Saturday, March 31, 2012

கிருஷ்ணகிரிக்கு போகலாம் வாங்க...! - 12

ஊத்தங்கரையில் மாணவர்களைச் சந்தித்து விட்டு அங்கிருந்து அடுத்த இடத்திற்குப் பயணமானோம். எங்களின் கிருஷ்ணகிரி பயணப் பட்டியலில் இறுதியாக இடம்பெற்றிருந்தது தர்மபுரி விஜயம். தர்ம புரியில் உள்ள மல்லிகார்ஜூனர் ஆலயத்திற்குச் சென்று அந்த ஆலயம் தொடர்பான விஷங்களைப் பதிவாக்கி வரவேண்டும் என்பது எங்கள் நோக்கம்.

இரண்டு கார்களில் புறப்பட்டோம். சாலையின் இரு பகுதிகளிலும் நெல்வயல்களைப் பார்த்துக் கொண்டு ஒற்றைக் காலில் நிற்கும் கொக்குகளை ரசித்துக் கொண்டு நெல் வயல்களில் உழைத்துக் கொண்டிருந்த மக்களைப் பார்த்துக் கொண்டே எங்கள் பயணம் தொடர்ந்தது.

இன்றைய தர்மபுரி சங்ககாலத்தில் தகடூர் என்று அழைக்கப்பட்டது என்று வாசித்திருக்கின்றேன். அழகான பெயர்.. தகடூர்!

தர்மபுரியில் அதியமான்கள் என்ற சிற்றரசர்கள் ஆட்சி செய்தனர் என்பதை வரலாற்று நூல்களை வாசித்து அறிந்திருப்போம். அதியமான் என்றாலே அவ்வைப்பாட்டிக்கு நெல்லிக்கனி அளித்தவர் என்று சொல்லிக் கொவது வழக்கம் அல்லவா? அதோடு கடையேழு வள்ளல்களில் ஒருவர். நல்ல கொடையுள்ளம் கொண்டவர் என்ற பல செய்திகளும் சிறு வயதிலேயே தமிழ் கற்ற போது சிறுவர் நூல்களில் வாசித்துத் தெரிந்துருக்கின்றேன். அந்த அதியமான் அரசர்களில் ஒருவர் கட்டிய கோட்டையின் பகுதி ஒன்றும் இங்கே உள்ளது. இதன் பெயர் அதமன் கோட்டை என்பதாகும்.

இந்தப் பகுதியில் அதியமான் கட்டிய கோட்டையின் அழிவுச் சின்னங்கள் தான் எஞ்சியிருக்கின்றதாம். அங்கே சென்று வர மிகுந்த ஆவல் இருந்தது எனக்கு. நாங்கள் தாமதப்பட்டு பயணப்பட்டு விட்டதால் அங்கே செல்ல நேரம் இல்லாமல் போய்விட்டது. ஆக நேராக மல்லிகார்ஜுனர் ஆலயத்திற்கே செல்வது என்று உறுதியானது.

இடையில் ஸ்வர்ணாவிற்கு சற்று பசி. எங்காவது சற்று வாகனத்தை நிறுத்தி சாப்பிட்டு விட்டுச் செல்லலாம் என்று முடிவானது. நானோ பவளாவிடம் மாலை 5 மணி வாக்கில் ஈரோடு வந்து விடுவதாகச் சொல்லியிருந்தேன். ஆக எனக்கு பவளாவின் ஞாபகம். நிறைய உணவு வகைகளை எனக்காக நிச்சயம் தயாரித்து வைத்திருப்பார் என்று தோன்றியதால் தர்மபுரியில் உணவை தவிர்த்து விட்டேன். ஏற்கனவே பவளாவின் கைவண்ணத்தின் சிறப்புக்களை இங்கே மின்தமிழில் நிறைய தெரிந்திருந்ததால் மாலை கிடைக்கப்போகும் விருந்தை நினைத்து கனவுலகில் மகிழ்ச்சியுடன் மிதந்து கொண்டிருந்தேன். ஆக தர்மபுரி ஹோட்டலில் உணவு கட்.

