Saturday, March 31, 2012

கிருஷ்ணகிரிக்கு போகலாம் வாங்க...! - 12

ஊத்தங்கரையில் மாணவர்களைச் சந்தித்து விட்டு அங்கிருந்து அடுத்த இடத்திற்குப் பயணமானோம். எங்களின் கிருஷ்ணகிரி பயணப் பட்டியலில் இறுதியாக இடம்பெற்றிருந்தது தர்மபுரி விஜயம். தர்ம புரியில் உள்ள மல்லிகார்ஜூனர் ஆலயத்திற்குச் சென்று அந்த ஆலயம் தொடர்பான விஷங்களைப் பதிவாக்கி வரவேண்டும் என்பது எங்கள் நோக்கம்.

இரண்டு கார்களில் புறப்பட்டோம். சாலையின் இரு பகுதிகளிலும் நெல்வயல்களைப் பார்த்துக் கொண்டு ஒற்றைக் காலில் நிற்கும் கொக்குகளை ரசித்துக் கொண்டு நெல் வயல்களில் உழைத்துக் கொண்டிருந்த மக்களைப் பார்த்துக் கொண்டே எங்கள் பயணம் தொடர்ந்தது.

இன்றைய தர்மபுரி சங்ககாலத்தில் தகடூர் என்று அழைக்கப்பட்டது என்று வாசித்திருக்கின்றேன். அழகான பெயர்.. தகடூர்!

தர்மபுரியில் அதியமான்கள் என்ற சிற்றரசர்கள் ஆட்சி செய்தனர் என்பதை வரலாற்று நூல்களை வாசித்து அறிந்திருப்போம். அதியமான் என்றாலே அவ்வைப்பாட்டிக்கு நெல்லிக்கனி அளித்தவர் என்று சொல்லிக் கொவது வழக்கம் அல்லவா? அதோடு கடையேழு வள்ளல்களில் ஒருவர். நல்ல கொடையுள்ளம் கொண்டவர் என்ற பல செய்திகளும் சிறு வயதிலேயே தமிழ் கற்ற போது சிறுவர் நூல்களில் வாசித்துத் தெரிந்துருக்கின்றேன். அந்த அதியமான் அரசர்களில் ஒருவர் கட்டிய கோட்டையின் பகுதி ஒன்றும் இங்கே உள்ளது. இதன் பெயர் அதமன் கோட்டை என்பதாகும்.

இந்தப் பகுதியில் அதியமான் கட்டிய கோட்டையின் அழிவுச் சின்னங்கள் தான் எஞ்சியிருக்கின்றதாம். அங்கே சென்று வர மிகுந்த ஆவல் இருந்தது எனக்கு. நாங்கள் தாமதப்பட்டு பயணப்பட்டு விட்டதால் அங்கே செல்ல நேரம் இல்லாமல் போய்விட்டது. ஆக நேராக மல்லிகார்ஜுனர் ஆலயத்திற்கே செல்வது என்று உறுதியானது.

இடையில் ஸ்வர்ணாவிற்கு சற்று பசி. எங்காவது சற்று வாகனத்தை நிறுத்தி சாப்பிட்டு விட்டுச் செல்லலாம் என்று முடிவானது. நானோ பவளாவிடம் மாலை 5 மணி வாக்கில் ஈரோடு வந்து விடுவதாகச் சொல்லியிருந்தேன். ஆக எனக்கு பவளாவின் ஞாபகம். நிறைய உணவு வகைகளை எனக்காக நிச்சயம் தயாரித்து வைத்திருப்பார் என்று தோன்றியதால் தர்மபுரியில் உணவை தவிர்த்து விட்டேன். ஏற்கனவே பவளாவின் கைவண்ணத்தின் சிறப்புக்களை இங்கே மின்தமிழில் நிறைய தெரிந்திருந்ததால் மாலை கிடைக்கப்போகும் விருந்தை நினைத்து கனவுலகில் மகிழ்ச்சியுடன் மிதந்து கொண்டிருந்தேன். ஆக தர்மபுரி ஹோட்டலில் உணவு கட்.

