Friday, November 28, 2014

புத்தரின் பூமி....தாய்லாந்து! பயணத் தொடர் - 13

மதிய உணவு முடித்து வெளியே வரும் போது மதியம் மூன்று மணி ஆகிவிட்டது. அங்கிருந்து எங்கள் பயணம் அடுத்து சுக்கோத்தை நகரை நோக்கிச் செல்வதாக பயணத்திட்டம். சுக்கோத்தை நகரில் ஒரு நாள் இருக்க வேண்டுமென்றால் அங்கே சுக்கோத்தை நகரிலேயே இரவில் தங்கி விடுவதுதான் சிறப்பாக இருக்கும் என்று பயண நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது.


​சுக்கோத்தையில் தங்கும் விடுதி

பயண ஏற்பாடு ஒவ்வொன்றும் மிகக் கவனமாக நேர விரயம் ஏற்படா வகையில் திட்டத்தில் பட்டியலிடப்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் சென்று பார்த்து வரும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. இதனை கவனத்தில் கொண்டு பஸ் ஓட்டுனர், உதவியாளர், எங்கள் பயண வழிகாட்டி ஆகிய அனைவருமே செயல்பட்டனர்.


வாசல் பகுதியில்


ஏறக்குறைய இரண்டரை மணி நேரங்களுக்குப் பிறகு நாங்கள் சுக்கோத்தை நகரை வந்தடைந்தோம். அங்குள்ள  ஹோலிடே இன் ஹோட்டலில் எங்களுக்கான தங்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சுக்கோத்தை மைய நகருக்கு சற்று தள்ளியே இப்பகுதி. ஆகையால் மாலை ஹோட்டலிலேயே இருந்து ஓய்வெடுக்கும்படி எங்கள் பயண வழிகாட்டி தெரிவித்திருந்தார். அங்கே ஜிம், நீச்சல் குளம் ஆகியனவும் இருந்தன. மாலை உணவை சாப்பிட வெளியே செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்ற வகையில் ஹோட்டலிலேயே சிறப்பான ரெஸ்டாண்டும் இருந்தது.



கொய் தியாவ் அரிசி மாவினால் செய்யப்பட்ட நூடல் வகை.. மற்றும் காய்கள்

அந்த ஹோட்டல் ஒரு 5 நட்சத்திர ஹோட்டல். கலை நயத்துடன் உருவாக்கப்பட்டது. நானும் 1 மணி நேரம் உடற்பயிற்சி மேற்கொண்டு சற்று ஓய்வெடுத்த பின்னர் அங்கேயே  மாலை உணவுக்கு சென்றே. என்னுடன் வந்திருந்த மேலும் சிலரும் அங்கிருக்க ஒரு சிலர் என்னுடன் இணைந்து கொண்டனர்.  கொய்தியாவ் வகை நூடல் மெனுவில் இருக்க அதனை நான் ஆர்டர் செய்திருந்தேன். மிக அழகாக வாழை இலையில் சுற்றி வைக்கப்பட்டு பரிமாறப்பட்டது. ரசித்து ருசித்து சாப்பிட்டேன். ஆசிய வகை உணவுகளுக்கு ஈடு சொல்ல உலகில் வேறு உணவே இல்லை என தாராளமாகச் சொல்வேன். தாய்லாந்து உணவின் சுவை தனித்துவம் மிக்கது என்பதில் சந்தேகமில்லை.


காலை உணவு

காலை உணவு பஃபெட் முறையில் ஏற்பாடு செய்திருந்தார்கள். அங்கேயே உணவு உண்டு பிறகு சுக்கோத்தை நகருக்குச் செல்ல வேண்டும்.

ஒரு நாள் தான் இந்தஹோட்டலில் எங்கள் வாசம். நாடோடிகள் போல கொண்டு வந்த பைகளை எடுத்துக் கொண்டு ஒவ்வொருவரும் எங்கள் பயண பேருந்தின் முன் வந்து நின்று கொண்டோம்.
சரியாக குறிப்பிட்ட நேரத்தில் எங்கள் பேருந்து சுக்கோத்தை நகர மையத்தை நோக்கிப் புறப்பட்டது.

