Thursday, August 27, 2015

விரும்பாமல் சென்று.. விரும்பிய டர்பன்..! -28

விஷ்ணு எங்களிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். பொட்டேனிக்கல் கார்டன்ஸ் ஊழியர் அவர். வருகையாளர் விரும்பினால் கட்டணம் செலுத்தி விட்டு தோட்டத்தைச் சுற்றிப் பார்க்கும் வாகனத்தில் எங்களுக்கு பொட்டானிக்கல் கார்டன்சில் உள்ள சிறப்புக்களைச் சொல்லி விளக்கமளிக்க முடியும் என தெரிவிக்க நாங்களும் ஒவ்வொருவரும் எங்களுக்கான டிக்கெட்களை கட்டணம் செலுத்தி பெற்றுக் கொண்டு விஷ்ணு வாகனம் ஓட்ட அதில் ஆப்பிரிக்காவின் மிகப் பழமையான வாழும் நந்தவனத்தைப் பார்க்க கிளம்பி விட்டோம்.

​விஷ்ணு

எனக்கு இயற்கையாகவே செடிகள் என்றால் கொள்ளைப் பிரியம். அதிலும் காட்டு வகை கரும்பச்சை நிறத்து பல்வகையான செடிகளைப் பார்க்கப் பார்க்க மனம் எல்லையில்லா மகிழ்ச்சியில் லயித்திருந்தது. ஒவ்வொரு பகுதிக்கும் சென்று புகைப்படம் எடுத்துக் கொள்ள எங்கள் அனைவருக்குமே விருப்பம். ஆனால் விஷ்ணு சில முக்கியமான இடங்களில் வாகனத்தை நிறுத்தி மரங்களையும் செடிகளையும் எங்களுக்குக் காட்டி விளக்கமளித்துக் கொண்டே வந்தார். அதனால் அவ்வப்போது கிடைக்கும் அவகாசத்தில் சில புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம்.பனைமர வகைகளில் பற்பல வகைகள், ஆர்க்கிட் செடிகளுக்கென்று தனிப்பகுதி, காட்டு வகைச் செடிகள் பற்பல என ஒன்றிலிருந்து மற்றொன்று மாறுபட்ட வகையில் இங்கு ஒவ்வொரு வகைச் செடிகளும் கண்களுக்கு விருந்தாக அமைந்திருக்கின்றன.  பனை மரத்தில் மட்டும் 130 பனை வகைகள் இங்கு இருக்கின்றன என்பது ஆப்பிரிக்கக் காடுகளின் செழுமையை நமக்கு ஓரளவு புரிந்து கொள்ள உதவும் அல்லவா?.

​உலகின் மிகப் பழமையான மர வகை சைக்காட்ஸ் - 1849 முதல் இங்கே இருக்கும் மரம் இது

சைக்காட்ஸ்  cycads எனப்படும் ஒரு வகை பனை மரம் உலகில் அழிந்து வரும் பனை வகை. டர்பனின் இந்த பொட்டானிக்கல் கார்டன்ஸில் இருக்கும் ஒரு சைக்காட்ஸ் வகை மரம் இந்த பொட்டானிக்கல் கார்டன்ஸ் அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்ட நாளிலிருந்து இங்குள்ளது. உலகில் வாழும் மிகப் பழமையான மரம் என்ற சிறப்பு கொண்டது இந்த சைக்காட்ஸ் வகை மரம். உலகிலேயே ஆக மொத்தம் 308 மரங்கள் தான் இவை உள்ளன. இங்கு கொண்டு வந்து வளர்க்கப்படும் இந்த மரம் 1849ம் ஆண்டு தொடங்கி இங்கே உள்ளது. இந்த  ஒரு மரத்திலிருந்து அறிவியல் வழி க்ளோனிங் செய்து மேலும் ஒரு சைக்காட்ஸ் மரத்தை உருவாக்கி இருக்கின்றனர். அந்த மரமும் அருகாமையிலேயே வளர்ந்து வருகின்றது.

