Saturday, July 25, 2015

விரும்பாமல் சென்று.. விரும்பிய டர்பன்..! -23

குவாமூல அருங்காட்சியகத்தில் நாங்கள் கண்டும் வாசித்தும் தெரிந்து கொண்ட விசயங்கள் மனதில் ஒரு வித தாக்கத்தை தராமல் இல்லை. கருப்பர் இன மக்களின் அடிப்படை மனித  உரிமை என்னும் ஒரு விசயம் இங்கிலாந்தின் காலணித்துவ ஆட்சியின் போது ஒரு பொருட்டாகக் கருதப்படாது அவர்களை வேலை செய்யும் இயந்திரங்களாகவே கருதியமையை வெளிப்படுத்தும் வகையில் இருந்தது என்பதே உண்மை.


குவாமூல அருங்காட்சியகத்திலிருந்து புறப்பட்டு டர்பன் நகரிலேயே இருக்கும் Old Court House  அருங்காட்சியகத்திற்குப் புறப்பட்டோம். அது தான் எனது பட்டியலில் இருந்த அடுத்து பார்க்க வேண்டிய இடமாகவும் இருந்தது. இதற்கு இடையே மதிய உணவை முடித்துக் கொள்ளலாமா என்றும் நண்பர்களுடன் கலந்து பேசியதில் அனைவரும் அடுத்த அருங்காட்சியகத்தைப் பார்துது விட்டு சேர்ந்தே சாப்பிடுவோம் என சம்மதம் தெரிவித்து விட்டனர்.


குழுவாகப் பயணம் செய்யும் போது திட்டமிடுதலில் அவ்வப்போது சில  பிரச்சனைகள் எழலாம். ஒருவருக்கு பிடித்த விஷயம் இன்னொருவருக்குப் பிடிக்காமல் இருக்கலாம். ஒருவர் நீண்ட நேரம் பார்க்க விரும்பும் ஒரு விசயத்தை மர்றொருவர் சிறிது நேரம் மட்டுமே பார்த்து விட்டு செல்ல வேண்டும் என அவசரப் படுத்தலாம். ஒரு சிலர் குறைசொல்லிக் கொண்டே கூட வருவார்கள். இப்படி பல சங்கடங்கள் குழுவாக இணைந்து செல்லும் போது ஏற்பட வாய்ப்பு உண்டு. ஆனால் இந்தப் பயணத்தில் அனைவருமே ஒருமித்த கருத்தோடு எல்லா இடங்களையும் பார்த்து வந்தோம் என்பது மகிழ்ச்சியுடன் குறிப்பிட வேண்டிய விசயம். இந்த பயணத்தில் என்னுடன் இணைந்து கொண்ட எட்டு பேருக்குமே எனது பார்க்க வேண்டிய இடங்களின் பட்டியல் தேர்வுகளும் பிடித்திருந்தது. நான் ஒவ்வொரு இடத்திற்கும் திட்டமிட்ட கால அவகாசமும் அவர்களுக்குப் பிடித்திருந்தது. இது எனக்கு மட்டுமல்லாது வாகனமோட்டிகளுக்கும் உதவுவதாக அமைந்தது.


ஆக, நினைத்தது போலவே மதிய உணவை சற்று தாமதமாகச் சாப்பிடலாம் என முடிவெடுத்துப் புறப்பட்டோம்.



