Sunday, September 30, 2012

நானும் காரைக்குடிக்குப் போன கதை... 6


காரைக்குடியில் நான் 3 நாட்கள் இருப்பதாக திட்டமிட்டிருந்தேன். முதல் நாள் பிள்ளையார்பட்டி கோயிலுக்குச் சென்று அதன் பின்னர் நாட்டுக் கோட்டை செட்டியார்கள் வரலாறு பற்றி டாக்டர் வள்ளியுடன் பேசி அதனை ஒலிப்பதிவு ஆக்குதல்,  அதன் பிறகு குன்றக்குடி மடம் சென்று குன்றக்குடி அடிகளாரின் பேட்டியை தமிழ் மரபு அறக்கட்டளை வெளியீட்டிற்காகப் பதிவு செய்தல் என்பன அன்றைய திட்டங்களில் அடங்கியிருந்தன.

மறுநாள் தமிழ் மரபு அறக்கட்டளையும் அழகப்பா பல்கலைக் கழகமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த ஒரு நாள் கருத்தரங்க நிகழ்ச்சி இருந்தது. மூன்றாம் நாள் அருகாமையில் உள்ள சில சிற்றூர்களில் இருக்கின்ற குடவரைக் கோயில்களைச் சென்று காண்பது என்று காரைக்குடி வருவதற்கு முன்னரே நானும் காளைராசனும் இந்த மூன்று நாள் பயணத்திற்கு சில விஷயங்களைத் திட்டமிட்டிருந்தோம்.

பல்கலைக்கழக விருந்தினர் தங்கும் விடுதியில் எங்களுக்குக் காலையிலே காபிக்கு ஏற்பாடாகியிருந்தது. அந்த விருந்தினர் மாளிகையைப் பார்த்துக் கொள்ளும் ஊழியர் மிக நல்ல மனம் படைத்தவர். காலையில் கதவைத் தட்டி காபி கொடுத்து விட்டு குளிக்க சுடுநீர் சரியாக அமைந்ததா.. என எல்லாம் சௌகரியமாக எனக்கு அமைந்ததா என கேட்டு சரி செய்து கொண்டார். நான் இருந்த மூன்று நாட்களுமே என்னைப் பார்க்கும் போதெல்லாம் இவற்றை விசாரித்து எந்த அசௌகரியமும் ஏற்படாமல் இருக்கும் வகையில்  பார்த்துக் கொண்டார்.

விருந்தினர் மாளிகையின் வாசலில் அமைந்துள்ள வேப்பமரமும் அந்த இளம் காலை வெயிலும் சற்றே வெயிலின் சூடு கலந்த அந்த காற்றையும் அனுபவிப்பதில் ஆர்வம் இருந்ததால் காபி சாப்பிட்டு நான் தயாரானவுடன் விரைந்து கீழே வந்து விட்டேன். சற்று நேரத்தில் பாலு தயாராகி வர அவரைப் பார்த்து பேசிக் கொண்டிருக்கும் வேளையில் காளைராசனும் டாக்டர் வள்ளியும் வந்து சேர்ந்தனர். டாக்டர் வள்ளியும் நானும் ஒருவரை ஒருவர் அறிமுகப்படுத்திக் கொண்டோம். முகம் நிறைந்த புன்னகை கொண்டவர். தொல்லியல் அகழ்வாய்வில் மிகுந்த ஆர்வமும் களப்பணிகள் பலவும் மேற்கொண்ட அனுபவம் வாய்ந்த தமிழ் பேராசிரியர் இவர். அந்த மூன்று நாட்களும் டாக்டர் வள்ளியுடன் பல மணி நேரங்கள் பேசியிருப்பேன். எங்கள் இருவருக்குமே அவை மிக மகிழ்ச்சியான தருணங்கள்.பேசிக் கொண்டிருக்கும் போதே கண்ணனும் தயாராகி வர அனைவரும் டாக்டர் வள்ளியின் வாகனத்திலேயே பிள்ளையார் பட்டிக்குப் புறப்பட்டோம்.

தொடரும்...

சுபா

Friday, September 28, 2012

நானும் காரைக்குடிக்குப் போன கதை... 5


நாங்கள் திருச்சி பஸ் நிலையம் வந்து சேரும் போது ஏறக்குறைய இரவு பத்தரை மணியாக இருக்கலாம். பஸ் நிலையத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் போதே காளைராசன் கொடுத்திருந்த மாணவரின் எண்ணில் தொடர்பு கொண்டு திருச்சி வந்து விட்டமையைத் தெரிவித்துக் கொண்டேன்.

பஸ்ஸை விட்டு இறங்கும் போதே அந்த மாணவர் ஓடிவந்து உதவி செய்து எனது பெரிய பெட்டிகளை இறக்கி  உதவினார். கண்ணனும் முன் இருக்கையிலிருந்து வந்து சேர்ந்து கொண்டார். கீழே இறங்கியவுடனேயே எனக்கு காரைக்குடி செல்லும் பஸ் எங்கே இருக்கின்றது என்ற எண்ணம் வந்து விட்டது. ஆக தாமதிக்காமல் அந்த மாணவரிடம் சொன்னேன். அவர். கவலைப்படாதீர்கள் மேடம். நீங்கள் இருவரும் இங்கே சாப்பிட்டு விட்டு நிதானமாகச் செல்லலாம். பஸ் இருக்கும் என்றார். எனக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. அதனால் அந்த  மாணவரிடம் உணவு வேண்டாம். நாம் உடனடியாக அடுத்து புறப்பட இருக்கும் பஸ்ஸை எடுத்து விடுவோம் என்று அவருக்கு எனது அவசரத்தை விளக்க முயற்சித்தேன். அவருக்கு உள்ளூர காளைராசன் மேல் பயம் இருக்கும் போல. சார் நீங்கள் இருவரையும் மன நிறைவுடன் சாப்பிட வைத்துத்தான் திருச்சியிலிருந்து காரைக்குடி பஸ்ஸில் ஏற்றி அழைத்து வர வேண்டும் என்று சொல்லியிருக்கின்றார். அதனால் சாப்பிட்டு விட்டுத்தான் செல்ல வேண்டும் என்று உறுதியாக இருக்க முயன்றார்.

சுற்றிலும் பார்த்தால் ஆங்காங்கே சில பஸ்கள் புறப்பட்டுக் கொண்டிருந்தன. கண்ணனும் சரி. காளைராசன் பிறகு மன வருத்தப்படுவார். ஏதாவது கொஞ்சம் சாப்பிட்டு விட்டுச் சொல்வோம் என்று அவர் பங்கிற்குச் சொல்லி வைத்தார். எனக்கோ எப்போது முதலில் காரைக்குடி பஸ் வரும். முதலில் அந்த பஸ்ஸை எடுத்து காரைக்குடிக்குச் சென்று சேர்ந்து கொஞ்சம் படுத்துத் தூங்கினால் நன்றாக  இருக்குமே என்பதே மனதில் வந்து வந்து போய் கொண்டிருந்தது. அதனால் மிக உறுதியாக அந்த மாணவரிடம் காளைராசன் சாரிடம் நான் பேசி விளக்கிவிடுகின்றேன். அவர் வருத்தப் படமாட்டார் நாம் முதலில் காரைக்குடிக்குச் சென்று சேர்வோம். அங்கே இருக்கும் நாளில் திருப்தியாகச் சாப்பிட்டுக் கொள்ளலாம். என்றேன். அதற்கு அந்த மாணவர் சரி மேடம் .. வாழப் பழங்களாவது வாங்கி வந்து விடுகின்றேன், இருங்கள் என்று சொல்லி விட்டு காத்திராமல் ஓடி விட்டார். பயணம் செய்யும் நாங்கள் பசியால் வாடக்கூடாது என்ற மனத்துடன் எங்கள் பயணத்தைத் திட்டமிட்டுக் கொண்டிருக்கும் காளைராசனின் அன்பை நினைத்து மனம் நிறைந்தது.

