Thursday, January 20, 2005

ஜெர்மனி - Muenchen (Munich) -Bayern, Germany. [ 6 - 9 Jan 2005 ] - Part V
1972ம் ஆண்டில் ஒலிம்பிக் விளையாட்டு மூன்ஷன் நகரத்தில் நடைபெற்றது. அதற்காக பிரத்தியேகமாக கட்டப்பட்ட ஒலிம்பிக் விளையாட்டு மையத்தைக் காண காலையிலேயே நண்பர்கள் அனைவரும் கிளம்பி விட்டோம். இந்த ஒலிம்பிக் விளையாட்டு மையத்தின் பக்கத்தில் தான் மூன்ஷனின் தொலைகாட்சி கோபுரம் இருக்கின்றது. முதலில் கோபுரத்திற்குச் சென்று பின்னர் விளையாட்டு மையத்தை பார்வையிடுவதுதான் எங்கள் திட்டமாக இருந்தது.
தொலைகாட்சி கோபுரத்தின் மேலே செல்லுவதற்கு கட்டணம் தேவை. (மலேசியாவில் இரட்டைக் கோபுரத்தின் மேலே செல்வதற்குக் கூட காசு கேட்பதில்லை. ஆனால் இங்கு எங்கு சென்றாலும் நுழைவுக் கட்டணம் கட்டாயம்) கோபுரத்தின் உச்சியிலிருந்து பார்த்தால் ஏறக்குறைய மூன்ஷன் நகரம் முழுவதும் தெரிகிறது. BMW கார் நிறுவனத்தின் தலைமையகம் அருகாமையிலயே உள்ளது. அதன் அருகிலேயே BMW Musuem இருக்கின்றது. பிரமாண்டமாக வடிவமைக்கப்பட்ட ஒரு கட்டிடம் இது. தாலைகாட்சி கோபுரத்தின் மற்றொரு பகுதியிலிருந்து பார்த்தால் ஒலிம்பியா பார்க் காட்சியளிக்கின்றது. விளையாட்டு மைதானம், அதனைச் சேர்ந்தார் போல உள்ள ஆறு, பூங்கா ஆகியவை மனதை கொள்ளை கொள்ள வைக்கின்றன.1972ல் நடைபெற்ற இந்த ஒலிம்பிக் விளையாட்டு நிகழ்வோடு சேர்ந்தார்போல நிகழ்ந்த வன்முறை சம்பவத்தை பலரும் ஞாபகம் வைத்திருக்கக் கூடும். ஆகஸ்டு 26ம் நாள் தொடங்கப்பட்ட விளையாட்டுக்கள் சீராக 10 நாட்கள் தொடர்ந்து கொண்டிருந்த வேளையில் செப்டம்பர் 5ம் தேதி காலையில் 8 பாலஸ்தீனிய தீவிரவாதிகள் விளையாட்டு வீரர்களுக்காக அருகிலேயே அமைக்க ப்பட்டிருந்த ஒலிம்பிக் கிராமத்திற்குள் புகுந்து 2 இஸ்ரேலிய விளையாட்டு வீரர்களை கொன்று விட்டு மேலும் 9 பேரை பிணையாக பிடித்துக் கொண்டு சென்று பின்னர் அவர்கள் கொல்லப்பட்டனர். இதனால் ஒலிம்பிக் விளையாட்டு உடனே நிறுத்தப்பட்டது. ஒலிம்பிக் விளையாட்டு வரலாற்றில் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிகழ்வு.
இந்த ஒலிம்பிக் விளையாட்டு மைதானப் பகுதி தற்போது உலகளாவிய அளவில் பல நிகழ்வுகள் நடத்துவதற்காகப் பயன்படுகின்றது. ஓய்வு நேர கேளிக்கை விளையாட்டுக்களில் ஈடுபாடு உடையவர்கள் பலர் இங்குள்ள வசதிகளைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
ஜெர்மனியைப் பொறுத்தவரை மூன்ஷன் நகரம் இருக்கின்ற பாயர்ன் மாநிலம், ஜெர்மனியின் ஏனைய மாநிலங்களை விட பணக்கார மாநிலமாக கருதப்படுகின்றது. இங்கு வெளிநாட்டவர்களும் அதிகம். இதற்கு முக்கியக் காரணம் இது ஒரு வர்த்தக மையமாக இருப்பதுதான். இங்கு பொதுமக்கள் பரவலாக சுயமாக வாகனங்கள் வைத்துக் கொள்ள விரும்புவதில்லை. இரயில், அதிவேக இரயில் பஸ் போன்ற பொது போக்குவரத்து சாதனங்கள் மிகச் சிறப்பாக இயங்கி வருவதாலும், கார் வைப்பதற்கான இடவசதி என்பது மிகப் பெரிய பிரச்சனை என்பதாலும் மக்கள் பொது போக்குவரத்து சாதனங்களை விரும்புகின்றார்கள். வர்த்தக மையமாக இருப்பதால் மற்ற ஓய்வு நேர நடவடிக்கைகள் மற்றும் கேளிக்கை நடவடிக்கைகளுக்கு இங்கு பஞ்சமாக இருக்குமோ என்றல் நிச்சயமாக இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அழகழகான பூங்காக்கள், பிரமிக்க வைக்கும் வர்த்தக மையங்கள், பழமை வாய்ந்த கட்டிடங்கள், தொல்பொருள் காட்சி நிலையங்கள், விளையாட்டு மைதானங்கள், சினிமா, வகை வகையான உணவகங்கள் என்று பல வகையில் திருப்தியளிக்கக்கூடிய அனுபவத்தை வழங்குகின்ற ஒரு நகரம் தான் இது.
மாலை மூன்ஷன் நகரிலிருந்து ஸ்டுட்கார் திரும்பும் போது இந்த நகரை சுற்றிப் பார்க்க நிச்சயமாக 4 நாட்கள் போதாது என்பதை உணர்ந்தோம். இந்த பயணம் இனிமையான நினைவலைகளை எனக்குள் ஏற்படுத்தி என்னை மகிழவைத்தது.