டர்பன்  நகர சாலையில் இருக்கும் கட்டிடங்களில் சில இங்கிலாந்தின் லண்டன் நகர கட்டிடங்களின் கட்டுமான அமைப்பை ஒத்ததாகவே அமைந்திருக்கின்றன.சாலைகள் விரிவாக தூய்மையாக மிகத் தரமாக அமைந்துள்ளன. ஒரு சாதாரண வார நாளை பிரதிபலிக்கும் வகையில் சாலைகளில் வாகனங்களும் நிறைந்திருந்தன.
ஏறக்குறைய ஏழு நிமிட நேரத்திற்குள் அடுத்த அருங்காட்சியகத்திற்கு  வந்து சேர்ந்தோம். Old Court House - இது தென்னாப்பிரிக்க சூலு கருப்பின மக்கள் கடந்த காலங்களில் அனுபவித்த அவலங்களை வெளிப்படுத்தும் ஆவணங்கள் அடங்கிய  மேலும் ஒரு அருங்காட்சியகம். இங்கு நான் வாசித்து அறிந்து கொண்ட விசயங்கள் அக்கால சூழலில் சூலு கருப்பின மக்கள், ஆங்கிலேயர்,  இந்தியர் ஆகிய மூன்று இனங்களும் வாழ்ந்த சூழலைக் காட்டுவதாக அமைந்தது.

உதாரணமாக,
சூலு கருப்பின மக்கள் ஆங்கிலேயர்களை திருமணம் செய்து கொள்வதும் நிகழ்ந்திருக்கின்றது.
ஆங்கிலேயர்கள் இந்தியர்களை திருமணம் செய்து கொள்வதும் நிகழ்ந்திருக்கின்றது.
ஆனால் மிக மிக அரிதாகவே சூலு கருப்பின மக்கள் இந்தியர்கள் திருமண உறவு நிகழ்ந்தது என்பதை உணர முடிந்தது.

இது யோசிக்க வேண்டிய ஒரு விசயம் தான் அல்லவா?


தொடரும்
சுபா

Wednesday, July 8, 2015

விரும்பாமல் சென்று.. விரும்பிய டர்பன்..! -22

சாதியை வைத்து தீண்டாமை என்னும் கருத்தை வளர்ப்பது ஒரு சமூகக் கேடு. நம் தமிழ்ச் சமூகத்தில் இன்றும் அந்த அவல நிலையை நாம் தினம் தினம் ஏதாவது ஒரு வகையில் ஊடகங்களின் வழியாகவோ அல்லது சுற்று வட்டாரத்திலேயும் கூட கேட்டும் பார்த்தும் அறிந்து வரும் நிலையிலிருந்து விடுபடவில்லை. எல்லா மனிதருக்கும் DNA அறிவியல் கூற்றுப்படி, உடலில் இருக்கும் வித்தியாசங்கள் என்பது மிக மிக மிக சிறியது. விபத்தில் அடிபட்டு உயிருக்குப் போராடும் போதோ, அல்லது உடலில் ஏதாகினும் ஒரு பாகம் சீர் கெட்டு அதனை மாற்ற வேண்டும் என்ற நிலை தோன்றினாலோ அங்கும் கூட சாதி வித்தியாசத்தைப் பார்த்து தனக்கு தன் உயிர் வேண்டாம் என ஒதுக்கி விடவா போகின்றார்கள் சாதிப் பற்றாளர்கள்? சாதிக்கொள்கை.....அதனை கடைபிடிப்போருக்கு சாதியால் தேவைப்பாடும் தீண்டாமை என்னும் கொள்கை ஆகியவை மிகக் கொடுமையானவை. நம் சமூகத்தில் நடைபெறும் அவலங்களுக்கு முக்கிய காரணமாக அமைவதும் சாதி என்னும் இந்தப் பிற்போக்குச் சிந்தனை மனதில் ஆழமாகப் பதிந்திருப்பதே. இந்த சாதிக் கொடுமையைப் போல ஆப்பிரிக்க கருப்பின மக்கள் அனுபவித்த அப்பார்தேட் (Apartheid) பிரிவினைவாதம் என்பதும் ஒரு சமூகக் கேடே!


