Tuesday, August 1, 2017

ரைன் நதிக்கரையில் - 3


மீண்டும் ரைன் நதிக்கரையில் நான்...

அது என்னை ஈர்க்கிறதா, நான் அதனை ஈர்க்கின்றேனா, என்ற சிந்தனையுடன்..

சிலர் ஜோகிங் செய்து கொண்டிருக்கின்றனர்..

இளைஞர்கள் முகமெல்லாம் புன்னகையாக அரட்டையில் மூழ்கியிருக்கின்றனர்..

இளம் பெற்றோர் குழந்தைகளுடன் நடக்கின்றனர்..

காதலர்கள் இயற்கையை ரசித்துக் கொண்டு அவர்கள் உலகில் சஞ்சரிக்கின்றனர்..

கப்பல்கள் என் நடையை மிஞ்சும் வேகத்துடன் இருபுறமும் பயணிக்கின்றன..

வாத்துகளும், மைனாக்களும் உணவு தேடித் திரிகின்றன...

ரைன் அதன் இயல்பான சலனத்துடன் ஓடிக் கொண்டிருக்கின்றது.
....இவற்றை வாசித்தவாறு நான் நடக்கின்றேன் சற்றே தணிந்த காய்ச்சலுடன்.

குறிப்பு: நலம் விசாரித்த அனைத்து தோழர்களுக்கும் சகோதர சகோதரியருக்கும் என் மனமார்ந்த நன்றி. காய்ச்சல் வந்தால் ஒரு வாரம் சிரமப்படத்தானே வேண்டும்..

Tuesday, July 25, 2017

ரைன் நதிக்கரையில் - 2

Subashini Thf feeling relaxed.


மீண்டும்..
ரைன் நதிக் கரையோரத்தில் நடைபயணம்

மழைத்தூறல்
பலர் நனைந்து விடுவோம் என பயந்து ஒளிந்து விட்டனர்
சிலர் மழையில் நனைந்த படி நடக்கின்றனர்
சில கப்பல்கள் பயணித்துக் கொண்டிருக்கின்றன...
சில புறாக்கள் விட்டுப் போன உணவுகளை கொத்தித் தின்கின்றன..
ரைன் நதி எப்போதும் போல் அதன் இயல்பான சலனத்துடன் ஓடிக் கொண்டிருக்கின்றது.
...இவற்றை ரசித்தபடி நான் நடந்து கொண்டிருக்கின்றேன்.
-சுபா


Tuesday, July 11, 2017

ரைன் நதிக்கரையில் -1


இப்போது..

லுட்விக்ஸ்ஹாபன் ரைன் நதிக்கரையோரக் காட்சி..

- இளைஞர்கள் ஒன்று கூடி கதை பேசிக்கொண்டிருக்கின்றனர்

- கிறித்துவ மதப்பிரச்சாரகர் இருவர் தங்கள் கையேடுகளை வைத்துக் கொண்டு யாரும் தங்களிடம் வருவார்களா என அன்புடன் புன்னகைத்து அமர்ந்திருக்கின்றனர்.
-சிலர் ஜாகிங் செல்கின்றனர்
-நீளமான 2 கப்பல்கள் ரைன் நதியில் இரு வேறு துருவங்களில் பயணித்துக் கொண்டிருக்கின்றன
- சிலர் கொண்டு வந்த உணவை தனியாக அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றனர்
-சிலர் செல்போனில் மூழ்கி விட்டனர்
-ஒரு வீடு இல்லாதவர் பியர் பாட்டிலும் தனது மூட்டை முடிச்சுகளுடனும் ஒரு நாயுடன் அமர்ந்திருக்கின்றார்.
- நதி அதன் இயல்பான சலனங்களுடன் ஓடிக்கொண்டிருக்கின்றது
....
இவர்களோடு நான்..இவர்களை வாசித்தவாறு நடக்கின்றேன்.