Wednesday, January 19, 2005

ஜெர்மனி - Muenchen (Munich) -Bayern, Germany. [ 6 - 9 Jan 2005 ] - Part IVசனிக்கிழமை காலையிலேயே ப்ரெட்ஸல் சகிதமாக காலை உணவை முடித்து நாங்கள் மூன்ஷன் நகரின் புறநகர் பகுதியான அம்மர்சீ (Ammersee) ஏரிப் பகுதிக்கு புறப்பட்டோ ம். மூன்ஷன் மையப்பகுதியிலிருந்து விரைவு இரயிலில் இந்த இடத்தை 45 நிமிடத்தில்
அடைந்து விடமுடியும்.


அம்மர்சீ அதன் இயற்கை அழகுக்கு மாத்திரம் புகழ் பெற்ற ஒன்றில்லை. sailing பயிற்சி பள்ளிகள் பல இங்கு இருக்கின்றன. இங்குதான் ஜெர்மனியில் மிகப் பழமையான sailing பள்ளி இருக்கின்றது. இந்த ஏரியை சாதாரணமாக எடை போட்டு விட முடியாது. கடலைப் பார்ப்பது போல நீண்டு பரவி இருக்கின்றது அம்மர்சீ.அம்மர்சீக்கு அருகாமையில் மலையுச்சியில் மிகப்பழமை வாய்ந்த பாரோக் வடிவமைப்பிலான ஒரு தேவாலயம் இருக்கின்றது. ஜெர்மனியில் இருக்கின்ற திருத்தல யாத்திரைப் பகுதிகளில் இதுவும் ஒன்றாகக் கருதப்படுகின்றது. (ஹிந்து சமயத்தில் உள்ளது போன்றே ஜெர்மனியிலும் தீர்த்த யாத்திரை செய்யும் பழக்கம் வழக்கத்தில் இருக்கின்றது. இதனை பற்றி மற்றொரு பதிவில் குறிப்பிட முயற்சிக்கிறேன்) இந்த தேவாலயத்தை அடைவதற்கு மலையை நோக்கி ஏறக்குறைய 1மணி நேரமாவது நடக்க ஧வண்டும். வழியில் பற்பல முக்கிய இடங்களும் இருக்கின்றன. அதில் குறிப்பிட்டு சொல்வதென்றால் நடுவழியில் இருக்கின்ற தேவாலய குருமார்களின் மடத்தைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். பழமை வாய்ந்த கட்டிடம்; மிக நேர்த்தியாக கட்டப்பட்டிருக்கின்றது. முன்பெல்லாம் குருமார்கள் மற்றும் சமய ஆர்வலர்களை மட்டுமே கவர்ந்து வந்த இந்த மலைப் பிரதேசம் இப்போது ஹைக்கிங்
செய்பவர்களுக்குப் பிடித்த பகுதியாக விளங்குகின்றது. ஏரிக்கரையில் நீந்திக் கொண்டும் சத்தமிட்டுக் கொண்டும் இருந்த வாத்துக்களை பார்த்துக் கொண்டே மலையுச்சியை நோக்கி நடக்க ஆரம்பித்தோம்.

