Wednesday, May 16, 2012

லா பல்மாவில் நடையாக நடந்த கதை - 4

முதல் ட்ரேக்கிங் பயணம்
சைக்கிள் பயணம் செல்வதாக திட்டமிட்டிருந்தாலும் மலைகள் சூழ்ந்த லா பல்மா தீவில் அது அதிக பயிற்சி செய்தவர்களுக்கு சாத்தியப்படும் என்பதால் நாங்கள் அந்த முடிவை மாற்றிக்  கொண்டோம். கையோடு கொண்டு சென்றிருந்த லா பல்மா கையேட்டில் 20 சிறந்த ட்ரேக்கிங் பாதைகள் பற்றிய தகவல்கள் வழங்கப்பட்டிருந்தன. அவை ஒவ்வொன்றும் ஒரு நாள் பயணம் என்ற வகையில் திட்டமிடப்பட்டிருந்தவை. அந்த வகையில் எங்கள் தங்குமிடத்திற்கு அருகாமையிலேயே முதல் பயணத்தை மேற்கொள்ள முடிவு செய்து கொண்டோம். முதல் பயணம் கல்டேரா டி டப்ரியெண்ட (Caldera de Tabriente) மலைத்தொடரின் நடுப்பகுதியைல் அமைந்த ஒன்று.

இப்படத்தில் La Caldera de Tabriente  என்ற பகுதியின் அடிவாரம் தான் நாங்கள் முதல் ட்ரேக்கிங் பயணம் செய்த இடம்

கல்டேரா டி டப்ரியெண்ட மத்தியில் எரிமலையின் வெடித்த பள்ளம் அமைந்துள்ளது. அதனைச் சுற்றி 9 கிமீ நடைப்பயனம் இது. 

எங்கள் வாகனத்தை இந்தப் பயண வழிகாட்டியில் குறிப்பிட்டிருந்தது போல தொடக்கப் பகுதியில் ஆரம்பிக்காமல் சுற்றுலா பயணிகள் அலுவலகம் இருக்கும் இடத்தின் ஆரம்பத்திலேயே நிறுத்தி விட்டு அங்கிருந்தே செல்வோம் என முடிவு செய்தோம். இதற்கு காரணம் முதலில் 9 கிமீ தூரம் என்றவுடன் இது 3 மணி நேரங்களில் முடித்து விடக்கூடிய ஒன்றுதானே. அதிலும் பைன் மரங்களாக நிறைந்திருக்கும். ஆனால் கீழேயிருந்து பார்த்துக் கொண்டே சென்றால் வித்தியாசமான நிலப்பரப்பையும் பார்த்த மாதிரியிருக்கும் என்று நினைத்து  சுற்றுலா பயணிகள் அலுவலகம் இருக்கும் இடத்திலிருந்து தொடங்கினோம். இது எல் பாசோ (El Paso)  என்ற நகரில் உள்ளது. சாலையில் செல்லும் போதே இந்த சுற்றுலா பயணிகள் அலுவலகம் இருக்கும் இடத்திற்கான குறிப்பும் வழங்கப்பட்டிருக்கின்றது.

வாகனத்தை அங்கே நிறுத்தி விட்டு பயணத்தைத் தொடங்கினோம்.

கல்டேரா டி டப்ரியெண்டட்ரேக்கிங் பயணம் ஆரம்பிக்கும் இடத்திற்கு இங்கிருந்து 6 கிமீ தூரம்.வழியில் தென்படும் பறந்த வெளிகள் அங்கு புல்மேய்ந்து கொண்டிருந்த மாடுகளை பார்த்துக் கொண்டே சென்றோம். 

Inline image 5

அச்சாலைகளில் இருந்த இல்லங்களிலெல்லாம் காக்டஸ் வகை செடிகள் வீட்டில் வளர்ப்பதைக் காண முடிகின்றது.

Inline image 6

இங்கு ஆரஞ்சு மரமும் சாத்துக்குடி மரமும் நன்கு விளைகின்றன. ஆக ஒவ்வொரு நிலம் உள்ள வீட்டிலும் மரம் முழுக்க ஆரஞ்சு பழங்கள் காய்த்து குலுங்குகின்ற மரங்களையும் மஞ்சள் நிற சாத்துக்குடி பழங்கள் காய்த்துக் குலுங்கும் மரங்களையும் காண முடிகின்றது. இது கண்கொள்ளாக் காட்சி.