சுக்கோத்தை.. ஒரு சுவர்க்கபுரி. என் வாழ்நாளில் நான் பார்த்து மகிழ்ந்து அங்கேயே இருக்கச் சொன்னால் இருந்து விடக்கூடிய ஒரு நகரம்.. அங்கே கால் பதிந்த நொடிமுதல் நான் 16ம் நூற்றாண்டுக்கே சென்று விட்டேன்.

அனந்தசயனத்தில், தியான வடிவத்தில் . யோக முத்திரையுடன், நின்ற வடிவத்தில், போதனை வழங்கும் வடிவத்தில் புத்தரை நான் பார்த்திருக்கின்றேன். இங்கே.. சுக்கோத்தையில் தான்  நடக்கும் நிலையில் புத்தரின் சிலை இருக்கின்றது. இந்த அற்புத சிலை இருக்கும் சுக்கோத்தை வரலாற்று பூங்காவைக் காண அடுத்த பதிவில் உங்களை அழைத்துச் செல்கின்றேன். இப்போது அந்தச் சிலையை மட்டும் பார்ப்போமே..!


சுக்கோத்தை புத்தரின் அழகிய காட்சி


தொடரும்...
சுபா

Wednesday, November 19, 2014

காண்டெபெரி - யாத்திரை செல்வோமா..! - 7

தோமஸ் பெக்கட் கொல்லப்பட்ட செய்தி அறிந்து அதிரிச்சியடைந்து ஏனைய பாதிரிமார்கள் அவர் கொல்லப்பட்ட இடத்திற்கு விரைந்தனர். இறந்த தோமஸ் பெக்கட்டின் உடலை தூக்கிச் செல்ல எத்தணித்த நான்கு வீரர்களும் அவரது உடலின் மேல் போர்த்தியிருந்த பெரிய அங்கியை நீக்கினர். 




தோமஸ் பெக்கட்டின் முதுகுப்புறத்தின் மேலாடையைத் தாண்டி உடலின் மேலே புழுக்கள் ஊர்ந்து கொண்டிருந்தன. அவரது முதுகுப் புறமெல்லாம் புண் ரணமாகி சீழ் பிடித்து, மிகக் கோரமாக காட்சியளித்துக் கொண்டிருந்தது.

அவர் உடலை அப்படியே போட்டு விட்டு அங்கிருந்து அரசர் ஹென்றியைப் பார்த்து இவ்விஷயத்தைச் சொல்ல தங்கள் குதிரைகளில் இங்கிலாந்திலிருந்து ஃப்ரான்சிற்கு அன்று இரவே அந்நால்வரும் விரைந்தனர்.

கிறிஸ்துவ மதத்தின் ஒரு பிரிவினர், ஏசு கிறிஸ்து ஏனைய மக்களின் துயரைத் தாமே தாங்கி துயரப்பட்ட நிலையை நினைத்து தனக்குத் தாமே தண்டனை வழங்கிக் கொள்ளுதல் என்ற வகையில் உடலை வருத்தும் சில தண்டனைகளைத் தமக்குத் தாமே வழங்கிக் கொள்வது என்பது உண்டு. இதனை ஆங்கிலத்தில்  mortification of the  flesh என்று கூறுவர். தனது உடலை சாட்டையால் அடித்து புண்ணாக்குதல், சாக்கைக் கட்டிக் கொண்டு அதனையே உடையாக அணிந்து கொண்டு வாழ்தல், அடித்து தன்னைத் தானே துன்புறுத்திக் கொள்ளுதல், அடித்து தனது உடலை புண்ணாக்கி கிருமிகளும் புழுக்களும் உடலைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சாப்பிட அனுமதித்தல் என்ற வகையில் இந்த தனக்குத்தானே தண்டனை வழங்குதல் என்ற ஒரு சடங்கு மிகச் சிறு பாண்மை குழுவினரால மேற்கொள்ளப்படுவது.


காண்டபரி கத்தீட்ரல்

டான் ப்ரவுனின் டா வின்சி கோட் நூலை வாசித்தோரும் திரைப்படத்தைப் பார்த்தோரும் நிச்சயம் அக்கதையில் வருகின்ற ஒரு நிகழ்வை ஞாபகம் வைத்திருப்பீர்கள். அதில் வில்லனாக வரும் ஒரு இளைஞர் இப்படி தன்னை தனிமைப் படுத்திக் கொண்டு ஒவ்வொரு நாளும் சாட்டையால் தனது முதுகுப்புறத்தைத் தாக்கி தனக்குத் தானே துன்பம் கொடுத்துக் கொண்டு ஒரு நோக்கத்தை மனதில் கொண்டு செயல்பட்டு வருவார். அதுபோலத்தான் இந்த விஷயத்திலும்.

