையை உள்வாங்கி, மழை, காற்று. நிலம், இரவு, சூரியன் சந்திரன், புயல், வெள்ளம் என் இயற்கையைப் பார்த்து அதனோடு இணைந்த தங்கள் வாழ்க்கைத் தேவைகளுக்கு அந்த இயற்கையைத் தெய்வமாக வைத்து வழிபட்டு வந்த வாழ்க்கை என்ற நிலையோடு இப்பகுதிகளில் ஆரம்பகால சமய நிலைகள் இருந்தன. இவை சடங்குகளாகவும் புதுப் பரிமாணம் பெற்று ஆதி வாசி மக்களின் வாழ்க்கையில் இடம்பெறுவதை இன்றும் கூட மலேசிய காடுகளில் வாழும் மக்களின் வாழ்க்கையை அறிந்து கொள்ள முயற்சிக்கும் போது நாம் உணரலாம்.

இந்த நிலையிலிருந்தது தான் அக்கால  தாய்லாந்து சூழலும்.  இந்தியாவிலிருந்து  வணிக நோக்கத்துடன் வந்து சேர்ந்தவர்களும், சமயத்தை விரிவாக்க வந்த புத்த பிக்குகளும்  இங்கு நடைமுறையில் இருந்த சடங்குகளிலிருந்து மாறுபட்ட சமய நெறிமுறைகளை இங்கிருந்த மக்களுக்கு அறிமுகப்படுத்த ஆரம்பித்தனர். புத்த பிக்குகளின் வாழ்வியல் நெறிகள், தோற்றம்,  கட்டுப்பாடுகள், சிந்தனை, பயிற்சிகள் ஆகியன உள்ளூர் மக்களை ஈர்த்து இப்புதிய பாதையில் தம்மையும் ஈடுபடுத்திக் கொள்ள ஆர்வத்தை ஏற்படுத்த புத்தம் இங்கு நிலையாக ஸ்தாபித்து வேறூன்றி பரவவும் ஆரம்பித்தது.


சாலையில் பூஜை பொருட்களை வாங்கும் புத்த பிக்குகள்


ஏறக்குறைய கி.மு 3ம் நூற்றாண்டு வாக்கில் தாய்லாந்துக்குப் புத்தம் வந்ததாக அறியமுடிகின்றது. புத்தம் இங்கு நிலையாகி, செழித்து வளர்ந்து மக்கள் வாழ்வில் முக்கிய அங்கம் பெற்று மக்களின் சமயமாக ஆகிப்போனது. ஆயினும் அக்கால புத்தமத வழிபாட்டு நிலையை விளக்கும் சான்றுகள் இன்றைக்கு அதிகம் கிடைக்கவில்லை. இன்று கிடைக்கும் சில பழமை வாய்ந்த சிற்பங்களும் எழுத்து ஆவணங்களும் திபேத்திய நிலைப்பகுதியிலிருந்து இங்கு வந்த புத்த பிக்குகள்.. அவர்கள் வழியாக இங்கு பரவிய பௌத்த சிந்தனை மரபை குறிப்பிடுவதாக உள்ளன. அத்தோடு இலங்கையிலிருந்து வந்த புத்த பிக்குகள் இங்கு, அதிலும் குறிப்பாக வட தாய்லாந்து பகுதிகளில் புத்த விகாரைகளை அமைத்தும் பள்ளிகள் அமைத்தும் இங்கு பாடம் நடத்தியமையும் இலங்கையிலிருந்து ஸ்தபதிகளை அழைத்து வந்து இங்கு இலங்கை கட்டுமான வடிவத்தில் புத்த விகாரைகளை அமைத்த செய்திகளையும் குறிப்பிடுவதாக அமைந்துள்ளன.

தாய்லாந்தில் மக்களின் வழக்கத்தில் இருக்கும் புத்தம் தனித்துவம் வாய்ந்ததாகவே எனக்குத் தெரிகின்றது. இது தேரவாத, மஹாயான புத்தத்தின் கலவையாகவும் அதே வேளை ஹிந்து தெய்வங்களைத் தெய்வீக வாழ்க்கையில் இணைத்துக் கொண்ட, இந்திய தேசத்தில் பரவியிருந்த காப்பியக் கதைகளை உள்வாங்கிய ஒரு சமயமாக தன்னைக் காட்டிக் கொள்கின்றது. தாந்திரீக  சடங்குகளின் நடைமுறைகளும் இந்த பௌத்தத்தில் இணைந்ததாகவும் இருக்கின்றது.  புத்தரின் வெவ்வேறு விதமான வடிவங்களை வைத்து வழிபடுவது, சடங்குகள் செய்வது, மந்திரங்கள் உச்சரிப்பது, கிரியைகளைச் செய்வது என இந்த பௌத்தம் நடைமுறையில் அமைந்திருக்கின்றது.


