Monday, May 14, 2012

லா பல்மாவில் நடையாக நடந்த கதை - 2


வாழையோ வாழைகீழே படத்தில் காண்பதுதான் லா பல்மா தீவு. சுற்றிலும் அட்லாண்டிக் சமுத்திரம் சூழ்ந்துள்ளது. இதன் தலைநகரம் சாண்டா க்ரூஸ் (Santa Cruz). விமான நிலையம் இருப்பது சாண்டா க்ரூஸ் நகருக்கு அருகிலேயே. நாங்கள் தங்குவதற்கு தீவின் மேற்குப் பகுதியில் லோஸ் லியானோஸுக்கு (Los Lianos de Ariadne) கீழே அமைந்துள்ள போர்ட்டா நாவோஸ் நகரில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் பதிவு செய்திருந்தோம். விமான நிலையத்தில் வந்திறங்கி வாடகைக் கார் எடுத்துக் கொள்ளும் இடத்தில் ஏற்கனவே முன்பதிவு செய்து வைத்திருந்த வாகனத்தை எடுத்துக் கொண்டு போர்ட்டா நாவோஸ் நோக்கி புறப்பட்டோம். ஏறக்குறைய 35 நிமிட பயணம். மலைகளைச் சுற்றிக் கொண்டு வளைந்து நெளிந்து செல்லும் பயணம்.

விமானம் லா பல்மா தீவை நெறுங்குபோதே வரிசை வரிசையாகப் பயிர்கள் பசுமையாக இருப்பதைக் காண முடிந்தது. அருகே வர வர அவை அனைத்தும் வாழை மரங்கள் என்பது தெரிந்தது. விமான நிலையம் மட்டுமல்ல, செல்லுமிடமெல்லாம் வாழை மர தோப்புக்கள். தோப்புக்கள் என்று மட்டுமில்லாமல் மலைகளின் அடிப்பகுதிகளில் கூட வரிசை வரிசையாக பாதை அமைத்து வாழை மரங்கள் நடப்பட்டுள்ளன.

தங்கும் விடுதியை வந்தடைந்து அதற்கு உள்ளே செல்லும் பாதையில் நுழைந்தால் அங்கேயும் வாழை மரங்கள். இதில் ஆச்சரியம் என்னவென்றால் எங்களுக்கு பதிவாகியிருந்த ஸ்டூடியோ வகையிலான அறை இறுதி வரிசை கட்டிடத்தில் இந்த வாழைத் தோப்பை பார்த்த மாதிரி அமைந்தது தான். பச்சை பசேலென வாழைத் தார்களும் வாழைப்பூவுமாக பார்க்குமிடமெல்லாம் நிறைந்திருக்கும் வாழை மரங்களைப் பார்த்துக் கொண்டே எங்களுக்கு ஒவ்வொரு நாளும் கழிந்தது.
நாங்கள் மட்டும் இந்த வாழைத் தோப்பைப் பார்த்து ரசிக்கவில்லை. புறாக்களும் கூடத்தான். எங்கள் அறையின் முன்னே அமர்ந்து ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் ஒரு புறா கீழே படத்தில்.
இந்தத் தீவில் பல வகை கனிகள் கிடைக்கின்றன. அவற்றைப் பற்றிய விபரங்களை அடுத்தடுத்த பதிவுகளில் இணைக்கின்றேன். வருஷம் முழுதும் இங்கே பழங்களுக்கும் காய்கறிகளுக்கும் பஞ்சமில்லை எனலாம். வருஷம் முழுதும் சீதோஷ்ண நிலை 15 டிகிரியிலிருந்து 28 டிகிரி வரையில் இருப்பதால் பயிர்களின் விளைச்சளுக்கு சீதோஷ்ணமும் தோதாக அமைந்திருக்கின்றது. அதோடு எரிமலையின் லாவா மண்ணாக இத்தீவு முழுவதும் இருப்பதால் அவை தாவரங்கள் பயிரிடுவதற்கு ஏற்ற வகையில் அமைந்திருக்கின்றன.

வாழைப் பழங்கள் காலை உணவில் அங்கம் வகிப்பதோடு முழு பழத்தை பஜ்ஜி போன்ற வகையில் தயாரித்து அதில் தேன் ஊற்றி வைத்து சாப்பிடுவதும் ஒரு வழக்கமாக இங்கே இருக்கின்றது. சுவையான இந்த இனிப்புப் பலகாரம் பரவலாக ரெஸ்டாரண்ட் மெனு அட்டைகளில் இடம்பெறுகின்றன. இது மலேசியாவில் கிடைக்கும் சூச்சோர் பீசாங் இனிப்பு வகையை ஒத்ததாக இருக்கின்றது. என்ன வித்தியாசம் என்றால் அங்கே தேன் விட்டு சாப்பிடுவதில்லை. இங்கே தேனை ஊற்றி அதில் இந்த வாழைப்பழ பஜ்ஜியைத் தோய்த்து சாப்பிடும் வழக்கம் இருக்கின்றது.

தொடரும்...
சுபா

2 comments:

விச்சு said...

முக்கனிகளில் ஒன்றான வாழை. தேனும் வாழையும் நல்ல காம்பினேஷன். மேலும் பல புதிய செய்திகளை எழுதுங்கள்.கருத்துரை இடும்போது வரும் Word verfication நீக்கிவிட்டால் நன்றாக இருக்கும்.

Anonymous said...

வாழைத் தோப்பு வைப்பது நல்ல வியாபாரமும் கூட. இந்த தீவு எந்த நாட்டின் அருகில் இருக்கிறது? பெயரைப் பார்த்தால் பிரெஞ்சு காலனி போல தோன்றுகிறது.

Post a Comment