ஆனால் தோமஸ் பெக்கட் வெளியே மிக சாதுரியமான ஒரு ஆர்ச் பிஷப் என்ற பெயரில் உலா வந்தாலும் தனது சுய வாழ்க்கையில்  ஏசு பிரான் மீது அதீத பக்தி கொண்டு தனது உடலை தானே தண்டித்து ,ஏசு உலக மக்களுக்காக ஏற்றுக் கொண்ட வலியை தாமும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என தனது உடலை துன்பபபடுத்தி தினம் தினம் இறைவழிபாட்டில் தன்னை ஈடுபடுத்தியிருந்தார். இது வெளியில் யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. அவரது இறப்புக்குப் பின்னர் இச்செய்தி காட்டுத்தீ போல மிக விரைவாகப் பரவியது.


காண்டபரி கத்தீட்ரல் உள்ளே

மன்னர் ஹென்றி இச்செய்தி அறிந்து உடன் காண்டெபெரி திரும்பினார்.  தோமஸ் பெக்கட்டின் பூத உடலைக் காண மக்கள் கூட்டம் பெருகியது. இறைவனின் துன்பத்தைத் தானும் ஏற்றுக் கொண்டவர்.. மக்களுக்காக வாழ்ந்தவர் என்ற வகையில் தோமஸ் பெக்க்ட்டின் புகழ் விரிவாகப் பேசப்பட ஆரம்பித்து.

தோமஸ் பெக்கட்டின் இறுதிச் சடங்குகள் மன்னரால் சிறப்பாக செய்து முடிக்கப்ட்டன. அது முதல் காண்டபரி கத்தீட்ரல் புனித யாத்திரிகர்கள் வந்து செல்லும் தலமாக உருமாற்றம் கொண்டது. ஐரோப்பாவின் பல பாகங்களிலிருந்து மக்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருக்க காண்டபெரி நகரின் புகழ் ஐரோப்பா முழுதும் பரவியது.


மன்னர் 4ம் ஹென்றி, மனைவி ஜோஅன்னா

தோமஸ் பெக்கட்டின் பெயரால், தங்கும் விடுதிகளும், உணவு விடுதிகளும் பெருக ஆரம்பித்தன. இந்த வகையில் தோமஸ் பெக்கட் காண்டபெரி நகருக்கு தனிச்சிறப்பினை வழங்கிய உத்தமராக மக்களால் இன்றும் கருதப்படுகின்றார்.

சரி.. தோமஸ் பெக்கட் கதையைப் பார்த்து விட்டோம். இந்த ஊரில் இருக்கும் ஏனைய விஷயங்களைப் பற்றி அடுத்து சஸ்பென்ஸ் ஏதும் இல்லாமல் சாவகாசமாகப் பார்ப்போமே..

தொடரும்


சுபா

Monday, November 17, 2014

காண்டெபெரி - யாத்திரை செல்வோமா..! - 6

கதை என்றால் தாம் நாம் எல்லோருக்கும் பிடிக்குமே.. :-)
தோமஸ் பெக்கட் கதையை மீண்டும் தொடர்கின்றேன். தொடரின் முந்தைய பகுதிகளை வாசிக்க விரும்புவோர் ​http://subastravel.blogspot.com வலைப்பூ சென்று வாசிக்கலாம்.

தனது நண்பரான தோமஸ் பெக்கட் ஆர்ச்பிஷப்பாக இருந்தால் தமக்கு மத சம்பந்தப்பட்ட காரியங்களில் ஏதுவாக இருக்கும் என்ற ஒரு எண்ணம் மன்னர் ஹென்றிக்கு மனதில் அடிப்படையில் இருந்தமையால்தான் அடிப்படை தகுதிகள் முழுதும் பெறாத தோமஸ் பெக்கட்டை இப்பதவிக்குப் பரிந்துரைத்து போப்பின் சம்மதத்தையும் பெற்று பதவியில் அமர்த்தினார். ஆனால் அதன் பின்னர் நடந்தவை வேறாக அமைந்துவிட்டன.