பெட்டிகளை எடுத்து ஓரமாக வைத்துவிட்டு எப்போது அந்த மாணவர் வருவார் என பார்த்துக் கொண்டிருக்கும் போதே ஒரு பஸ் செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருந்தது. அதில் மேலே காரைக்குடி என்று பெயர் போடப்பட்டிருந்தது. ஆஹா.. காரைக்குடிக்கு பஸ் புறப்படுகின்றதே என்று சொல்லி கண்ணன் எங்கே என்று தேடினால் அவரைக் காணவில்லை. இந்த மாணவரையும் காணவில்லை. அந்த பஸ்ளில் பயணம் செய்யக் காத்திருந்த சில பயணிகளை ஏற்றிக் கொண்டிருந்த கண்டக்டரிடம் சென்று முதலில் இது காரைக்குடிக்குச் செல்கின்றதா எனக் கேட்டுக் கொண்டேன். அவர் உறுதி செய்தவுடன் எனது பெட்டி, கண்ணனின் பெட்டி எல்லாவற்றையும் ஏற்றி  வைத்துக் கொண்டிருக்கும் போதே கண்ணன் வந்து சேர்ந்தார். அவசரம் அவசரம் என கண்டக்டர் விரட்ட நான் அந்த மாணவரைத் தேடிக் கொண்டே பஸ்ஸில் ஏறி விட்டேன். கண்டக்டரிடம் இன்னும் ஒருவர் வந்து விடுவார் கொஞ்சம் பொருங்கள் என்று சொன்னால் அவருக்கு பஸ் செல்ல வேண்டுமே என்ற ஆதங்கம். அவர் புலம்ப ஆரம்பிக்கும் நேரத்தில் நல்ல வேளையாக அந்த மாணவர் ஓடி வந்து சேர்ந்தார். எங்களைப் பார்த்து அவரும் பஸ்ஸிற்குள் ஓடி வந்து ஏறிக் கொள்ளவும் பஸ் புறப்பட்டது.

சரியான நேரத்தில் வந்து சேர்ந்தாரே இந்த மாணவர் என்று நினைத்து மனதிற்குள் திருப்தி. இல்லையென்றால் ஏற்றி வைத்த பெட்டிகளையெல்லாம் இறக்கி விட்டு மீண்டும் 1 மணி நேரம் அடுத்த பஸ்ஸிற்காகக் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும்.

பஸ்ஸில் ஏறிய உடனேயே விருந்தோம்பல் ஆரம்பித்து விட்டது. அந்த மாணவர் கொடுத்த வாழைப் பழங்களை வாங்கி சாப்பிட்டுக் கொண்டோம். அப்போது கண்ணனுக்கு பவளா கொடுப்பதாகச் சொல்லியிருந்த வெஜிடபிள் பிரியாணி ஞாபகத்திற்கு வந்து விட்டது போலும். என்னிடம் பவளா சொன்ன மாதிரி அந்த வெஜிடபிள் பிரியாணியைக் கொண்டு வந்திருக்கலாம். இல்லையா என்று கேட்டு வைத்தார். கண்ணணை அந்த பிரியாணி ஏங்க வைத்து விட்டது என்பது தெரிந்தது.

பழங்களைச் சாப்பிட்டு அந்த மாணவருடன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தவுடன் சற்று தூங்க வேண்டும் என்று தோன்றியதில் கண்ணயர்ந்து விட்டோம். ஆனால் தூங்குவது சாதரண காரியமாக இல்லை. பஸ் வேகமாகப் பயணித்துக் கொண்டிருந்தது. கட கட கட என பயங்கர சத்தம். பஸ்ஸில் இருந்த ஓரிரண்டு கண்ணாடி ஜன்னல்கள் எப்போது நொருங்கி விழப்போகின்றன என்ற பீதி வந்து விட்டது. சாலைகளில் பாதை சரியாக இல்லை என்பதை அந்த இரவிலும் பஸ் ஓடும் நிலையைப் பார்த்தே புரிந்து கொள்ள முடிந்தது. அப்படி ஒரு சத்தத்துடனான பஸ் பயணத்தை என் வாழ் நாளில் இதுவரை நான் அனுபவித்ததில்லை. பயணங்களில் எனக்கு ஏற்படாத ஒரு வித பயம் என மனதை வந்து பற்றிக் கொண்டு விட்டது. ஆனாலும் வேறு வழியில்லை. பஸ்ஸில் ஏறிவிட்டோம். இறங்க முடியாது. பஸ் காரைக்குடி செல்கின்றதோ வேறு எங்கே செல்கின்றதோ.. அங்கே  போய் சேர்வதைத் தவிர வேறு வழியில்லை என்று மனதிற்குள் சமாதானம் சொல்லிக் கொண்டு தூங்க முயற்சித்து தோல்வி கண்டு கொண்டிருந்தேன். இப்படியே சில மணி நேரங்கள் அவை பல மணி நேரங்களாக எனக்கு மனதில் தோன்றின.

அந்த நீண்ட நெடிய பயணத்தில் ஒரு வழியாக பஸ் காரைக்குடிக்கு வந்து விட்டது. பஸ் நிறுத்தம் வருவதற்கு முன்னரே அந்த மாணவரே காளைராசனுக்குத் தொலைபேசியில் அழைத்து நாங்கள் வருவதை அறிவித்து விட்டார்.

ஒரு குறிப்பிட்ட இடத்தில் நாங்கள் இறங்கிக் கொண்டோம். அங்கே காளைராசனும் பின்னர் எங்களுக்கும் நண்பராகிப் போன அவரது கல்லூரி நண்பர் முனைவர் சந்திர மோகனும் ஒரு வாகனத்துடன் எங்களுக்காகக் காத்திருந்தனர். அவர்கள் இருவரையும் அந்த 4 மணி காலை வேளையில் சந்தித்து சிறிது நேரம் பயணம் பற்றி பேசி அங்கிருந்து அழகப்பா பல்கலைக்கழக விருந்தினர் மாளிகைக்குச் சென்றோம். அங்கே எங்களுக்காக நல்ல அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. புதிய கட்டிடம். மிக நேர்த்தியான அறைகள். எங்களுக்கு முன்னரே பாலுவும் வந்து விட்டதாகவும் அவரும் அங்கு தங்கியிருப்பதாகவும் அறிந்து கொண்டோம். எனக்கு களைப்பு அதிகமானதால் நான் எல்லோரையும் மறு நாள் சந்திப்பதாக்ச் சொல்லிவிட்டு விடைபெற்றுக் கொண்டேன்.