​க்ளோன் செய்யப்பட்ட குட்டி சைக்காட்ஸ் வளர்ந்து வருகின்றது

இந்த பொட்டானிக்கல் கார்டன்ஸின் மற்றுமொரு தனிச்சிறப்பு  fern  வகைச் செடிகளாகும்.  ஒரு ஆள் உயரத்திற்கு இருக்கும் fern செடிகளும் இங்கிருக்கின்றன. எங்களை இப்பகுதிக்கு அழைத்துச் சென்ற விஷ்ணு அங்கு படர்ந்து வளர்ந்திருக்கும் பல்வேறு வகை fern செடிகளைக் காட்டி விளக்கமளித்தார். எங்கள் அனைவரையும் அங்கு புகைப்படமும் எடுத்துக் கொடுத்து ஜூராசிக் பார்க் படத்தில் வரும் காட்சி போல இருக்கின்றதல்லவா எனச் சொல்லி எங்களை மகிழ வைத்தார்.குளம் இல்லாத ஒரு நந்தவனமா?


படர்ந்து வளர்ந்த பெரு மரங்களையும் செடிகளையும் பார்த்து  வியந்து கொண்டு வந்த  நாங்கள் கண் முன்னே தென்பட்ட தாமரைக் குளத்தை பார்த்ததும் அதன் அழகில் மயங்கி லயித்துப் போய் நின்றோம்.தொடரும்..
சுபா

Tuesday, August 25, 2015

விரும்பாமல் சென்று.. விரும்பிய டர்பன்..! -27

ஏப்ரல் 8ம் தேதி.

அன்று எங்களுடன் இருந்த மலேசிய நண்பர்கள்  ​மதியம் ஊருக்குப் புறப்பட வேண்டியிருந்தது. நானும் என்னுடன் ஜெர்மனியிலிருந்து வந்திருந்த இந்துவும்  கனடாவிலிருந்து வந்திருந்த ராஜரட்ணம் அவர்களும் மட்டும் மறுநாள் 9ம் தேதி டர்பனிலிருந்து புறப்படும் வகையில் திட்டம்.

ஆக, அன்றைய 8ம் தேதியில் எங்கு சென்று என்ன பார்த்து வரலாம் என்று முதல் நாள் மாலையே திட்டம் ஒன்றினை தயாரித்திருந்தேன். அதன் படி காலை உணவுக்குப் பின்னர் ஹோட்டலிலிருந்து புறப்பட்டு டர்பனின் புதிய ஸ்டேடியம் சுற்றிப்பார்த்து விட்டு டர்பனின் புறநகர்ப்பகுதியில் இருக்கும் பொட்டேனிக்கல் கார்டனில் சில மணி நேரங்களைச் செலவிடலாம் என்பது என் திட்டம். முதல் நாள் எங்களை அழைத்துச் சென்ற அதே டாக்ஸி ஓட்டியைத் தொடர்பு கொண்டு அவரையே இந்த பயணத்திற்கு முன் பதிவு செய்திருந்தேன்
.