சுபாSaturday, May 13, 2017

குரோய்ஷியா - அலசல்

Subashini Thf updated her cover photo.
குரோய்ஷியா தொடர்ச்சியாக பல போர்களைக் கண்ட நாடு. யுகோஸ்லாவியா என்ற பெயரை நினைத்தாலே நீண்டகால தொடர்ச்சியான போர்களும் அதன் சமயம் நிகழ்ந்த மனித உரிமை மீறல் தொடர்பான செய்திகளும் தான் நமக்கு நினைவுக்கு வரும்.
இன்றைய குரோய்ஷிய நிலப்பகுதி மக்கள் குடியேற்றம் நிகழ்ந்த மிகப் பழமையான ஒரு நிலப்பகுதியாகும். வரலாற்றுக்கு முந்தைய காலம் தொட்டு இங்கு மனித இனத்தின் வருகை இருந்தமைக்கானச் சான்றுகள் கிடைக்கின்றன. நியாண்டர்தால் மனிதர்களின் ஃபாசில்கள் இங்கு க்ராப்பானியா என்ற பகுதியில் நிகழ்த்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்டுள்ளன எனும் போது இப்பகுதியில் மனித இனத்தின் நடமாட்டத்தின் பழமையை நாம் உணரலாம். ஏனைய ஐரோப்பிய நாடுகளைப் போல பண்டைய கிரேக்க, ரோமானிய அரசுகளின் கீழ் இந்த நிலப்பகுதியும் இருந்துள்ளது.
குரோய்ஷிய மக்களைக் க்ரோட்ஸ் என அழைப்பர். இவர்கள் இன்றைய குரோய்ஷியா நிலப்பகுதிக்கு கிபி.7ம் நூற்றாண்டு வாக்கில் வந்தவர்கள் என அறியப்படுகின்றனர். அதே இனத்தைச் சேர்ந்த தோமிஸ்லாவ் இந்த நாட்டின் முதல் மன்னராக கிபி.925ல் அரியணை ஏறினார். அது முதல் குரோய்ஷியா ஒரு பேரரசு என்ற பெருமையைப் பெற்றது.
கி.பி 1102ல் ஹங்கேரி அரசுடன் ஒன்றிணைந்தது குரோய்ஷியா. 1527ல் ஓட்டமான் துருப்புக்கள் இப்பகுதியைத் தாக்கிய போது ஆஸ்திரிய-ஹங்கேரிக்கூட்டு ஆட்சி பேரரசின் கீழ் இது இருந்தது. இது முதலாம் உலகப்போர் வரை தொடர்ந்தது.
1918ல் முதலாம் உலகப்போருக்குப் பின்னர் குரொய்ஷியா தனி நாடாக இருந்தது. 2ம் உலகப்போரின் போது ஜெர்மானிய நாஸி அரசுக்குக் கீழ் குரோய்ஷியா வந்தது. போருக்குப் பின்னர் யுகோஸ்லாவியா என்ற கூட்டமைப்பின் கீழ் இருந்தது. இக்கூட்டமைப்பில் இன்றைய போஸ்னியா ஹெர்சகோவேனியா, குரோய்ஷியா, மெசடோமியா, மோண்டினெக்ரொ, செர்பியா, சுலோவேனியா ஆகியவை அங்கம் வகித்த நாடுகள். இதன் தலைநகராக பெல்க்ரேட் இருந்தது. கம்யூனிச சித்தாந்தத்தை உள்வாங்கிய நாடாக இந்த யுகோஸ்லாவியா என்ற கூட்டமைப்பு இருந்தது. 1991ம் ஆண்டு ஜூன் 25ம் நாள் குரோய்ஷியா தனி நாடாகப் பிரகடனப்படுத்திக் கொண்டது.
தொடர்ச்சியானப் போர்களினால் யுகோஸ்லாவியா சந்தித்த இழப்புக்கள் அதிகம். லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதும், பல நாச வேலைகள் நடைபெற்றதும் உலகம் அறிந்த செய்திகள் தான். இன்றளவும் யுத்தகால நாச செயல்களில் ஈடுபட்ட அதிகாரிகளையும் மாஃபியா கும்பல்களையும் பற்றிய செய்திகள் அவ்வப்போது வந்து கொண்டுதானிருக்கின்றன.