மல்லிகார்ஜுனர் ஆலயம் தர்மபுரியில் மத்தியிலேயே இருக்கின்றது. மிக பழமையான கோயில். அருமையான கல்வெட்டுக்கள் ஆலயச் சுவரைச் சுற்றிலும். ஆலயத்தின் அனைத்து கல்வெட்டுக்கலும் தமிழ் நாடு தொல்லியல் துறையினரால் படியெடுக்கபப்ட்டு வாசிக்கப்பட்டு நூலாக வந்துள்ளதாம். இதனை அடுத்த முறை வாங்கிக் கொள்ள வேண்டும்.

தெளிவான கல்வெட்டுஇது அதியமான் அவ்வைக்குக் கொடுத்த நெல்லிக்கனியில்லை. மல்லிகார்ஜுனர் கோயிலில் பார்த்த ஒரு காய். என்ன காய் இது ???


ஒரு சில ஆலயங்களில் காமெராவுடன் வந்தாலே ஒதுக்கித் தள்ளி விடுகின்றனர். இங்கே அதிசயம் நிகழ்ந்தது. ஆலய குருக்கள் எங்களைக் கண்டு பேசியவுடன் உடனே அமர்ந்து ஒரு சொற்பொழிவு கொடுக்க ஆரம்பித்து விட்டார். அதனை வீடியோவிலும் ஒலிப்பதுவும் செய்திருக்கின்றேன். மிக்க அன்புடன் எங்களை அழைத்துச் சென்று கோயில் அருகே உள்ள அவர் இல்லத்தில் அவர் பூஜிக்கும் ராமன் சீதை உருவச் சிலைகளையும் காட்டி விளக்கமளித்தார். அங்கு ஒரு மணி நேரம் மட்டும் இருந்து பதிவு செய்து விட்டு புறப்பட நினைத்த நாங்கள் 2 மணி நேரத்திற்கும் மேலாக இருந்து விட்டோம். இந்த ஆலயப் பதிவை தனி இழையில் வழங்குவேன்.

ஆயலத்திற்குள் அமர்ந்து எங்களுக்கு குருக்கள் விளக்கம் தருகின்றார்


தமிழ்க சிற்பக்கலைக்குப் பெருமை சேர்க்கும் நுண்ணிய சிற்பங்கள்


அழகிய சிலைகளுக்குக் கீழே பூக்களைத் தூவி சிறப்புச் செய்யலாம். இப்படி குப்பைகளைப் போட்டு அசிங்கப்படுத்தலாமா???


ஆலயத்தில் வழிபாட்டுடன், வரலாற்றுச் செய்திகள் தெரிந்து கொண்டதோடு, கல்வெட்டுக்களைப் பார்த்து மகிழ்ந்ததோடு ஆலய குருக்களின் அன்பான உபசாரத்தில் மனம் மகிழ்ந்து போனோம்.

குருக்களின் இல்லத்தில் ராம சீதை லக்‌ஷ்மணன் அனுமன் சிலைகளுடன் உள்ள பூஜை அறையில் எங்களுக்கு அம்பிகையின் அருள் பற்றி விளக்கம் தருகின்றார்


இப்படி எல்லா குருக்கள்களும் எங்களைப் போன்ற ஆர்வலர்களை வரவேற்று தகவல்கள் வழங்கினால் பல்வேறு வரலாற்றுச் சின்னங்களின் பதிவுகளைத் தொடர்ந்து தொகுத்துப் பராமரிக்கலாம் என்ற சிந்தனையை அப்போது எங்களுக்குள் பகிர்ந்து கொண்டோம்.

தொடரும்...

அன்புடன்
சுபா

Sunday, March 18, 2012

கிருஷ்ணகிரிக்கு போகலாம் வாங்க...! - 11

ஊத்தங்கரையில் காலை உணவு விருந்துக்குப் பின்னர் எங்களை திரு.கவி செங்குட்டுவன் தாம் முன்னர் ஆசிரியராகப் பணியாற்றிய பள்ளிக்கு அழைத்துச் சென்றிருந்தார்.