2010 அனைத்துலகக் காற்பந்துப் போட்டி நிகழ்ந்த  ஸ்டேடியம் இது. 54,000 பேர் அமரக்கூடிய இட வசதி கொண்டது. மோஸஸ் மபீடா ஸ்டேடியம் என்பது இதன் பெயர். பிரத்தியேகமாக உலகக் காற்பந்து போட்டி நிகழ்வுக்காக கட்டப்பட்டது இந்த ஸ்டேடியம்.ஸ்டேடியம் மட்டுமல்லாது இந்த ஸ்டேடியத்தின் முன் பகுதியில் அமைந்திருக்கும் கேபிள் கார் வழி பயணித்து மேலே சென்று அங்கிருந்து டர்பன் நகரை பார்த்து ரசிக்கலாம். நாலா புறமும் டர்பன் நகரத்தின் தோற்றத்தைத் தெளிவாகக் காணும் வகையில் இந்த மேற்பகுதி அமைந்துள்ளது. இங்கு செல்வதற்கென்று   கட்டணம் கட்டி டிக்கட் பெற்றுக் கொள்ள வேண்டும்.  இந்த கேபிள் காரில் ஒரு பயணத்தில் ஏறக்குறைய 16 பேர் செல்லும் வகையில் இட வசதி உண்டு.நாங்கள் அடுத்து பொட்டேனிக்கல் கார்டன்ஸ் செல்ல வேண்டிய அவசரம் மனதில் இருந்ததால் ஏறக்குறைய 15 நிமிடங்கள் அங்கே எங்கள் நேரத்தைச் செலவழித்து டர்பனின் அழகிய காட்சியைக் கண்டு ரசித்து விட்டு அங்கிருந்து புறப்பட்டோம். பொட்டானிக்கல் கார்டன்ஸ்  டர்பனின் க்வாசூலு-நாட்டல் பகுதியில் அமைந்துள்ளது.  37 ஏக்கர் நிலப்பரப்பு அளவைக் கொண்டது இது.

ஆப்பிரிக்காவின் மிகப் பழமையான வாழும் பொட்டானிக்கல் கார்டன்ஸ் என்ற பெருமை இதற்கு உண்டு.

இவ்வளவு பெரிய நிலப்பகுதியைச் சுற்றிப் பார்க்க நிச்சயம் 2 மணி நேரங்கள் தேவைப்படும் என முடிவு செய்து கொண்டோம்.முதலில் உள்ளே நுழைந்ததுமே எப்படி .. எங்கு தொடங்கி எங்கு முடிப்பது என ஒவ்வொருவரும் யோசித்துக் கொண்டு நிற்க எங்களை நாடி வந்தார் விஷ்ணு.

விஷ்ணு பெருமான் அல்ல..  அங்கு பணி புரியும் தமிழ் பின்புலத்தைக் கொண்ட ஒரு இளைஞர்.


தொடரும்..
சுபா

Thursday, August 13, 2015

விரும்பாமல் சென்று.. விரும்பிய டர்பன்..! -26

சந்தைக்குச் சென்று பொருள் வாங்கப் பிடிக்காதவர்கள் யாரும் இருக்கின்றார்களா?  எந்த ஊராகட்டும், எந்த இனமாகட்டும் எந்த நாடாகட்டும்.
மனிதர்களுக்குப் புதிய பொருட்களை வாங்குவது என்பதில் அலாதிப் பிரியம் உண்டு என்பதை யாரும் மறுக்க முடியாது.

பெரும்பாலும் ஷாப்பிங் செல்வது என்றாலே ஏதோ பெண்களுக்கான விசயம் போல ஒரு சிலர் கேலி செய்து பேசுவதை நான் கேள்விப்பட்டிருக்கின்றேன். அது என்னவோ.. எனது நட்புச் சூழலில் உள்ளவர்களும் சரி.. புதிதாக இணைந்து கொள்பவர்களும் சரி. ஆண் பெண் என்ற பாகுபாடு இன்றி ஷாப்பிங் செய்வதில் விருப்பம் உள்ளவர்களாகவே இருக்கின்றனர். இந்த முறை பயணத்திலும் அப்படித்தான்.

நாங்கள் மதிய உணவு முடித்து விக்டோரியா சாலை சந்தைக்கு வாகனத்தை செல்லக் கேட்டுக் கொண்டோம். அங்கே 90 நிமிடங்கள் செலவிடலாம் என்ற வகையில் திட்டமிட்டிருந்தோம்.

