Wednesday, January 30, 2013

பனியாகிக் கரைந்த கணங்களிலே....! - ஆஸ்திரியா *ரோய்ட்ட - 6


மீண்டும் பனியில் பயணம்

சென்ற பதிவில் ஆஸ்திரிய கிராமங்களில் உள்ள தேவாலயங்கள், சிறு கோயில்கள் பற்றி குறிப்பிட்டிருந்தேன். வேறு சில தகவல்களுக்குச் செல்வதற்கு முன்னர் இரண்டாம் நாள் விளையாட்டு அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கின்றேன்.

28.12.2012 

முதல் நாள் க்ரோஸ் கண்ட்ரீ வாக்கிங்   Tannheimertal பகுதியில் அமைந்தது. Tannheimertal பகுதி ஸ்கீயிங் விளையாட்டிற்கு உகந்த ஓர் இடம் என்றாலும் க்ரோஸ் கண்ட்ரீ ஸ்கீயிங் விளையாட்டில் இன்னமும் ஆரம்ப நிலையில் இருக்கும் என்னைப் போன்றவர்களுக்குச் சற்று சிரமமான மலைப்பகுதி என்றே சொல்ல வேண்டும். இதற்கு பதிலாக Tannheimertal  பள்ளத்தாக்குப் பகுதிக்கு 5 கிமீட்டர் முன்னதாக அமைந்துள்ள Wesselwaengle  கிராமம் எனக்கு உகந்ததாக இருக்கும் என்று மனதில் தோன்றியது. இதற்குக் காரணம் இங்கே பணி கொட்டிக் கிடக்கும் திடலானது மிகப் பரந்தும், இடைவெளியில்லாமலும், அதே சமயம் அதிக மேடுகளும் பள்ளங்களும் இல்லாமல் இருந்தமையே.




அதனால் முதல் நாள் அனுபவத்தை மனதில் நினைத்துக் கொண்டு மறு நாள் Wesselwaengle  கிராமத்திற்குச் செல்லலாம் என முடிவெடுத்தேன். இங்கேயும் சிறியவர்களும் பெரியவர்களும் பயிற்சி செய்ய மிக நல்ல வாய்ப்பு அமைந்திருந்தது. நான் குறைந்தது 2 மணி நேரமாவது இன்று பயணிக்க வேண்டும் என்று மனதில் நினைத்துக் கொண்டேன். சீராக அமைக்கப்பட்ட ஒரு பனிப்பாதையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டேன். அதில் பயணித்துக் கொண்டே பனியின் அழகு அங்கொன்றும் இங்கொன்றுமாக நிற்கும் ஊசி இலை மரங்களையும் குடில்களையும்  ரசித்துக் கொண்டும், திடீரென்று கண் முன்னே தோன்றும் நாய் சறுக்கல் வண்டியைப் பார்த்து வியந்து கொண்டும் மெதுவாகவே என் பயணத்தைத் தொடங்கினேன்.




எனக்குப் பின்னால் வந்த சிலர் கூட என்னத் தாண்டி வேகமாகச் சென்று விட்டனர். ஆனால் நான் நிதானமாக எனக்கு எவ்வளவு முடியுமோ அந்த வேகத்தில் பயணித்தால் போதும் என்று முடிவெடுத்துக் கொண்டு பணியில் சறுக்கி சறுக்கி நடை பயணம் செய்தேன்.

நான் தேர்ந்தெடுத்த பாதை 12 கிமீ தூரம் உடையது. ஒவ்வொரு 2 கி.மீ தூரத்திலும் சிறு பலகையில் எவ்வளவு தூரம் தாண்டி வந்துள்ளோம் என்ற குறிப்பு இருப்பதால் அவ்வப்போது 2 கி.மீ தூரம் முடியும் போது மனதில் ஒரு பெருமிதம் தோன்றும். ஏறக்குறைய 9 கி.மீ தூரம் வந்ததும் மிகவும் அலுத்து விட்டது. ஆனாலும் நிறுத்தப்போவதில்லை என்று மனதில் முடிவு செய்து கொண்டேன். சிறு ஓய்வுக்காக ஒரு குடிலுக்குச் சென்று 10 நிமிடங்கள் இருந்து தேனீர் அருந்தி விட்டு மீண்டும் பயணத்தை தொடங்கினேன்.


ஸ்கீயில் பொறுத்தப்பட்ட காலணியுடன்

சில வேளைகளில் அந்த நீண்டு பரந்து விரிந்த பனி போர்த்திய திடலில் நான் மட்டுமே தனியாக இருப்பதை உணர்வேன்.  மலைகளின் இடையே.. பனி நிறைந்த பள்ளத்தாக்கில் நான் மட்டும். அந்த வேளையில் என மனம் முழுமைக்கும் அமைந்தியும் ஆனந்தமும் நிறைந்திருந்ததை உணர்ந்தேன்.



ஏறக்குறைய மூன்றே முக்கால் மணி நேரத்திற்குப் பின்னர் நான் ஆரம்பித்த பகுதியை வந்தடைந்தேன். சரியாக 12 கி.மீ தூரத்தை இந்த  நாளில் முடித்திருந்தேன். இது மனதிற்கு மகிழ்ச்சி தருவதாக இருந்தது; ஆனால் உடலுக்கு அல்ல. பனியோடு பனியாகி கரைந்திருந்த என் மனத்தோடு அந்தக் குளிரிலும் என் உடல் முழுக்க வியர்வையால் நனைந்து போயிருந்தது.


தொடரும்...

சுபா

Sunday, January 27, 2013

பனியாகிக் கரைந்த கணங்களிலே....! - ஆஸ்திரியா *ரோய்ட்ட - 5


கோயிலும் இங்குண்டே..!

ஆஸ்திரியாவைப் பற்றி எழுதி வரும் போது, இன்றைய நாளில் ஆஸ்திரியாவில் பிறந்த ஒரு உலகப்புகழ் மிக்க ஒரு கலைஞரைப் பற்றி குறிப்பிடுவது மிகத் தகும் இல்லையா? மோஸார்ட் எனப் பரவலாக அழைக்கப்படும் Wolfgang Amadeus Mozart பிறந்த தினம் இன்று. இன்றைய தேதியில் 1756ம் ஆண்டு பிறந்தவர். இவரது புகழை பலரும் அறிவோம். ஆஸ்திரியாவின் சால்ஸ்புர்க் மானிலத்தில் பிறந்தவர். வாய்ப்பு அமைந்தால் ஒரு தனிப்பதிவிவ்ல் இவரைப் பற்றி குறிப்பிடுகின்றேன்.

சரி.. இன்றைக்கு கோயில்களைப் பற்றி குறிப்பிடலாம் என நினைக்கின்றேன்.

கோயிலில்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற நன்மொழி நம் வழக்கில் உள்ளது. இது தமிழ் தேசத்திற்கு மட்டும்  பொருந்திய உண்மையா என்றால் இல்லை என்பதாகவே அமைகின்றது எனது பயண அனுபவங்கள். உலகில் தோன்றியுள்ள அனைத்து சமூகத்திலும் இறை நம்பிக்கை எனும் ஒன்று அடிப்படையில் மனதில் அமைந்திருக்கின்ற ஒரு பண்பாக இருக்கின்றது. எங்கெல்லாம் மனித சமூகம் இருக்கின்றதோ அங்கெல்லாம் அவரவர் மத வழிபாட்டிற்குத் தேவைப்படும் கோயில்களுக்குக் குறைச்சல் இல்லை என்பதை எனது பல விரிவான அயல் நாட்டுப் பயணங்களில் பார்த்து குறித்து வைத்துள்ளேன்.

கிராமத்து சாலையோரத்துக் கோயில்

அந்த வகையில் ஜெர்மனியின் பவேரிய மானிலமாகட்டும், அதன் தொடர்ச்சியாக அமைந்த நிலப்பரப்பில் அடங்கியுள்ள ஆஸ்திரியாவாகட்டும், எல்லா பெரிய நகரங்களிலும் சரி, சிற்றூர்களிலும் சரி தேவாலயங்களைக் காணலாம்.

எங்கள் தங்கும் விடுதி Hotel Talhof  இருந்த இடம் Wangle என்ற கிராமம். நாங்கள் தங்கியிருந்த கிராமத்தின் மிகப் பெரிய நகர் என்றால் அது ரோய்ட்ட நகர் தான். இதன்  அருகாமையில் அமைந்த சிறு நகரங்களாக Breitenwang, Ehenbichl, Pflach, Hoefen, Weissenbach ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.  இந்த சிறு நகரங்களில் பல சிறு கிராமங்கள் அடங்கியிருக்கின்றன.

ரோய்ட்ட நகர் Wangle கிராமத்திலிருந்து 5 கிமீட்டர் தூரத்தில் இருக்கின்றது. இங்கு ஒரு நாள் நடைப்பயணம் சென்று வந்த போது வேங்க்லெ கிராமம் அதனையடுத்து வரும் லேஹெஷவ் கிராமங்களை நன்கு பார்த்து ரசிக்க முடிந்தது. ரோய்ட்ட நகரில் 13ம் நூற்றாண்டு தேவாலயம் ஒன்றும் மேலும் சில பழமை வாய்ந்த தேவாலயங்களும் இருக்கின்றன. அவை இன்றும் புணரமைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு நல்ல நிலையில் அமைந்திருக்கின்றன.