ஆப்பிரிக்க தேசத்தில் ஆப்பிரிக்க தேசத்து கருப்பின மக்களுக்கு வெள்ளையர்கள் நிறப்பிரிவினையைக் கற்பித்து பல கொடுமைகளைத் தங்களது காலணித்துவ ஆட்சியின் போது இழைத்தனர் என்பது வரலாறு. இதனை எதிர்த்து அம்மக்களுக்காகப் போராடிய நெல்சன் மண்டேலா ஆப்பிரிக்க மக்களின் மனதில் மட்டுமல்லாது உலகில் எல்லோரும் ஒரு குலமே என நினைக்கும் அனைத்து மக்கள் மனதிலும் குடியிருப்பவர் என்பதை நன்கு அறிவோம்.



தென்னாப்பிரிக்க கருப்பின மக்கள்  அப்பார்தேட் கொடுமைகளால் பட்ட அவலங்களை வெளிப்படுத்தும் ஒரு அருங்காட்சியகமே க்வாமூல அருங்காட்சியகம். இந்த அருங்காட்சியகமே எனது பட்டியலில் அடுத்து சென்று காண வேண்டிய ஒன்றாக இருந்தது.

நாங்கள் உம்கேனி சிவாலயத்திலிருந்து புறப்பட்டு டர்பன் மைய நகருக்குள் நுழைந்தோம். மைய நகரின் வளர்ச்சியை வெளிப்படுத்தும் பெரிய உயர்ந்த கட்டிடங்கள், விளையாட்டு மைதானங்கள், வரிசை வரிசையான கடைகள் என இப்பகுதி அந்தநேரத்தில் மிக பிசியாகவே இருந்தது.


குவாமூல அருங்காட்சியகம் அமைந்திருக்கும் இக்கட்டிடம் முன்னர் அப்பார்தேட் கொடுமைகளை இழைத்த பல வெள்ளையர்களால்  வெறுக்கத்தக்க ஒரு அலுவலக கட்டிடமாக இருந்தது. இதற்குக் காரணம் இந்தக் கட்டிடமே  முன்னர் தென்னாப்பிரிக்க கருப்பின மக்களின் சமூக நல மையமாக (Department of Native Affairs)  அமைந்திருந்தது. ஆனால் இன்றோ அக்காலத்தில் நிகழ்ந்த பல மனித உரிமை மீறல் விசயங்களை வெளிப்படுத்தும் ஆவணங்களைப் பாதுகாக்கும் முக்கிய கட்டிடமாகத் திகழ்கின்றது. இதுதான் காலத்தின் கோலம்!



இது ஒரு இரண்டு மாடிக் கட்டிடம்.  உள்ளே நுழைந்ததும் வலது பக்கம் அலுவலகம் அமைந்திருப்பதைக் காணலாம். இடது பக்கம் நுழைந்தால் அருங்காட்சியகத்தின் சேகரிப்புக்களைக் காணலாம். அக்கால நிகழ்வுகளை உருவகப் படுத்திக் காட்டும் காட்சிகள் இங்கு மூலைகளில் வடிவமைக்கப்பட்டும் வைக்கபப்ட்டுள்ளன. சுவர்களில் சில முக்கிய நிகழ்வுகளைப் பிரதிபலிக்கும் பழைய புகைப்படங்களும் மாட்டப்பட்டிருக்கின்றன. மேல் மாடியிலும் தொடர்ச்சியாக பலபுகைப்படங்கள், ஆவணங்கள் காட்சிப் பொருட்கள் ஆகியன வைக்கப்பட்டிருக்கின்றன.

இந்த அருங்காட்சியகத்தின் பெயர் இதன் முதல் மேலாளரான திரு JS Marwick என்பவரின் பெயரைக் கொண்டிருக்கின்றது. இவர் தான் 7000 சூலு (தென்னாப்பிரிக்க கருப்பர் சமூகத்தில் ஒரு சமூகத்தினர்) அடிமைகளை கெத்தோக்களிலிருந்து தென்னாப்பிரிக்க போரின் போது வெளியேற்றி காப்பாற்றியவர். 1927ம் ஆண்டில் இந்தக் கட்டிடம் வடிவமைக்கப்பட்டது.