மலைப்பிரதேசத்தில் இந்த குளிர் காலத்தில் நடப்பது சுலபமான ஒரு விஷயமல்ல என்பதை நடக்க நடக்க தெரிந்து கொண்஧டன். காய்ந்த சருகுகள் தரையெல்லாம் கொட்டிக் கிடப்பதாலும் சில நாட்களுக்கு முன் பெய்த பணி இன்னும் கொஞ்சம் மிஞ்சி இருந்ததாலும் பாதை சில நேரங்களில் வழுக்கிக் கொண்டேயிருந்தது. கொஞ்சம் கவனம் குறைந்தாலும் கீழே விழுந்து விடுவே஡ம். இந்த பயம் இருந்தாலும் மலையின் இயற்கை அழகு மனதை கொள்ளை கொள்வதாகவே இருந்தது. இப்படியே நடந்து குருமார்களின் மடத்தைக் கடந்து ஒரு வழியாக மலையுச்சியில் இருக்கும் தேவாலயத்தை அடைந்தோம்.

அளவில் கொஞ்சம் சிறியதாக இருந்தாலும், தேவாலயத்தின் உட்புறம் மிகப் பிரமாண்டமாக வடிவமைக்கப்பட்டிருந்தது. உள்ளே பார்வையாளர்கள் இருந்தாலும் நிசப்தமாக தியான சிந்தையை தூண்டும் வகையில் அமைதியாக இருந்தது. தேவாலயம் தூய்நமயாக பாதுகாக்கப்படுகின்றது. இதனைப் பார்க்கும் போது தமிழகத்தில் இருக்கும் நமது பழமை வாய்ந்த ஆலயங்களும் இப்படி தூய்மையாக, அமைதி நிலவும் வகையில் பாதுக்காக்கப்பட்டு வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என நினைத்துக் கொண்஧
டன்.

Tuesday, January 18, 2005

ஜெர்மனி - Muenchen (Munich) -Bayern, Germany. [ 6 - 9 Jan 2005 ] - Part IIIஜெர்மனியில் செல்லுமிடமெல்லாம் சைவ உணவு வகைகளுக்கு கொஞ்சமும் பிரச்சனையேயில்லை. அதற்காக தோசை இட்லி சாம்பாரெல்லாம் தேடிக் கொண்டிருக்க முடியாது. அதற்கு மாற்றாக உருளைக் கிழங்கிலும் பச்சை காய்கறிகளிலும் தங்கள் கை வரிசையைக் காட்டுபவர்கள் ஜெர்மானியர்கள். நான் இருக்கின்ற போப்லிங்கன் நகரம் பாடன் உர்ட்டெம்பெர்க் எனும் மாநிலத்தைச் சார்ந்தது. எப்படி இந்தியாவில் தமிழகத்திற்கு கேரளாவிற்கு ஆந்திராவிற்கு என்று தனித்தனியாக சிறந்த உணவு வகைகள் இருக்கின்றதோ அதேபோல ஜெர்மனியிலும் ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனி ஷ்பெஷல் உணவு வகை உண்டு. உணவு வகைகளில் சிறந்ததாக இந்த பாடன் உர்ட்டெம்பெர்க் மற்றும் முன்ஷன் நகரம் இருக்கும் பாயர்ன்(Bavaria) மாநிலமும் கருதப்படுகின்றன. இதில் என்ன வித்தியாசம் என்றால், பாடன் உர்ட்டெம்பெர்க் மாநிலத்தில் இத்தாலிய சைவ உணவுகளோடு இந்த மாநிலத்திற்கு உரியதான பல சைவ உணவு வகைகளையும் எல்லா உணவு விடுதிகளிலும் பெற்று விட முடியும். ஆனால் பாயர்ன் மாநிலம் அசைவப் பிரியர்களுக்கு அதிகமான வகைகளை வழங்குவதில் சிறந்து விளங்குகின்றது.