முதல் நாள் மாலை கிருஷ்ணகிரி வந்து சேர்ந்த ஸ்வர்ணா தன் குழந்தையுடனும் மாமனாருடனும் இந்தப் பயணத்தில் இணைந்து கொண்டார். நாங்கள் சென்ற நேரம் பள்ளியில் பாடம் நடந்து கொண்டிருந்தது. பள்ளி வளாகத்தைச் சுற்றிக் காட்டி பின்னர் பள்ளியின் ஆசிரியர்களை எங்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார் திரு.கவி செங்குட்டுவன்.உணவு வேளைக்கு மணி அடிக்கப்பட்டதும் சத்துணவு சாப்பிட மாணவர்கள் வரிசையாக வந்து அமர்ந்து கொண்டனர். அவர்களுக்குச் சாதம், சாம்பார் காய்கறிகள் என உணவு வழங்கப்பட்டது. நாங்கள் வகுப்பறைக்குச் சென்று அங்குள்ள கல்வி உபகரணங்களையும் பார்த்து ஆசிரியர்களுடன் பேசிக் கொண்டிருந்தோம்.முதலில் மாணவர்கள் எங்களை கல்வித்துறை அதிகாரிகள் என்று நினைத்து விட்டனர் என்பது தெரிந்தது. அவர்களில் சிலர் மிகுந்த ஆர்வத்துடன் எங்களைப் பார்ப்பதும் பின்னர் சிரிப்பதும் தலையைக் குனிந்து கொள்வதும் என இருந்தனர்.மற்றொரு பகுதியில் சில உயர் நிலைப் பள்ளி மாணவர்களும் அமர்ந்து உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அவர்களிடம் சென்று பேச்சுக் கொடுத்தேன். மாணவர்களில் பலரும் உடன் சில கேள்விகளுக்கு சட் செட்டென்று பதிலளித்து பின்னர் என்னையும் சில கேள்விகள் கேட்க ஆரம்பித்தனர். அவர்களுடன் பேசிக் கொண்டிருப்பது மிகவும் சுவாரசியமாக இருந்தது.பேச்சின் இடையே அவர்கள் பிற்காலத்தில் என்னவாக தொழில் புரிய ஆசைப்படுகின்றனர் என்று கேட்டேன். பெரும்பாலோர் தமிழ் ஆசிரியர், அறிவியல் ஆசிரியர், கணித ஆசிரியர் வரலாறு ஆசிரியர், போலீஸ் , கலெக்டர், என்ற வகையில் தங்கள் எதிர்கால விருப்பத்தைத் தெரிவித்தனர். மற்ற பல தொழில் பற்றிய போதிய அறிமுகம் குறைவாக இருப்பதும் இதற்குக் காரணமாக இருக்கலாம்.

பள்ளியில் மிகச் சிறப்பாக மூலிகைத் தாவரங்கள் பயிரிடப்பட்டு பாதுகாக்கப்படுவதையும் ஆசிரியர்கள் காட்டினர். மாணவர்களே இதனைப் பராமரிக்கின்றனர் என்பதைத் தெரிந்து கொண்டபோது அகம் மகிழ்ந்து போனேன்.பள்ளிக்கூடம் முழுவதும் மிகத் தூய்மையாகப் பராமரிக்கப்படுகின்றது. குப்பைகளைப் பிரித்து தனியாக அவற்றை ஓரிடத்தில் கொட்டி வைக்கின்றனர். எவை இயற்கையான குப்பை எவை தனியாகப் பாதுகாக்கப்பட வேண்டிய குப்பை என அதற்குப் பெயரிட்டு மாணவர்களிடையே சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கும் ஆசிரியர்களின் பண்பை பாராட்டித்தானே ஆக வேண்டும்.முதலில் தயங்கித் தயங்கி பேசிய மாணவர்கள் சிறிது நேரம் உரையாடிய பின்னர் மிகுந்த ஆர்வத்துடன் எங்களை சுற்றிக் கொண்டு எங்களுக்கு கைகுலுக்கி வணக்கம் செலுத்தி தொடர்ந்து விடாமல் கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தனர். நேரமாகி விட்டதால் குழுவாக புகைப்படம் எடுத்துக் கொண்டு விடைபெற முயன்றோம். ஆனால் மாணவர்களின் அன்புத் தொல்லை எங்களை நகர விடவில்லை. அவர்களை விட்டு பிரிய மனம் இல்லாமல் அனைவரும் பிரிந்தோம் என்பதே உண்மை.தொடரும்...