திருச்சியிலிருந்து காரைக்குடி பயணம் பயங்கரமானதாக அமைந்து அந்த வேளையில் எனக்கு மனதில் பீதியை ஏற்படுத்தினாலும் இப்போது நினைக்கும் போது மிக்ச சுவாரசியமான ஒரு நிகழ்வாகத்தான் தோன்றுகின்றது. அந்த கட கட கட எனும் பஸ் சத்தம் கூட நினைத்துப் பார்க்கும் போது அன்று கேட்டது போலவே மனதில் இப்போதும் ஒலிக்கின்றது.

தொடரும்...

சுபா

Saturday, September 22, 2012

நானும் காரைக்குடிக்குப் போன கதை... 4


அவ்வப்போது சத்தமாகப் பேசுவதும் அதனை பஸ் கண்டெக்டர் வந்து கண்டிப்பதும் என்ற வகையில் போய் கொண்டிருந்தது.  நாங்கள் பின் இருக்கையில் மூன்று பேர் மட்டுமே. குடிகாரரின் மனைவி என்னிடம் பேச ஆரம்பித்தார். ஒரு உறவினர் வீட்டுச் சடங்கு நிகழ்ச்சிக்குச் சென்று விட்டு வருவதாகவும் அவரோடு  இவர்களது பெண் குழந்தைகள் இருவருமாக, ஆக நான்கு பேரும் இப்போது வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். உறவினர் இல்லத்தில் நண்பர்கள் உறவினர்கள் கூடிவிட்டதால் அளவுக்கு மீறி குடித்து விட்டாராம். அதனால் அவரை பஸ்ஸிற்குள் கொண்டு வந்து ஏற்றி உட்கார வைத்ததே பெரிய பாடாகி விட்டது என்று விபரம் தெரிவித்தார். அவரது 2 பெண் குழந்தைகளும் சில இருக்கைகளுக்கு முன்னால் அமர்ந்திருப்பதாகவும் இந்த 3 பெண்களும் சேர்ந்து தான் இந்த மனிதரை பஸ்ஸில் ஏற்றியதாகவும் சொன்னார். பஸ்ஸிலிருந்து இந்த மனிதர் எழுந்து ஓடிவிடக்கூடாதே என்பதற்காக அவரை இருக்கையின் மூலைக்குத் தள்ளிவிட்டு இந்தப் பெண்மணி உட்கார்ந்து கொண்டார் என்பதை அவர் சொல்லாமலேயே புரிந்து கொள்ள முடிந்தது. இந்த மனிதரால் மனைவிக்கு மட்டுமல்ல மகள்களுக்கும் அவமானம்தான் என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது.

இவர்கள் இறங்க வேண்டிய இடம் வந்த போது அந்த மனிதரை அவர் மனைவி எழுப்பிப் பார்த்தார். அவர் நகர்வதாகத் தெரியவில்லை. கண்டக்டர் வந்து விட்டார். அவர் அவருக்கே உரிய சத்தமான தொணியில் அவரை விரட்ட மனிதர் ஒரு வகையாக தனக்குத்தான் இந்த  அழைப்பு என்பதைப் புரிந்து கொண்டு எழுந்தார். எழும்போது அவர் கட்டியிருந்த வேஷ்டி கழன்று விழப் போக அவர் மனைவி உடனே அதனை சிரமப்பட்டு சரி செய்து வைத்தார். என் அருகில் இருந்த இளைஞர் உடனே எழுந்து அவரை திட்டிக்கொண்டே  உடையை சரி செய்து படிகளில் கைத்தாங்கலாக அக்குடிகாரரின் மனைவிக்கு உதவியாக அம்மனிதரை கீழே இறக்கி விட்டார். இரண்டு பெண்களும் முன் பகுதியிலிருந்தவர்கள் இவர்களிடம் வந்து சேர்ந்தார்கள். அப்போது தான் பார்த்தேன் 14 அல்லது 15 வயது மதிக்கத்தக்க பெண் குழந்தைகள். தலையைக் குனிந்து கொண்டே அந்தப் பெண்கள் கீழே இறங்கிய தங்கள் தந்தையை கைகளைப் பிடித்துக் கொண்டு அழைத்துச் சென்றனர். அந்த அம்மாள் ஏதோ பேசிக் கொண்டே செல்வது பஸ் புறப்படும் வரை கேட்டது.

இப்போது நானும் அந்த இளைஞரும் மட்டுமே அந்தக் கடைசி இருக்கையில் அமர்ந்திருந்தோம். அவர் இந்த மனிதரைப் பற்றி சொல்லி என்னுடன் பேச ஆரம்பித்தார். அப்படியே எங்கள் பேச்சு குடிகாரர் கதையிலிருந்து மாறி எங்களைப் பற்றியதாக அமைந்தது. நான் த.ம.அ பற்றியும் மின் தமிழ் பற்றியும் எனது தமிழக வருகைப் பற்றியும் குறிப்பிட்டுச் சொன்னேன். அந்த இளைஞர் ஆர்வத்துடன் வலைப்பக்க முகவரிகளைக் குறித்துக் கொண்டார். தான் ஒரு அச்சகம் வைத்திருப்பதாகவும் அதன் தொடர்பாக திருச்சி சொல்வதாகவும் தெரிவித்து விட்டு, அச்சகத் தொழில் பற்றி சில விபரங்களையும் சொல்லிக் கொண்டே வந்தார். அவரும் திருச்சி வரை செல்ல வேண்டியிருந்தது. பஸ்ஸோ குலுங்கி குலுங்கி ஆடிக் கொண்டே போய்கொண்டிருந்தது. காற்று பலமாக வீசிக் கொண்டிருந்தது. பஸ்ஸிலிருந்து கேட்பதற்கு பலத்த சத்தமாக அது இருந்தது. ஆனாலும் பயணம் அலுப்புத்தருவதாக இல்லை.

திருச்சி வரும் வரை சில விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்தோம். அந்த இளைஞர் எனது தமிழ் கொங்கு நாட்டுத் தமிழ் போல இருப்பதாகச் சொல்லியது எனக்கு ஆச்சரியம் தந்தது. எல்லாம் ஆரூரனின் இண்டென்ஸிவ் ட்ரெய்னிங் பண்ணிய வேலைதான் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டேன்.  “ங்க” , என்று போட்டு வார்த்தைகளை முடிக்கும் பழக்கம் கொஞ்சம் தொற்றிக் கொண்டு விட்டது எனக்கு. ஆரூரன் பேசப் பேச கேட்டு கொஞ்சம் பேசியும் பயிற்சி செய்திருந்தேன்.  கொங்கு நாட்டுத் தமிழ் இனிமையானது. கேட்டுக் கொண்டேயிருக்கலாம். கொங்குத்தமிழை ஒலிப்பதிவு செய்து பதிய வேண்டும் என்று நினைத்து சென்ற என் முயற்சி இந்த ஈரோடு பயணத்தில் பலனளிக்கவில்லை. ஆனாலும் அடுத்த முறை நிச்சயம் சில முயற்சிகளைச் செய்வோம் என்று பவளாவிடம்  சொல்லியிருக்கின்றேன். அடுத்த பயணத்தில் இது சாத்தியமாகலாம். ஆரூரன், கதிர் போன்றவர்கள் இந்தத் திட்டத்திற்கு உதவினால் நல்ல பலனை எதிர்பார்க்கலாம் என நினைக்கின்றேன்.

