Saturday, September 8, 2012

லா பல்மாவில் நடையாக நடந்த கதை - 16


கல்டேரா டி டப்ரியெண்ட (Caldera De Taburiente)

எவ்வளவுதான் நடப்பது? கால்களுக்கும் ஓய்வு வேண்டாமா? லா பல்மா பயணத்தின் இறுதிப்பகுதிக்கு வந்து விட்டோம். இந்த இறுதிப் பகுதியை லா பல்மா தீவின் நடை பாதைகளுக்கே சிகரம் என்று சொல்லும் கால்டேரா டி டப்ரொயெண்ட பகுதியில் நான்  சென்றிருந்த நடைப் பாதை பயண அனுபவங்களை விவரிப்பதாக அமைத்துள்ளேன்.


லா பல்மா தீவின் மையப் பகுதியில் அமைந்திருக்கும் ஒரு மிகப் பழமையான எரிமலையின்   வாய்ப்பகுதி (Crater) தான் இது. 1954ம் ஆண்டு இத்தீவின் தேசியப் பூங்காவாக இப்பகுதி ப்ரகடணப்படுத்தப்பட்டது. எரிமலையின் வாய்ப்பகுதி மட்டும் 10கிமீட்டர் நீளமுடையது.

விக்கிபீடியாவில் உள்ள  கால்டேரா டி டாப்ரியெண்டாவின்  இப்பகுதியைக் காட்டும் சாட்டலைட் படம் கீழே.


நன்றி: விக்கிபீடியா

இப்பகுதியில் நடைப்பயணம் மேற்கொள்பவர்கள் செல்லும் வகையில் வெவ்வேறு பாதைகள் உள்ளன. நான் தேர்ந்தெடுத்த பயணம் 13 கி.மீ வடக்கு நோக்கி நடந்து பின்னர் அங்கிருந்துசுற்றி வந்து கிழக்கு பக்கமாக வந்து மீண்டும் எங்கள் வாகனம் இருக்கும் இடம் வரை வருவதாக திட்டமிட்டிருந்தேன். முதலில் மேலே வடக்கே செல்வதற்காக ப்ரத்தியேகமாக அங்கே அமைந்துள்ள டாக்ஸி சேவையைத் தான் பயன்படுத்த  வேண்டும். தனியார் யாரது வாகனமும் செல்ல அங்கே அனுமதிக்கப்படுவதில்லை.ஆக மலையடிவாரத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு ஆளுக்கு 12 யூரோ கட்டணம் செலுத்தி 25 நிமிட பயணம் மேற்கொண்டு வளைந்து செல்லும் பாதையில் மிக லாவகமாக வாகனம் ஓட்டும் வாகனமோட்டியைப் பார்ர்த்துக் கொண்டும் மலைப்பகுதியைப் பார்த்துக் கொண்டும் மேலே சென்று சேர்ந்தேன். பாதை முழுதும் ஆங்காகே அவக்காடோ மரங்கள் நிறைந்திருக்கின்றன. தனியார் தோப்புக்கள் அவை.

கல்டேரா டி டாப்ரியெண்ட மலைப்பகுதியில் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் நிச்சயமாக வரக்கூடாது. மலைப்பாதை சற்று சறுக்கலானது. ஓரளவாவது நடைப்பயண அனுபவம் உள்ளவர்கள் மட்டுமே இப்பகுதிக்கு வர வேண்டும்.

மலைகளின் அழகை வர்ணிக்க வார்த்தைகளில்லை. மரங்களோ  பல வகை பச்சை நிறங்களில் - வர்ணிக்க முடியாத வகையில் நீண்டு வளர்ந்து பசுமைக்காடாக இப்பகுதி விளங்குகின்றது.மலைப்பாதை தான் என்றாலும் ஓரளவு நடந்து செல்பவர்களுக்குத் துணை செய்யும் வகையில் சீரான பாதையை அமைத்திருக்கின்றனர். ஆனாலும் ஆங்காங்கே கற்களின் குவியல்.. பாறைகள்.. இவைகளைக்  கடந்து தான் செல்ல வேண்டும்.

மலையிலிருந்து விழும் அருவி அதிலிருந்து உருவாகிச் செல்லும் ஓடை.. கண்களையும் மனதையும் கொள்ளை கொண்டு விடுகின்றன.

