
வலைப்பக்கத்தில் எனது பயணக் கட்டுரைகளை எழுதி நெடுநாட்களாகி விட்டன. இந்த ஆண்டு தொடக்கத்திலேயே எதிர் பாராத விதமாக உள்நாட்டிலேயே சிறிய பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு அமைந்தது. அன்றாட அலுவலக வேலைகள், அலைச்சல்கள், இவைகளுக்கு மத்தியில் 4 நாட்கள் ஓய்வு எடுத்துக் கொண்டு ஜெர்மனியின் தெற்கு மாநிலமன பாயர்னில்(Bayern) உள்ள மூன்ஷன் (Muenchen) நகரத்திற்கு கடந்த வாரம் சென்று வந்திருந்தேன். பொதுவாகவே விண்டர் குளிரில் நான் அதிகமாக ஜெர்மனியில் விடுமுறை எடுத்துக் கொண்டு பயணிப்பது அரிது. பெரும்பாலும் அலுவலக வேலைகளில் கவனம் செலுத்துவதே வழக்கமாகிவிட்ட சூழ்நிலையில் இந்த முறை இந்த சிறிய திடீர் பயணம் சற்று வித்தியாசமாகவே அமைந்திருந்தது.
ஸ்டுட்கார்ட்(Stuttgart) நகரத்திலிருந்து மூன்ஷன் நகரை காரில் சென்று அடைவதற்கு இரண்டரை மணி நேரம் போதும். கார் மட்டுமின்றி இரயில் வழியாகவும் மற்றும் விமானம் வழியாகவும் இந்த நகரை அடைய முடியும். பவேரியன் நகரமன இந்த நகரம் தெற்கு ஜெர்மனியின் மத்தியில் அமைந்துள்ளது. இந்த நகரின் சிறப்பு அம்சங்கள் இங்கு தயாரிக்கப்படும் பியர்களும், பழமையையும் நாகரிக வளர்ச்சியையும் காட்டும் பிரமாண்டமான கட்டிடங்களும், இயற்கை அழகுமகும். இந்த நகரின் சிறப்பைக் கூறும் பிரமாண்டமான சில தொல்பொருள் ஆய்வு கூடங்களும் இங்கு அமைந்திருக்கின்றன. இதற்கும் மேலாக பவேரியா ஆல்ப்ஸ் (Baverian Alps) மலைத்தொடரின் வாயிலாக அமைந்திருப்பதால், குளிர்கால விளையாட்டுக்களுக்கு பிரசித்தி பெற்ற இடமாகவும் இந்த நகரம் விளங்குகின்றது.
மூன்ஷன் நகரம் 1158ம் ஆண்டில் ஐசார் நதிக்கரையில்(River Isar) உருவாக்கப்பட்டது. மூன்ஷன் என்னும் பெயர் துறவிகளின் இல்லம் என்பதைக் குறிப்பது. துறவிகள் தான் இங்கு பியர் தயாரிக்கும் துறையை வளார்த்ததாக இந்தகரைப் பற்றி விளக்கும் கையேடுகள் கூறுகின்றன.

இப்படி பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் துறவிகள் தொடக்கி வைத்த இந்த தொழில் இன்று இந்த நகரின் புகழை உலகம் முழுவதும் பரவியிருக்கச் செய்துள்ளது. 1810ம் ஆண்டில் தான் இப்போது ஒவ்வொரு ஆண்டும் இந்த நகரில் நடைபெறும் அக்டோ பர் திருவிழா(October Fest) ஆரம்பிக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் இந்த திருவிழாவைக் காண உலகெங்கிலுமிருந்து 6 மில்லியன் மக்கள் இங்கு வருகின்றனர். இரண்டு வாரங்களுக்கு நடைபெறும் இந்த திருவிழாவின் போது ஏறக்குறைய ஐந்தரை மில்லியன் லிட்டர் பியர்கள் பயன்படுத்தப்படுவதாக (விற்று முடிவதாக) மூன்ஷன் வலைப்பக்கம் தெரிவிக்கின்றது.
இந்த நகருக்கு நான் இரண்டு முறை ஏற்கனவே அலுவலக விஷயமாக வந்திருந்தாலும், இம்முறை விடுமுறை என்பதால் சுதந்திரமாக சில இடங்களை சுற்றி வர முடிந்தது. குளிர் காலம் என்றாலும் இங்கிருந்த நான்கு நாட்களுமே ஏறக்குறைய 6லிருந்து 11 டிகிரி வரை சீதோஷ்ணம் இருந்ததால் வெளியில் சுற்றிப்பார்க்கச் செல்வதற்கு சிரமமாக இல்லை. மேக மூட்டமின்றி சூரிய வெளிச்சம் நிறைந்திருந்ததால், சந்தோஷமாக நகர் வலம் வரமுடிந்தது.
மூன்ஷனில் பல முக்கிய இடங்கள் இருந்தாலும், முதலில் எங்கள் பட்டியலில் இருந்தது இங்குள்ள அழகிய பூங்காவான இங்லீஸ்ஷ் கார்டந் தான். அதனை பார்த்து ரசிக்க மதியம் கிளம்பினோம்.
No comments:
Post a Comment