பல மாற்றங்களை வழிபாட்டு அமைப்பின் மேலாண்மையில் அறிமுகப்படுத்தி மன்னரை விட அதிகாரம் பெறும் வகையில் தனது நிலையை வளர்த்துக் கொண்டு உயர ஆரம்பித்தார் பெக்கட். நிதி விவகாரங்களும் தலைதூக்க ஆரம்பித்தது. மன்னரின் செலவுகளையும் கேள்வி கேட்க ஆரம்பித்தார் பெக்கட். அச்சமயத்தில் பெக்கட்டை அரச ஆணைக்கு உட்படுத்தி விசாரிக்க வேண்டும் என மன்னர் ஹென்றி உத்தரவு பிறப்பிக்க, அதனைப் பார்த்த தோமஸ் பெக்கட் அன்று இரவே காண்டபெரியை விட்டு இங்கிலாந்திலிருந்து பெயர்ந்து ஃப்ரான்சிற்குச் சென்று விட்டார்.

இந்த மனக்கசப்பு தொடரக்கூடாது என நினைத்த மன்னர் ஹென்றி அவரைச் சந்திக்க ஏற்பாடு செய்ய, 1170ம் ஆண்டில் நோர்மண்டியில் மன்னர் ஹென்றியும் தோமஸ் பெக்கட்டும் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினர். இதன் விளைவாக நவம்பர் 30ம் தேதி தோமஸ் மீண்டும் காண்டபெரிக்குத் திரும்பி தனது பதவியை ஏற்றுக் கொண்டு ஆர்ச் பிஷப்பாகத் தொடர்ந்தார்.

தோமஸ் பெக்கட் காண்டபெரிக்குத் திரும்பி விட்டாலும் மன்னர் ஃப்ரான்ஸிலேயே அடுத்து சில நாட்கள்  தங்கிவிட்டார். தனது நெருக்கமான வீரர்கள் நால்வரிடம் பேசும் போது தோமஸ் பெக்கட் ஒழிந்தால் நன்றாக இருக்கும் என சொல்லியிருப்பார் போலும்.... மன்னரின் வாக்கை வேதவாக்காக எடுத்துக் கொண்டு 4 வீரர்களும் தோமஸ் பெக்கட்டை கொலை செய்யும் நோக்கத்துடன் இங்கிலாந்தின் காண்டபெரி நகரை நோக்கி குதிரையில் அன்று இரவே விரைந்தனர்.


ஆர்ச் பிஷப் மாளிகை.. இன்று சற்றே மேம்படுத்தப்பட்ட நிலையில்


ஆர்ச்பிஷப் தோமஸ் பெக்கட்டை பார்த்து மன்னரின் வருத்தத்தைத் தெரிவிப்பதோடு அவரை கொல்லவும் இந்த நான்கு வீரர்களும் தயாராக இருந்தனர். அவர்கள் வந்து சேர்ந்த போது நேரம் இரவாகி விட்டது. நால்வரும் ஆர்ஷ்பிஷப்பின் மாளிகை எதிர்புரத்தில் அமைந்திருக்கும் தங்கும் விடுதியில் தங்க வசதி செய்து கொண்டு அன்று இரவே தோமஸ் பெக்கட்டை கொன்று விடுவது என முடிவு செய்து கொண்டனர்.


மன்னரின் வீரர்கள் தங்கியிருந்த தங்கும் விடுதி .. இன்றும்

நால்வரும் இரவு வேளையில் ஆர்ஷ் பிஷப் மாளிகைக்கு வந்து கதவை தட்டி தாம் தோமஸ்பெக்கட்டை அரச ஆணையின் உத்தரவின் படி காண வேண்டும் என காவல் இருப்போரிடம் கேட்க அவர்கள் நால்வரும் ஏதோ பாதகம் விளைவிக்க வந்திருக்கின்றனர் என அறிந்த ஏனைய பாதிரிமார்கள் இந்த நால்வரையும் உள்ளே விட அனுமதிக்கவில்லை. கதவை பெரிய கம்பு கொண்டு தட்டி தட்டி அதிகமாக ஓசை எழுப்ப இந்தச் சந்தம் கேட்டு வந்த தோமஸ் பெக்கட் இந்த நால்வரையும் உள்ளே அனுமதிக்கக் கேட்டுக் கொண்டார். உள்ளே வந்த நால்வரும் தாம் அரச ஆணைப்படி தோமஸ் பெக்கட்டிடம் தனியாகப் பேச வேண்டும் எனக் கேட்க ஏனையோர் செல்லும்படி உத்தரவிட்டு அவர்களைத் தனிமையில் சந்திக்கின்றார் தோமஸ் பெக்கட்.