Inline image 7

ஒரு வழியாக நடந்து கல்டேரா டி டப்ரியெண்ட மத்தியப் பகுதி ட்ரேக்கிங் ஆரம்பிக்கும் இடம் வந்து சேர்ந்தோம். அங்கு ஒரு ஆப்பிள் பழத்தைச் சாப்பிட்டு சற்று ஓய்வும் எடுத்துக் கொண்டு பயணத்தைத் தொடங்கினோம்.

இது சமமான தரை அல்ல. கொஞ்சம் கொஞ்சமாக மேலே செல்லும் ஒரு ட்ரேக்கிங் பாதை.

Inline image 8

பாதை மிகச் செம்மையாக அமைத்திருக்கின்றனர். அதிகமான வேலைப்பாடு இல்லை. ஆனால் சற்று பிடிகள் அமைத்து ஓரங்களைச் சரி செய்து சறுக்கலான பகுதிகளில் பெரிய கற்களைப் போட்டு செல்பவர்கள் பத்திரமாகச் செல்லும் வகையில் ஏற்படுத்தியிருக்கின்றனர். ஒரு வகையில் நாங்கள் செய்த ஐந்து வகை வெவ்வேறு ட்ரேக்கிங் பயணங்களில் இதுவே மிகச் சுலபமான பாதை என்று சொல்லலாம்.

Inline image 9

மேலே செல்லச் செல்ல பைன் மரங்களையும் எரிமலைச் கற்பாறைகளையும் பார்த்துக் கொண்டே செல்லலாம். ஏறக்குறைய 40% பாதை ஒருவர் செல்லக்கூடிய வகையில் அமைந்ததாக இருக்கின்றது. உயரம் செல்லும் போது மலைகளில் வளர்ந்துள்ள செடிகளின் தன்மை வேறுபடுவதைக் காண முடிகின்றது. கீழ்ப்பகுதியில் இருந்த காக்டஸ் வகைச் செடிகள் மேலே செல்லச் செல்ல இல்லாமல் குறைந்து விட்டன என்று சொல்லலாம்.

நாங்கள் காலை 10 மணியளவில் பயணத்தைத் தொடக்கியதால் மதியம் இரண்டு மணியளவில் சென்றடைய வேண்டிய பகுதியை அடைந்தோம். இது கல்டேரா டி டப்ரியெண்ட்-வின் நேஷனல் பார்க் என்பதால் இங்கு கடைகளோ விற்பனை நிலையங்களோ ஏதும் கிடையாது. இயற்கை.. இயற்கை.. இயற்கை.. அது மட்டுமே!


வழியில் வரும் போது ஒரு சற்று வயதான ஜெர்மானிய தம்பதிகளைச் சந்தித்தோம். இடையில் நின்று சிறுது அளவலாவி விட்டு பயணத்தைத் தொடர்ந்தோம். மீண்டும் வழியில் மற்றுமொரு ஜோடி நடந்து சென்று கொண்டிருந்தனர். இதைத் தவிர ஆட்களையே அங்கே காண முடியவில்லை. 

Inline image 10
அன்று சீதோஷ்ணம் கீழ்ப்பகுதியில் 24 டிகிரி இருந்தது. ஆனால் மேலே செல்லச் செல்ல குறைந்து 18 டிகிரி வரை சென்றது.  இந்த மாதத்தில் ஏறக்குறைய இவ்வகை சீதோஷ்ணம் தான் எல்லா கனேரித் தீவுகளிலும் அமைந்துள்ளது.

மேலும் சில படங்கள்..
































அன்புடன்
சுபா




Tuesday, May 15, 2012

லா பல்மாவில் நடையாக நடந்த கதை - 3


நிலவு தோன்றுதலும் சூரியன் மறைதலும்


நிலவு தோன்றுவதும் சூரியன் மறைவதும் எல்லா இடங்களிலும் நடப்பதுதானே. இதனை லா பல்மாவில்  இருந்த ஒரு நாள் ஒரு மாலையில் ஏறக்குறை 30 நிமிட இடைவேளையில் பதிவாக்கினேன். முதலில் மேகங்களிலிருந்து வெளி வந்து எட்டிப் பார்க்கும் நிலவு.