ரோய்ட்ட நகரில் அமைந்துள்ள தேவாலயம்

லேஹெஷவ் கிராமத்திலும் ஒரு பெரிய  தேவாலயம் இருக்கின்றது. 5 கிமீட்டர் தூரத்திற்குள்ளேயே ஒன்றிற்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் தேவாலயங்கள் எனப் பார்க்கும் போது தேவாலயங்கள் இங்குள்ள மக்களின் அன்றாட வாழ்க்கையில் கொண்டிருக்கும் முக்கியத்துவத்தை உணர முடிகின்றது.

வாங்க்லே கிராமத்து எல்லைச்சாமி கோயில்

இந்தப் பெரிய தேவலாயங்களை விட என்னை வெகுவாகக் கவர்ந்தவை சாலை ஓரங்களில் அமைந்திருக்கின்ற சிறு கோயில்கள். தமிழகத்தில் காணக்கூடிய எல்லைச்சாமி கோயில், கிராம தேவதைகள் கோயில் போல இவை இருக்கின்றன. ஒரு கிராமம் ஆரம்பிக்கின்ற எல்லையின் ஆரம்பத்தில் பொதுவாக இவ்வகை சிறு எல்லைச்சாமி தேவாலயங்கள் இருக்கின்றன. சில இடங்களில் கிராமங்களின் மத்தியிலும் கூட இவை அமைந்திருக்கின்றன. ஒரு கிராமத்திற்கு ஒரு சிறு கோயில்தான் என்ற கணக்கு இல்லாத வகையில் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கூட சில தென்படுகின்றன.


மற்றொரு சாலையோரத்து கோயில் முகப்பு

பொதுவாக இவ்வகை எல்லைச்சாமி கிராம தெய்வ கோயில்களில் வழிபாட்டிற்கு அமைந்திருப்பது சிலுவையில் சார்த்தப்பட்ட ஏசுவின் உருவமாகவோ அல்லது மேரி மாதா கையில் குழந்தையைக் வைத்திருப்பது போன்ற சிலையாகவோ அமைந்திருக்கின்றது. அதிலும் பார்க்கையில் ஏசுவின் சிலைகள் தான்  மிக அதிகமாக பல சிற்றூர்களில் காணக்கூடியதாக அமைந்திருக்கின்றன. தெய்வ நம்பிக்கை எனும் ஒரு விஷயம் ஆசிய  நாடுகள் மட்டுமன்றி ஐரோப்பாவிலும் கூட கிராம மக்களின் வாழ்க்கையில் பிரிக்கமுடியாத ஒரு அங்கத்தை வகிக்கின்றது என்பது உண்மை!

தொடரும்....

சுபா

Thursday, January 24, 2013

பனியாகிக் கரைந்த கணங்களிலே....! - ஆஸ்திரியா *ரோய்ட்ட - 4


வந்த வேலையைப் பார்ப்போமா??

27.12.2012

ரோய்ட்ட பற்றியும் சொல்லியாயிற்று, உணவு பற்றியும் கொஞ்சம் சொல்லியாயிற்று. சரி.. வந்த வேலையைக் கண்ணும் கருத்துமாக கவனிக்க வேண்டாமா? :-)

எங்கள் க்ரோஸ் கண்ட்ரீ வாக்கிங் உடைகளை அணிந்து கொண்டு அதற்குத் தேவையான காலணி, ஸ்கீ ஆகியவற்றையும் எடுத்துக் கொண்டு கிளம்பினோம். எங்கள் தங்கும் விடுதி இருந்த இடத்திலேயே பெரிய பனித்திடல். அதிலே இவ்விளையாட்டிற்கென்று தேவைப்படும் இரண்டு கோடுகள் போன்று அமைந்த பாதையை அமைத்து வைத்திருந்தார்கள். ஆனால் அப்பகுதி சற்று மலையும் மேடுமாக அமைந்திருக்க எனக்கு கொஞ்சம் அசௌகரியமாக இருந்தது. முதல் நாள் சற்று சம தரையான பகுதியில் செல்வது விளையாட்டை ஒரு வருடத்திற்குப் பிறகு மீண்டும் தொடங்குவதற்குச் சற்று நம்பிக்கை தருவதாக அமையும் என்று நினைத்தேன்.  பீட்டருக்கு இதில் பிரச்சனையில்லை. சிறு வயது முடல் இவ்விளையாட்டைப் பழகியவர் என்பதால் எந்த  மாதிரியான இடங்களிலும் விளையாட்டைத் தொடங்கி விடலாம். ஆக எனக்கு உகந்ததாக ஒரு இடம் தேடிச் செல்வோம் என நினைத்து வாகனத்தை எடுத்துக் கொண்டு புறப்பட்டோம்.


பலகையில் .. இறைவனை வணங்கி Tannheimertal உங்களை வரவேற்கின்றது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அருகாமையிலுள்ள பனி நிறைந்த பகுதிகளைப் பற்றியும் கொஞ்சம் முதல் நாளே நாங்கள் விசாரித்து வைத்திருந்தோம். அதனால் ரோய்ட்ட நகரிலிருந்து 13 கிமீ தூரத்தில் உள்ள Tannheimertal  என்ற பகுதிக்குச் செல்வது நல்ல முடிவாக இருக்கும் என்று இருவருக்கும் தோன்றியது.

இறுதியாக 2011 டிசம்பர் க்ரோஸ் கண்ட்ரீ வாக்கிங் போன அனுபவம் என்பதால் முதலில் மனதிற்குள் சிறு நடுக்கம் இல்லாமல் இல்லை. அதிலும் குறிப்பாக ஸ்கீ வழுக்கி ஓட ஆரம்பித்தால் வேகம் ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தும்.  ஆனாலும் சென்ற ஆண்டின் பயிற்சியின் அனுபவத்தை மறக்காததால் ஓரளவிற்குத் தொடர்ந்து பயணிக்க முடிந்தது.  நான் ஏறக்குறைய சமதரை சிறு மேடுகள் சிறு பள்ளங்கள் போன்ற பாதையிலேயே பயணித்து சென்று கொண்டிருந்தேன். ஏறக்குறைய 4 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்ததும் இன்றைக்கு இது போதும் என்று மனதில் தோன்றியது. பனியிலும் இந்தப் பயணத்தைல் வேர்வையால் நனைந்து கரைந்திருந்தேன்.


க்ரோஸ் கண்ட்ரீ வாக்கிங் ஸ்கீ

அலுத்துப் போய் வரும் போது அந்த அலுப்பை போக்கவும், குளிருக்கு இதமாக இருக்கவும் தேனீர் சாப்பிடுவது மிகப் பொறுத்தமாக இருக்கும் என நினைத்து அங்கு அருகாமையில் இருந்த ஒரு ரெஸ்டாரண்டில் நுழைந்து அமர்ந்தேன். அதற்குள் பீட்டரும் தனது பயணம் முடித்து விட்டு வந்து சேர இருவரும் மூலிகை தேனீர் வாங்கிக் கொண்டோம்.  முதல் நாள் சாதனையே பெரிதாயிற்றே! கொண்டாட வேண்டாமா நான்? அன்றைய தினத்தின் பெருமிதமான இந்த  சாதனைக்காக எனக்குப் பிடித்த கைஸர்ஸ்மார்ன் இனிப்பு வகை உணவை ஆர்டர் செய்து சாப்பிட்டு மகிழ்ந்தேன்.

இன்றைய நாளின் சிறப்பு என்னவென்றால், எந்த நிலையிலும் நான் பனியில் சறுக்கி கீழே விழவில்லை.

முதன் முதலில் க்ரோஸ் கண்ட்ரி  ஸ்கீயிங் செய்த அனுபவத்தை நினைத்துப் பார்த்தால் சிரிப்புத் தான் வருகின்றது. ஒவ்வொரு 2 நிமிடத்திற்கும் ஒரு முறை என்று கீழே விழுந்து விடுவேன். கடந்த  6 ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் சில நாட்கள் பயிற்சி என்ற வகையில் கீழே விழும் நிலை குறைந்து ஸ்கீ போர்டில் உறுதியாக நிற்கும் தைரியமும் நிதானமும் வந்திருந்தமைக் கண்டு எனக்கே ஆச்சரியம் தான்.

இந்த முதல் நாளில் 4 கி.மீ. தூரம் செல்ல ஏறக்குறைய 90 நிமிடங்கள் எடுத்துக் கொண்டேன். இது எனக்கு திருப்தியளிக்கவில்லை என்பது உண்மை. ஆனாலும் முதல் நாள் தானே என்று ஒரு சமாதானம் செய்து கொண்டேன் :-)
 

Tannheimertal

Tannheimertal ரோய்ட்ட நகரின் பிரசித்தி பெற்ற ஒரு ஸ்கீ விளையாட்டு மையமும் கூட. இங்கே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வந்து பயிற்சி எடுத்துக் கொள்வதும் விளையாட்டுக்காக வருவதும் என்று மக்கள் கூட்டம் நிறைந்ததாக அமைந்திருந்தது. இந்த நகரைப் பற்றி தெரிந்து கொள்ள விரும்புபவர்கள்  இணையத்தில் இந்த  ஊரின் பெயரைத் தட்டச்சு செய்து வாசித்துப் பார்க்கலாம். அருகாமையில் உள்ள பல நாடுகளிலிருந்து  இங்கே சுற்றுலா பயணிகள் வந்து நிறைந்து விடுகின்றனர். வாகனங்களின் எண் பலகையைப் பார்த்தாலே எந்த நாட்டிலிருந்து வந்துள்ளார்கள் என்பதனை அறிந்து கொள்ள முடிந்தது.


