Wednesday, January 2, 2013

நானும் காரைக்குடிக்குப் போன கதை... 20


மூன்று நாட்கள் காரைக்குடிக்குப் போனதை ஒரு பெரிய கதை போலச் சொல்லிக் கொண்டிருக்கின்றேனோ என்ற எண்ணம் அவ்வப்போது மனதில் வந்தாலும் நினைத்துப் பார்க்கும் போதே கோர்வையாக மனதில் எழுகின்ற அந்த நினைவுகளைப் பதிவதிலும் சுகம் இருக்கின்றது. அதனால் மேலும் தொடர்கின்றேன்.

காரைக்குடியில் மூன்றாம் நாள்.

எனது காரைக்குடிக்கானப் பயணத்தின் இறுதி நாள் இன்று. மாலை 8:30 அளவில் எனக்கு சென்னைக்குச்  செல்வதற்கான ரயில் டிக்கெட்டை ஏற்கனவே காளைராசன் எடுத்து வைத்திருந்தார்.  ஆக இரவு 8க்குள்  ஏதாகினும் முக்கிய இடங்களுக்குச் சென்று பதிவுகள் செய்து வர வேண்டும் என்று திட்டமிட்டோம்.

காலையில் காளைராசன் தம் துனைவியார் செய்து கொடுத்து அனுப்பிய காலைப்பலகாரங்களுடன் வந்து சேர்ந்தார். காளைராசனின் துணைவியாரின் கை மனத்தை காலை உணவில் ரசித்து ருசித்தோம். கொடுத்து வைத்தவர் காளைராசன். சுவையாக சமையல் செய்யக் கூடியவர் அவர் துணைவியார் என்பதை எங்களுக்கு வந்திருந்த அந்தக் காலை பலகாரங்களை ருசித்த போதே தெரிந்து கொண்டேன்.

அன்று எங்கு செல்லலாம் என யோசித்த போது சில இடங்கள் செல்ல  என வரை படத்தை வைத்துக் கொண்டு ஆராய்ந்தோம். திருப்பத்தூர் கூட செல்லலாமா என்ற எண்ணம் வந்தது. இறுதியில் காரைக்குடியிலிருந்து புறப்பட்டு நேராக திருமலை செல்வது. பின்னர் அதனை முடித்து விட்டு எப்படி வசதி அமைகின்றதோ அதன் படி செய்வோம் என முடிவானது. நா.கண்ணனுக்கு அவரது  சொந்த ஊரான நாட்டரசன் கோட்டைக்கும் சென்று வர வேண்டும் என்ற ஆவல் இருந்ததால் அதனையும் அன்றே முடிந்த வரை பார்ப்போம் என்று முடிவானது.

சற்று நேரத்தில் எங்களை அழைத்துச் செல்ல தனது வாகனமோட்டியுடனும் வாகனத்துடனும் வந்து சேர்ந்தார் டாக்டர். வள்ளி.

திருமலைக்குச் செல்வதற்கு சற்று அதிக நேரம் எடுத்தது என்றே சொல்வேன். ஆனால் வழி நெடுக பேசிக் கொண்டே நாங்கள் சென்றதால் நேரம் போனதே தெரியவில்லை.

ஒரு வழியாக திருமலை வந்து சேர்ந்தோம்.

இயற்கை அழகை பார்த்து ரசிக்க வேண்டுமா..?

காரை எடுத்துக் கொண்டு நேராகத்  திருமலைக்குச் செல்லுங்கள் என்று சொல்வேன். என்னைக் கேட்டால் அங்கேயே ஒரு அழகான சிறிய வீட்டைக் கட்டிக் கொண்டும் வாழ்ந்து விடுவேன். அவ்வளவு அழகு!

பார்க்கும் இடமெல்லாம் பச்சை பசேலன நெல்பயிர்கள்... தாமரை மலர்கள் நிறைந்த குளம். அங்கொன்றும் இங்கொன்றுமாக தாமரை மலர்கள்.

வயலில் உழைத்து விட்டு நடந்து செல்லும் மூதாட்டி. துள்ளித் திரிந்து விளையாடும் சிறுவர்கள். அழகான பாறைகள் நிறைந்த குன்றுகள். அங்கே ஒரு ஆலயம். இதற்கு மேல் வேறென்ன வேண்டும் ?

பசுமை



குளத்திற்குள்ளே  தாமரை மலர்கள்..!




குளத்திற்கு வெளியே தாமரை மலர்கள்..!


தொடரும்...

சுபா

No comments:

Post a Comment