முதலில் நாங்கள் உள்ளே நுழைந்ததுமே கைவினைப்பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளே அதிகம் இருந்தன அதில் ஒரு கடைக்குள் அனைவருமே நுழைந்தோம்.அதில் குறிப்பாக எல்லோரையும் மிகக் கவரந்தவை எனச் சொன்னால் பெண்கள் கழுத்தில் அணியும் ஆப்பிரிக்க மணிச்சரங்கள் தாம்  எல்லோருமே ஒவ்வொருவருக்கும் பிடித்தவைகளை பார்த்து விலை பேரம் பேசி  எடுத்துக் கொண்டோம். கனடாவிலிருந்து வந்த நண்பர் ராஜரட்ணம் தன் துணைவியாருக்கும் சேர்த்து என்னை தேர்ந்தெடுக்கச் சொன்னார். நான்கைந்து வர்ணங்களில் நீண்ட சரம் போன்ற கழுத்து மணிகளை எனக்கும் வாங்கிக் கொண்டேன்.அதே கடையிலேயே ஆப்பிரிக்க கைவினைப் பொருட்களும் இருந்தமையால் பொன்னியும் திரு,சண்முகமும் மனித உருவச் சிற்பங்களை தேர்ந்தெடுகக் விரும்பினர். அவர்களுக்குத் தேவையானதையும் தேடிப் பார்த்து பலவிதமான பொம்மை சிற்பங்களைப் பார்த்து எவை பொருத்தமாக இருக்கும் என தேடுவது சற்றே சிரமமாக இருந்தது. ஏனெனில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையானவை. நானும்  என் வீட்டு அலங்காரத்திற்காக ஒரு ஜோடி ஆப்பிரிக்க மனிதர் சிலைகளை வாங்கிக் கொண்டேன். இவை மரத்தால் செய்யப்பட்டவை.

பின்னர் அங்கிருந்து அடுத்த பகுதிக்குச் சென்றால் முதல் கடையை விட இங்கேமேலும் பல கைவினப் பொருட்கள் முந்தைய கடையை விட விலை  குறைவாக இருந்தமையை உணர்ந்தோம். இங்கே ஏறக்குறைய எல்லோருமே வாழை இலைகளால் செய்யப்பட்ட சுவர் ஓவியங்களை வாங்கிக் கொண்டோம். இவை எளிமையாக அதே வேளை மிக வித்தியாசமான கைவினைப்ப்பொருட்களாக இருந்தமையால் எங்கள் அனைவரின் கவனத்தையும் இவ்வோவியங்கள் ஈர்த்தன.

ஒவ்வொரு  நாட்டிலும் அந்த நாட்டு மக்களின் தனித்துவத்தை வெளிப்படுத்தும் கைவினைப்பொருட்கள் சுற்றுப்பயணிகளைக் கவரும் அம்சங்களில் ஒன்று. அதிலும் தென்னாப்பிரிக்கா போன்ற இயற்கை வளம் நிறைந்த நாட்டில் இயற்கை வளங்களைக் கொண்டு செய்யப்பட்ட கைவினைப்பொருட்கள் கண்களையும் கருத்தையும் கவர்பவை
.


அதே விக்டோரியா சாலை சந்தையில் ஒரு கடையில் தென்னாப்பிரிக்க தமிழ்பெண்மனி ஒருவரின் கடைக்கும் சென்றோம். அவர் மளிகைப் பொருட்கள் விற்கும் கடையை நடத்தி வருகின்றார். அவருக்குத் தமிழ் பேசத்தெரியாது ஆங்கிலத்தில் மட்டுமே எங்களுடன் உரையாடினார்.மேலும் சில நிமிடங்கள் எனச் சுற்றிப் பார்த்து விட்டு சந்தையிலிருந்து புறப்பட்டோம். அன்றைய ஒரு நாள் பயணம் மாறுபட்ட அனுபவங்களை எங்களுக்கு வழங்கியிருந்தது.

மாலை ஆறு மணியளவில் எங்கள் தங்கும் விடுதிக்கு வந்து சேர்ந்தோம். மாலைப் பொழுது அங்கேயே நண்பர்களுடன் கதை பேசிக் கொண்டிருந்ததில் மிக இனிமையாகக் கழிந்தது.

தொடரும்..