தொடரும்...

சுபா

Friday, September 21, 2012

நானும் காரைக்குடிக்குப் போன கதை... 3


பஸ்ஸின் பின் இருக்கையில் நான் குறிப்பிட்ட ஐவரோடு நானும் அமர்ந்திருந்தேன். எனது பெரிய பயணப் பெட்டியை எப்படியோ சமாளித்து பஸ் சீட்டின் கீழ் தள்ளி வைத்து விட்டு எனது பேக் பேக்கை மட்டும் கையில் வைத்துக் கொண்டிருந்தேன். என் பக்கத்தில் ஒருவர், 50வயது மதிக்கத்தக்கவர். ஒல்லியான மனிதர்.அவர் அருகில் ஒரு பெண்மணி அவருக்கும் அதே வயதுதான் இருக்கும். நடுத்தர அளவு. இருவரும் ஏதோ அலுவலகத்தில் ஒன்றாக வேலை செய்பவர்கள் போல.

இருவரும் இடைவிடாது அலுவலகத்தில் உள்ள நபர்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தனர். பிறகு மாறி பேச்சு அந்தப் பெண்மணியின் பிள்ளைகள் குடும்ப விஷயம் என்று போய் கொண்டிருந்தது. பக்கத்தில் உள்ளவர்கள் கேட்பார்களே என்ற தயக்கம் இல்லாமல் கவலையிலாமல் தொடர்ந்து இந்தப் பேச்சு சுவாரசியமாகப் போய்கொண்டிருந்தது. திடீரென்று யாரையோ கைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சித்தனர். அந்த மனிதரின் கைபேசியில் தொடர்பு கொள்ள முடியவில்லை.  சில முறை முயற்சி செய்து பார்த்தார்.  நான் சற்று முன்னர்தான் காளைராசன் கொடுத்திருந்த எண்ணில் திருச்சி மாணவருக்கு என் கைபேசியில் பேசினேன். இதனைக் கவனித்திருப்பார் போல அந்த மனிதர். உடனே என்னிடம் சற்று தொலைபேசி தரமுடியுமா. ஒரு நபருக்கு போன் பேச வேண்டும் என்று கேட்டார். என்னுடைய கைபேசியைக் கொடுத்தேன். அவர் பேச ஆரம்பித்தார். ஏதோ ஒரு விஷயமாக யாரையோ ஓரிடத்தில் மறு நாள் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சந்திப்பது பற்றி அந்தப் பேச்சு.

ஏறக்குறைய 10 நிமிஷங்கள் பேசி முடித்த பின் என்னிடம் என் கைப்பேசியை அவர் திருப்பி தரவில்லை. தன் கையிலேயே வைத்திருந்தார். எனக்கு திருப்பி தரவேண்டும் என்ற பிரக்ஞை இல்லாமல மீண்டும் அந்தப் பெண்மணியிடம் தொடர்ந்து பேச ஆர்மபித்தார். அவராகத் திருப்பித் தரமாட்டார் என்பது தெரிந்து விட்டது. ஆக நானே அவரைக் கூப்பிட்டு என் கைபேசியைத் தரும் படி கேட்டேன். அவர் மீண்டும் அவர் நண்பர் அவரை என் கைபேசியில் கூப்பிடுவார். அதனால் தான் தானே கையில் வைத்திருப்பதாக எனக்கு விளக்கம் அளித்தார். அப்படி போன் அழைப்பு வந்தால் நான் அவருக்குத் திரும்பத் தருவதாகச் சொல்லி என் கைபேசியை நான் வாங்கிக் கொண்டேன்.அந்த பெண்மணியில் அருகில் அமர்ந்திருந்த அந்த நடுத்தர வயது இளைஞன் நாங்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருப்பார் போல. அவருக்கு முகத்தில் புன் சிரிப்பு.

இடைக்கிடையே எங்களின் நீளமான பின் இருக்கையில் இறுதியில்  அமர்ந்திருந்த ஒரு மனிதர் அவ்வப்போது புலம்பிக் கொண்டு இருந்தார். அவர் அதிகமாகக் குடித்திருந்தார். உடம்பில் போட்டிருந்த சட்டை ஒழுங்காகப் போடப்படவில்லை. மெதுவாக ஏதாவது உளறுவார். திடீரென்று சத்தமாகக் கத்துவார். தன் குடும்பத்துப் பெண்மணிகளைப் பற்றி மிக மோசமான விவரணைகள்; கெட்ட சொற்களில் பெண்களைத் திட்டிக் கொண்டு புலம்பிக் கொண்டேயிருந்தார். ஆனால் கண்களைத் திறந்து அந்த மனிதர் யாரையயும் பார்த்ததாகத் தெரியவில்லை. அவர் அருகில் இருந்தவர் அவர் மனைவி. அவர் கத்தும் போது அவரை திட்டி அடக்கி அமைதியாக வைத்திருக்க பெரிய முயற்சி செய்து கொண்டிருந்தார். அவர் முகத்தில் அதிகமாக கவலை, வருத்தம் அவமானம் எல்லாம் தெரிந்தது.

நாங்கள் ந்தக் குடிகாரர் கூறும் மோசமான சொற்களைக் கேட்டு கோபப்படுவோமோ என்ற பயம் போலும். எங்களை சமாதானப்படுத்தும் வகையில் அவர் அதிகமாகக் குடித்து விட்டு உளறுவதாகச் சொல்லி வராத சிரிப்பை வரவழைத்துக் கொண்டு எங்களிடம் சொல்லி வைத்தார். அவர் நிலை பரிதாபம்.

அது ஏன் குடித்து விட்டால் மிகக் கேவலமாகப் பேச வேண்டும்? அதிலும் பெண்களை ? மனதிலே அவ்வளவு வெறுப்பும் குரோதமும் ஏன். அந்தக்  குடிகாரனை அழைத்துக் கொண்டு செல்லும் அந்த மனைவியை அவன் தெய்வமாக அல்லவா கருத வேண்டும். அப்படிப்பட்ட அந்த மனிதனையும் சகித்துக் கொண்டும் இருக்கின்றாரே என நினைக்கும் போது அப்பெண்ணின் நிலை நினைத்து மனம் கலங்கியது எனக்கு.

தொடர்ந்து அவனது பேச்சும் உளறலும் குறையவில்லை. திடீரென்று எழுந்து நின்று போகப் பார்த்தார் அந்தமனிதர். பஸ் ஆடிய ஆட்டத்தில் தலையில் முட்டிக் கொண்டு விழுந்தார். பஸ் கண்டக்டர் வந்து நன்றாகத் திட்டித் தீர்த்தார். எல்லாமே நாடகம் போல இருந்தது எனக்கு.