பொரித்த பன்றி இறைச்சி, கொஞ்சம் பச்சை காய்கறிகள், மற்றும் உள்நாட்டு பியர் இங்கு மிகப் பரவலாக எல்லா உணவகங்களிலும் கிடைக்கக்கூடிய ஒன்று. அதோடு சால்மன் மீன், வைன், இவற்றோடு காய்கறிகள் கொண்ட ஒரு வகை உணவும் உண்டு. பன்றி மாடு, கோழி, வான்கோழி இறைச்சி வகைகளில் பல வகையான உணவுகளை இங்குள்ள உணவகங்கள் வழங்குகின்றன. மீன் வகைகள் கொஞ்சம் ஷ்பெஷல் என்று தான் கூற வேண்டும்.
பாயர்ன் மாநிலத்தின் புகழ் கூறும் மற்றொரு உணவு வகை ப்ரெட்ஸல் என அழைக்கப்படும் ஒரு வகை ரொட்டி.


இது இந்த மாநிலத்தில் தான் முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டதாக ஜெர்மானியர்கள் கூறுகின்றார்கள். (ப்ரேட்ஸலைப் பற்றி சற்று அறிந்து கொள்ள http://en.wikipedia.org/wiki/Brezel) ஜெர்மனியின் எல்லா இடங்களிலும் இந்த வகை ரொட்டி கிடைத்தாலும், இதன் மிகச் சுவையான இந்த ரொட்டியை பாயர்னிலும் பாடன் உர்ட்டெம்பெர்க் மாநிலத்திலும் தான் பெற முடியும். முதன் முதலில் இந்த ரொட்டியைச் சாப்பிடுபர்களுக்கு ஒரு வித்தியாசமான சுவையைக் காட்டுவதால் இது பிடிக்காமல் போய்விடக் கூடும். ஆனால் பழகி விட்டால் ப்ரெட்ஸல் இல்லாமல் காலை உணவே இல்லை என சொல்லும் அளவிற்கு பழகி விடுவோம். இந்த ரொட்டியில் உள்ள சிறப்பு அதன் மேலே பூசப்படும் ஒரு விதமான பொருள் தான். இதன் சுவை கொஞ்சம் துவர்ப்பாகவும் இருக்கும். ரொட்டியின் மேல் உப்புத் துகள்கள் சேர்க்கப்பட்டிருக்கும். பட்டர் சேர்த்து சாப்பிடும் போது இதன் சுவையே தனிதான்.