ஆய்வு மாணவர்களுக்கு மட்டுமன்றி அப்பார்தேட் கொடுமைகளைப் பற்றி அறிந்து கொள்ள விழைபவர்களுக்கும் இந்த அருங்காட்சியகம் மிக முக்கிமான ஒரு இடம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

அங்கு ஏறக்குறைய 1 மணி நேரம் இருந்து பல தகவல்களை வாசித்தும் பார்த்தும் புரிந்து கொண்டும்,  புகைப்படங்களும் எடுத்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டோம். எங்கள் வாகனம் அடுத்து டர்பன் நகரிலேயே இருக்கும் மற்றுமொரு இடத்திற்குப் பயணமானது.

தொடரும்

சுபா

Monday, July 6, 2015

விரும்பாமல் சென்று.. விரும்பிய டர்பன்..! -21

காந்தி நினைவு இல்லத்திலிருந்து புறப்படும் போது எனக்கு மட்டுமல்ல. என்னுடன் வந்திருந்த ஏனைய 8 பேரும் கூட காந்தி தொடர்பான சிந்தனைகளிலேயே மூழ்கியிருந்தோம் என்று தான் சொல்ல வேண்டும். காந்தி டர்பனில் வாழ்ந்த காலங்களில் அவர் தனது வாழ்க்கைப் பாதையை புதிதாக வடித்துக் கொண்டார். ஆப்பிரிக்காவில் இந்திய மக்களுக்கு இழைக்கப்பட்ட நடைமுறை பாரபட்ஷமானது  கொடியது. அதே வேளை இந்தியாவில் மக்கள் தன் சொந்த நாட்டிலேயே கூட அன்னியரின் ஆளுமைக்கு உட்பட்டு தனது சுயமரியாதையை இழந்து அடிமையாக இருக்கும் நிலை அவரது வாழ்க்கைப் பாதையையே மாற்றி அமைத்தது. ஒரு வக்கீலாக தொழில் புரிய சென்ற காந்தி இந்திய தேசத்து மக்களை அடிமைத்தனத்திலிருந்து வெளியேற்றி மக்கள் வாழ்க்கை நலம்பெற உதவவேண்டும் என்ற சிந்தனை பெற்றவராய் 20 வருடங்கள் கடந்து புதிய மனிதராய் தான் இந்தியா திரும்பினார்.

பல வேளைகளில் நமது சொந்த இடத்திலிருந்து பெயர்ந்து புதிய இடத்தில் வாழும் போது நமக்கு நம்மைப் பற்றி கிடைக்கும் தரிசனம் மிக உன்னதமானதாகவே அமைந்து விடுகின்றது. இதனை உணர்வோர் தமக்கும் தன் நாட்டிற்கும் மக்களுக்கும் ஏதாவது ஒரு வகையில் பயன்மிக்க செயல்களைச் செய்து வாழ்க்கைக்கு ஒரு அர்த்ததை உருவாக்குகின்றனர். இதனை அறியாத சிலரோ வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்தையும்  பொருளற்றதாக்கி வீணாக்கி விடுகின்றனர்.

எங்கள் பயணம் அங்கிருந்து டர்பனின் மையப்பகுதியை நோக்கிச் செல்ல ஆரம்பித்தது. அடுத்து என் பட்டியலில் இருந்தது டர்பன் நகரில் இருக்கும் ஒரு அழகிய சிவாலயம்.



(Umgeni Siva Temple) உம்கெனி சிவாலயம் டர்பன் நகரில் இருக்கும் பழமையான ஆலயங்களில் ஒன்று.  இது 1910ம் ஆண்டில் கட்டப்பட்டது. இந்த ஆலயத்தின் முகவரி 535 Umgeni Rd, Durban, 4001, South Africa.