தனியாக இருக்கும் தமது உயிருக்கு ஆபத்து என்பதை இவர் அறிந்து கொண்டார். ஆயினும் வேறு வழியில்லை. நால்வரது வாளும் தோமஸ் பெக்கட்டின் உடலை கத்தியால் வெட்ட அவர் தலையைத் துண்டித்து கொன்றனர். இது இந்த காத்திட்ரலின் ஒரு பகுதியிலேயே நடந்தது. இந்தப் பகுதி தற்சமயம் தோமஸ் பெக்கட் நினைவு சொல்லும் இடமாக இதே காத்திட்ரலில் இருக்கின்றது.



தோமஸ் பெக்கட் கொல்லப்பட்ட இடம்

கொல்லப்பட்ட தோமஸ்பெக்கட்டின் இறந்த உடலை எடுத்துச் செல்ல தயாராக அவரது ஆடைகளைக் களைய முயன்ற நான்கு வீரர்களும் அதிர்ச்சிக்குள்ளாகி ஸ்தம்பித்து நின்றனர். எதனால் அவரகள் அதிர்ச்சியடைந்து ஸ்தம்பித்து நின்றனர் என்பதை அடுத்த பகுதியில் சொல்கின்றேன்...

தொடரும்

சுபா

Tuesday, November 4, 2014

புத்தரின் பூமி....தாய்லாந்து! பயணத் தொடர் - 12

தாய்லாந்தில் முதல் பாதி நாள் பார்த்த காட்சிகளே மனதில் 'எங்கு காணினும் புத்தர்' என்ற சிந்தனையை எழுப்பியிருந்தது. ப்ரா மங்கோன் போபிட் விகாரையைப் பார்த்து விட்டு கடைகளுக்கு இடையே நடந்து உணவுப் பொருட்களைப் பார்த்துக் கொண்டும் சிலவற்றை வாங்கிக் கொண்டும் வந்து பேருந்தில் சிறிது சாப்பிட்டு விட்டு அமர்ந்து விட்டோம். மதிய உணவுக்காக ஒரு குறிப்பிட்ட இடத்தில் எங்கள் பயண வழிகாட்டி ஏற்பாடு செய்த்கிருந்தார். அங்கு செல்ல ஏறக்குறைய ஒரு மணி நேரம் ஆகும் என்றபடியால் பேருந்தில் அமர்ந்த வாறு ஒரு பக்க சாலை காட்சிகளை ஓடும் பேருந்திலிருந்தே கவனித்துக் கொண்டு பயணத்திக் கொண்டிருந்தோம்.

மதிய உணவை அக்குறிப்பிட்ட இடத்தில் சாப்பிட்ட பின்னர் எங்கள் பயணம் சுக்கோத்தை நகரை நோக்கிச் செல்வதாக ஏற்பாடு. அயோத்தையாவிற்கும் சுக்கோத்தை நகருக்கும் ஏறக்குறைய 346 கிமீ தூரம். ஆக அந்த வழியிலேயே இடையில் இருக்கும் ஒரு உணவகத்தில் தான் எங்கள் மதிய உனவு ஏற்பாடாகியிருந்தது.

சாலையில் செல்லும் போதே தாய்லாந்தின் பசுமையான நெல் வயல்களை நான் கவனிக்கத் தவறவில்லை. விவசாயம் இன்னாட்டின் அதி முக்கிய தொழில். அரிசு உணவு என்பதே தாய் மக்களின் பிரதான உணவு. இதன் அடிப்படையில் நல்ல நில வளமும் நீர்வளமும் வே|று நிறைந்திருப்பதால் இங்கு விவசாயம் மிகச் செழிப்பாகவே நடைபெறுகின்றது.