யுகோஸ்லாவியா என்ற கூட்டமைப்பில் இருந்த போது குரோய்ஷியாவின் வளங்கள் செர்பியாவினால் எடுத்துக்கொள்ளப்பட்டதாகவும் இதனால் குரோய்ஷியா பெரும் பாதிப்புக்குள்ளானது என்றும் இங்கு அறிந்து கொண்டேன். செர்பியா ஆர்த்தடோக்ஸ் மதத்தை பின்பற்றும் நாடு. இக்கூட்டமைப்பில் இருந்த போஸ்னியா ஹெர்சகோவேனியா இஸ்லாமிய நாடு. குரோய்ஷியா கத்தோலிக்க பெரும்பாண்மையைக் கொண்ட நாடு. ஆக மத வேற்றுமையும் இனக்குழு வேற்றுமையும் மறுக்க முடியாத அம்சங்கள். செர்பியா குரோய்ஷியா மற்றும் போஸ்னியா-ஹெர்சகோவேனியாவிற்கு எதிராக நிகழ்த்திய போரில் எண்ணற்ற மக்கள் கொல்லப்பட்டனர். கொடுமையான மனித உரிமை மீறல்கள் நிகழ்த்தப்பட்டன. குரோய்ஷியா இப்போருக்குப் பின்னர் தன்னை இக்கூட்டமைப்பிலிருந்து விடுவித்துக் கொண்டதுடன் மோண்டினெக்ரோ நாட்டின் விடுதலைக்கும் உதவியது.
2009 ஏப்ரல் ஒன்றாம் தேதி குரோய்ஷியா நாட்டோவில் உறுப்பினராக தன்னை இணைத்துக் கொண்டது. 2013ம் ஆண்டு ஜூலை 1ம் நாள் குரோய்ஷியா ஐரோப்பிய ஒன்றியத்தில் தன்னை இணைத்துக் கொண்டது.
5.7 மில்லியன் மக்கள் தொகை இன்று குறைந்து விட்டது. உள்ளூரில் வேலை கிடைக்காததால் பெரும்பாலான இளைஞர்கள் வேலை தேடி அயர்லாந்துக்கும் ஜெர்மனிக்கும் செல்கின்றனர்.
தூய்மையான சாலைகள். இங்கு யூரோ பயன்பாடு இன்னும் வரவில்லை. கரொன் பயன்படுத்துகின்றனர். பல உடைந்த வீடுகள் புற நகர்ப்பகுதியில் இன்னமும் இருக்கின்றன. பிராமாண்டமான கட்டிடங்கள் சாக்ரேப் நகர மையத்துக்குள் மட்டும் இருக்கின்றன.
நாட்டு மக்களின் வறுமை தெரிந்தாலும் ஓரளவு வளர்ந்து வரும் தொழில்நுட்ப வர்த்தகங்களின் தாக்கத்தையும் சாக்ரெப் பிரதிபலிக்கின்றது.
குரோய்ஷிய மொழியே இங்கே முக்கிய மொழி. அதோடு ஜெர்மன் மொழி அறிந்தோராக பலர் இருக்கின்றனர். என்னால் இலகுவாக மக்களிடம் ஜெர்மன் மொழி பேசி தகவல் பெற இது உதவியது. இளைஞர்கள் நன்கு ஆங்கிலம் பேசுகின்றனர்.
குரோய்ஷிய உணவு அதிகமாக கோதுமை ரொட்டி வகைதான். அதோடு மாட்டிறைச்சியும் பன்றி இறைச்சியும் மக்கள் உணவில் முக்கிய இடம் பெறுகின்றன. தங்கள் கலாச்சார உடைகளுடன் பெண்கள் சாலை வீதிகளில் தேவாலயம் செல்வதைக் காண முடிகின்றது. இங்கு பொதுப் போக்குவரத்து மிகச்சிறப்பாக இயங்குகின்றது. சுற்றுலாதுறை இனிமேல் தான் இங்கு வளரவேண்டும்.
அருங்காட்சியகங்கள் ஒவ்வொன்றும் மிகப்பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளன. சாக்ரெப்பில் எனக்கு நல்ல திருப்தியான உணவு கிடைக்கவில்லையென்றாலும் அருங்காட்சியகங்களும் தேவாலயங்களும் தந்த இனிய நினைவுகள் மனதை நிறைத்து விட்டன.
சுபா, சாக்ரெப் விமான நிலையத்திலிருந்து.குரோய்ஷியா பயணம் - சாக்ரெபில் காபி