 புத்தமத பயிற்சியில் ஈடுபடும் இளஞ் சிறார்கள்


உலகின் பல நாடுகளில் பள்ளிப் படிப்பை முடித்த பிறகு ஒரு குறிப்பிட்ட காலகட்டம், அதாவது, ஓராண்டோ அல்லது ஈராண்டோ, அல்லது சில மாதங்களோ சமூக பணிகள் அல்லது படைகளில் சேர்ந்து பணியாற்றுவது என்ற ஒரு கோட்பாடு இருக்கின்றது. உதாரணமாக பள்ளிப் படிப்பை முடிக்கும் ஜெர்மானிய இளைஞர்கள் ஓராண்டு காலம் தம்மை படைகளில் பயிற்சி பெறுவதற்காகவோ அல்லது சமூகப் பணிகளிலோ ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.  அதன் பின்னர் பல்கலைக்கழக படிப்பு என்பதாக அமைகின்றது.

இதே போல ஒரு வழக்கம் தாய்லாந்தில் இருக்கின்றது. அதாவது ஒவ்வொரு ஆண்மகனும் மூன்றாண்டுகள் ஒரு பௌத்த பள்ளியில் தம்மை இணைத்துக் கொண்டு துறவறம் பூண்டு தீவிர பயிற்சிகளைப் பெற வேண்டும் இந்தப் பயிற்சியை அவர்கள் எந்த வயதிலும் மேற்கொள்ளலாம்.  ஆண்களுக்கு மட்டுமே இந்தக் கட்டுப்பாடு என்றாலும் இத்தகைய வகையில் பௌத்த பிக்குணிகளாக சில ஆண்டுகள் பயிற்சி மேற்கொள்ள விரும்பும் பெண்களும் இத்தகைய பணிகளில் ஈடுபடலாம்.

மூன்றாண்டு பயிற்சிகளுக்குப் பின்னர் அந்த ஆண்மகன் தொடர்ந்து புத்த பிக்குவாக இருந்து வரலாம். அல்லது அந்த பள்ளியிலிருந்து வெளியேறி சாதாரண நடைமுறை வாழ்க்கைக்கு திரும்பி வரலாம். கல்வியில் ஈடுபட்டோ, தொழிலில் ஈடுபட்டொ அல்லது அயல்நாடுகளுக்குச் சென்றோ.. எது வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளலாம்.  இந்த மாற்றத்தை ஒரு குறையாக தாய்லாந்து மக்கள் நினைப்பதுவும் கிடையாது. புத்த பள்ளியில் கற்ற கல்வி உலக அறிவை,  சமய தத்துவத்தை போதிக்கும் ஒரு பயிற்சி பெறும் கல்விக்காலம் என்றே தாய் மக்களால் இது காணப்படுகின்றது.


​தாய்லாந்து கடைகளில் கிடைக்கும் புத்த பிக்குகளின் பொம்மைகள்

மூன்று ஆண்குழந்தைகளுக்கு மேல்  ஒரு வீட்டில் இருந்தால் ஒரு குழந்தையையாவது புத்த பிக்குவாக ஆக்கிவிட தாய்லாந்து மக்கள் விரும்புவார்கள் என்று எங்களுக்கு பயண வழிகாட்டியாக வந்திருந்த பெண்மணி குறிப்பிட்டார். இதனைக் கேட்டு வியந்தேன்.

இந்த குறைந்த பட்ச மூன்றாண்டு கால புத்த மத சன்னியாச பயிற்சி என்பது அடிநிலை மக்களிலிருந்து நாட்டின் மன்னர் வரை வித்தியாசமின்றி ஒழுகப்படும் ஒரு கட்டுப்பாடு. எப்படி ஒரு சாதாரண குடிமகன் புத்த பிக்குவாக தன்னை அமைத்துக் கொண்டு நடைமுறைகளை ஒழுகி வருகின்றாரோ, அதே போல பொருளாதாரத்தில் உயர்ந்த நிலைய அடைந்த குடும்பத்தில் இருப்போராயினும் சரி, நாட்டின் மன்னராக இருந்தாலும் சரி,  இந்த நடைமுறையிலிருந்து வேறுபாடு கிடையாது.மன்னர் பூமிபோல் புத்த பிக்குவாக பயிற்சி காலத்தில்

இன்றைய மன்னர் பூமீபோல் அவர்களும் புத்த பிக்குவாக ஒரு பள்ளியில் தம்மை இணைத்துக் கொண்டு இப்பயிற்சிகளை மேற்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. அரசாட்சியும் புத்த மதமும் இருவேறு அமசங்களாகப் பிரிக்க முடியாதவனவாகவே தாய்லாந்து மக்களால் காணப்படுகின்றது.

புத்தராக பரிமாணம் கொண்ட சித்தார்த்தனும் ஒரு அரச குடும்பத்தை சேர்ந்தவர் தானே என்ற எண்ணமும் இதனை யோசிக்கும் போது என் சிந்தனையில்  எழாமல் இல்லை!

தொடரும்...

2 comments:

Kalairajan Krishnan said...

நல்லதொரு பதிவு. நன்றி.

Ranjani Narayanan said...

பள்ளிப்படிப்பு முடிந்த பின் படைபயிற்சியில் ஈடுபடுவது கேள்விப்பட்ட ஒன்று. இங்கு நீங்கள் எழுதியிருக்கும் புத்த பிக்குவாக பயிற்சி என்பது ஒரு வியப்பான செய்தியாக இருக்கிறது. இதில் அரச குடும்பத்தினரும் விதிவிலக்கு அல்ல என்பது நல்ல செய்தியே!

Post a Comment