Saturday, January 19, 2013

பனியாகிக் கரைந்த கணங்களிலே....! - ஆஸ்திரியா *ரோய்ட்ட - 1


பயணங்களை விரும்பும் உங்களில் சிலரை காரைக்குடிக்கு அழைத்துச் சென்ற நான் குளிர் நிறைந்த ஆஸ்திரிய ஆல்ப்ஸ் மலைகளுக்கு இனி வரும் நாட்களில் அழைத்துச் செல்லலாம் என நினைக்கின்றேன்.

ஏதாவது ஒரு விஷயம் என ஈடுபட்டு உழைத்துக் கொண்டிருப்பவர்கள்..
நிற்காமல் ஓடிக் கொண்டேயிருப்பவர்கள்..
ஓய்வு என்ற ஒரு சொல்லை நினைக்க ஆரம்பித்தாலே அல்லது சொல்லக் கேட்டாலே உடனே காய்ச்சல் வந்து ஒட்டிக் கொள்ளுமோ..?

கடந்த ஆண்டு மேமாதம் முதல் ஓய்வெடுக்க எனக்கு வாய்ப்பு அமைந்தாலும் ஏதாவது ஒரு காரணம் என ஒன்று முளைக்க, அலுவலகத்தில் நீண்ட ஓய்வே எடுக்க முடியாத நிலை ஏற்பட,  எனது ஆண்டு விடுமுறையும் தள்ளிக் கொண்டே போனது. இது ஒரு புறமிருந்தாலும் எனது அலுவலகத்தில் டிசம்பர் இறுதி வாரம் அனைவரும் கட்டாயமாக விடுமுறை எடுத்தே ஆக வேண்டும் என்ற ஒரு விஷயமும் சேர்ந்து கொள்ள இரண்டு வார விடுமுறையை கட்டாயமாக எடுத்துக் கொண்டு எங்காவது செல்வோமே என முடிவெடுத்துக் கொண்டோம் நானும் பீட்டரும். பனிக்காலத்தில் அதிகமாக ஐரோப்பாவில் நகரங்களைச் சுற்றிப் பார்க்கச் செல்வதை விட ஏதாவது உடற்பயிற்சி விளையாட்டு சார்ந்த வகை பயணமாக அமைந்தால் உடலுக்கு நன்றாக அமையுமே என்ற எண்ணமும் இருந்தது. க்ரோஸ் கண்ட்ரி வாக்கிங் செல்வது உடலுக்கு நல்ல பயிற்சியாக அமைவதுடன் பனியின் அழகை ரசித்து லயிக்கவும் இது ஒரு வாய்ப்பாக அமைந்து விடும் என்பதால் அப்படி ஒரு பயணத்தைத் திட்டமிட்டோம்.

ஜெர்மனியில் பனிக்கால விடுமுறையில் ஸ்கீயிங், நோர்டிக் வாக்கிங், க்ரோஸ் கண்ட்ரி வாக்கிங் செல்பவர்கள் மிக அதிகம். டிசம்பர் 21ம் தேதி மாலை அலுவலகம் முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருக்கும் போதே வட திசை நோக்கிச் செல்லும் கார் பயணிகள் ஏற்படுத்திய ட்ராபிக் ஜேம் நீண்டு இருந்ததைப் பார்த்துக் கொண்டே எதிர் முனையில் நான் வந்ததையும் இப்போது நினைத்துப் பார்க்கின்றேன்.

ஜெர்மனியில் வாழ்பவர்கள் பனிக்கால விளையாட்டு, ஓய்வு என பயணிக்க அதிகம் விரும்புவது ஜெர்மனியின் தெற்குப் பகுதியாகிய அல்கோய் (Algaue), பவேரிய மானிலத்தின் ஆல்ப்ஸ், ஆஸ்திரியா, ப்ரான்ஸ் மலைத்தொடர்கள், சுவிஸர்லாந்து ஆல்ப்ஸ் மலைப்பகுதிகள் ஆகியவையே. இங்குள்ள விடுமுறை கால விடுதிகள் எல்லாமே டிசம்பர் மாதம் தொடங்கி மார்ச் வரை சுற்றுப்பயணிகளால் நிறைந்திருக்கும்.