காபி சாப்பிட கடைக்கு வந்தால் காபி மெஷின் உடைந்து விட்டதாம். ஆக ஒரு புதினா டீ .
என்ன இருந்தாலும் ஒரு காபி இல்லாமல் ஒரு காலை நேரமா??


குரோய்ஷியா பயணம் - சாக்ரெப் ஆர்த்தடொக்ஸ் பிரிவு தேவாலயம்

சாக்ரெப் ஆர்த்தடொக்ஸ் பிரிவு தேவாலயம் இது. சுவர் ஓவியங்கள் பிரமிக்க வைக்கின்றன.
வாசனை சாம்பிராணியை போட்டிருப்பதால் தேவாலயம் முழுக்க ஒரு வித அடர்த்தியான மூலிகை வாசனையை அனுபவிக்க முடிகிறது.

ஆர்த்தடோக்ஸ் பிரிவு தேவாலயத்தில் ஞாயிற்றுக் கிழமை வழிபாடு நடைபெறுகின்றது. -சாக்ரெப்
https://www.facebook.com/subashini.thf/videos/1967242686852452/
குரோய்ஷியா பயணம் - காலை சந்தை

சாக்ரெப் பழைய நகரில் காலை சந்தை..
வெள்ளையாக இருப்பது Fresh cheese. அதோடு..
காய்கறிகள்..
பழங்கள்..
லவெண்டர் வாசனை பொருட்கள்
குரோய்ஷியா பயணம் - Zagreb Eye - 360'o view point

Subashini Thf updated her profile picture.
Zagreb Eye - 360'o view point.
குரோய்ஷிய தலைநகர் சாக்ரெப் வருபவர்கள் Zagreb Eye வராமல் சென்றால் இங்கு வந்ததற்கு பொருளில்லையாம். ஆக, நானும் வந்து பார்த்தேன். 16 மாடி உயரக் கட்டிடம். மேல் தளத்தில் உணவகம் ஒன்றுள்ளது. இரவு 11 வரை திறந்திருக்கின்றார்கள். மேலிருந்து பார்த்தால் சாக்ரேப் நகரை முழுமையாகக் காணமுடிகிறது.


குரோய்ஷிய அகழ்வாய்வு அருங்காட்சியகத்தில்

குரோய்ஷிய அகழ்வாய்வு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கும் ஒரு பெண்ணின் பதப்படுத்தப்பட்ட உடல் (மம்மி). இது கிமு. 3ம் நூற்றாண்டு டெய்லர் ஒருவரது மனைவியின் உடல். இதனைச் சுற்றியிருந்த ஒரு துணி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகின்றது. இதனை 1877ல் ஆய்வு செய்த ஜெர்மானிய தொல்லியல் வல்லுனர்கள் இதில் உள்ள எழுத்துக்கள் எகிப்திய ஹீரோக்ளிப்ஸ் எனக் கூறினர்.பின்னர் இது தவறு என சொல்லப்பட்டது. பின் இதன் எழுத்து வடிவம் எது என அறியாமலே இருந்து பின்னர் எட்ருஸ்கன் எழுத்துரு என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.

இது இத்தாலி பகுதியில் கிரேக்க ஆட்சி இருந்த காலத்தில் உருவான ஒரு எழுத்து வடிவம்.

மம்மியை எத்தனை பேர் நேரில் பார்த்திருக்கி்ன்றீர்கள்? 
இதுவரை பார்க்காதவர்களுக்காக ஒரு சின்ன வீடியோ பதிவு.

https://www.facebook.com/subashini.thf/videos/1966822613561126/


குரோய்ஷியா பயணம் - பன்றி இறைச்சி விற்பனையாளர்

சாக்ரெப் பண்பாட்டு கண்காட்சியில் ஒரு பன்றி இறைச்சி விற்பனையாளர் தமது பன்றி இறைச்சியை சாப்பிட்டுப்பார்க்க வெட்டி கொடுக்கும் காட்சி.

https://www.facebook.com/subashini.thf/videos/1966613880248666/குரோய்ஷியா பயணம் - சாக்ரெப் பண்பாட்டு நிகழ்வு

சாக்ரெப் பண்பாட்டு நிகழ்வில் கலைஞர்களுடன்..

சாக்ரெப் நகரில் இன்று ஒரு நாள் குரோஷிய மக்களின் பண்பாட்டு கலை நிகழ்ச்சி காலையில் தொடங்கியது. நிகழ்வில் தங்கள் பொருள்களை சந்தை செய்யும் உழவர்கள்.