எத்தனை விஷயங்கள் ஒரு பஸ்ஸிற்குள்ளேயே நடக்கின்றன. எத்தனை கதைகளுக்கான கரு பஸ்ஸிலேயே கிடைக்கின்றன என்று நினைத்தபோது சுவாரசியமாகவும் இருந்தது. ஆனால் கதை எழுதும் திறனே எனக்கு இல்லாததால் இதனை ஒரு பதிவாக மட்டும் இங்கே பதிகிறேன்.

ஏறக்குறைய அடுத்த ஒரு மணி நேரத்திற்கு இந்த நாடகம் தொடர்ந்து கொண்டிருந்தது. என் அருகில் இருந்த அந்த இருவரும் வழியில் இறங்கி விட்டனர். பஸ்ஸில் என் அருகில் இப்போது மூவர் மட்டுமே. அந்த இளைஞன். அவர் அருகில் குடிகாரரின் மனைவி, அந்தக் குடிகாரர். பஸ்ஸிலும் ஆட்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்தது.

தொடரும்....

சுபா

Saturday, September 15, 2012

நானும் காரைக்குடிக்குப் போன கதை... 2


காரைக்குடி செல்வதாக ஏற்பாடாகியிருந்த நாள் காலை திருச்செங்கோடு சென்று முருகன் ஆலயம் தரிசித்து விட்டு பவளா வீட்டில் வயிறு நிறைய நிறைய வெஜிடபள் பிரியாணி சாப்பிட்டு விட்டு மீண்டும் ஆரூரனின் காரில் புறப்பட்டு கொடுமுடி வந்து அங்கிருந்து எங்களைக் காரைக்குடிக்கு அனுப்பி வைப்பதாக திட்டமாகியிருந்தது. கொடுமுடி வந்து சேர்ந்து அங்கே சுவாமி தரிசனம் முடித்து விட்டு புறப்படும் சமயம் சற்றே தாமதமாகிவிட்டதால் கரூர் சென்று அங்கிருந்து எங்களைத் திருச்சிக்கு பஸ்ஸில் ஏற்றிவிடுவதாக ஆரூரன் திட்டமிட்டிருந்தார். ஏற்கனவே முனைவர்.காளைராசன் திருச்சியில் இருக்கும் அவரது மாணவர் ஒருவருக்கு சொல்லியிருந்தமையால் அவர் திருச்சி பஸ் நிலையம் வந்து அங்கிருந்து என்னையும் கண்ணனையும் காரைக்குடிக்கு பஸ்ஸில் அழைத்துச் செல்ல வருவதாக இருந்தது. மறுநாள் காலை காரைக்குடியில் நிகழ்ச்சிகள் காலை 6 மணியிலிருந்து என்று ஏற்கனவே  முனைவர்.காளைராசன்  வேறு குறிப்பிட்டிருந்தார். ஆக  மனதில் எப்படியும் பஸ்ஸை விடாமல் சரியான நேரத்தில் எடுத்து விட வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் அதிகமாகிக் கொண்டேயிருந்தது.

கரூரை அடைந்து பஸ் நிலையம் சென்று காரைக்குடி செல்லும் பஸ் எப்போது புறப்படும் என்று ஆரூரனும் கண்ணனும் தேடிக் கொண்டு சென்றனர். ஒரு பஸ் அப்போதுதான் கிளம்பியிருப்பதாகவும் அந்த பஸ்ஸை 10 நிமிஷத்தில் காரில் விரட்டிக் கொண்டு போனால் நிச்சயமாகப் பிடித்து விடலாம் என்று பஸ் நிலையத்தில் யாரோ சொல்ல அதை நம்பிக் கொண்டு ஆரூரனும் கண்ணனும் காருக்கு ஓடி வந்தனர்.

அந்த நேரத்தில் பவளாவிற்கு எங்களுக்கு கையோடு உணவு கொடுத்து அனுப்ப வேண்டும் என்ற கொள்ளை ஆசை. எனக்கோ மதியம் சாப்பிட்டதே வயிறு முழுக்க நிறந்திருந்தது. சொல்லக்கூடாது. பவளாவின் வீட்டு வெஜிடபள் பிரியாணி அபாரமான சுவை. சமையல் மன்னி என்று பட்டம் கொடுத்து விடலாம் பவளாவிற்கு.

கொங்கு நாட்டு பெண்களே சமையல் கலையில் தேர்ந்தவர்களாகத்தான் நிச்சயம் இருக்க வேண்டும்.

கரூர் பஸ் நிலையத்திலிருந்து ஆரூரனின் வாகனம் திருச்சி செல்லும் பஸ்ஸைத் தேடிக் கொண்டு வேகமாக பயணித்தது. நாங்களும் பஸ் கண்ணில் தென்படுமா என முன்னால் செல்லும் ஏதாவது ஒரு பஸ்ஸை நோக்கி எங்கள் பார்வையைச் செலுத்திக் கொண்டிருந்தோம். சில இடங்களில் ஆரூரனின் வாகனம் முன்னே செல்லும் வாகனங்களை எல்லாம் முந்திக் கொண்டு சென்று கொண்டேயிருந்தது. 15 நிமிடங்கள் பயணித்தும் அந்தத் திருச்சி சென்று கொண்டிருந்த பஸ்ஸைக் கண்டுபிடிக்கமுடியவில்லை.


ஆரூரன்


இப்படியே தேடிக்கொண்டே போனால் திருச்சிக்கே போய் சேர்ந்துவிடுவோம் என்பது வாகனத்தில் இருந்த எங்கள் நால்வருக்குமே தெரிந்தது. சரி. மீண்டும் கரூர் பஸ் நிலையத்துக்கே திரும்பி அங்கிருந்து திருச்சி செல்லும் அடுத்த பஸ்ஸை பிடித்துச் செல்வோம் என்று சொல்லிக் கொண்டு திரும்பினோம். வந்து சேர்ந்த நேரம் சரியாக ஒரு பஸ்ஸும் கிளம்பிக் கொண்டிருக்கவே அதில் அவசர அவசரமாக எங்கள் பொருட்களை ஏற்றி வைத்துக் கொண்டு பவளாவிடமும் ஆரூரனிடமும் விடை பெற மனமில்லாமல் விடைபெற்றுக் கொண்டு பஸ்ஸில் ஏறினோம்.

மிகச் சாதாரண பஸ் அது. அதில் பலர் அமர்ந்திருந்தனர். கண்ணன் ஆக முன் வரிசையில் ஒரு இடம் இருக்க அங்கே சென்று விட்டார். அவரிடம் மிகச் சிறிய ஒரு பெட்டி மாத்திரம் இருந்தது. என்னிடம் எனது பெரிய பயண ட்ரோலியோடு கணினி கேமரா மற்ற ஏனைய பொருட்கள் வைத்திருந்த பேக் பேக் ஒன்றும் கையில். இவை இரண்டையும் வைத்துக் கொண்டு கடைசி இருக்கையிலேயே இருந்து விட்டேன். என் அருகில் ஒரு இளைஞர், ஒரு பெண்மணியும் ஒரு நபரும், மேலும் ஒரு பெண்மனி அவர் கணவர் ஆகிய ஐவர் அமர்ந்திருந்தனர். திருச்சி சென்று செல்லும் வரையில் நல்லதொரு நாடகம் பார்த்த அனுபவத்தை இவர்களுடன் நான்  சேர்ந்திருந்த  அந்த சில மணி நேரங்களில் அனுபவித்தேன். அந்தக் கதையை நான் அடுத்த பதிவில் சொல்கிறேன்.