மேகக்கூட்டம் விலகி விட தெளிவாகத் தெரியும் நிலவு.


சில நிமிடங்களில் சூரியன் மறைகின்றது.




தென்னைமரங்கள் இருப்பதும் மறையும் சூரியனின் அழகை மேலும் அதிகரிப்பதாகத் தான் உள்ளது.






சூரியனை மிக அருகாமையில் பார்க்க எடுத்த முயற்சி!



சூரியன் கடலுக்குள் புதைந்து கொள்கின்றதா..?



மழை மேகம் சூழ்ந்தாலும் சூரியனின் எழில் மிகு வடிவம் தன்னை முழுதாக மறைத்துக் கொள்ள வில்லை. பேரழகு!


Monday, May 14, 2012

லா பல்மாவில் நடையாக நடந்த கதை - 2


வாழையோ வாழை



கீழே படத்தில் காண்பதுதான் லா பல்மா தீவு. சுற்றிலும் அட்லாண்டிக் சமுத்திரம் சூழ்ந்துள்ளது. இதன் தலைநகரம் சாண்டா க்ரூஸ் (Santa Cruz). விமான நிலையம் இருப்பது சாண்டா க்ரூஸ் நகருக்கு அருகிலேயே. நாங்கள் தங்குவதற்கு தீவின் மேற்குப் பகுதியில் லோஸ் லியானோஸுக்கு (Los Lianos de Ariadne) கீழே அமைந்துள்ள போர்ட்டா நாவோஸ் நகரில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் பதிவு செய்திருந்தோம். விமான நிலையத்தில் வந்திறங்கி வாடகைக் கார் எடுத்துக் கொள்ளும் இடத்தில் ஏற்கனவே முன்பதிவு செய்து வைத்திருந்த வாகனத்தை எடுத்துக் கொண்டு போர்ட்டா நாவோஸ் நோக்கி புறப்பட்டோம். ஏறக்குறைய 35 நிமிட பயணம். மலைகளைச் சுற்றிக் கொண்டு வளைந்து நெளிந்து செல்லும் பயணம்.





விமானம் லா பல்மா தீவை நெறுங்குபோதே வரிசை வரிசையாகப் பயிர்கள் பசுமையாக இருப்பதைக் காண முடிந்தது. அருகே வர வர அவை அனைத்தும் வாழை மரங்கள் என்பது தெரிந்தது. விமான நிலையம் மட்டுமல்ல, செல்லுமிடமெல்லாம் வாழை மர தோப்புக்கள். தோப்புக்கள் என்று மட்டுமில்லாமல் மலைகளின் அடிப்பகுதிகளில் கூட வரிசை வரிசையாக பாதை அமைத்து வாழை மரங்கள் நடப்பட்டுள்ளன.





தங்கும் விடுதியை வந்தடைந்து அதற்கு உள்ளே செல்லும் பாதையில் நுழைந்தால் அங்கேயும் வாழை மரங்கள். இதில் ஆச்சரியம் என்னவென்றால் எங்களுக்கு பதிவாகியிருந்த ஸ்டூடியோ வகையிலான அறை இறுதி வரிசை கட்டிடத்தில் இந்த வாழைத் தோப்பை பார்த்த மாதிரி அமைந்தது தான். பச்சை பசேலென வாழைத் தார்களும் வாழைப்பூவுமாக பார்க்குமிடமெல்லாம் நிறைந்திருக்கும் வாழை மரங்களைப் பார்த்துக் கொண்டே எங்களுக்கு ஒவ்வொரு நாளும் கழிந்தது.




நாங்கள் மட்டும் இந்த வாழைத் தோப்பைப் பார்த்து ரசிக்கவில்லை. புறாக்களும் கூடத்தான். எங்கள் அறையின் முன்னே அமர்ந்து ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் ஒரு புறா கீழே படத்தில்.