சுபா

Saturday, August 8, 2015

விரும்பாமல் சென்று.. விரும்பிய டர்பன்..! -25

டர்பன் நகரிலேயே  10 நிமிட வாகன பயணத்தில் அடையும் தூரத்தில் தான் அந்த இந்திய உணவகம் இருந்தது. எங்களுடன் வந்த திரு.சண்முகம் மட்டும் கீழே இருந்த  Fish & Chips  சாப்பிட சென்று விட ஏனைய 8 பேரும் மேலே இந்திய உணவகத்துக்கு சென்று சேர்ந்தோம். சுமாரான அலங்காரம் எனக் குறிப்பிடும் வகையில் உணவகத்தின் அலங்காரம் இருந்தது.

எங்கள் ஒவ்வொருவருக்கும் தேவையான உணவை ஆர்டர் செய்து விட்டு நாங்கள் ஆர்வத்துடன் பேச ஆரம்பித்தோம். அங்கிருந்த 8 பேரில் 4 பேர் மலேசிய தமிழர்கள். நான் மலேசிய தமிழர் தான் என்ற போதிலும் வாழ்வது ஜெர்மனி என்ற வகையிலும் கடந்த ஏறக்குறைய 17 ஆண்டுகள்  மலேசிய மண்ணை விட்டு அயலகத்திலேயே வாழ்வதாலும் மலேசிய சமூக நிலை அரசியல் என்பது பற்றி பேச ஆரம்பித்தோம்.

நான் மலேசியாவில் பிறந்து வளர்ந்த காலத்தில் தமிழ்ச்சமூகத்தின் பிரிவுகள் எனும் போது இலங்கைத் தமிழர்கள் இந்தியத் தமிழர்கள் என்ற வகையிலான குறிப்பிடத்தக்க, மிகத் தெளிவான பாகுபாடு இருக்கும்.  இதைத் தவிர சாதி அமைப்புக்களின் வேறுபாடு என்பது குறிப்பிடத்தக்க வகையில் அப்போது இருக்கவில்லை. ஆனால் தற்சமயம் நிலை மிக மாறி விட்டது. பல சாதி அமைப்புககள் மிக வெளிப்படையாகவே சாதிப்பெயரை வைத்து சங்கங்கள் நடத்துவதும் அதனால் பல குழுச்சண்டைகள் எழுவதும் என்ற வகையிலான சமூகக் கேடு மலேசியாவின் சில குறிப்பிடத்தக்க மானிலங்களில் சூழ்ந்திருக்கின்றது.

மலேசியாவைப் பொறுத்தவரை மலேசிய தமிழர்கள் தமிழக நிலை அதன் தாக்கம் என்பதை மிக ஆழமாக உள்வாங்கும் சமூகமாக  இருக்கின்றனர். பொருளாதார நிலையும் வாழ்க்கைத் தரமும் வேறுபாடானது என்ற போதிலும் பல மலேசியத் தமிழர்கள் இந்தியா வந்து இறைவழிபாட்டு நேர்த்திக்கடன் செய்வதும், ஆண்டு இறுதி இசை விழாவில் கலந்து கொள்வது, திருமணத்திற்கோ அல்லது வேறு குடும்ப வைபவங்களுக்கோ துணிமணிகள் வாங்குவதற்கும்  என்ற நிலை இருக்கின்றது. ஒரு சில மலேசியர்கள் தங்கள் மகன்களுக்கு தமிழகத்துப் பெண்களை மணமுடிப்பதும் இப்பொழுதும் நடைமுறையில் இருப்பதுதான்.