தொடரும்..

சுபா

நானும் காரைக்குடிக்குப் போன கதை... 1லா பல்மாவிலே நடையோ நடையென்று நடந்து சென்றது இந்த ஆண்டு ஏப்ரல் கடைசியில். அந்தக் கதையை எனது லா பல்மா பதிவில் குறிப்பிட்டு நான் கண்ட காட்சிகளைப் படங்களின் வடிவில் உங்களுக்கும் கண்டு களிக்க வழங்கியிருந்தேன்.  ஐரோப்பாவின் ஸ்பெயின் நாட்டைச் சார்ந்த ஆப்பிரிக்க கண்டத்தின் அருகில் உள்ள தீவு அது. அங்கிருந்து தாவி மீண்டும் தமிழகம் வரலாம் என்று முடிவு செய்து இன்று ஒரு புதிய பயணத்தொடரைத் தொடங்குகின்றேன். இந்த ஆண்டு ஜனவரி மாதம் நான் தமிழகம் வந்திருந்த போது கிருஷ்ணகிரிக்குச் சென்று அங்கிருந்து தருமபுரி சென்று பின்னர் ஈரோடு சென்று அங்கிருந்து புறப்பட்டு காரைக்குடிக்குச் சென்ற விஷயத்தை ஒரு சில பதிவுகளில் குறிப்பிட்டிருந்தேன். அந்த காரைக்குடி பயணத்தைப் பற்றி உங்களிடம் பகிர்ந்து கொள்ளலாம் என்று விரும்புகின்றேன்.

இந்தப் பயணத்தில் என்னுடம் உடன் இருந்தவர்கள் சிலர். அவர்களை அறிமுகப்படுத்தி விட்டு பயணத்தைத் தொடரலாம் என நினைக்கின்றேன்.

Inline image 1
டாக்டர்.நா.கண்ணன்


Inline image 2
முனவர்.காளைராசன் 


Inline image 5
முனைவர்.வள்ளி


Inline image 3
பாலு


Inline image 4
திரு.மைக்கல்


இவர்களோடு எனது 3 நாட்களை காரைக்குடியிலும் இந்த நகரின் அருகாமையில் உள்ள மற்ற சில சிற்றூர்களிலும் கழித்த அனுபவத்தோடு அங்கே மேலும் பலரைச் சந்தித்த அந்த நல்ல பொழுதுகள் மனதில் பதிந்திருக்கின்றன. அந்த நினைவுகளை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் எனக்கு மகிழ்ச்சி.

சரி.. இப்போது காரைக்குடிக்குப் போவோமா..???

தொடரும்...

சுபா

Saturday, September 8, 2012

லா பல்மாவில் நடையாக நடந்த கதை - 16


கல்டேரா டி டப்ரியெண்ட (Caldera De Taburiente)

எவ்வளவுதான் நடப்பது? கால்களுக்கும் ஓய்வு வேண்டாமா? லா பல்மா பயணத்தின் இறுதிப்பகுதிக்கு வந்து விட்டோம். இந்த இறுதிப் பகுதியை லா பல்மா தீவின் நடை பாதைகளுக்கே சிகரம் என்று சொல்லும் கால்டேரா டி டப்ரொயெண்ட பகுதியில் நான்  சென்றிருந்த நடைப் பாதை பயண அனுபவங்களை விவரிப்பதாக அமைத்துள்ளேன்.


லா பல்மா தீவின் மையப் பகுதியில் அமைந்திருக்கும் ஒரு மிகப் பழமையான எரிமலையின்   வாய்ப்பகுதி (Crater) தான் இது. 1954ம் ஆண்டு இத்தீவின் தேசியப் பூங்காவாக இப்பகுதி ப்ரகடணப்படுத்தப்பட்டது. எரிமலையின் வாய்ப்பகுதி மட்டும் 10கிமீட்டர் நீளமுடையது.

விக்கிபீடியாவில் உள்ள  கால்டேரா டி டாப்ரியெண்டாவின்  இப்பகுதியைக் காட்டும் சாட்டலைட் படம் கீழே.


நன்றி: விக்கிபீடியா

இப்பகுதியில் நடைப்பயணம் மேற்கொள்பவர்கள் செல்லும் வகையில் வெவ்வேறு பாதைகள் உள்ளன. நான் தேர்ந்தெடுத்த பயணம் 13 கி.மீ வடக்கு நோக்கி நடந்து பின்னர் அங்கிருந்துசுற்றி வந்து கிழக்கு பக்கமாக வந்து மீண்டும் எங்கள் வாகனம் இருக்கும் இடம் வரை வருவதாக திட்டமிட்டிருந்தேன். முதலில் மேலே வடக்கே செல்வதற்காக ப்ரத்தியேகமாக அங்கே அமைந்துள்ள டாக்ஸி சேவையைத் தான் பயன்படுத்த  வேண்டும். தனியார் யாரது வாகனமும் செல்ல அங்கே அனுமதிக்கப்படுவதில்லை.ஆக மலையடிவாரத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு ஆளுக்கு 12 யூரோ கட்டணம் செலுத்தி 25 நிமிட பயணம் மேற்கொண்டு வளைந்து செல்லும் பாதையில் மிக லாவகமாக வாகனம் ஓட்டும் வாகனமோட்டியைப் பார்ர்த்துக் கொண்டும் மலைப்பகுதியைப் பார்த்துக் கொண்டும் மேலே சென்று சேர்ந்தேன். பாதை முழுதும் ஆங்காகே அவக்காடோ மரங்கள் நிறைந்திருக்கின்றன. தனியார் தோப்புக்கள் அவை.

கல்டேரா டி டாப்ரியெண்ட மலைப்பகுதியில் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் நிச்சயமாக வரக்கூடாது. மலைப்பாதை சற்று சறுக்கலானது. ஓரளவாவது நடைப்பயண அனுபவம் உள்ளவர்கள் மட்டுமே இப்பகுதிக்கு வர வேண்டும்.

மலைகளின் அழகை வர்ணிக்க வார்த்தைகளில்லை. மரங்களோ  பல வகை பச்சை நிறங்களில் - வர்ணிக்க முடியாத வகையில் நீண்டு வளர்ந்து பசுமைக்காடாக இப்பகுதி விளங்குகின்றது.மலைப்பாதை தான் என்றாலும் ஓரளவு நடந்து செல்பவர்களுக்குத் துணை செய்யும் வகையில் சீரான பாதையை அமைத்திருக்கின்றனர். ஆனாலும் ஆங்காங்கே கற்களின் குவியல்.. பாறைகள்.. இவைகளைக்  கடந்து தான் செல்ல வேண்டும்.

மலையிலிருந்து விழும் அருவி அதிலிருந்து உருவாகிச் செல்லும் ஓடை.. கண்களையும் மனதையும் கொள்ளை கொண்டு விடுகின்றன.