அன்புடன்
சுபா

Sunday, March 11, 2012

கிருஷ்ணகிரிக்கு போகலாம் வாங்க...! - 10


கிரிஷ்ணகிரியில் புலியட்டைக்குட்டை என்ற சிற்றூரில் பாறை ஓவியங்களை நாங்கள் பார்க்கச் சென்ற போதும் மிக ரம்மியமான மலைப் பகுதியைக் கடந்து செல்லும் வாய்ப்பு அமைந்தது. மிக மிக உறுதியான பெரிய பாறைகள் நிறைந்த மலைப்பகுதி அது. இப்பகுதி ஆந்திர மானிலத்திற்கு அருகாமையில் இருக்கின்றது.இந்தப் புலியட்டைக் குட்டை பகுதியில் இருக்கும் பாறை ஓவியங்கள் இங்கிருப்பதை முதன் முதலில் கண்டு பிடித்தவர் ஆசிரியர் திரு.முருகானந்தம். இவர் தமிழ்ப்பல்கலைக்கழக தொல்லியல் துறை ஆய்வாளர் டாக்டர் ராஜவேலு அவர்களிடம் 7 நாட்கள் கல்வெட்டு தொல்லியல் ஆய்வு பயிற்சி ஒன்றினை மேற்கொண்டிருந்த போது கள ஆய்வுக்காக இப்பகுதியைத் தேர்ந்தெடுத்து இங்கு ஏதேனும் தொல்லியல் சான்றுகள் இருக்குமா என்று தேடியிருக்கின்றார். அப்போது இவருக்கு இந்த கற்பாறை தென்பட்டிருக்கின்றது.


ஆசிரியர் முருகானந்தம்

உடனே இவர் டாக்டர் ராஜவேலு அவர்களுக்குத் தெரிவித்து அவரும் மற்றும் சிலரும் வந்து பார்த்து இவை பெருங்கற்கால ஓவியங்கள் தாம் என்பதை உறுதி செய்திருக்கின்றனர்.

இந்தப் பகுதிக்கு எங்களை திரு.முருகானந்தம் உடன் வந்திருந்து அழைத்துச் சென்று காட்டினார்.கற்பாறைகள் நிறைந்த மலை. உறுதியான மிகப் பெரிய பாறைகள். ஆங்காங்கே பனை மரங்கள். இயற்கையின் அழகை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. இந்தப் பகுதிக்கு உள்ளே செல்ல பாதை இல்லை. பாறைகளின் மேல் ஏறித்தான் சென்று பார்க்க வேண்டும். ஆக புதர்களைக் கடந்து சென்று ஒரு வழியாக இந்தப் பாறை இருக்கும் பகுதிக்கு வந்து சேர்ந்தோம். அங்கு நாங்கள் பார்த்த காட்சி எங்கள் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. பாறை முழுதும் அவ்வளவு ஓவியங்கள். மிக நேர்த்தியான குறியீடுகள் அவை.


நா.கண்ணன், சுபா, ப்ரகாஷ்

இவற்றைப் பார்த்து நிறைய படங்கள் எடுத்துக் கொண்டோம். அவற்றை விரைவில் ஒரு பிரத்தியேகப் பதிப்பாக வெளியிட நினைத்திருக்கின்றேன். இவை தொடர்ந்து ஆய்வு செய்யப்பட வேண்டியவை.