தொடரும்.....

சுபா

Wednesday, January 23, 2013

பனியாகிக் கரைந்த கணங்களிலே....! - ஆஸ்திரியா *ரோய்ட்ட - 3


என்ன சாப்பிடலாம்??

பனி மனிதன்

ஆஸ்திரியாவில் இயற்கை என்னைக் கவர்வதைப் போலவே இங்கு கிடைக்கும் ஆஸ்திரிய உணவு வகைகளும் எனக்கு மிகப் பிடித்தமானவையே. அதிலும் குறிப்பாக இனிப்பு வகைகள்.

ஆஸ்திரியாவை நினைத்தாலே ஒரு சில உணவுகள் மனக்கண்முன் வந்து நின்று அழகு காட்டும். அவை:

  • kaiserschmarrn - கைஸர்ஸ்மான் - இதனை அப்படியே மொழி பெயர்த்தால் பேரரசரின் முட்டாள்தனம் என்பதாக வரும். இது என்ன பெயர் என  யோசிக்கலாம். ஆனாலும் பேரரசர் சாப்பிடும் சிறப்பு உணவாக இது 18ம் நூற்ராண்டு வாக்கில் இருந்திருக்கின்றது. சுவை.. ம்ம்ம்ம் ஒரு முறை சாப்பிட்டவர்கள் மனம் மறுமுறை சாப்பிட நிச்சயம் விரும்பும். 
  • Apfelstrudel - ஆப்ஃபல் ஸ்ட்ரூடல் (ஒரு வகையான ஆப்பிள் பை என்ச் சொல்லலாம்)
  • Germknödel - கெர்ம்க்னோடல் - பார்க்க இட்லி போன்ற வடிவத்தில் இருக்கும். ஆனால்  இனிப்பு கலந்து செய்யபப்டுவது.


கைஸர்ஸ்மான் - தொட்டுக்கொள்ள ஆப்பிள் சாஸ்

இதில் ஆப்ஃபல் ஸ்ட்ரூடலும், கெர்ம்க்னோடலும் வெனிலா சாஸில் மிதக்க வேண்டும். இதன் சுவை அபாரம். மேலே நான் குறிப்பிட்டுள்ள மூன்றும் தவிர்த்த மேலும் பல ஆஸ்திரிய உணவு வகைகள் இங்கே சுற்றுப் பயணிகளைக் கவர்ந்தாலும் என் மனதில் சாப்பிட ஆசையை ஏற்படுத்துவது இந்த மூன்றும் தான்.

எங்கள் தங்கும் விடுதியில் காலை உணவும் மாலை உணவும் நாங்கள் பதிவு செய்திருந்த பேக்கேஜில் சேர்ந்திருந்தமையால் காலை உணவு புஃவே வகையாகவும் மாலை உணவு நான்கு கோர்ஸ் மெனு அடங்கிய உணவாகவும் அமைத்திருந்தார்கள். உணவு ஏற்பாடு மிகச் சிறப்பாக அமைந்து நான் எந்த குற்றம் குறையும் சொல்ல முடியாத வகையில் அமைந்ததும் இந்தப் பயணத்தை எனக்கு மகிழ்ச்சியளிப்பதாக அமைத்திருந்தது என்பது உண்மை.

காலை உணவில் ஜெர்மானிய ஆஸ்திரிய வாகை ப்ரவூன் ப்ரெட் (ஹோல் மீல் ப்ரெட்), விதம் விதமான ரொட்டி, க்ரொஸோன் வகைகள், காய் கறிகள், பழங்கள், காபி டீ வகைகள் அமைந்திருந்தன. கொடுப்பதை சாப்பிட்டுத்தான் ஆக வேண்டும் என்பதை விட மனதிற்குப் பிடித்த உணவை நானே தேர்ந்தெடுத்து சாப்பிடும் போது அது தனிதிருப்திதான்.

மாலை உணவோ நான்கு கோர்ஸ் மெனு. அதாவது முதல் சுற்றில்  சூப், இரண்டாவது சுற்றில் சாலட் வகைகள், மூன்றாவதாக மெயின் டிஷ் இறுதியில் இனிப்பு வகை என நான்கு வகைகளாக அமைத்திருந்தனர். அதில் சூப் சாலட் இரண்டும் சைவ உணவாக வைத்து விட்டு மெயின் டிஷ் வகைகளை மூன்று வகைகளாக  தினமும் அமைத்திருந்தனர். முதல் வகை மாட்டிரைச்சி அல்லது பன்றியிரைச்சி உணவு, இரண்டாவது வகை கோழி, வான்கோழி அல்லது மீன் வகை, மூன்றாவது சைவ உணவு.  ஒவ்வொரு நாளும் முதல் நாள் மாலை நமக்கு ஒரு பட்டியல் தரப்படும். அதில் எந்த வகை உணவு வேண்டும் என்று நாம் குறித்துக் கொடுத்து விட மறு நாள் மாலை நமது தேர்வுக்கேற்ப ஒன்றாம் வகையா இரண்டாம் வகையா மூன்றாம் வகையா என பார்த்து நமக்கு உணவு வழங்கப்படும்.

ஒவ்வொரு நாளும் உணவில் மாற்றங்கள் செய்து மிகக் க்ரியேட்டிவாக மாலை உணவை அமைத்திருந்த பாங்கை பாராட்டாமல் இருக்க முடியாது.  சுற்றுலா பயணிகளுக்கு உணவும் திருப்தியளிப்பதாக அமைந்திருக்க வேண்டும் என்பதில் அக்கறை எடுத்துக் கொண்ட இந்த தங்கும் விடுதி உரிமையாளர்களைப் பாராட்டியது என் மனம். அதில் மேலும் என் மனதை கவர்வதாக இன்னொன்றும் அமைந்தது. தங்கும் விடுதியின் உரிமையாளர்களில் ஒருவர் -  ஒரு பெண்மனி தினமும் மாலை உணவின் போது எங்கள் ஒவ்வொருவர் மேஜைக்கு அருகிலும் வந்து அன்றைய நாள் சிறப்பாக அமைந்ததா?  எங்கள் பனி விளையாட்டு அனுபவம் எப்படி அமைந்தது?  உணவு திருப்தியாக அமைந்ததா எனக் கேட்டுச் செல்வார். அவரது அழகான சிரித்த முகம் விருந்தினர்களை கவராமல் இருக்காது.

Tuesday, January 22, 2013

பனியாகிக் கரைந்த கணங்களிலே....! - ஆஸ்திரியா *ரோய்ட்ட - 2


இந்த ஊரை தெரிந்து கொள்வோமா?

பனிக்கால விடுமுறையில் அமைந்த எங்கள் அனுபவங்களை நான் இங்கு பகிர்ந்து கொள்ளும் அதே வேளையில் இந்த ஊரைப் பற்றியும் கொஞ்சம் சொல்வதும் வாசிப்பவர்களுக்குச் சுவாரசியமான புதிய தகவல்களை வழங்குவதாக அமையும் என நினைக்கின்றேன்.

ஆஸ்திரியா என்ற பெயரைக் கேட்டால் பலருக்கு உடனே ஞாபகம் வருவது அடோல்வ் ஹிட்லெர் தான்! இவர் இன்றைய ஜெர்மனியை ஒட்டியிருக்கும் ஆஸ்திரியாவின் வடக்கு பகுதி நகரான ரான்ஸ்ஹோவனில்  (Ranshofen) பிறந்திருந்தாலும் பரந்த ஜெர்மனி முழுவதையும் ஆரிய நாடாக மாற்றி அமைக்க கனவு கண்டு ஜெர்மனியில் சில காலம் ஆட்சி செய்து மாண்டார் என்பது பலரும் அறிந்ததே. அவர் கதை இங்கே நமக்கெதற்கு? :-)

என்னைக் கேட்டால் ஆஸ்திரியா என்றால் இயற்கை அழகு என்று நான் சொல்வேன். இயற்கை அழகை வருடத்தின் நான்கு பருவங்களிலும் விதம் விதமாக்கிக் காட்டும் அற்புத நாடு ஆஸ்திரியா. மலைகளும், ஏரிகளும், வனங்களும் நிரம்பிய பசுமையான நாடு. சுற்றுலாத்துறை இந்தநாட்டின் வருமானத்திற்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை மறுக்க முடியாது.  ஆஸ்திரியா உலகின் மிகப் பணக்கார நாடுகளில் ஒன்றும் கூட.



அலுவலக விஷயமாக சில முறையும் விடுமுறைக்காக என  மூன்று முறையும் ஆஸ்திரியாவின் சில வேறு இடங்கள் பயணித்திருக்கின்றேன். ஒவ்வொரு இடமும் என் மனதைப் பார்த்த உடன் கொள்ளை கொள்பவை.