நான் க்ரோஸ் கண்ட்ரி வாக்கிங் கற்றுக் கொண்டது 6 ஆண்டுகளுக்கு முன்னர். அதுவும் ஆஸ்திரியாவின் சால்ஸ்பூர்க் மானிலத்தில் ஒரு விடுமுறையின் போது. 1 மணி நேர பயிற்சி மேற்கொண்டேன். பல முறை பயத்தால் கீழே விழுந்து விழுந்து எழுந்தேன். ஆனாலும் இந்த விளையாட்டின் மேல் உள்ள ஆசை குறையவில்லை. அதன் பின்னர் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும். எங்காவது க்ரோஸ் கண்ட்ரி வாக்கிங் செல்வது என்பது பழக்கமாகி விட்டது. சென்ற ஆண்டு ஆஸ்திரியாவின் டிரோல் (Tirol) - ஊஸ்டால் பகுதியில் சில நாட்கள் விடுமுறையின் போது க்ரோஸ் கண்ட்ரி வாக்கிங் செய்தது மகிழ்ச்சி அளித்தது. அதனை நினைத்து இந்த ஆண்டும் ஆஸ்திரியாவிலேயே வேறொரு பகுதிக்குச் சென்று விடுமுறை கழித்து வரலாம் என திட்டமிட்டபோது டிரோல் ரோய்ட்ட பகுதியில் கிடைத்த ஒரு விடுமுறை பேக்கேஜை பதிவு செய்து கொண்டோம், அதுவும் இறுது நேரத்தில். குறை பட்டுக் கொள்ள முடியாத விலையில் காலை மாலை உணவு, தங்கும் வசதி, விதம் விதமான சவ்னா, நீச்சல் குளம் அருகாமையில் என சில அடிப்படை வசதிகளோடு தங்கும் விடுதியின் அருகாமையிலேயே க்ரோஸ் கண்ட்ரி வாக்கிங் செல்வதற்கான பாதையும் அமைத்திருந்தார்கள் என்பது சிறப்பாக அமைந்தது.கிறிஸ்மஸ் விடுமுறை விட்ட கையோடு என்னோடு ஒட்டிக் கொண்ட காய்ச்சலோடு டிரோல் நோக்கி பயணித்தோம். நான் இருக்கும்  ஊரான லியோன்பெர்க்கிலிருந்து ரோய்ட்ட நகரம் 252 கிமீ தெற்குப் பகுதியில் உள்ளது. அதனால் வாகனத்திலேயே இரண்டரை மணி நேரம் பயணித்து தங்கும் விடுதியை வந்தடைந்தோம்.

தங்கும் விடுதி வந்தடைந்து பதிவுகளைச் சரிபார்த்து முடித்து தயாரானதும் ஏழு நாட்களுக்கான ஒரு திட்டத்தைத் தீட்டினோம். ஏறக்குறைய இந்தத் திட்டப்படி செயல்படலாம் என முடிவானது. தினமும் க்ரோஸ் கண்ட்ரி வாக்கிங் செல்வது என்பது உடலுக்கு அசதியைத் தரும் என்பதால் திட்டத்தை அலுப்பும் அசதியும் தராத வகையில் அமைத்துக் கொண்டோம்.க்ரோஸ் கண்ட்ரி வாக்கிங் செல்வதற்கு முதலில் நல்ல பனி வேண்டும் .அதுவும் உலர்ந்து கரையும் பனிபோல இல்லாமல், அல்லது கடினமான இறுகிப் போன பனிபோல இல்லாமல் மெத்து மெத்தென்று பஞ்சு போல இருக்கும் பனி  அவசியம்.

நாங்கள் ரோய்ட்ட நகரை அடைந்த நாளில்  3 டிகிரி செல்சியஸாக குளிர் அமைந்திருந்தது. இது பனிக்கு உகந்ததல்ல. ஆனால் நிலமை மாறலாம் என்ற எதிர்பார்ப்பை நாங்கள் விடவில்லை.

தொடரும்...

அன்புடன்
சுபா

No comments:

Post a Comment