சாதரணமாக சிறிய அளவில் ஜெர்மனி முழுதும் கிடைக்கக்கூடிய இந்த ப்ரெட்ஸல், அக்டோபர் மாதம் மட்டும் மூன்ஷன் நகரில் ஒரு பெரிய பீஸா அளவிற்கு கடைகளில் கிடைக்கும். இந்த பெரிய ப்ரெட்ஸலை ஒருவரால் நிச்சயமாக சாப்பிட்டு முடிக்க முடியாது.
மூன்ஷன் வந்திருப்பதால் இந்த நகரத்தின் ஸ்பெஷல் தான் சாப்பிட வேண்டும் என்று முடிவெடுத்து மெனு அட்டையில் எனக்குப் பிடித்த உணவைத் தேடினேன். ஒரு சைவ உணவு அகப்பட்டது. அடுத்த பதினைந்து நிமிடத்தில் எனது உணவு வந்து சேர்ந்தது. பெரிய அளவிலான ஒரு உருளைக் கிழங்கு இரண்டாக பிரிக்கப்பட்டு வேகவைத்து வருக்கப்பட்டு அதோடு காய்கறிகளை சோயா சோஸ் சேர்ந்து மெலிதாக வருத்து வைத்திருந்தார்கள். உணவை சுவைக்க ஆரம்பித்தோம். சுவை பிரமாதம்.

Friday, January 14, 2005

ஜெர்மனி - Muenchen (Munich) -Bayern, Germany. [ 6 - 9 Jan 2005 ] - Part IIமூன்ஷன் நகர மத்தியிலேயே அமைந்திருக்கும் பெரிய பூங்கா இந்த இங்லீஷ் கார்டன். சுமார் 900 ஏக்கர் நிலப்பரப்பில் பச்சை பசேலென்று அமைந்திருக்கும் இந்த பூங்கா அதன் தனித்துவத்தால் வருவோரைக் கவரும் வகையில் அமைந்திருக்கின்றது. இங்குள்ள சீனக் கோபுரம், ஏரி, அதில் அழகாக மிதந்து வரும் அன்னப்பறவைகள், விதம் விதம஡ன வாத்துக்கள் போன்றவை இந்த பூங்காவின் அழகை மேலும் ரசிக்க வைக்கின்றன. கோடை காலத்தில் இந்த பூங்காவிற்கு மேலும் ஒரு சிறப்பு அம்சம் ஒன்றும் இருக்கின்றது. இந்தப் பூங்காவின் ஒரு பகுதியில் கோடையில் நிர்வாண சூரியக் குளியல் செய்வதற்காக மக்கள் கூடுவதும் வழக்கம். நகரின் மையப் பகுதியான ஓடன்ப்லாட்ஸ் பகுதியிலிருந்து மூன்ஷன் நகர தெற்கு எல்லை வரை இந்த பூங்கா நீண்டு அமைந்திருக்கின்றது. செல்ல செல்ல இந்த பூங்கா விரிவாகிக் கொண்டே வருகின்றது; மாலைப் பொழுதை இயற்கையோடு கலந்து அனுபவிப்பதற்கு சிறந்த இடம் இந்தப் பூங்கா. ஐரோப்பாவில் உள்ள மிகப் பெரிய பூங்காவாக இந்த இங்லீஷ் கார்டன் அமைந்துள்ளது.ஐரோப்பிய நகரான இந்த மூன்ஷனில் அமைந்துள்ள இந்த பூங்காவில் ஆசியாவின் கலை நுனுக்கத்தை எடுத்துக் காட்டும் குறிப்பிடத்தக்க ஒரு இடமும் இருக்கின்றது. "Haus der Kunst" என்றழைக்கப்படும் கலைக்கூடத்தின் பக்கத்தில் அழகான ஒரு ஜப்பானிய உணவகம் அமைந்துள்ளது. Mitsuo Normura என்ற ஜப்பானியர் ஒருவர் தான் இந்த உணவகத்தை ஒலிம்பிக் விளையாட்டு இந்த நகரில் 1972ல் நடந்த பொழுது கட்டினாராம்.


இந்த உணவகத்தின் சிறப்பு அம்சம் என்னவென்றால் ஒவ்வொரு மாதத்தின் 2ம் மற்றும் 4ம் வார இறுதி நாட்களில் மதியம் 3லிருந்து 5 வரை தேநீர் அருந்தும் வைபவம் இங்கு நடைபெறுமாம். இந்த சிறப்பு நிகழ்ச்சிக்கு ஆதாரமாக இருப்பது என்ன விஷயம் என்பது தெரியவில்லை. இந்த உணவகத்திற்குப் பக்கத்திலேயே அமைந்திருக்கின்றது கண்ணைக் கவரும் வகையில் கட்டப்பட்டுள்ள சீன கோபுரம். மூன்ஷன் நகரத்திலேயே பிரபலமாக wildest beer garden in Munich என அழைக்கப்படும் பகுதி இது. கோடை காலத்தில் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழியும் இந்த இடம் நாங்கள் சென்றிருந்த அந்த மாலை வேளையில் விண்டர் குளிர் காரணத்தால் ஆட்கள் யாருமின்றி அமைதியாக காட்சியளித்துக் கொண்டிருந்தது.