தமிழகத்தின் புதுக்கோட்டையிலிருந்து டர்பனுக்கு வந்த ராமசாமி கொத்தனார் பிள்ளை என்பவர் கட்டிய ஆலயம் இது.  1885ம் ஆண்டில் இவர் ஒரு வழிப்போக்கராக டர்பன் நகருக்கு கப்பலில் வந்து சேர்ந்தார்.  டர்பன் நகரத்தில் கட்டிட நிர்மாணிப்பாளராக பணி புரிந்து கொண்டிருந்த இவர் ஆலயங்களை வடிவமைக்கும் முயற்சியிலும் இறங்கினார். கட்டிடக் கலை என்று மட்டுமல்லாமல் கலை ஆர்வமும் இலக்கியம் படைப்பதில் ஆர்வமும் கொண்டிவராக இவர் இருந்தார். டர்பன் நகரில் இவர் நாடகங்களைத் தயாரித்து மேடையேற்றியிருக்கின்றார். 1863ல் தமிழகத்தில் பிறந்து பின்னர் 1885ம் ஆண்டில் டர்பன் வந்த பிறகு  1927 வரை இங்கேயே இருந்து மேலும் சில இந்து ஆலயங்களையும் வடிவமைத்து கட்டியிருக்கின்றார். 1927ம் ஆண்டில் மீண்டும் தமிழகம் திரும்பிய இவர் 1938ம் ஆண்டில் மறைந்தார்.

இவர் தென்னாப்பிரிக்காவில் கட்டிய ஏனைய இந்து ஆலயங்களின் பட்டியல் கீழ் வருமாறு.

1. பால சுப்ரமண்ய ஆலம் - 1910  Dundee
2.கே.ஆர்.பிள்ளை தனியார் ஆலயம் - 1924 Redhill, Durban
3.ரயில்வே  பாரெக்ஸ் ஸ்ரீ எம்பெருமான் ஆலயம் - 1924 Durban
4.சிவ சுப்ரமண்ய ஆலயம் - 1912 Mount Edgecombe
5.சிவ சுப்ரமண்ய ஆலயம்  - 1915 Pietermaritzburg
6.சிவ சுப்ரமண்ய ஆலயம் - 1893 Port Elizabeth
7.உம்பிலோ ஸ்ரீ அம்பலவாணர் ஆலயம் - சுப்ரமணியர் ஆலயம் - 1905 Durban

உம்கெனி ஆலயத்தின் வாசலில் நுழையும் போது நெடிய சிவபெருமான் உருவச் சிலை வாசலிலேயே இருப்பதைக் காணலாம்.  உள்ளே இடது புறத்தில் சிறிய பூங்காவும் வலது புறத்தில் தென்னந்தோப்பும் அமைந்திருப்பது இந்த கோயில் வளாகத்தை மிக ரம்மியமாக காட்சியளிக்கச் செய்கின்றது.



ஆலயத்தின் உள்ளே புகைப்படம் எடுக்க அனுமதி கிட்டவில்லை. எனவே வெளிப்புறத் தோற்றத்தை மட்டுமே என்னால் புகைப்படம் பதிய முடிந்தது.

ஆலயம் மூன்று பகுதிகளாக அமைந்திருக்கின்றது. அலுவலக கட்டிடம் ஒன்றும் இடது புறத்தில் அமைந்திருக்கின்றது. நாங்கள் சென்றிருந்த சமயத்தில் ஆலய குருக்களும் உள்ளே இருந்தார். ஆகையால் சில நிமிடங்கள் அவருடன் பேசியதில் அவர் இலங்கைத் தமிழர் என்பதை அறிந்து கொண்டோம். வாசலில் இரண்டு மயில்கள் அங்கும் இங்கும் நடை பழகிக் கொண்டிருந்தன. இந்த ரம்மியமான காட்சியை பார்த்து சுவாமி வழிபாடும் செய்து  விட்டு அங்கிருந்து எனது பட்டியலில் இருந்த அடுத்த இடத்திற்குப் பயணமானோம்.


தொடரும்..
சுபா