தொடரும்..

அன்புடன்
சுபா

Monday, March 5, 2012

கிருஷ்ணகிரிக்கு போகலாம் வாங்க...! - 9

தமிழகத்திலே இம்முறை சிவகங்கை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் கிருஷ்ணகிரியிலும் நிறைய புளிய மரங்களைப் பார்த்தேன். மரங்கள் நிறைய புளி (காய்கள்). பறித்து உடைத்துப் பார்த்தால் பச்சையாக இருக்கின்றன. இன்னமும் காய்ந்து போக சில மாதங்கள் ஆகலாம் போல.
மிகப் பெரிய உறுதியான மரங்கள். ஒவ்வொரு மரங்களிலும் ஏராளமான புளி. இவை சாலையோரத்தில் நிழலுக்காக வைக்கப்பட்டுள்ள மரங்கள் என்றே நினைக்கிறேன்.பினாங்கிலே முன்னர் நான் சிறுமியாக இருந்த சமயத்தில் எங்கள் வீட்டிற்கு பக்கத்தில் நிறைய மரங்கள் இருக்கும். ஒரு சிறிய ஆறு. அதைத் தாண்டினால் இடது பக்கத்தில் மங்குஸ்தீன் மரத்தோப்பு. வலது பக்கத்தில் சிறுவர்கள் விளையாட்டு மையமும் காற்பந்து திடலும் இருக்கும். இங்கே சில பெரிய புளிய மரங்களிருந்தன. இப்போதும் இருக்கும் என்றே நினைக்கின்றேன்.

அப்போதெல்லாம் அந்த புளியமரத்தின் கொடியைப் பிடித்துக் கொண்டு ஊஞ்சல் ஆடுவோம். கொடியைப் பிடித்துக் கொண்டு மேலிருந்து கீழே குதிப்போம். இவையெல்லாம் சந்தோஷமான விளையாட்டுக்கள். இப்போது நினைத்தால் கூட அந்த கணத்திற்கு மனம் சென்று விடுகின்றது. அந்தப் பசுமை, கொடியின் கரகரப்பு, கைவலிக்க அந்தக் கொடியை பிடித்துக் கொண்டு குதித்து மகிழ்ந்தவையெல்லாம் மனக் கண் முன் வந்து போகின்றன.

தொடரும்..
சுபா

Sunday, March 4, 2012

கிருஷ்ணகிரிக்கு போகலாம் வாங்க...! - 8

எங்கள் கிருஷ்ணகிரி பயணத்தில் விருந்து சாப்பிட்டிற்கும் ஒரு அழைப்பு வந்திருந்தது. அன்பான அழைப்பு.

கல்விக்கோயில் கவி.செங்குட்டுவன் நம் மின்தமிழ் நண்பர். கிருஷ்ணகிரிக்கு அருகாமையில் உள்ள ஊத்தங்கரை எனும் ஊரில் இருந்து கொண்டு அவர் ஆற்றிவரும் கல்விப்பணி பற்றி இங்கு அவ்வப்போது செய்திகள் வாசிக்கின்றோம்.

இவரது இல்லத்தில் காலை உணவிற்கு விருந்தழைப்பு எங்களுக்கு வந்திருந்தது. அவர் இல்லத்தில் விருந்தை முடித்து விட்டு அங்கிருந்து அருகாமையில் இருக்கும் அவர் ஆசிரியராக பணியாற்றிய பள்ளிக்கும் சென்று வர யோசித்திருந்தோம். ஆக முதலில் விருந்து என்று முடிவாகியிருந்தது.

நாங்கள் ஊத்தங்கரை வந்து சேர தாமதமாகிவிட்டது. ஆனாலும் திரு.திருமதி கவி.செங்குட்டுவன் இருவரும் சங்கடப்படாமல் எங்களுக்கு காத்திருந்து சுவையான காலை உணவை பரிமாறி மனம் குளிற வைத்தனர்.