கோடைகாலத்தில் பெரும்பாலும் சூரிய வெளிச்சம் இரவு 10 மணி வரை இருக்கும்; அப்போது இந்த திறந்த மண்டபமான இந்த சீன கோபுரத்தில் மட்டும் 7000 பேர் அமரக்கூடிய வகையில் நாற்காலிகளை அமைத்திருப்பார்களாம்.இதனைத் தாண்டி வரும் வழியில் பழங்கால அரசவை மண்டபங்களை நினைவு படுத்தும் வகையில் அமைந்திருக்கும் மானோபெறோஸ் மண்டபம் அமைந்திருக்கின்றது. இதன் மேலே சென்று பார்த்தால் மூன்ஷன் நகரத்தின் பெரும்பாலான முக்கிய நினைவுச் சின்னங்களையெல்லாம் பார்த்து விட முடிகின்றது. இந்த மண்டபம் இசை பிரியர்களுக்கு உகந்த இடம் போலத் தெரிகின்றது. பல இனத்தைச் சார்த்த மக்களும் அவர்களுக்குத் தெரிந்த இசைக் கருவிகளை இசைத்துக் கொண்டு (தரையில் சிறிய பெட்டி அல்லது தொப்பியை வைத்து விடுகிறார்கள், காசுக்காகத்தான்) வருவோரை இசையால் மகிழ்விக்கின்றனர். இந்திய உருவச் சாயலுடன் ஒருவர் ஹார்மோனியம் போன்ற ஒரு இசைக் கருவியை கையில் ஏந்தியவாறு வாசித்துக் கொண்டிருந்தார். நாங்கள் அங்கிருந்த சமயத்தில், மண்டபத்தின் நுழைவாயிலுக்குச் சற்று தள்ளி ஜெர்மானியர் ஒருவர் புல்லாங்குழல் போன்ற ஒரு இசைக்கருவியை வாசித்துக் கொண்டிருந்தார்.

இதனை பார்த்த திருப்தியுடனும், நடந்த களைப்பினாலும் அங்கிருந்த ஒரு ஜெர்மானிய பாரம்பரிய உணவு விடுதியில் இரவு/மாலை உணவுக்காக நுழைந்தோம்.

Thursday, January 13, 2005

ஜெர்மனி - Muenchen (Munich) -Bayern, Germany. [ 6 - 9 Jan 2005 ] - 1வலைப்பக்கத்தில் எனது பயணக் கட்டுரைகளை எழுதி நெடுநாட்களாகி விட்டன. இந்த ஆண்டு தொடக்கத்திலேயே எதிர் பாராத விதமாக உள்நாட்டிலேயே சிறிய பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு அமைந்தது. அன்றாட அலுவலக வேலைகள், அலைச்சல்கள், இவைகளுக்கு மத்தியில் 4 நாட்கள் ஓய்வு எடுத்துக் கொண்டு ஜெர்மனியின் தெற்கு மாநிலம஡ன பாயர்னில்(Bayern) உள்ள மூன்ஷன் (Muenchen) நகரத்திற்கு கடந்த வாரம் சென்று வந்திருந்தேன். பொதுவாகவே விண்டர் குளிரில் நான் அதிகமாக ஜெர்மனியில் விடுமுறை எடுத்துக் கொண்டு பயணிப்பது அரிது. பெரும்பாலும் அலுவலக வேலைகளில் கவனம் செலுத்துவதே வழக்கமாகிவிட்ட சூழ்நிலையில் இந்த முறை இந்த சிறிய திடீர் பயணம் சற்று வித்தியாசமாகவே அமைந்திருந்தது.