ஓங்கி உயர்ந்து வளர்ந்து காட்சி தரும் பைன் மரங்களும் ஊசி இலை மரங்களும், அவற்றை தாங்கி பிரமாண்டமாக நிற்கும் மலைகள், பனித்தூறலைத் தாங்கி நிற்கும் மலைச் சிகரங்கள் அனைத்துமே அழகின் உறைவிடங்கள்.

அதில் இந்த எங்கள் பயணத்தில் நாங்கள்  இருந்த  சிறு நகரின் பெயர் ரோய்ட்ட (Reutte). இந்த நகரம் இருக்கும் பகுதி அரசால் பராமரிக்கப்படும் இயற்கை பாதுகாப்பு இடமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள இயற்கை பாதுகாப்புப் பகுதியும் கூட.

நகரைப் பற்றி சுற்றுலா துறையினர் தயாரித்துக் கொடுத்திருந்த அறிக்கையைத் தங்கும் விடுதியினர் கொடுத்திருந்தனர். அதனை வாசித்ததில் ரோய்ட்ட என்ற இந்த நகரம் முதன் முதலில் அரசாங்க அறிக்கையில் 1278ம் ஆண்டில் பதிவாக்கப்பட்ட செய்தியை அறிந்துகொண்டேன்.  பழமையான நகரம் தான் இது.

மேலும் இந்த நகரம் பற்றி அறிந்து கொள்ள முயன்ற பொது ஆரம்பத்தில் இந்த நகரத்தின் பெயர் ரோய்ட்ட என்று அமைந்திருக்கவில்லை என்பது தெரிய வந்தது. 1278ம் ஆண்டில் ருதி (Ruthi) என்று வழங்கப்பட்ட இந்த நகரம் 1440 வாக்கில்  Rythy  என்றும்,  பின்னர் 18ம் நூற்றாண்டு வாக்கில் Reitti என்றும் வழக்கில் மாறி மாறி தற்சமயம் Reutte என்றும் மாற்றம் கண்ட வரலாற்றினைத் தெரிந்து கொள்ள முடிந்தது. ஊர்களின் பெயர் மாற்றம் காலத்துக்குக் காலம் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றம் காண்பது நடைமுறையில் சாத்தியம் தான் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம் தானே!

ரோய்ட்ட அமைந்திருக்கும் இடம் இதன் முக்கியத்திவத்தைச் சிறப்பிப்பதாகதாக அமைந்திருக்கின்றது என்று சொன்னால் மிகையில்லை. ஜெர்மனி நாட்டு எல்லையில் இருப்பது மற்றும் ஏனைய பிற ஐரோப்பிய நாடுகளான ஹங்கேரி, ப்ரான்ஸ், சுவிஸர்லாந்து இத்தாலி ஆகிய நாடுகளுக்குச் செல்வதற்கும்  அதிக தூரம் இல்லையென்பதும் கூட இதற்கு ஒரு தனிச் சிறப்பு. ரோய்ட்ட ஆஸ்திரியாவில் சுற்றுலாவிற்கு பெயர் பெற்ற டிரோல் மானிலத்தின் எல்லை நகரம் என்பது இவை எல்லாவற்றிற்கும் மேலான தனிச் சிறப்பு. ஆஸ்திரியாவின் இரண்டு மிகப் பெரிய சுற்றுலா பகுதிகள் என்றால் அவை டிரோலும் சால்ஸ்பெர்க்கும் தான்.



ஆக ரோய்ட்ட, டிரோல் மானிலத்தின் வட பகுதியில் எல்லை நகராக அமைந்து ஆஸ்திரியாவின் டிரோலுக்கு  வருகின்ற சுற்றுப் பயணிகளை மலர்ந்த முகத்துடன் வரவேற்று நிற்கின்றது.

தொடரும்...

சுபா

Saturday, January 19, 2013

பனியாகிக் கரைந்த கணங்களிலே....! - ஆஸ்திரியா *ரோய்ட்ட - 1


பயணங்களை விரும்பும் உங்களில் சிலரை காரைக்குடிக்கு அழைத்துச் சென்ற நான் குளிர் நிறைந்த ஆஸ்திரிய ஆல்ப்ஸ் மலைகளுக்கு இனி வரும் நாட்களில் அழைத்துச் செல்லலாம் என நினைக்கின்றேன்.

ஏதாவது ஒரு விஷயம் என ஈடுபட்டு உழைத்துக் கொண்டிருப்பவர்கள்..
நிற்காமல் ஓடிக் கொண்டேயிருப்பவர்கள்..
ஓய்வு என்ற ஒரு சொல்லை நினைக்க ஆரம்பித்தாலே அல்லது சொல்லக் கேட்டாலே உடனே காய்ச்சல் வந்து ஒட்டிக் கொள்ளுமோ..?

கடந்த ஆண்டு மேமாதம் முதல் ஓய்வெடுக்க எனக்கு வாய்ப்பு அமைந்தாலும் ஏதாவது ஒரு காரணம் என ஒன்று முளைக்க, அலுவலகத்தில் நீண்ட ஓய்வே எடுக்க முடியாத நிலை ஏற்பட,  எனது ஆண்டு விடுமுறையும் தள்ளிக் கொண்டே போனது. இது ஒரு புறமிருந்தாலும் எனது அலுவலகத்தில் டிசம்பர் இறுதி வாரம் அனைவரும் கட்டாயமாக விடுமுறை எடுத்தே ஆக வேண்டும் என்ற ஒரு விஷயமும் சேர்ந்து கொள்ள இரண்டு வார விடுமுறையை கட்டாயமாக எடுத்துக் கொண்டு எங்காவது செல்வோமே என முடிவெடுத்துக் கொண்டோம் நானும் பீட்டரும். பனிக்காலத்தில் அதிகமாக ஐரோப்பாவில் நகரங்களைச் சுற்றிப் பார்க்கச் செல்வதை விட ஏதாவது உடற்பயிற்சி விளையாட்டு சார்ந்த வகை பயணமாக அமைந்தால் உடலுக்கு நன்றாக அமையுமே என்ற எண்ணமும் இருந்தது. க்ரோஸ் கண்ட்ரி வாக்கிங் செல்வது உடலுக்கு நல்ல பயிற்சியாக அமைவதுடன் பனியின் அழகை ரசித்து லயிக்கவும் இது ஒரு வாய்ப்பாக அமைந்து விடும் என்பதால் அப்படி ஒரு பயணத்தைத் திட்டமிட்டோம்.

ஜெர்மனியில் பனிக்கால விடுமுறையில் ஸ்கீயிங், நோர்டிக் வாக்கிங், க்ரோஸ் கண்ட்ரி வாக்கிங் செல்பவர்கள் மிக அதிகம். டிசம்பர் 21ம் தேதி மாலை அலுவலகம் முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருக்கும் போதே வட திசை நோக்கிச் செல்லும் கார் பயணிகள் ஏற்படுத்திய ட்ராபிக் ஜேம் நீண்டு இருந்ததைப் பார்த்துக் கொண்டே எதிர் முனையில் நான் வந்ததையும் இப்போது நினைத்துப் பார்க்கின்றேன்.

ஜெர்மனியில் வாழ்பவர்கள் பனிக்கால விளையாட்டு, ஓய்வு என பயணிக்க அதிகம் விரும்புவது ஜெர்மனியின் தெற்குப் பகுதியாகிய அல்கோய் (Algaue), பவேரிய மானிலத்தின் ஆல்ப்ஸ், ஆஸ்திரியா, ப்ரான்ஸ் மலைத்தொடர்கள், சுவிஸர்லாந்து ஆல்ப்ஸ் மலைப்பகுதிகள் ஆகியவையே. இங்குள்ள விடுமுறை கால விடுதிகள் எல்லாமே டிசம்பர் மாதம் தொடங்கி மார்ச் வரை சுற்றுப்பயணிகளால் நிறைந்திருக்கும்.

நான் க்ரோஸ் கண்ட்ரி வாக்கிங் கற்றுக் கொண்டது 6 ஆண்டுகளுக்கு முன்னர். அதுவும் ஆஸ்திரியாவின் சால்ஸ்பூர்க் மானிலத்தில் ஒரு விடுமுறையின் போது. 1 மணி நேர பயிற்சி மேற்கொண்டேன். பல முறை பயத்தால் கீழே விழுந்து விழுந்து எழுந்தேன். ஆனாலும் இந்த விளையாட்டின் மேல் உள்ள ஆசை குறையவில்லை. அதன் பின்னர் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும். எங்காவது க்ரோஸ் கண்ட்ரி வாக்கிங் செல்வது என்பது பழக்கமாகி விட்டது. சென்ற ஆண்டு ஆஸ்திரியாவின் டிரோல் (Tirol) - ஊஸ்டால் பகுதியில் சில நாட்கள் விடுமுறையின் போது க்ரோஸ் கண்ட்ரி வாக்கிங் செய்தது மகிழ்ச்சி அளித்தது. அதனை நினைத்து இந்த ஆண்டும் ஆஸ்திரியாவிலேயே வேறொரு பகுதிக்குச் சென்று விடுமுறை கழித்து வரலாம் என திட்டமிட்டபோது டிரோல் ரோய்ட்ட பகுதியில் கிடைத்த ஒரு விடுமுறை பேக்கேஜை பதிவு செய்து கொண்டோம், அதுவும் இறுது நேரத்தில். குறை பட்டுக் கொள்ள முடியாத விலையில் காலை மாலை உணவு, தங்கும் வசதி, விதம் விதமான சவ்னா, நீச்சல் குளம் அருகாமையில் என சில அடிப்படை வசதிகளோடு தங்கும் விடுதியின் அருகாமையிலேயே க்ரோஸ் கண்ட்ரி வாக்கிங் செல்வதற்கான பாதையும் அமைத்திருந்தார்கள் என்பது சிறப்பாக அமைந்தது.