எரிமலை வெடித்த  பள்ளத்தில் இறங்கி நடக்கின்றோம் என்பதே ஒரு வித புதுமையான அனுபவமாக அமைந்திருந்தது. அதிலும் மேலும் கீழும்  ஏறுவதும் இறங்குவதுமாக இருந்ததில் இந்தப் பயணம் சற்றே அலுப்பை தருவதாகவே அமைந்தது. ஆனாலும் நடைப்பயணத்த்தின் இறுதிப் பகுதியில் நான் பார்க்கவுள்ள வர்ண ஜாலம் காட்டும் நீர்வீழ்ச்சி, அதனை சுற்றியுள்ள ஓடைகள் ஆகியவை பற்றி ஏற்கனவே  பயண வழிகாட்டி நூலில் படித்து எங்களைத்  தயார் செய்து வைத்திருந்தமையால் பயணத்தில் ஆர்வமும் சுவாரசியமும்  எங்களுக்குக் குறையவில்லை. இடையில் எங்கேயும் கடைகள் இல்லை. ஆக கொண்டுவந்திருந்த ஆப்பிள் பழங்களையும், வாழைப்பழங்களையும் சாப்பிட்டு பசி ஆற்றிக் கொண்டோம்.ஒரு வழியாக  மலைகளைக் கடந்து  நீர்வீழ்ச்சிப் பகுதியை அடைந்தேன். இந்த  நீர்வீழ்ச்சி பாறை இடுக்குகளுக்கு இடையே உள்ளது. ஆகையால் ஒரு சிறு மலைப்பகுதியின் மேல் ஏறி அங்கிருந்து மேலும் 1 கிமீ தூரம் சென்று மேலும் ஒரு பெரிய பாறை மேல் ஏறி சென்று நீரோடையைக் கடந்து சென்று காண வேண்டும். நான் சென்ற போது எங்களுக்கு முன்னர் சிலர் நீர்வீழ்ச்சியைப் பார்த்து  விட்டு வருவதைக் கண்டு சற்று நம்பிக்கை  வர மலைமேல் ஏறிச் சென்று நீர்வீழ்ச்சியின் அழகை கண்டு ரசித்தேன். ஆனால் திரும்பி வரும் போது தான் சங்கடமாகி விட்டது. மலையிலி ஏறும் போது இருந்த ஆர்வம் இறங்கும் போது எனக்கில்லை. மிகச்சிறிதான ப்பாதை வேறு. கால்கள் கீழே இறங்க மறுத்து விட்டன.. விழுந்து விடுவோமோ என்ற தயக்கத்தில்.

நீர்வீழ்ச்சியைப் பார்த்து முடித்து ஓடையின்  ஒரத்திலேயே நடந்து வந்தேன். ஓடையின் கற்கள் ஓரிடத்தில் பளுப்பாக.. ஓரிடத்தில் மஞ்சளாக.. ஓரிடத்தில் ப்ச்சையாக என பல வர்ணங்களில் மாறி மாறி காட்சியளித்தது கொள்ளை அழகாக  அமைந்திருந்தது.நீண்ட பயணம். ஆக மொத்தம் 19கி.மீ தூரம் அன்று ஒரு நாள் பயணம் அமைந்திருந்தது.

பயணம் முடித்து கீழே வந்த போது மிகுந்த பசி. லாஸ் லியானோஸ் பகுதியில் மிகப் பிரசித்தமான ஒரு இத்தாலிய உணவகம் இருப்பதாக பயண வழிகாட்டி நூல் குறிப்பு இருந்தது. அங்கே சென்று  உணவகத்தில் பீஸா சாப்பிட்டு விட்டு அன்றைய நாள் பயணத்தை முடித்துக் கொண்டோம்.லா பல்மா தீவில் இருந்த  சமயம் மொத்தம் ஐந்து நடைப்பயணங்கள் மேற்கொண்டோம். கல்டேரா டி டப்ரியெண்ட  நடைப்பயணம் எங்கள் பயணத்தில் மூன்றாவது பயணம். மிகச் சிறப்பு வாய்ந்ததாகவும் மனதில் நீங்கா இடம்பெற்றதாகவும் அமைந்ததால் இந்த நடைப்பயணக்குறிப்புக்களுடன் என் லா பல்மா தீவுக்கான பயணக் கட்டுரையை முடிவு செய்ய விரும்பினேன்.

இயற்கையின் அழகை விட உலகில் வேறொன்றும் அழகில்லை. அதனை உறுதி செய்வது லா பல்மா தீவு.

என்னுடன் இது வரை நடந்து வந்த மின் தமிழ் நண்பர்களை அடுத்த ஒரு புதிய பதிவின் வழி வேறொரு இடத்திற்கு அழைத்துச் செல்கின்றேன். அதுவரை இப்பகுதியின் படங்களைப் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கலாமே ..!
மலைச்சாரல்


ஆமை போன்ற வடிவத்தில் அல்லவோ இந்தப் பாறை இருக்கின்றது

நடைப்பாதை பயணம் செல்பவர்கள் வழியைத் தவறிவிடாமல் இருப்பதற்காக பாதையில் ஏற்படுத்தப்பட்டுள்ள குறியீடுகள்.


பாறைகளும் ஓவியங்களாக..


ஓடையில் உணவு தேடும் குருவி
முற்றும்

சுபா

Saturday, September 1, 2012

லா பல்மாவில் நடையாக நடந்த கதை - 15


இயற்கையே ஒரு இந்திர லோகம்

லா பல்மா தீவில் கணிசமான அளவிற்கு ஜெர்மானியர்கள் குடியேறியிருக்கின்றார்கள். அதிலும் கடந்த 10 ஆண்டுகளில் பலர் தொழில் உருவாக்கிக் கொண்டு உணவகங்கள், வாடகைக் கார் நிறுவனங்கள், வாழை அவாக்காடோ தோட்டப் பயிர் உற்பத்தி,  விற்பனை என்ற வகையில் வருமானத்த்தை ஈட்டிக் கொள்ளும் வகையில் ஒரு சிலர் இத்தீவுக்கு குடியேறியிருக்கின்றனர். லா பல்மாவை விட மயோர்க்கா தீவில் ஜெர்மானியர்கள் தான் எண்ணிக்கையில் அதிகம் என்றே சொல்லலாம். விளையாட்டுக்கு ஜெர்மானியர்கள் மயோர்க்காவை ஜெர்மனியின் ஒரு பகுதி என்றே சேர்த்துக் கொள்ளும் அளவிற்கு அங்கே ஜெர்மனிய மக்கள் உள்ளனர். சுற்றுலா, நல்ல வெயில், அருமையான நீண்ட கடற்கரைகள், இத்தாலிய, ஸ்பெயின், மற்றும் பல வகை நாடுகளின் உணவுகள் ஆகியவை இங்கு கிடைப்பதே இந்த  ஸ்பெயின் தீவுகளை நோக்கி ஜெர்மானிய சுற்றுலா பிரியர்கள் செல்வதற்கு  முக்கிய  காரணம்.