திருமதி. கவி.செங்குட்டுவன் அவர்களும் ஒரு பள்ளி தலைமை ஆசிரியை. அழகும் அறிவும் அன்பும் மிக்க நல்லாசிரியர். திரு.திருமதி கவி.செங்குட்டுவன் அவர்கள் குடும்பத்தினரில் பெரும்பாலோர் ஆசிரியர்களாகவும் தலைமை ஆசிரியர்களாகவும் இருக்கின்றனர் என்று கேள்விப்பட்டு ஆச்சரியப்பட்டோம். குடும்பமே ஆசிரியர் குடும்பம்.
இனிய வரவேற்பு. முதலில் இடியாப்பமும் அதில் போட்டுக் கொள்ள கடலை மாவும் அதன் மேல் தேங்காய்பாலும் விட்டு ஒரு உணவு. கடலை மாவு சேர்த்து இடியாப்பம் இதுவரை நான் சாப்பிட்டதில்லை. இது புதிதான வகை. இடியாப்பத்தில் இப்படியும் ஒரு வகை உண்டு என்று அன்று தெரிந்து கொண்டேன்.

பின்னர் இட்லி, தோசை என விருந்து மிக பலமாக இருந்தது. மிளகாய் சட்னியும் தேங்காய் சட்னியும் சாம்பாரும் அபாரச் சுவை. ரசித்து ருசித்து சாப்பிட்டோம்.

இவர்கள் இல்லத்தில் கேட்டு வாங்கி என் சுவைக்கேற்ப ஒரு காபியும் சாப்பிட்டேன். சுவையாக இருந்தது காபி. மிக திருப்தியான ஒரு காலை உணவு விருந்து சாப்பிட்ட திருப்தி. சரி பள்ளிக்கு கிளம்பலாம் என்று புறப்படுவதற்கு முன்னர் திரு.கவிசெங்குட்டுவன் விருந்தினர்களான் எங்களுக்கு ஆளுக்கு ஒரு நூலும் பரிசளித்து மகிழ்வித்தார்.


திரு.திருமதி.கவி.செங்குட்டுவன் டாக்டர்.நா.கண்ணனுக்கு நூல் பரிசளிக்கின்றனர்.திரு.திருமதி.கவி.செங்குட்டுவன் எனக்கு நூல் பரிசளிக்கின்றனர்.திரு.திருமதி.கவி.செங்குட்டுவன் ஸ்வர்ணாவுக்கு நூல் பரிசளிக்கின்றனர்.திரு.திருமதி.கவி.செங்குட்டுவன் செல்வமுரளிக்கு நூல் பரிசளிக்கின்றனர்.


இவர்கள் அன்பான கனிவான விருந்துபசாரத்தில் மனம் நெகிழ்ந்து போனோம்.

சுபா

Thursday, March 1, 2012

கிருஷ்ணகிரிக்கு போகலாம் வாங்க...! - 7

செவிக்கு உணவில்லாத போது தான் பசிக்கு உணவு என்று சொல்லிக் கொண்டு நாங்கள் நடுகல் நடுகல்களாக தேடித்தேடி சென்று பதிவு செய்து கொண்டிருந்தோம். காலையில் ஆரம்பித்த பணி.. மதியமாகி விட்டது. ஆனாலும் ம்திய உணவுக்குச் செல்ல வேண்டும் என்று நாங்கள் யாருமே யோசிக்கவில்லை. அதிலும் கூடவே திரு. சுகவன முருகன் அவர்கள் தொடர்ந்து பல விஷயங்களைக் காட்டிக் கொண்டும் பேசிக் கொண்டும் வந்ததால் மதிய உணவு என்ற ஒரு விஷயத்தை மறந்து போய்விட்டோம்.

ஆனாலும் எங்களை வழி நடத்திக் கொண்டிருக்கும் இறைவனின் கருணையே கருணை!