எரிமலை வெடித்த  பள்ளத்தில் இறங்கி நடக்கின்றோம் என்பதே ஒரு வித புதுமையான அனுபவமாக அமைந்திருந்தது. அதிலும் மேலும் கீழும்  ஏறுவதும் இறங்குவதுமாக இருந்ததில் இந்தப் பயணம் சற்றே அலுப்பை தருவதாகவே அமைந்தது. ஆனாலும் நடைப்பயணத்த்தின் இறுதிப் பகுதியில் நான் பார்க்கவுள்ள வர்ண ஜாலம் காட்டும் நீர்வீழ்ச்சி, அதனை சுற்றியுள்ள ஓடைகள் ஆகியவை பற்றி ஏற்கனவே  பயண வழிகாட்டி நூலில் படித்து எங்களைத்  தயார் செய்து வைத்திருந்தமையால் பயணத்தில் ஆர்வமும் சுவாரசியமும்  எங்களுக்குக் குறையவில்லை. இடையில் எங்கேயும் கடைகள் இல்லை. ஆக கொண்டுவந்திருந்த ஆப்பிள் பழங்களையும், வாழைப்பழங்களையும் சாப்பிட்டு பசி ஆற்றிக் கொண்டோம்.ஒரு வழியாக  மலைகளைக் கடந்து  நீர்வீழ்ச்சிப் பகுதியை அடைந்தேன். இந்த  நீர்வீழ்ச்சி பாறை இடுக்குகளுக்கு இடையே உள்ளது. ஆகையால் ஒரு சிறு மலைப்பகுதியின் மேல் ஏறி அங்கிருந்து மேலும் 1 கிமீ தூரம் சென்று மேலும் ஒரு பெரிய பாறை மேல் ஏறி சென்று நீரோடையைக் கடந்து சென்று காண வேண்டும். நான் சென்ற போது எங்களுக்கு முன்னர் சிலர் நீர்வீழ்ச்சியைப் பார்த்து  விட்டு வருவதைக் கண்டு சற்று நம்பிக்கை  வர மலைமேல் ஏறிச் சென்று நீர்வீழ்ச்சியின் அழகை கண்டு ரசித்தேன். ஆனால் திரும்பி வரும் போது தான் சங்கடமாகி விட்டது. மலையிலி ஏறும் போது இருந்த ஆர்வம் இறங்கும் போது எனக்கில்லை. மிகச்சிறிதான ப்பாதை வேறு. கால்கள் கீழே இறங்க மறுத்து விட்டன.. விழுந்து விடுவோமோ என்ற தயக்கத்தில்.

நீர்வீழ்ச்சியைப் பார்த்து முடித்து ஓடையின்  ஒரத்திலேயே நடந்து வந்தேன். ஓடையின் கற்கள் ஓரிடத்தில் பளுப்பாக.. ஓரிடத்தில் மஞ்சளாக.. ஓரிடத்தில் ப்ச்சையாக என பல வர்ணங்களில் மாறி மாறி காட்சியளித்தது கொள்ளை அழகாக  அமைந்திருந்தது.நீண்ட பயணம். ஆக மொத்தம் 19கி.மீ தூரம் அன்று ஒரு நாள் பயணம் அமைந்திருந்தது.

பயணம் முடித்து கீழே வந்த போது மிகுந்த பசி. லாஸ் லியானோஸ் பகுதியில் மிகப் பிரசித்தமான ஒரு இத்தாலிய உணவகம் இருப்பதாக பயண வழிகாட்டி நூல் குறிப்பு இருந்தது. அங்கே சென்று  உணவகத்தில் பீஸா சாப்பிட்டு விட்டு அன்றைய நாள் பயணத்தை முடித்துக் கொண்டோம்.லா பல்மா தீவில் இருந்த  சமயம் மொத்தம் ஐந்து நடைப்பயணங்கள் மேற்கொண்டோம். கல்டேரா டி டப்ரியெண்ட  நடைப்பயணம் எங்கள் பயணத்தில் மூன்றாவது பயணம். மிகச் சிறப்பு வாய்ந்ததாகவும் மனதில் நீங்கா இடம்பெற்றதாகவும் அமைந்ததால் இந்த நடைப்பயணக்குறிப்புக்களுடன் என் லா பல்மா தீவுக்கான பயணக் கட்டுரையை முடிவு செய்ய விரும்பினேன்.

இயற்கையின் அழகை விட உலகில் வேறொன்றும் அழகில்லை. அதனை உறுதி செய்வது லா பல்மா தீவு.

என்னுடன் இது வரை நடந்து வந்த மின் தமிழ் நண்பர்களை அடுத்த ஒரு புதிய பதிவின் வழி வேறொரு இடத்திற்கு அழைத்துச் செல்கின்றேன். அதுவரை இப்பகுதியின் படங்களைப் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கலாமே ..!
மலைச்சாரல்


ஆமை போன்ற வடிவத்தில் அல்லவோ இந்தப் பாறை இருக்கின்றது

நடைப்பாதை பயணம் செல்பவர்கள் வழியைத் தவறிவிடாமல் இருப்பதற்காக பாதையில் ஏற்படுத்தப்பட்டுள்ள குறியீடுகள்.


பாறைகளும் ஓவியங்களாக..


ஓடையில் உணவு தேடும் குருவி
முற்றும்

சுபா

2 comments:

விச்சு said...

லா பல்மா தீவின் வழியாக தங்களின் கூடவே நடந்து பார்த்ததுபோல் அருமையாக எங்களை வழிநடத்திச் சென்றீர்கள். கூடுதலாக படங்களையும் இணைத்தது மிகவும் சிறப்பு. இதில் நீர்வீழ்ச்சி படமும், எரிமலை, ஆமைக்கல் போன்ற பல படங்கள் அருமை. கட்டுரையை அழகாகவும் தொகுத்தளிந்திருந்தீர்கள். நன்றி.. வாழ்த்துக்கள்.

Subashini Tremmel said...

மிக்க நன்றி. வாசித்து கருத்து பகிர்ந்து கொண்டமைக்கு. அடுத்த பயணம் விரைவில் செல்ல ஆயத்தப் படுத்திக் கொள்ளுங்கள் :-)

சுபா

Post a Comment