கிறிஸ்மஸ் விடுமுறை விட்ட கையோடு என்னோடு ஒட்டிக் கொண்ட காய்ச்சலோடு டிரோல் நோக்கி பயணித்தோம். நான் இருக்கும்  ஊரான லியோன்பெர்க்கிலிருந்து ரோய்ட்ட நகரம் 252 கிமீ தெற்குப் பகுதியில் உள்ளது. அதனால் வாகனத்திலேயே இரண்டரை மணி நேரம் பயணித்து தங்கும் விடுதியை வந்தடைந்தோம்.

தங்கும் விடுதி வந்தடைந்து பதிவுகளைச் சரிபார்த்து முடித்து தயாரானதும் ஏழு நாட்களுக்கான ஒரு திட்டத்தைத் தீட்டினோம். ஏறக்குறைய இந்தத் திட்டப்படி செயல்படலாம் என முடிவானது. தினமும் க்ரோஸ் கண்ட்ரி வாக்கிங் செல்வது என்பது உடலுக்கு அசதியைத் தரும் என்பதால் திட்டத்தை அலுப்பும் அசதியும் தராத வகையில் அமைத்துக் கொண்டோம்.



க்ரோஸ் கண்ட்ரி வாக்கிங் செல்வதற்கு முதலில் நல்ல பனி வேண்டும் .அதுவும் உலர்ந்து கரையும் பனிபோல இல்லாமல், அல்லது கடினமான இறுகிப் போன பனிபோல இல்லாமல் மெத்து மெத்தென்று பஞ்சு போல இருக்கும் பனி  அவசியம்.

நாங்கள் ரோய்ட்ட நகரை அடைந்த நாளில்  3 டிகிரி செல்சியஸாக குளிர் அமைந்திருந்தது. இது பனிக்கு உகந்ததல்ல. ஆனால் நிலமை மாறலாம் என்ற எதிர்பார்ப்பை நாங்கள் விடவில்லை.

தொடரும்...

அன்புடன்
சுபா

Saturday, January 12, 2013

நானும் காரைக்குடிக்குப் போன கதை... 29

என் காரைக்குடி பயணத்தின் இறுதிநாள் படங்கள் சில..


































பயணம் தொடரும்..

அன்புடன்
சுபா




நானும் காரைக்குடிக்குப் போன கதை... 28


மாலை காரைக்குடிக்கு வந்து சேரும் போது இருட்டி விட்டது. எனக்கு அன்று இரவே சென்னைக்கு ரயில் பயணமாதலால் விரைந்து தயாராக வேண்டிய நிலை. அதற்குள் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர். ராஜ்குமார், டாக்டர். சந்திரசேகரன் ஆகியோர் செட்டி நாட்டு பிரத்தியேக உணவுகளில் சில வகைகளை எங்கள் மாலை உணவுக்காக வாங்கி வந்திருந்தனர். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம்.

இடியாப்பம், குழிப்பணியாரம், அவல், வடை, மோதகம் என ஏழெட்டு வகை உணவுகள். அவை ஒவ்வொன்றையும் படம் பிடித்திருக்க வேண்டும். ஆனால் அந்த அவசரத்தில் எனக்கு அப்போது பதிவு செய்ய வேண்டுமே என்ற எண்ணம் வரவில்லை. மாறாக ஒவ்வொன்றையும் நன்றாக ரசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். என்னோடு அங்கிருந்த டாக்டர். வள்ளி, பாலு, காளைராசன், நா.கண்ணன் அனைவருமே இந்த விருந்தினை மிக நன்கு ருசித்து ரசித்து சுவைத்துக் கொண்டிருந்தனர்.

இந்த உணவுகளெல்லாம் காரைக்குடி நகருக்கென்றே பிரத்தியேகமானவை என்றும் இவை சிறப்பாக ஒரு பிரத்தியேகக் கடையில் மாத்திரமே கிடைக்கும் என்பதையும் தெரிந்து கொண்டேன். நாங்கள் அவற்றை சுவைக்க வேண்டும் என்பதற்காகவே முன் கூட்டியே சொல்லி வைத்து, காத்திருந்து எங்களுக்காக அவற்றை வாங்கி வந்து எங்களுக்கு அன்புடன் பரிமாறிய டாக்டர்.ராஜ்குமார் டாக்டர்.சந்திரசேகரன் ஆகியோரின் அன்பை  இப்போதும் நினைத்துக் கொள்கின்றேன்.

உணவு முடித்து காரைக்குடி ரயில் நிலையத்திற்கு விரைந்தோம். என்னை வழியனுப்பி வைக்க அனைவருமே வந்திருந்தனர். மைக்கலும் ரயில் நிலையத்திற்கு நேராக வந்து இணைந்து கொண்டார். என்னை ரயிலில் ஏற்றி விட்டு ரயில் புறப்பட்ட பின்னரே அனைவரும் திரும்பினர்.

மூன்று நாட்கள் சந்தித்த புதிய முகங்கள், அவர்கள் நண்பர்களாகிப் போன விதம், பார்த்த விஷயங்கள், தெரிந்து கொண்ட புதிய தகவல்கள், இனிமையாகக் கழிந்த பொழுதுகள் அனைத்தையுமே ரயில் பயணத்தில் யோசித்துக் கொண்டிருந்தேன். சில விஷயங்களை எனது கணினியில் குறித்துக் கொண்டேன். மூன்று நாட்களும் பல இடங்களுக்கு அலைச்சல் என அமைந்த போதிலும் காரைக்குடி நண்பர்களின் அன்பும் ஆதரவும் என் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்துக் கொண்டது.

எனது பயணங்களில் நான் சந்திக்கின்ற மனிதர்களைப் பற்றியும்,  என் அனுபவங்களைப் பற்றியும், நிகழ்வுகளைப் பற்றியும், நான் காண்கின்ற எனக்குப் புதியனவாகப் படுகின்ற விஷயங்களைப் பற்றியும் பதிவாக்கி வைப்பதை சில வருடங்களாக வழக்கமாக  கொண்டிருக்கின்றேன். எனது எல்லா பயண அனுபவங்களையும் இவ்வகையில் பதிவு செய்வது இயலாத காரியம் என்றாலும் முடிந்தவரை முயல்கின்றேன்.

இந்தப் பயணக்கட்டுரைத் தொடர் இப்பகுதியுடன் நிறைவு பெறுகின்றது.

மீண்டும் ஒரு புதிய பயணத் தொடருடன் வருவேன். :-))



என்னுடன் இணைந்து பயணித்த மின்தமிழ் வாசகர்கள் அனைவருக்கும், கருத்து பகிர்ந்து மகிழ்வித்தவர்களுக்கும் எனது நன்றி.

அன்புடன்
சுபா

நானும் காரைக்குடிக்குப் போன கதை... 27


நாங்கள் நாட்டரசன் கோட்டைக்கு வந்து சேரும் போதே மாலை நெருங்க ஆரம்பித்திருந்தது. வெயில் தணிந்து இதமான சூழலாக இருந்தது.



இதுவும் பழமை வாய்ந்த ஒரு ஆலயம்தான் என்பதைக்கோயில் அமைப்பில் இருந்தே காண முடிந்தது. முதலில் ஆலயத்தின் கண்ணுடைய நாயகி அன்னையின்  கோயிலில் வழிபாடை முடித்துக் கொண்டோம்.




கோயிலில் முன்புறத்திலேயே தெப்பக்குளம் ஒன்றும் அமைந்துள்ளது. நீர் நிறைந்து அத்தெப்பக்குளம் மிகத் தூய்மையாகக் காட்சியளித்தது. துள்ளிக் குதித்து விளையாடும் மீன்களை குளத்தின் கரையிலேயே கண்டு மகிழ்ந்தேன்.

இந்தக் கோயிலின் உள்ளேயும் சுற்றுப்புறத்தையும் மிக நேர்த்தியாகவும் தூய்மையாகவும் பாதுகாத்து வருகின்றனர். இச்சிறு நகருக்கு சிறப்பு சேர்க்கும் ஒரு சைவைத் தலமாக இக்கோயில் அமைந்துள்ளது என்றே சொல்ல வேண்டும்.

கோயிலில் கற்றூண்களில் கவின்மிகு சிலைகளைச் செதுக்கியிருக்கின்றனர். தேவாரப்பாடல்களில் வரும் புராணக் கதைகளை மையமாகாக் கொண்ட உருவச் சிலைகளை அவற்றில் காண முடிந்தது. அத்துடன் கலைநயம் மிக்க  ஆடல் மகளிர், இசைக் கருவி வாசிக்கும் பெண்டிர் வடிவங்களும் சிலைகளாக அத்தூண்களில் காட்சியளித்துக் கொண்டிருந்தன.