ஐகொந்தம் கோயில் எங்கள் பட்டியலில் இருந்தது. அங்கே பக்கத்தில் ஒரு குகையில் இருக்கும் குகைப் பாறை ஓவியங்களைப் பார்க்கச் செல்வது பட்டியலில் இருந்தது. ஆக நேராக ஐகொந்தம் சென்றோம். சரி வைகுந்தம் கேள்விப்பட்டிருக்கின்றோம். ஐகொந்தம்.. கேள்விப்பட்டதில்லையே. அதோடு ஐகொந்தம் என்ற பெயரே முதலில் எனக்கு மனதில் நிலைக்கவில்லை. ஒருவகையாக இந்தப் பெயரை ஓரிரு முறைச் சொல்லிப் பழகிக் கொண்டு மனதில் நிலைப்படுத்திக் கொண்ட போது ஐகொந்தம் கோயில் வந்து சேர்ந்து விட்டோம்.


கோயிலில் அன்று சிறப்பு வழிபாடு போல.. வைகுந்த ஏகாதசி தினத்திற்கு மறு நாள் அது. பெருமாள் கோயில் வேறு .. சொல்ல வேண்டுமா? கொஞ்சம் மக்கள் நடமாட்டம் இருந்தது. மிகப் புதிதான கோயில். அழகான படிக்கட்டுகள்.. பளிங்குக் கற்கள் கொண்டு செய்யப்பட்ட தரை.. அழகான இயற்கைச் சூழல். ரம்மியமான சுற்றுப் புறக் காட்சி.

பாறைச் சித்திரங்களைப் பார்ப்பதற்கு முன்னர் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்து விட்டு செல்வோம் என்று நினைத்துக் கொண்டு சென்றோம்.

இந்தக் கோயிலில் கருவறைக்குள் சென்று நாம் நம் தலையை பெருமாள் பாதங்களில் வைத்து வணங்கிக் கொள்ளலாம். பெரிய நாராயணப் பெருமாள் சிலை. மாலைகளாலும் ஆபரணங்களாலும் அலங்கரிக்கபப்ட்டிருந்தது. நாங்கள் ஒவ்வொருவரும் சுவாமி பாதத்தில் தலை வைத்து வேண்டிக் கொண்டு வெளியே வந்தோம். இங்கே புகைப்படம் பிடிக்கவும் தடையில்லை. அதோடு வருவோர் போவோர் கேட்கும் கேள்விகளுக்கும் கோயில் நிர்வாகத்தினரும் குருக்களும் சில தத்துவங்களும் தகவல்களும் சொல்லிக் கொண்டும் இருந்தனர். கோயிலில் இருந்த அந்த நேரம் மிகவும் மகிழ்ச்சியான தருணம். ஏதோ நம் வீட்டுக் கோயில் போன்றதொரு உணர்வு.

வெளியில் வந்தோம். வரிசையாக நான்கு பெண்கள் ஒவ்வொருவரும் தயிர்சாதம் புளியஞ்சாதம், பொங்கல், தேங்காய்சாதம் வைத்துக் கொண்டு பக்தர்களை அழைத்து உபசரித்து ப்ரசாதத்தை வழங்கினர். ப்ரசாதம் மதிய உணவு அளவு. நான்கு வகை சாதம். கேட்க வேண்டுமா. சலிக்காமல் வரிசையில் நின்று நான்கு வகை சாதத்தையும் தயங்காமல் பெற்றுக் கொண்டு அழகான ஒரு இடத்தில் உட்கார்ந்து சுற்றுச் சூழலை ரசித்துக் கொண்டே சுவைத்து சாப்பிட்டோம்.

பெருமாள் அணுக்கிரகம் .. அன்றைய மதிய உணவு விருந்தாகிப் போனது.


ஐகொந்தம் ஸ்ரீ ஸ்ரீனிவாசப் பெருமாள் கோயில்


ஸ்ரீ ஸ்ரீனிவாசப் பெருமாள்


கோயிலின் பின்னால் உள்ள மலைகள்


சுவையான ப்ரசாதம்

தொடரும்...

சுபா