இந்தத் தீவில் பல வகை கனிகள் கிடைக்கின்றன. அவற்றைப் பற்றிய விபரங்களை அடுத்தடுத்த பதிவுகளில் இணைக்கின்றேன். வருஷம் முழுதும் இங்கே பழங்களுக்கும் காய்கறிகளுக்கும் பஞ்சமில்லை எனலாம். வருஷம் முழுதும் சீதோஷ்ண நிலை 15 டிகிரியிலிருந்து 28 டிகிரி வரையில் இருப்பதால் பயிர்களின் விளைச்சளுக்கு சீதோஷ்ணமும் தோதாக அமைந்திருக்கின்றது. அதோடு எரிமலையின் லாவா மண்ணாக இத்தீவு முழுவதும் இருப்பதால் அவை தாவரங்கள் பயிரிடுவதற்கு ஏற்ற வகையில் அமைந்திருக்கின்றன.





வாழைப் பழங்கள் காலை உணவில் அங்கம் வகிப்பதோடு முழு பழத்தை பஜ்ஜி போன்ற வகையில் தயாரித்து அதில் தேன் ஊற்றி வைத்து சாப்பிடுவதும் ஒரு வழக்கமாக இங்கே இருக்கின்றது. சுவையான இந்த இனிப்புப் பலகாரம் பரவலாக ரெஸ்டாரண்ட் மெனு அட்டைகளில் இடம்பெறுகின்றன. இது மலேசியாவில் கிடைக்கும் சூச்சோர் பீசாங் இனிப்பு வகையை ஒத்ததாக இருக்கின்றது. என்ன வித்தியாசம் என்றால் அங்கே தேன் விட்டு சாப்பிடுவதில்லை. இங்கே தேனை ஊற்றி அதில் இந்த வாழைப்பழ பஜ்ஜியைத் தோய்த்து சாப்பிடும் வழக்கம் இருக்கின்றது.

தொடரும்...
சுபா

Sunday, May 13, 2012

லா பல்மாவில் நடையாக நடந்த கதை -1


Apr 24 - May 08, 2012

லா பல்மாவில் சில நாட்கள் சுற்றிய கதையை உங்களிடம் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கின்றேன்.

ஆப்பிரிக்க கண்டத்தின்  வடக்கில் மேற்குப் பகுதியில் மரோக்கோவிற்கு சற்றே தூரத்தில், ஐரோப்பிய கண்டத்தின் கீழ் பகுதியில் அமைந்துள்ளன கனேரித் தீவுகள். இந்த தீவுக் கூட்டத்தில் ஒன்று தான் லா பல்மா. இந்த கனேரித் தீவு கூட்டத்தில் லா பல்மா, பூட்டர்வெண்டுரா, தெனெரிஃப, க்ரேன் கனேரியா, லான்ஸ்ரோட்ட, லா கொமேரா, எல் ஹியரோ, லா க்ரேசியோசா, அல் க்ரான்ஸா, ஐல் டி லாபோஸ், மொண்டானா க்ளாரா, ரோக் டெ எல்ஸ்டா, ரோக் டெல் ஒஸ்டெ ஆகிய தீவுகள் உள்ளன. இவற்றில் ஏற்கனவே நான் லா கொமேரா, க்ரேன் கானேரியா, தெனெரிஃப ஆகிய தீவுகளில் சில நாட்களை கடந்த ஆண்டுகளில் கழித்திருக்கின்றேன். இந்த தீவுகள் அனைத்தும் ஸ்பெயின் நாட்டைச் சார்ந்தவை.ஆக, சந்தேகமில்லாமல் ஸ்பானிஷ் மொழிதான் இந்த மக்கள் பேசும் அதிகாரப்பூர்வ மொழியாக அமைகின்றது.