இந்த வடக்குப் பயணத்தில் கீழ் நோக்கிச் சென்று லா பல்மா தீவின் வடமேற்கு முனையிலிருந்து கடலும் வானும் இணையும் காட்சியை கண்டு ரசித்த உடன் மீண்டும் திரும்பும்  எண்ணத்துடன் நடக்க ஆரம்பித்தோம். அங்கே மேலும் ஒரு சிறிய நடைபாதை 3 கிமீதூரத்திற்கு உள்ளதாக அறிவிப்பு பலகை இருந்ததால் அதனையும் பார்த்து வரலாமே என அந்தப் பாதையில் நடக்கலானோம்.

இது  மலைக்கு மேல் நோக்கிய ஒரு பயணம் ஆகையால் களைப்பு அதிகரித்தது. ஆனாலும் பார்க்க  வேண்டும் என்ற ஆவல் களைப்பை மறக்கச் செய்து விடும் அல்லவா?

நடந்து வரும் வழியில் ஓங்கி வளர்ந்திருந்த ட்ராகன் மரங்களைப் பார்த்துக் கொண்டும் அங்குள்ள வீடுகளை அதன் அழகை மிக நேர்த்தியாக அவ்வீடுகள் மலை சரிவில் கட்டப்பட்டுள்ள விதத்தை ரசித்துக் கொண்டு நடந்தோம். இடையில் சற்று களைப்பேற்படவே  நாங்கள் கொண்டு வந்த வாழைப் பழத்தை சாப்பிட்டு சிறு ஓய்வு எடுத்துக் கொண்டு மீண்டும் நடக்கலானோம். சற்று நேரத்தில் பார்க்க வேண்டிய அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தோம். அங்கே சிறு உணவகம் இருப்பதாக ஒரு குறிப்பு இருந்தது. பக்கத்திலேயே பழங்குடி மக்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் நிறைந்த குகைகளும், நீர்த்தேக்கங்களும் இங்கிருப்பதாகக்  குறிப்பு இருந்தது. ஆச்சரியம் மேலிட அப்பகுதி நோக்கி நடந்தோம்.அழகான  மணல் பாதை. இரு பக்கங்களிலும் பூச்செடிகள். எல்லாமே பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்தன. மலர்கள் என்னென்ன வர்ணங்களிலெல்லாம் இருக்குமோ அத்தனை வர்ணங்களிலும் புதுப் புது கலவை வர்ணங்களிலும் மலர்கள் நிறைந்து காணப்பட்டன. ஆங்காங்கே பழ மரங்கள், பப்பாளி, அவக்காடோ, வாழை, மா மரம் என பல வகை மரங்கள். அலு வேரா செடிகள் முற்களைத் தாங்கிக் கொண்டிருந்தாலும்  மலர்ந்து சிரித்துக் கொண்டிருந்தன.சற்று நடந்தால் ஒரு சிறு கடை. அங்கே ஒரு இளம் பெண் மிக வித்தியாசமான ஹிப்பி உடைத் தோற்றத்தில் மிக நளினமாக  வந்து எங்களை வரவேற்றார். ஜெர்மானியப் பெண் ஆனால் உடையும் அலங்காரமும் ஜெர்மானிய தாக்கம் கொஞ்சமும் இன்றி  இருந்தது. கடையில் தாவரங்களால் செய்யப்பட்ட சோப்பு, முக க்ரீம், அலு வேரா ஜேம், சில வகை செடிகளின் வேர்கள் என அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. நாங்கள் ஏதும் சாப்பிட விரும்புகின்றோமா என்று கேட்டவுடன் அங்கே இருந்து ஏதும் பாணங்கள் அருந்தலாம் என்று தோன்றவே அவர் அழைத்துச் சென்ற சிறு குடிலுக்குச் சென்றோம் .

அங்கே மூலையில் ஒரு இளம் பெண் அவளும் ஹிப்பி உடையில் கிட்டார் வாசித்துக் கொண்டிருந்தாள். அவள் அருகில் ஒரு இளைஞன் பாடிக் கொண்டிருந்தான். ஒரு மூலையில் 2 இளம் பெண்கள் ஓவியம் தீட்டிக் கொண்டிருந்தார்கள். எல்லோருமே ஹிப்பி உடை.. முடி அலங்காரத்தில்! நாங்கள் ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து அமர்ந்தவுடன் மெனு கார்டை பார்த்து வாழை, அலுவேரா, பப்பாளி கலந்த பழச்சாறு இரண்டு ஆர்டர் செய்து கொண்டோம்.குடிலைச் சுற்றிலும் மலர் கொடிகள். குடிலிற்குள் இந்த அழகிய இளைஞர்கள். அருகிலேயே ஒரு நீரோடை. கண்ணுக்கு எட்டிய தூரத்திலேயே நீல நிற கம்பளம் விரித்தார்போல அட்லாண்டிக்  சமுத்திரம். அங்கு அமர்ந்து பழச்சாறு அருந்திக் கொண்டிருந்தபோது இந்திரலோகம் என்பது இது தானோ என்றே எனக்கு தோன்றியது. ஏறக்குறைய அறைமணி நேரம் அங்கிருந்தோம். அங்கிருந்து விடைபெற்று நடந்து சென்று பழங்கால மக்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் உள்ள  பெல்மாக்கோ குகை (Belmaco cave ) பகுதிகளைப் பார்த்துக்  கொண்டு நடந்தோம். இப்பகுதியில் தான் மாஸொ  இனக்குழு மன்னர்கள் வாழ்த்திருக்கின்றார்கள்.ஆங்காங்கே குகைகள். அவை சேதப்படுத்தாமல் அப்படியே பாதுகாப்பாக உள்ளன. சில கதவுகள் கொண்டு மூடி வைத்தும்  பாதுகாக்கப்படுகின்றன.
பெரும் பாறையின் ஒரு பகுதியில் பாறையில் கீறிய ஓவியங்களையும் பார்த்து மகிழ்ந்தோம். இவை லாபல்மா தொல்லியல் துறையினால் பாதுக்கக்கப்படும் ஒரு பகுதியாக உள்ளது. பெல்மாக்கோ குகைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள http://lapalmaisland.sheilacrosby.com/2011/04/11/belmaco-cave-the-royal-palace-in-mazo/ இந்த வலைப்பதிவு உதவும். இங்கே பாறையில் கீறப்பட்டுள்ள வடிவங்கள் இன்னமும் தெளிவாகவே உள்ளன. இவை பெரும்பாலும் ஒரு நத்தை வடிவத்தைப் போல ஒரு புள்ளியிலிருந்து வளர்ந்து வரும் வட்ட வடிவம் போன்ற வகையில் தீட்டப்பட்ட ஓவியங்களாக உள்ளன. மேலும் சில இடங்களிலும் இவ்வகைப் பாறை ஓவியங்கள் இருக்கின்றன. ஆர்வமுள்ளோர் இவ்வலைப்பதிவை வாசிக்கலாம். http://lapalmaisland.sheilacrosby.com/2011/04/07/archeology-at-the-roque-de-los-muchachos/
மனித நடமாட்டம் மிகக் குறைவாக இருந்த போதும் இயற்கை சூழ்ந்திருக்கும் இந்தப் பகுதியில் கழித்த சில மணி நேரங்கள் மனதை விட்டு அகலாத  அனுபவமாகி நிலைத்து விட்டது!

தொடரும்...

சுபா