கோயிலுக்குச் சென்று வழிபாட்டினை முடித்து வரும் போது சில பெண்கள் ஆலயத்திற்குள் தூண்களைச் சுத்தம் செய்து, தரையைக் கூட்டிப் பெருக்கி கோலம் போட்டுக் கொண்டிருப்பதைக் கண்டேன். அவர்களிடம் சென்று என்ன செய்து கொண்டிருக்கின்றார்கள் என்று வினவியபோது தினம தினம் அவர்கள் கோயிலுக்கு வந்து கோயிலின் எல்லா பகுதிகளையும் இப்படிச் சுத்தம் செய்து செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கும் விஷயம் தெரிய வந்தது. அவர்களின் அற்பணிப்பு மனதிற்கு மகிழ்ச்சியளித்த்தது. இப்படி ஒவ்வொரு ஊரிலும் பொது மக்களே தங்கள் கோயில்களைப் பாதுகாத்துப் போற்றி வந்தால் ஆலயங்களைச் நிச்சயமாகச் சிறப்புற பாதுகாக்கலாம்.



நாட்டரசன் கோட்டையில் பூஜையை முடித்து விட்டு பின்னர் அங்கே உள்ள நா.கண்ணனின்  உறவினர் ஒருவர் மேற்பார்வையில் இருக்கும் ஒரு பெருமாள் கோயிலுக்கும் சென்று வழிபட்டு அவர்கள் இல்லத்திலும் தேனீர் அருந்தி விட்டு அங்கிருந்து புறப்பட்டோம், காரைக்குடிக்கு.

தொடரும்...

சுபா

Thursday, January 10, 2013

நானும் காரைக்குடிக்குப் போன கதை... 26


புதிதாக வந்தவர் எங்களைப் பற்றி விசாரிக்க, நாங்களும் தமிழ் மரபு அறக்கட்டளை பற்றியும் நாங்கள் எங்கிருந்து வருகின்றோம், எப்படி சிவகங்கை வந்து சேர்ந்தோம் என்றும் கூறி எங்களை அறிமுகப்படுத்திக் கொண்டோம். அவர் தன்னையும் அறிமுகப்படுத்திக் கொண்டார். அதாவது சிவகங்கை சமஸ்தானத்தின் தற்போதைய அரசபதவியில் இருக்கும் மகாராணியாரின் சகோதரரின் மகன் இவர். பல ஆண்டுகள் பெங்களூரில் இருந்து விட்டு தற்சமயம் தான் இங்கே மாற்றலாகி வந்திருப்பதாகத் தெரிவித்தார்.தன்னைப் பற்றியும் அறிமுகப்படுத்திக் கொண்ட பின்னர் எங்களை உள்ளே அழைத்துச் சென்றார். எங்கள் நால்வருக்கும் சொல்ல முடியாத மகிழ்ச்சி. இது எதிர்பார்க்காமல் கிடைத்த அழைப்பு அல்லவா?



அரண்மணை வெளித்தோற்றத்தில் தெரிவது போல உள்ளே சீரமைப்பு செய்யப்படவில்லை. பழைய கட்டிடம் அப்படியே மாறாமல் இருக்கின்றது. வலது புறத்தில் தற்போதையை மகாராணியார் வசிக்கின்றார். அங்கு அப்பகுதி பூட்டப்பட்டிருந்தது. நாங்கள் நேராக உள்ளே சென்றோம். பெரிய வீடு. பல அறைகள்.




வீட்டின் பல மூலைகளில் வேலு நாச்சியாரின் சித்திரங்கள் காலண்டர் வடிவிலும் படங்களாகவும் சுவற்றில் மாற்றப்பட்டு வைக்கப்பட்டிருந்தன. பூஜை செய்யும் பகுதியில் மூதாதையர் படங்களையும் இணைத்து வைத்திருக்கின்றனர். அரச குடும்பத்தினரின் படங்கள் ஆங்காங்கே சுவற்றில் இருந்தன. அவை கடந்த 100 அல்லது 150 ஆண்டுகளுக்குள் எடுக்கப்பட்ட படங்களாக இருக்க வேண்டும் என்று தோன்றியது.



வீட்டைச் சுற்றிப் பார்த்து சில புகைப்படங்களும் எடுத்துக் கொண்டோம். நாங்கள் திருப்திகரமாக சுற்றிப் பார்த்து விட்டோம் எனத் தெரிந்தததும் அவர் எங்களை வாசல் பகுதிக்கு அழைத்து வந்தார். அங்கே சிறு தோட்டம் பசுமையாக மலர்கள் பூத்துக் குலுங்க காட்சியளித்துக் கொண்டிருந்தது.



நாங்கள் அங்கே அமர்ந்து அவர் வரவழைத்து எங்களுக்குக் கொடுத்தத் தேனீரைப் பருகிக் கொண்டே பேசிக் கொண்டிருந்தோம். நான் பிரத்தியேக பேட்டியாக எதனையும் செய்யவில்லை. திடீரென்று சென்ற காரணத்தோடு நானும் சற்றே அலுத்துப் போயிருந்தேன். ஆக அமைதியாக அந்தச் சூழலில் சிவகங்கை சமஸ்தானத்தின் பூந்தோட்டப் பகுதியில் அமர்ந்து ஓய்வெடுத்துக் கொண்டும் பேசிக் கொண்டும் இருந்தது களைப்பைப் போக்குவதாக இருந்தது. சமஸ்தானத்தைப் பற்றி நன்கு அறிந்த காளைராசன் அவ்வப்போது சில கேள்விகள் கேட்க அதற்கு அந்த அரச குடும்பத்தைச் சேர்ந்தவரும் பதிலளித்தார். தற்சமயம் கூட சிவகங்கை சமஸ்தானத்தின் மேற்பார்வையின் கீழ் சில கோயில்கள் இருக்கும் விபரம் இதன் வழி எனக்கும் தெரியவந்தது.


இதுவே முன்னூறு நானூறு ஆண்டுகளுக்கு முன்னரென்றால்  இங்கே யானைகளும் குதிரைகளும் பல்லக்குகளும், வேலையாட்களும், அரச குடும்பத்தினரும் பொது மக்கள் கூட்டமும் என்று கூட்டம் கூட்டமாக இருந்திருக்கும். ஆனால் நாங்கள் இருந்த அச்சமயத்தில் அங்கிருந்த அமைதி கால ஓட்டத்தில் நடந்திருக்கும் மாற்றங்களை வெளிப்படுத்தி தற்கால  நிலையை உணர வைப்பதாக அமைந்திருந்தது.

சற்று நேரத்திற்குப் பின்னர் அவரிடம் நன்றி தெரிவித்து விடைபெற்றுக் கொண்டோம். அங்கிருந்து எங்கள் வாகனம்  நாட்டரசன் கோட்டைக்குப் புறப்பட்டது.

நானும் காரைக்குடிக்குப் போன கதை... 25


சிவகங்கை ஸமஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ அரண்மை கட்டிடம் தான் அது.

இந்த சமஸ்தானத்தின் புகழ்மிக்க அரசியார் வேலு நாச்சியார் பெயரை கேள்விப்பட்டிருக்கின்றேன். ஆனால் எனது இந்தப் பயணத்தில் சிவகங்கை நகருக்கு வருவோம் என்றோ, இந்த அரண்மணையைப் பார்ப்போம் என்றோ சற்றும் திட்டமிடவில்லை. ஏதேச்சையாக இங்கு வரும் வாய்ப்பு அமைந்து இந்த அரண்மணையைப் பார்க்கும் வாய்ப்பு அமைந்ததை நினைத்து ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை.




வாசல் புறத்தில் நின்று புதிதாக வர்ணம் பூசப்பட்டு அந்த சாலையிலேயே எழிலுடன் காட்சியளித்துக் கொண்டிருக்கும் அந்த மண்டபத்தைப் பார்த்தோம்.




வாசலிலேயே உயரமான ஒரு அமைப்பில் வேலுநாச்சியாரின் உருவச் சிலையை வடித்திருக்கின்றார்கள்.  இந்த உருவச் சிலை தற்போதைய தமிழக முதல்வர் மாண்புமிகு ஜெயலலிதா அவர்களால் 1992ம் ஆண்டில் திறந்து வைக்கப்பட்டது என்ற செய்தியைத் தாங்கிய விபரங்களையும் பார்த்து பதிவு செய்து கொண்டேன். அரண்மணைக்குள் செல்ல முடியுமோ முடியாதோ என சந்தேகம் எழாமல் இல்லை. எதற்கும் முதலில் சாப்பிட்டு விட்டு வரலாமே என அரண்மணையைச் சார்ந்தார் போலமைந்திருந்த ஒரு உணவகத்திற்குள் நுழைந்தோம்.

மதியம் 2 மணியைக் கடந்திருந்தாலும் உணவுக் கடையில் கூட்டமிருந்தது. நால்வரும் திருப்தியாக அங்கே உணவருந்தி விட்டு வெளியே வந்தோம். உடனே திரும்பிச் செல்ல மனம் வரவில்லை.

மீண்டும் அரண்மணைக்குச் சென்று திறந்திருந்த ஒரு பாதையைப் பார்த்து அதன் வழியாக உள்ளே சென்றோம். காவலுக்கு அப்போது அங்கு யாரும் இல்லை.