மலேசிய தமிழர்களைப் பொறுத்தவரையில் தமிழக சினிமாவின் தாக்கம் என்பது மிக மிக ஆழமானது. வாரம் ஒரு தமிழ்ப்படம் மலேசிய தொலைக்காட்சியில் ஒலிபரப்பாவது மட்டுமன்றி சினிமா தியேட்டர்களிலும் தமிழ்ப்படங்கள் கோலாலம்பூர், பினாங்கு, ஈப்போ, போன்ற பெரிய நகரங்களில் திரையிடப்படுகின்றன. தமிழ்ப்படங்களை மிக ஆழமாக உள்வாங்கும் சமூகமாக மலேசிய தமிழர்களில் பெரும்பாலோர் இருக்கின்றமை மறுக்கமுடியாத உண்மை. பலருக்கு தமிழ்ச்சினிமாக்கள் தான் தத்துவக் கூடங்கள், அதில் கூறப்படும் வசனங்கள், நீதிகள் மக்கள் நீதியாக பலர் மனதில் ஆழப்பதிய வைத்துக் கொள்கின்றனர். இதனால் வேண்டத்தகாத சில விசயங்கள் குறிப்பாக சாதிப்பெருமை பேசி பிரிவினை வளர்ப்பது, இளைஞர்கள் மத்தியில் தவறு இழைப்பவனும் ஒரு கதாநாயகனாகலாம் என்ற ஒரு எண்ணம் ஆகியவை தற்சமயம் வளர்ந்திருக்கும் சமூகக் கேடுகள்.


பேசிக்கொண்டிருக்கும் போதே உணவு வந்து விட்டது. உணவின் சுவை மிக நன்றாகவே அமைந்திருந்தது. அப்போதைய பசிக்கு அந்தச் சுவையான உணவு தேவாமிர்தம் போலத்தான் எங்களுக்கு இருந்தது.

மதிய உணவை முடித்து அங்கிருந்து புறப்பட்டோம். அன்றைய நாளின் எங்கள் பயணத்தின் இறுதி நிகழ்வாக என் பட்டியலில் இருந்தது விக்டோரியா சாலை சந்தை.

தொடரும்

சுபா

Thursday, August 6, 2015

விரும்பாமல் சென்று.. விரும்பிய டர்பன்..! -24

சில நிமிடங்களில் நாங்கள் பயணித்து வந்த இரு வாகனங்களிலும் ஏறி டர்பனின் மற்றொரு மையச் சாலையில் இருக்கும் Old Court House  அருங்காட்சியகம் வந்து சேர்ந்தோம்.

பழமையான கட்டிடம். ஆயினும் மிக நேர்த்தியாகவே காட்சியளித்துக் கொண்டிருக்கின்றது. டர்பன் நகரின் மிகப் பழமையான பொது மக்களுக்கான பயன்பாட்டில் இருந்த கட்டிடம் என்ற பெருமையும் இதற்கு உண்டு.இந்த கட்டிடத்தில் தான் முன்னர்  ஆப்பிரிக்க மக்கள் டர்பன் நகருக்குள் வருவதற்கான அனுமதியும் நகரை விட்டு வெளியே செல்வதற்கான அனுமதியும் வழங்கப்பட்டது. இது என்ன கொடுமை என்று கேட்கத் தோன்றுகின்றது அல்லவா? கருப்பின மக்களின் அவர்களது சொந்த நாட்டில் உள்ள ஒரு நகரத்தில் அவர்கள் வந்து செல்ல ஆங்கிலேய காலணித்துவ அரசின் அதிகாரிகளிடம் அதிகாரப்பூர்வ அனுமதி பெற்றே அவர்கள் இருக்க வேண்டிய சூழல் அன்று நிலவியது.இக்கட்டிடம் ஒரு நீதிமன்றமாகவும் முன்னர் இயங்கியது. இதே கட்டிடத்தில் தான் ஒரு சமூக சீர்திருத்தவாதியாக இருந்த  காந்தியை அவர் தலையில் முண்டாசு (Turban)   கட்டியிருந்தார் என்பதற்காக அறையை விட்டு வெளியேறும்படி அவரை விசாரித்த நீதிபதி உத்தரவிட்ட நிகழ்வும் நடந்தேறியது.

இந்த  அருங்காட்சிகத்தின் சிறப்பு விசயங்களாக இரண்டினை நான் குறிப்பிடுவேன்.