ஜெர்மானியர்கள் சுற்றுலா செல்வதில் வல்லவர்கள். அதிலும் குறிப்பாக தெற்கு இத்தாலி, கிரேக்கம், தெற்கு துருக்கி, கனேரி தீவுகள் போன்றவற்றில் ஜெர்மானியர்களின் வருகை ஆண்டு முழுதும் நிறைந்திருக்கும். இதனை நிரூபிக்கும் நிலையாக நான் இதுவரை சென்று வந்துளள்ள  மூன்று தீவுகளிலும் ஸ்பெயின் மொழிக்கு அடுத்த நிலையில் அதிகம் புழங்கப்படுவதும் எல்லா அரசாங்க இடங்களிலும் பயன்படுத்தப்படும் நிலையிலும் டோய்ச் மொழி அமைந்திருப்பதை நேராகப் பார்த்து அறிந்து கொள்ள முடிந்தது. டோய்ச் மொழியில் பேச வாய்ப்பமைந்ததால் உரையாடலுக்கும் எனக்கு இத்தீவுகளில்  பிரச்சனை இல்லாமல் போய் விட்டது பெரிய அனுகூலமாக அமைந்தது எனலாம்.

நான் 2 மாதங்களுக்கு முன்னரே இந்த பயணத்திற்கு ஏற்பாடு செய்திருந்தேன் இப்பயணத்தில் ஐந்து முறை நீண்ட மலைப்பகுதி நடையை நான் இருவரும் மேற்கொண்டேன். ஐந்துமே ஐந்து வகை வித்தியாசமான அனுபவங்களை எங்களுக்குத் தந்தது. இவற்றை சற்று விளக்கி இந்தத் தீவை மின் தமிழ் வாசகர்களுக்கு சற்றே அறிமுகப்படுத்தலாம் என்பதே எனது இந்த இழைக்கான அபிப்ராயம். இயற்கை விரும்பிகளுக்கு கண்கொள்ளாக் காட்சிகளாக சில நல்ல புகைப்படங்களை வழங்கலாம் என்றும் நினைத்திருக்கின்றேன்.




ஒவ்வொரு பயனத்தின் போதும் என் பயணப் பெட்டியில் சில நூல்கள் இருக்கும். இந்த முறை 3 நூல்களைக் கையோடு கொண்டு சென்றிருந்தேன். அவை மூன்றையும் படித்தாகி விட்டதில் எனக்கும் மகிழ்ச்சி. அதில் ஒன்று உ.வே.சாவின் "என் சரித்திரம்". 3 ஆண்டுகளுக்கு முன்னர் வாங்கிய நூல். இப்போதுதான் வாசிக்கும் வாய்ப்பு அமைந்தது. ஓலைச் சுவடி என பேச்சு ஆரம்பித்தாலே உ.வே.சா வின் பெயர் நம் மனக்கண் முன்னே ஓடும். அவரது சொந்த எழுத்திலேயே அவர் சரிதம் படிக்கும் போது சொல்லொணாத உவகை ஏற்படுகின்றது. வாசித்து முடித்த போது உ.வே.சா என்னும் ஒரு தமிழ்மாணவர்/அறிஞர், மீனாட்சி சுந்தரம் பிள்ளை எனும் ஒரு பேரறிஞர், உ.வே.சாவுக்கும் மீனாட்சி சுந்தரம் பிள்ளைக்கு இருந்த விலை மதிக்க முடியாத அன்பு, இவர்களுக்கிடையிலான ஆசிரிய மாணவர் உறவு, தந்தை மகற்காற்றும் உதவி, சிந்தாமணி பதிப்புக்கு உ.வே.சாவின் தளரா முயற்சியும் உழைப்பும், திருவாவடுதுறை சைவ மடத்தின் பெருஞ் சிறப்பு, மடாதிபதி சுப்ரமணிய தேசிகரின் தமிழ்ப்பணியும் சிறப்புக்களும், மணிமேகலை பதிப்பு, அக்காலத் தமிழ்க் கல்வியின் தரம் நிலை போன்றவை மிகத் தெளிவாக நம் கண் முன்னே தெரிகின்றன. அவ்வளவு உயிரூட்டமுள்ள வரிகள் ஒவ்வொன்றும். இதனை வாசித்த போது தனியாக ஒரு இழை தொடங்கி என் சரித்திரத்தில் என் மனதை கவர்ந்த சில பகுதிகளைப் குறிப்பிட்டு மின் தமிழ் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் எனத் தோன்றியது. அந்த இழை விரைவில் மின் தமிழில் தொடங்கும்.

இனி சில லா பால்மா காட்சிகளையும் செய்திகளையும் தொடர்ந்து இந்த இழையில் வழங்குகின்றேன்.




அன்புடன்
சுபா