வாசல் புற மதில் சுவரைக் கடந்ததும் விரிவான திறந்த வெளி. வலது புறத்தில் அரண்மணையின் ஒரு பகுதி அமைந்திருக்கின்றது. நேராகப் பார்க்க  அங்கேயும் அரண்மணையின் ஒரு பகுதி அமைந்திருப்பதைக் கண்டோம். அதனை நோக்கி நடந்தோம். அப்போது வாசலுக்கு ஒருவர் வருவதைப் பார்த்தோம். அவரும் எங்களைப் பார்த்தார்.

நாங்கள் நால்வருமாக அவரை நோக்கிச் சென்றோம். அவர் எங்களைப் பற்றி விசாரிக்க நாங்கள் எங்களை அறிமுகப்படுத்திக் கொண்டோம். அரண்மணையில் அரச குடும்பத்தினர் யாரும் இருக்கின்றனரா என்று ஆர்வத்துடன் கேட்டோம். அவர் அரச குடும்பத்தைச் சார்ந்த ஒருவர் அன்று வீட்டில் இருப்பதாகத் தெரிவித்தார்.  எங்களுக்கு அவரைப் பார்த்து வேலு நாச்சியார் இருந்த அந்த வீட்டையும் பார்க்க வேண்டும் என்ற ஆவல் மிக, அவரிடம் உள்ளே சென்று பார்க்க அனுமதி கேட்டோம். அவர் முதலில் வீட்டில் அச்சமயம் இருந்த அரச குடும்பத்தைச் சார்ந்தவரிடம் அனுமதி கேட்டு விட்டு வருவதாகக் கூறிச் சென்றார்.

சில நிமிடங்களில் அவருடன் மேலும் ஒருவரும் இணைந்து வந்தார். புதிதாக வந்தவர் பார்க்கவே சற்று ராஜ தோற்றத்துடன் இருந்தார். யாராக இருக்கும்..? உள்ளே செல்ல அனுமதிப்பார்களா..?  என்ற சந்தேகம் மனதில் எழ நின்று கொண்டிருந்தோம்.

Tuesday, January 8, 2013

நானும் காரைக்குடிக்குப் போன கதை... 24


திருமலை மலைக்கொழுந்தீஸ்வரர் கோயில் வித்தியாசமான அனுபவத்தை எனக்கு அளித்தது. அந்தப் பசுமையான சூழல், காலை நேரத்து அமைதி, இனிமையான தென்றல், அங்கிருந்த மக்களின் அன்பு அனைத்தும் என் உள்ளத்தில் நிறைவினை ஏற்படுத்தின.

தியானம் செய்ய பெரிய பெரிய ஆலயங்களைத் தேடிச் செல்பவர்கள் இப்படி ஊருக்கு ஒதுக்குப் புறமாக தேவலோகமாகத் தெரியும் இவ்வகைக் கோயில்களைக் கண்டு கொள்வதில்லையே என்ற எண்ணம் தோன்றினாலும் அதேசமயம் மக்கள் கூட்டம் அலைமோதாமல் அமைதியாக தெய்வ தரிசனம் செய்ய இவ்வகைக் கோயில்களும் தேவை தான் என்றே மனதில் தோன்றியது.

எங்களுடன் பேசிக் கொண்டிருந்ததில் அந்த யாதவர் குல மக்களுக்கும் எங்கள் நடவடிக்கைகளில் ஆர்வம் வந்திருக்கும் போல.  சற்று இளைப்பாறி விட்டு நாங்கள் புறப்பட நினைக்கையில் பக்கத்திலேயே மேலும் ஒரு பாறை இருப்பதாகவும் அங்கேயும் பாறை சித்திரங்கள் இருக்கின்றன என்றும் கூறி நாங்கள் பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். அவர்களைப் பின் தொடர்ந்து சென்று அந்தப் பாறையில் இருந்த சித்திரங்களைப் பார்த்து புகைப்படமாகவும் விழியப் பதிவாகவும் பதிவு செய்து கொண்டோம். இப்பதிவைப் புத்தாண்டு வெளியீட்டில் http://video-thf.blogspot.co.at/2012/12/blog-post_29.html   காணலாம்.



திருமலைக்கு வந்து விட்டு அவர்கள் குலசாமிக் கோயிலைப் பார்க்காமல் செல்வது எப்படி என்று ஒரு பெரியவ்ர் கேட்க அங்கே அருகாமையில் இருந்த அவர்களின் குலதெய்வமான மடையக் கருப்பு சாமி கோயிலுக்கு வாகனத்திலேயே புறப்பட்டோம். கோயிலின் முன் பக்கமே மிக வித்தியாசமாக அமைந்திருந்தது. வேலி போட்டது போல பெரிய அரசமரம் ஒன்றினை சுற்றி அருவாள்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. நூற்றுக்கணக்கான அருவாள்கள். பக்கத்தில் ஒரு சிறிய கோயில். கோவிலின் உள்ளேயும் அருவாள்கள்.இங்கு வருபவர்கள் தங்கள் நேர்த்திக்கடனைத் தீர்க்க கோயிலில் அருவாள் அல்லது மணி வாங்கி இப்படி வைப்பது வழக்கம் என்று தெரிந்து கொண்டேன். கோயில் சிறப்புக்களை விளக்கும் மண்ணின் குரல் வெளியீட்டில் விரிவாக இக்கோயிலைப் பற்றிய செய்திகளை அறிந்து கொள்ளலாம். (மண்ணின் குரல் - ஜனவரி 2013 : திருமலை மடையக்கருப்பு சாமி)

இங்கே வந்த எங்களுக்குக் குடிக்க சுவை பானமும் சாப்பிட பிஸ்கட்களும் அதற்குள் வாங்கி வந்து விட்டார்கள். சாப்பிட்டுக் கொண்டே அவர்களுடன் பேசிக் கொண்டிருந்து விட்டு சற்று நேரத்தில் அவர்களிடம் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டோம்.

எங்கள் பயணத்தில் அடுத்து நாங்கள் நாட்டரசன் கோட்டைக்குச் செல்வோம் என முடிவெடுத்தோம். அதற்கு முன்னர் அருகாமையில் ஏதாகினும் உணவகங்கள் இருக்குமா என தேட ஆரம்பித்தோம். எங்கு பார்த்தாலும் சற்று அமர்ந்து சாப்பிடும் வகையில் நல்ல உணவகங்களைக் காணவில்லை. வாகனத்தில்லேயே பயணித்து சிவகங்கை நகருக்கு வந்து சேர்ந்தோம். அங்கே வாகனத்தை ஓரிடத்தில் நிறுத்தி விட்டு அருகில் இருந்த ஒரு உணவகத்திற்குள் சென்று சாப்பிட நினைத்து நடக்கையில் எங்கள் கண்களையும் கருத்தையும் ஒரு அழகிய கட்டிடம் ஈர்த்தது. அதனை நோக்கி நடந்தோம்!


தொடரும்..

சுபா

Sunday, January 6, 2013

நானும் காரைக்குடிக்குப் போன கதை... 23


கோவிலுக்குள் நுழைந்தோம்.

முதலில் நம்மை எதிர்கொள்வது மாவீரர் கருவபாண்டியன் சுவாமி  சிலைதான். இந்தக் கோயில் பாண்டியர் காலத்தது என்றாலும் ஏறக்குறைய 200 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தக் கோயிலின் முன்பகுதியைக் கட்டி அதனைச் சீரமைத்தவர் தான் இந்த மாவீரர் கருவபாண்டியன். இவர் மரவர் குலத்தைச் சார்ந்தவர்.




அவர் பயன்படுத்திய  ஏறக்குறைய 200 வருடம் பழமை கொண்ட அந்த வாளை இணைத்தே சிலையோடு வைத்திருக்கின்றனர். அந்த வாளை என் கையில் கொடுத்து அதனைத் தூக்கிப் பார்க்கச் சொல்லி சந்தோஷித்தார் ஒரு முதியவர். அவர் இந்த மாவீரர் கருவபாண்டியன் சுவாமி பரம்பரையைச் சேர்ந்தவர். முதியவர். வயது 80க்கும் மேல் ஆனால் சுறுசுறுப்பான நடை. வேகமான பேச்சு, தெளிவான குரல். வயதை மறைத்து நின்றது அவரது சுறுசுறுப்பு.




மாவீரர் கருவபாண்டியன் சுவாமி சிலையைத் தாண்டி மேலே இடது புறமாக நடந்தால் குடைவரைக் கோயில் பகுதிக்குச் செல்லலாம். உள்ளே பிள்ளையார், முருகன், மீனாட்சி சுந்தரேஸ்வரர் புடைப்புச் சிற்பங்களைக் கண்டு ரசித்தோம். அச்சிலைகளின் சிறப்புக்களையும் தன்மைகளையும் டாக்டர் வள்ளி அவர்கள் விளக்குவதை விழியப் பதிவாக புத்தாண்டு வெளியீடாக வெளியிட்டிருந்தேன்.  அந்த விழியப்பதிவுகளைப் பற்றிய செய்திகளை  இங்கே காணலாம். http://tamilheritagefoundation.blogspot.de/2013/01/2013.html.  குறிப்பாக இந்தக் குடைவரை கோயில் பற்றிய விழியப் பதிவினை http://video-thf.blogspot.co.at/2012/12/blog-post_30.html என்ற வலைப்பூவில் காணலாம்.