மல்லிகார்ஜுனர் ஆலயம் தர்மபுரியில் மத்தியிலேயே இருக்கின்றது. மிக பழமையான கோயில். அருமையான கல்வெட்டுக்கள் ஆலயச் சுவரைச் சுற்றிலும். ஆலயத்தின் அனைத்து கல்வெட்டுக்கலும் தமிழ் நாடு தொல்லியல் துறையினரால் படியெடுக்கபப்ட்டு வாசிக்கப்பட்டு நூலாக வந்துள்ளதாம். இதனை அடுத்த முறை வாங்கிக் கொள்ள வேண்டும்.

தெளிவான கல்வெட்டு



இது அதியமான் அவ்வைக்குக் கொடுத்த நெல்லிக்கனியில்லை. மல்லிகார்ஜுனர் கோயிலில் பார்த்த ஒரு காய். என்ன காய் இது ???


ஒரு சில ஆலயங்களில் காமெராவுடன் வந்தாலே ஒதுக்கித் தள்ளி விடுகின்றனர். இங்கே அதிசயம் நிகழ்ந்தது. ஆலய குருக்கள் எங்களைக் கண்டு பேசியவுடன் உடனே அமர்ந்து ஒரு சொற்பொழிவு கொடுக்க ஆரம்பித்து விட்டார். அதனை வீடியோவிலும் ஒலிப்பதுவும் செய்திருக்கின்றேன். மிக்க அன்புடன் எங்களை அழைத்துச் சென்று கோயில் அருகே உள்ள அவர் இல்லத்தில் அவர் பூஜிக்கும் ராமன் சீதை உருவச் சிலைகளையும் காட்டி விளக்கமளித்தார். அங்கு ஒரு மணி நேரம் மட்டும் இருந்து பதிவு செய்து விட்டு புறப்பட நினைத்த நாங்கள் 2 மணி நேரத்திற்கும் மேலாக இருந்து விட்டோம். இந்த ஆலயப் பதிவை தனி இழையில் வழங்குவேன்.

ஆயலத்திற்குள் அமர்ந்து எங்களுக்கு குருக்கள் விளக்கம் தருகின்றார்


தமிழ்க சிற்பக்கலைக்குப் பெருமை சேர்க்கும் நுண்ணிய சிற்பங்கள்


அழகிய சிலைகளுக்குக் கீழே பூக்களைத் தூவி சிறப்புச் செய்யலாம். இப்படி குப்பைகளைப் போட்டு அசிங்கப்படுத்தலாமா???


ஆலயத்தில் வழிபாட்டுடன், வரலாற்றுச் செய்திகள் தெரிந்து கொண்டதோடு, கல்வெட்டுக்களைப் பார்த்து மகிழ்ந்ததோடு ஆலய குருக்களின் அன்பான உபசாரத்தில் மனம் மகிழ்ந்து போனோம்.

குருக்களின் இல்லத்தில் ராம சீதை லக்‌ஷ்மணன் அனுமன் சிலைகளுடன் உள்ள பூஜை அறையில் எங்களுக்கு அம்பிகையின் அருள் பற்றி விளக்கம் தருகின்றார்


இப்படி எல்லா குருக்கள்களும் எங்களைப் போன்ற ஆர்வலர்களை வரவேற்று தகவல்கள் வழங்கினால் பல்வேறு வரலாற்றுச் சின்னங்களின் பதிவுகளைத் தொடர்ந்து தொகுத்துப் பராமரிக்கலாம் என்ற சிந்தனையை அப்போது எங்களுக்குள் பகிர்ந்து கொண்டோம்.

தொடரும்...

அன்புடன்
சுபா

No comments:

Post a Comment