Thursday, August 27, 2015

விரும்பாமல் சென்று.. விரும்பிய டர்பன்..! -28

விஷ்ணு எங்களிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். பொட்டேனிக்கல் கார்டன்ஸ் ஊழியர் அவர். வருகையாளர் விரும்பினால் கட்டணம் செலுத்தி விட்டு தோட்டத்தைச் சுற்றிப் பார்க்கும் வாகனத்தில் எங்களுக்கு பொட்டானிக்கல் கார்டன்சில் உள்ள சிறப்புக்களைச் சொல்லி விளக்கமளிக்க முடியும் என தெரிவிக்க நாங்களும் ஒவ்வொருவரும் எங்களுக்கான டிக்கெட்களை கட்டணம் செலுத்தி பெற்றுக் கொண்டு விஷ்ணு வாகனம் ஓட்ட அதில் ஆப்பிரிக்காவின் மிகப் பழமையான வாழும் நந்தவனத்தைப் பார்க்க கிளம்பி விட்டோம்.

​விஷ்ணு

எனக்கு இயற்கையாகவே செடிகள் என்றால் கொள்ளைப் பிரியம். அதிலும் காட்டு வகை கரும்பச்சை நிறத்து பல்வகையான செடிகளைப் பார்க்கப் பார்க்க மனம் எல்லையில்லா மகிழ்ச்சியில் லயித்திருந்தது. ஒவ்வொரு பகுதிக்கும் சென்று புகைப்படம் எடுத்துக் கொள்ள எங்கள் அனைவருக்குமே விருப்பம். ஆனால் விஷ்ணு சில முக்கியமான இடங்களில் வாகனத்தை நிறுத்தி மரங்களையும் செடிகளையும் எங்களுக்குக் காட்டி விளக்கமளித்துக் கொண்டே வந்தார். அதனால் அவ்வப்போது கிடைக்கும் அவகாசத்தில் சில புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம்.



பனைமர வகைகளில் பற்பல வகைகள், ஆர்க்கிட் செடிகளுக்கென்று தனிப்பகுதி, காட்டு வகைச் செடிகள் பற்பல என ஒன்றிலிருந்து மற்றொன்று மாறுபட்ட வகையில் இங்கு ஒவ்வொரு வகைச் செடிகளும் கண்களுக்கு விருந்தாக அமைந்திருக்கின்றன.  பனை மரத்தில் மட்டும் 130 பனை வகைகள் இங்கு இருக்கின்றன என்பது ஆப்பிரிக்கக் காடுகளின் செழுமையை நமக்கு ஓரளவு புரிந்து கொள்ள உதவும் அல்லவா?.

​உலகின் மிகப் பழமையான மர வகை சைக்காட்ஸ் - 1849 முதல் இங்கே இருக்கும் மரம் இது

சைக்காட்ஸ்  cycads எனப்படும் ஒரு வகை பனை மரம் உலகில் அழிந்து வரும் பனை வகை. டர்பனின் இந்த பொட்டானிக்கல் கார்டன்ஸில் இருக்கும் ஒரு சைக்காட்ஸ் வகை மரம் இந்த பொட்டானிக்கல் கார்டன்ஸ் அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்ட நாளிலிருந்து இங்குள்ளது. உலகில் வாழும் மிகப் பழமையான மரம் என்ற சிறப்பு கொண்டது இந்த சைக்காட்ஸ் வகை மரம். உலகிலேயே ஆக மொத்தம் 308 மரங்கள் தான் இவை உள்ளன. இங்கு கொண்டு வந்து வளர்க்கப்படும் இந்த மரம் 1849ம் ஆண்டு தொடங்கி இங்கே உள்ளது. இந்த  ஒரு மரத்திலிருந்து அறிவியல் வழி க்ளோனிங் செய்து மேலும் ஒரு சைக்காட்ஸ் மரத்தை உருவாக்கி இருக்கின்றனர். அந்த மரமும் அருகாமையிலேயே வளர்ந்து வருகின்றது.

​க்ளோன் செய்யப்பட்ட குட்டி சைக்காட்ஸ் வளர்ந்து வருகின்றது

இந்த பொட்டானிக்கல் கார்டன்ஸின் மற்றுமொரு தனிச்சிறப்பு  fern  வகைச் செடிகளாகும்.  ஒரு ஆள் உயரத்திற்கு இருக்கும் fern செடிகளும் இங்கிருக்கின்றன. எங்களை இப்பகுதிக்கு அழைத்துச் சென்ற விஷ்ணு அங்கு படர்ந்து வளர்ந்திருக்கும் பல்வேறு வகை fern செடிகளைக் காட்டி விளக்கமளித்தார். எங்கள் அனைவரையும் அங்கு புகைப்படமும் எடுத்துக் கொடுத்து ஜூராசிக் பார்க் படத்தில் வரும் காட்சி போல இருக்கின்றதல்லவா எனச் சொல்லி எங்களை மகிழ வைத்தார்.



குளம் இல்லாத ஒரு நந்தவனமா?


படர்ந்து வளர்ந்த பெரு மரங்களையும் செடிகளையும் பார்த்து  வியந்து கொண்டு வந்த  நாங்கள் கண் முன்னே தென்பட்ட தாமரைக் குளத்தை பார்த்ததும் அதன் அழகில் மயங்கி லயித்துப் போய் நின்றோம்.



தொடரும்..
சுபா

No comments:

Post a Comment