ஸ்டுட்கார்ட்(Stuttgart) நகரத்திலிருந்து மூன்ஷன் நகரை காரில் சென்று அடைவதற்கு இரண்டரை மணி நேரம் போதும். கார் மட்டுமின்றி இரயில் வழியாகவும் மற்றும் விமானம் வழியாகவும் இந்த நகரை அடைய முடியும். பவேரியன் நகரம஡ன இந்த நகரம் தெற்கு ஜெர்மனியின் மத்தியில் அமைந்துள்ளது. இந்த நகரின் சிறப்பு அம்சங்கள் இங்கு தயாரிக்கப்படும் பியர்களும், பழமையையும் நாகரிக வளர்ச்சியையும் காட்டும் பிரமாண்டமான கட்டிடங்களும், இயற்கை அழகும஡கும். இந்த நகரின் சிறப்பைக் கூறும் பிரமாண்டமான சில தொல்பொருள் ஆய்வு கூடங்களும் இங்கு அமைந்திருக்கின்றன. இதற்கும் மேலாக பவேரியா ஆல்ப்ஸ் (Baverian Alps) மலைத்தொடரின் வாயிலாக அமைந்திருப்பதால், குளிர்கால விளையாட்டுக்களுக்கு பிரசித்தி பெற்ற இடமாகவும் இந்த நகரம் விளங்குகின்றது.
மூன்ஷன் நகரம் 1158ம் ஆண்டில் ஐசார் நதிக்கரையில்(River Isar) உருவாக்கப்பட்டது. மூன்ஷன் என்னும் பெயர் துறவிகளின் இல்லம் என்பதைக் குறிப்பது. துறவிகள் தான் இங்கு பியர் தயாரிக்கும் துறையை வளார்த்ததாக இந்தகரைப் பற்றி விளக்கும் கையேடுகள் கூறுகின்றன.இப்படி பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் துறவிகள் தொடக்கி வைத்த இந்த தொழில் இன்று இந்த நகரின் புகழை உலகம் முழுவதும் பரவியிருக்கச் செய்துள்ளது. 1810ம் ஆண்டில் தான் இப்போது ஒவ்வொரு ஆண்டும் இந்த நகரில் நடைபெறும் அக்டோ பர் திருவிழா(October Fest) ஆரம்பிக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் இந்த திருவிழாவைக் காண உலகெங்கிலுமிருந்து 6 மில்லியன் மக்கள் இங்கு வருகின்றனர். இரண்டு வாரங்களுக்கு நடைபெறும் இந்த திருவிழாவின் போது ஏறக்குறைய ஐந்தரை மில்லியன் லிட்டர் பியர்கள் பயன்படுத்தப்படுவதாக (விற்று முடிவதாக) மூன்ஷன் வலைப்பக்கம் தெரிவிக்கின்றது.
இந்த நகருக்கு நான் இரண்டு முறை ஏற்கனவே அலுவலக விஷயமாக வந்திருந்தாலும், இம்முறை விடுமுறை என்பதால் சுதந்திரமாக சில இடங்களை சுற்றி வர முடிந்தது. குளிர் காலம் என்றாலும் இங்கிருந்த நான்கு நாட்களுமே ஏறக்குறைய 6லிருந்து 11 டிகிரி வரை சீதோஷ்ணம் இருந்ததால் வெளியில் சுற்றிப்பார்க்கச் செல்வதற்கு சிரமமாக இல்லை. மேக மூட்டமின்றி சூரிய வெளிச்சம் நிறைந்திருந்ததால், சந்தோஷமாக நகர் வலம் வரமுடிந்தது.
மூன்ஷனில் பல முக்கிய இடங்கள் இருந்தாலும், முதலில் எங்கள் பட்டியலில் இருந்தது இங்குள்ள அழகிய பூங்காவான இங்லீஸ்ஷ் கார்டந் தான். அதனை பார்த்து ரசிக்க மதியம் கிளம்பினோம்.