ஒன்று ஆப்பிரிக்க மக்களுக்கும் வெள்ளையர்களுக்கும் இடையில் இருந்த நிற பேதத்தை அலசும் வகையிலான பல பத்திரிக்கை சான்றுகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. அதில் ஆச்சரியப்படுத்தும் பல தகவல்கள் இருக்கின்றன. உதாரணமாக

  • கருப்பர்கள் வெள்ளையர்களை வெறுக்கின்றார்களா? 
  • வெள்ளையர்களுக்கு நடைபெற்ற திருமணத்தில் கலந்து கொண்ட ஒரு கருப்பின மாணவ தம்பதியர் பற்றிய செய்தி
  • வெள்ளையர்கள் கருப்பர்களை வெறுக்கின்றார்களா?

என்பது போன்ற செய்திகள் அடங்கிய பத்திரிக்கைச் செய்திகளைக் குறிப்பிடலாம்.கீழ்த்தளத்தில் இவ்வகையான பல செய்தித்தாட்கள் மட்டுமின்றி ஆப்பிரிக்க நாட்டின் கைவினைப் பொருட்கள் சின்னங்கள் ஆகியனவும் இருகின்றன. அதில் உலகக் காற்பந்து நிகழ்வில் ஆப்பிரிக்க மக்களை மட்டுமன்றி உலக மக்கள் அனைவரையும் கவர்ந்த ஊவுஸெல்லாவும் இருக்கின்றது.

மேல்தளத்தில் இருக்கும் கண்காட்சிப் பகுதி மிகப் பிரமாண்டமானது. அக்கால நிலையில் மக்கள் குடியிறுப்புப் பகுதி, மருத்துவ அறை, விவசாயத்தைக் காட்டும் வகையிலான  காட்சி அமைப்பு, அறிவியல் கூடம். தையல் நிலையம் என்பது போன்ற அமைப்புக்களை உருவாக்கி வைத்திருக்கின்றனர். இப்பகுதி இந்த அருங்காட்சியகத்திற்கு வரும் அனைவருக்கும் நிச்சயமாகப் பார்க்கப் பிடிக்கும் ஒரு பகுதி என்றே கூறுவேன்.நாங்கள் இங்கிருந்து ஒவ்வொரு அறையாகச் சென்று பார்த்துக் கொண்டிருக்கும் போது திடீரென்று மின்சாரம் நின்றுவிட்டது. அருங்காட்சியகக் கட்டிடம் முழுமையும் இருட்டாக ஆகிவிட மெதுவாக ஒவ்வொருவராக படிகளில் இறங்கி வர ஆரம்பித்தோம். கீழ்ப்பகுதியில் அதற்குள் கதவுகள் திற்க்கப்பட்டு வெளிச்சம் உள்ளே வந்ததால் பிரச்சனையின்றி கீழிறங்கி வந்து சேர்ந்தோம்.இந்த அருங்காட்சியகம் தென்னாப்பிரிக்க மக்களின் ஏறக்குறைய 200 ஆண்டுகளுக்கு முன்பான    செய்திகளை அறிந்து கொள்ள உதவியது என்பதில் மறுப்பேதுமில்லை. டர்பன் வருபவர்கள் ஆப்பிரிக்க மக்களின் சமூக நிலை மாற்றங்கள் படிப்படியாக மாற்றம் கண்டமையை அறிந்து  கொள்ள இங்குள்ள ஆவணங்களைப் பார்த்து ஆராய்ந்து அறியலாம்.

மணி ஏறக்குறைய மதியம் ஒன்றரை  தாண்டியிருந்தது. எங்கள் எல்லோருக்குமே பசி. ஒரு இந்திய உணவகமாக தேடிச் செல்வோம் என எல்லோருமே சொல்ல நண்பர் சாம் விஜய் தனது ஆப்பிரிக்க நண்பர் ஒருவருக்கு தொலைபேசியில் அழைத்து பக்கத்தில் இருக்கும் நல்ல உணவகத்தைப் பற்றி விசாரித்தார். அவர் குறிப்பிட்ட முகவரியில் இருந்த உணவகத்திற்கு  எங்கள் பயணம் தொடர்ந்தது.


தொடரும்

சுபா