Sunday, March 4, 2012

கிருஷ்ணகிரிக்கு போகலாம் வாங்க...! - 8

எங்கள் கிருஷ்ணகிரி பயணத்தில் விருந்து சாப்பிட்டிற்கும் ஒரு அழைப்பு வந்திருந்தது. அன்பான அழைப்பு.

கல்விக்கோயில் கவி.செங்குட்டுவன் நம் மின்தமிழ் நண்பர். கிருஷ்ணகிரிக்கு அருகாமையில் உள்ள ஊத்தங்கரை எனும் ஊரில் இருந்து கொண்டு அவர் ஆற்றிவரும் கல்விப்பணி பற்றி இங்கு அவ்வப்போது செய்திகள் வாசிக்கின்றோம்.

இவரது இல்லத்தில் காலை உணவிற்கு விருந்தழைப்பு எங்களுக்கு வந்திருந்தது. அவர் இல்லத்தில் விருந்தை முடித்து விட்டு அங்கிருந்து அருகாமையில் இருக்கும் அவர் ஆசிரியராக பணியாற்றிய பள்ளிக்கும் சென்று வர யோசித்திருந்தோம். ஆக முதலில் விருந்து என்று முடிவாகியிருந்தது.

நாங்கள் ஊத்தங்கரை வந்து சேர தாமதமாகிவிட்டது. ஆனாலும் திரு.திருமதி கவி.செங்குட்டுவன் இருவரும் சங்கடப்படாமல் எங்களுக்கு காத்திருந்து சுவையான காலை உணவை பரிமாறி மனம் குளிற வைத்தனர்.

திருமதி. கவி.செங்குட்டுவன் அவர்களும் ஒரு பள்ளி தலைமை ஆசிரியை. அழகும் அறிவும் அன்பும் மிக்க நல்லாசிரியர். திரு.திருமதி கவி.செங்குட்டுவன் அவர்கள் குடும்பத்தினரில் பெரும்பாலோர் ஆசிரியர்களாகவும் தலைமை ஆசிரியர்களாகவும் இருக்கின்றனர் என்று கேள்விப்பட்டு ஆச்சரியப்பட்டோம். குடும்பமே ஆசிரியர் குடும்பம்.




இனிய வரவேற்பு. முதலில் இடியாப்பமும் அதில் போட்டுக் கொள்ள கடலை மாவும் அதன் மேல் தேங்காய்பாலும் விட்டு ஒரு உணவு. கடலை மாவு சேர்த்து இடியாப்பம் இதுவரை நான் சாப்பிட்டதில்லை. இது புதிதான வகை. இடியாப்பத்தில் இப்படியும் ஒரு வகை உண்டு என்று அன்று தெரிந்து கொண்டேன்.

பின்னர் இட்லி, தோசை என விருந்து மிக பலமாக இருந்தது. மிளகாய் சட்னியும் தேங்காய் சட்னியும் சாம்பாரும் அபாரச் சுவை. ரசித்து ருசித்து சாப்பிட்டோம்.

இவர்கள் இல்லத்தில் கேட்டு வாங்கி என் சுவைக்கேற்ப ஒரு காபியும் சாப்பிட்டேன். சுவையாக இருந்தது காபி. மிக திருப்தியான ஒரு காலை உணவு விருந்து சாப்பிட்ட திருப்தி. சரி பள்ளிக்கு கிளம்பலாம் என்று புறப்படுவதற்கு முன்னர் திரு.கவிசெங்குட்டுவன் விருந்தினர்களான் எங்களுக்கு ஆளுக்கு ஒரு நூலும் பரிசளித்து மகிழ்வித்தார்.


திரு.திருமதி.கவி.செங்குட்டுவன் டாக்டர்.நா.கண்ணனுக்கு நூல் பரிசளிக்கின்றனர்.



திரு.திருமதி.கவி.செங்குட்டுவன் எனக்கு நூல் பரிசளிக்கின்றனர்.



திரு.திருமதி.கவி.செங்குட்டுவன் ஸ்வர்ணாவுக்கு நூல் பரிசளிக்கின்றனர்.



திரு.திருமதி.கவி.செங்குட்டுவன் செல்வமுரளிக்கு நூல் பரிசளிக்கின்றனர்.


இவர்கள் அன்பான கனிவான விருந்துபசாரத்தில் மனம் நெகிழ்ந்து போனோம்.

சுபா

No comments:

Post a Comment