தாய்லாந்து அரிசி வகை பற்றி பலர் அறிந்திருக்கலாம். ஐரோப்பாவில் மிகப் பரவலாகக் கிடைக்கும் அரிசி வகைகளில் தாய்லாந்தின் ஜாஸ்மீன் அரிசி மிகப் பிரபலம். ஜெர்மனியில் உள்ள சீன, தாய்லாந்து  வியாட்நாம் உணவகங்களிலும், அவசர உணவகங்களிலும் இந்தத் தாய் வகை ஜாஸ்மீன் அரிசியே மிகப் பெரிதும் பயன்படுத்தப்படும் அரிசி வகையாக உள்ளது. இந்த அரிசி வகை பளிச்சென்று வெண்மையாக இருப்பதுடன் சற்றே பிசுபிசுப்புத் தன்மை கொண்டதாகவும் இருக்கும். நான் இந்திய வகை சமையலுக்கு இதனைச்  சமைத்து முயற்சித்திருக்கின்றேன். ஆனால் இந்த அரிசி நமது இந்திய குழம்பு வகைகளுக்கு பொருந்துவதாக இல்லை. தாய்லாந்து வகை உணவு அல்லது ஃப்ரைட் ரைஸ் செய்வதற்கு இவை பொருத்தமாக உள்ளன. சுவையும் சேர்கின்றது.

வயல்வெளிகளைப் பார்த்துக் கொண்டு வரும் நமக்கு ஆங்காங்கே சாலைகளில் விற்கப்படும் வழிபாட்டு சிலைவடிவங்கள் கண்களுக்குத் தென்படும். சேவல், யானை, காவலாளி, பாம்பு , பொம்மை வடிவங்கள், தெய்வச் சிலை வடிவங்களில் பிரம்மா, விநாயகர், புத்தர் சிலைகள் என பல வடிவங்கள் சாலையோரங்களில் விற்கப்படுவதைக் காணலாம். இதனைப் பார்க்கும் போது திருநெல்வேலியிலிருந்து கயத்தாறு செல்லும் சாலையில் நான் ஒரு முறை பயணித்த போது சாலை ஓரத்தில் விற்கப்படும் மண்பாண்ட வடிவ குதிரை வடிவங்களும் ஏனைய மண்பாண்ட வடிவங்களும் தான் மனதில் நிழலாடின.




ஏறக்குறைய ஒரு மணி நேர பயணத்திற்குப் பின் நாங்கள் உணவு உண்ண ஏற்பாடாகியிருந்த உணவகம் வந்து சேர்ந்தோம். வாசலில் பார்த்தால் உணவகம் என்ற அடையாளமே தெரியாமல் ஒரு பூங்காவிற்குள் செல்வது போல தோற்றமளித்தது. பசுமை அழகு கண்களைக் கொள்ளை கொண்டது. இளம் பசுமை அந்த இடத்தின் ரம்மியத்தியத்தை அதிகரித்தது. பூக்கள் அந்த அழகுக்கு அழகு சேர்த்தன. இதற்கிடையே நடுவில் ஒரு தனி இடத்தில் மேசை போடப்பட்டு அங்கே அழகழகாக வரிசையாக உணவுப் பதார்த்தங்கள் வைக்கப்பட்டிருந்தன. சூடான ஜாஸ்மின் அரிசியின் சுவையும் தாய்லாந்து தேங்காய்பால் குழம்பின் மனமும் அந்த நேரத்துப் பசியை அதிகரித்தன.




சாப்பிட்டு விட்டு சற்று அந்தப் பூங்காவை வலம் வந்தேன். உணவகத்தை மிகச் சிரத்தையெடுத்துப் பசுமை நிறைந்த பூங்காவாக்கி இருந்தனர். பூங்காவின் மையத்தில் நம் கண்களுக்கு நன்கு பழகிய ஒரு வடிவம்.. ஒய்யாரமாக அமர்ந்த நிலையில் என்னை தூரத்திலிருந்தே கவர்ந்தது.



ஆகா.. என்ன அழகு என வியந்து அருகில் சென்று பார்த்தேன். சாப்பிட்டு விட்டு ஓய்வெடுக்கின்றார் போலும் என பார்ப்பவரை நினைக்க வைக்கும் வகையில் சாய்ந்து கொண்டு ஒய்யாரமாக அமர்ந்திருந்தார்  தொந்திக் கணபதி.

தொடரும்...

சுபா