அற்புதமான குடைவரைக் கோயில். வெளியேயிருந்து பார்க்கும் போது இப்படி ஒரு சிற்பக் களஞ்சியம் உள்ளே இருப்பதைப் பற்றி யாரும் அறிந்திருக்க முடியாது. எத்தனை வரலாற்றுச் சிறப்பு மிக்க இத்தகைய அற்புதப் படைப்புக்கள் நாம் அறியாமல் இருந்திருக்கின்றோம் என்று நினைத்து அனைவருமே வியந்தோம்.




சிற்பங்களின் விளக்கங்களைக் கேட்டுக் கொண்டே குடைவரைக் கோயிலின்  குகைப்பகுதியிலிருந்து வெளிவந்தோம். இரண்டு பக்க சுவர் பகுதி முழுவதும் கல்வெட்டுக்கள். இவ்வளவு நீளமாக சிறப்பாக நேர்த்தியாக பாறை சுவற்றில் செதுக்கிய இந்த எழுத்துக்கள் தமிழில் உள்ளன. இக்கல்வெட்டுகள் அனைத்தும் தமிழக தொல்லியல் துறையினரால் படியெடுக்கப்பட்டு பதிக்கப்பட்டுள்ளன என்ற விபரத்தையும் எங்களுக்குத் தொடர்ந்து விளக்கம் அளித்து வந்த டாக்டர்.வள்ளி தெரிவித்தார்.



கோயிலில் இருந்த பழமை வாய்ந்த மகிஷாசுரமர்த்தினி வடிவத்தை பார்த்தேன். நேர்த்தியான பெரிய அளவிலான சிற்பம் அது.

அடுத்து கோயிலில் அமர்ந்து பூக்கட்டுவதற்காகப் பயன்படுத்தப்பட்ட ஒரு கல்லைப் பார்வையிட்டோம். இந்தப் பாறையானது அமர்ந்து பூத்தொடுப்பதற்காக அமைக்கப்பட்டது என்று செதுக்கி வைத்திருக்கின்றார்கள். எல்லாம் 9ம் நூற்றாண்டு தமிழ் எழுத்துக்கள் என்று நினைக்கும் போது வியப்பு மேலிட்டது. கோயில் முழுதும் பார்த்து முடித்து வெளியே வரும் போது அங்கு வந்திருந்த யாதவர் சமூகத்து மக்களும் அவர்கள் தலைவரும் நாங்கள் ஏதேனும் சாப்பிட்டு விட்டுத்தான் செல்ல வேண்டும் என்று அன்புக் கட்டளையிட்டனர். நான் எனது தமிழக பயணத்தில் மிக விரும்புவது இளனீர். ஆக இளனீர் கிடைத்தால் சந்தோஷமாக இருக்கும் என்று கூறிவிட்டேன். அவர்கள் அங்கே அருகில் எங்கும் இளனீர் கிடைக்காது. சற்று வெளியில் சென்று தான் வாங்கி வரவேண்டும் என்று கூற எனக்கு மிக சங்கடமாகி விட்டது. பரவாயில்லை. வேறு ஏதும் சாப்பிட்டுக் கொள்ளலாம் என நான் எவ்வளவு கூறியும் அவர்கள் கேட்பதாக இல்லை. நீங்களெல்லாம் பேசிக் கொண்டிருங்கள். கொஞ்ச நேரத்தில் இளனீர் வந்துவிடும் என்று கூறிவிட்டு ஜீப்பை எடுத்துக் கொண்டு பறந்து விட்டனர்.

அந்த இடைப்பட்ட நேரத்தில் அவர்களோடு பேசிக் கொண்டிருக்கும் போது யாதவர் குலத்தைப் பற்றியும், அவர்களுக்குக் கண்ணனே குல தெய்வம் என்றும் சொல்லி ஒரு பெரியவர் கண்ணன் நாட்டார் பாடல் ஒன்றைப் பாட ஆரம்பித்தார். கணீர் என்ற குரல். மனப்பாடமாக முழு பாடலும் நினைவில் அவருக்கு. இதன் பதிவினை இங்கே காணலாம். http://voiceofthf.blogspot.de/2013/01/blog-post.html  பாடலைக் கேட்டு பதிவு செய்து கொண்டிருக்கும் போதே இளனீர் வந்துவிட்டது. அவர்கள் அன்பைக் கண்டு அகமகிழ்ந்தேன். ஒன்றுக்கு இரண்டாக இளனீர் குடித்தும் சாப்பிட்டும் மகிழ்ந்தேன்.

தொடரும்..
சுபா

Saturday, January 5, 2013

நானும் காரைக்குடிக்குப் போன கதை... 22


அப்போது காலை ஏறக்குறை 11 மணியிருக்கலாம்  எங்களை நோக்கி வந்த காவல்துறை அதிகாரிகளிடம் காரணம் விசாரித்தோம். அன்றைக்கு முதல் நாள் தான் திருமலை சுற்று வட்டாரத்தில் வாழும் குடும்பத்தினர்கள் சேர்ந்து திருமலை மலைக்கொழுந்தீஸ்வரர் ஆலயச் சுற்றுச் சூழலில் உள்ள பாறை ஓவியங்களையும் மரபுச் சின்னங்களையும் அரசாங்கத்தின் பாதுகாப்பிற்குறிய இடமாக அறிவித்து அரசு பாதுகாக்க வேண்டும் என மனு கொடுத்திருப்பதாகவும் அதற்காகக் கூட்டமாக அங்கு வந்து தங்கள் கோரிக்கையை வைக்கப் போவதாகவும் அதனை கண்காணிக்க அங்கே வந்திருப்பதாகவும் குறிப்பிட்டார்கள் இரண்டு காவல் அதிகாரிகளும்.

அவர்கள் சொன்னதை நிரூபிப்பது போன்று ஒரு வெள்ளை நிற ஜீப் வண்டியும் 2 அம்பாஸிடர் கார்களும் வந்து சேர்ந்தன. ஏறக்குறைய 30 பல தரப்பட்ட வயதுடைய ஆண்கள் வந்திறங்கினர்.

நாங்கள் அந்தக் காவல் துறை அதிகாரிகளிடம் தமிழ் மரபு அறக்கட்டளை பற்றி விளக்கி நாங்கள் அங்கு வந்திருப்பதற்கான காரணத்தையும் குறிப்பிட்டோம். அவர்கள் இருவருக்குமே ஆச்சரியம். எங்களோடு சேர்ந்து நாங்கள் புகைப்படமும் வீடியோவும் எடுத்த இடங்களுக்கெல்லாம் வந்து பார்த்துக் கொண்டிருந்தனர். அதற்குள் கீழேயிருந்து வந்தவர்களில் சில இளைஞர்கள் நாங்கள் இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தனர்.




நாங்கள் பொதுமக்கள் சேதப்படுத்தி வைத்திருக்கும் சமணப் படுகைகளையும் பாறை சித்திரங்களையும் காவல் அதிகாரிகளிடம் காட்டி இவையெல்லாம பாதுகாக்கபப்ட வேண்டிய மரபுச் சின்னங்கள் என அவர்களுக்கு விளக்கினோம். அவர்களும் நாங்கள் சொல்வதை ஆமோதித்தனர்.



நான் முதல் நாள் டாக்டர் வள்ளியிடம் கற்றிருந்த சமணப்படுகைகள் பற்றிய விளக்கத்தை காவல் அதிகாரிக்கும் சொல்லி விளக்கினேன். இப்படி தகவல்கள் ஒருவர் வழியாக மற்றவருக்கு என்று செல்வதன் வழி பல விஷயங்களைப் பொதுமக்களிடம் சேர்க்க முடியும் என்பதை அன்று நேரில் அனுபவப்பூர்வமாக உணர்ந்தோம்.

பாறைக்கு மேலே பதிவுகளை முடித்துக் கொண்டு கீழே கோயிலுக்கு வந்தோம். கீழே வந்திருந்த பொதுமக்களுக்குக் காளைராசன் எங்களையும் நாங்கள் அங்கு வந்ததற்கான காரணத்தையும் எடுத்து விளக்கினார். அவர்களின் முகத்தில் மலர்ச்சி. எங்களுக்கும்!

அவர்களில் ஒருவரைத் தவிர ஏனையோர் யாதவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அந்த மற்றொருவர் அந்த முன் பகுதி கோயிலைக் கட்டிய கருப்பண்ணசாமியின் பரம்பரையைச் சேர்ந்தவர், கள்ளர் சமூகத்தவர்.  சிலர் பார்ப்பதற்கே எனக்கு போர் வீரர்கள் போலக் காட்சியளித்தனர். அவர்களின் தலைவராக வந்திருந்தவர் ஒரு இளைஞர். அவர் அந்த இடத்தில் ஒரு அரசியல் பிரமுகரும் கூட.

அவர்கள் காவல்துறையினரிடம் பேசி தங்கள் கோரிக்கையைச் சமர்ப்பித்தனர். பின்னர் நாங்கள் மலைக்கொழுந்தீஸ்வரர் ஆலயத்தின் உள்ளே செல்ல ஆயத்தமானோம். நால்வராக இருந்த  நாங்கள் 40 பேருக்கு மேல் என்றானோம். எங்களுடன் அந்த 2 காவல் அதிகாரிகளும் குடைவரை கோயிலைப் பற்றி தெரிந்து கொள்ள ஆவலுடன் இணைந்து கொண்டனர்.

தொடரும்...

அன்புடன்
சுபா