Tuesday, January 18, 2005

ஜெர்மனி - Muenchen (Munich) -Bayern, Germany. [ 6 - 9 Jan 2005 ] - Part III



ஜெர்மனியில் செல்லுமிடமெல்லாம் சைவ உணவு வகைகளுக்கு கொஞ்சமும் பிரச்சனையேயில்லை. அதற்காக தோசை இட்லி சாம்பாரெல்லாம் தேடிக் கொண்டிருக்க முடியாது. அதற்கு மாற்றாக உருளைக் கிழங்கிலும் பச்சை காய்கறிகளிலும் தங்கள் கை வரிசையைக் காட்டுபவர்கள் ஜெர்மானியர்கள். நான் இருக்கின்ற போப்லிங்கன் நகரம் பாடன் உர்ட்டெம்பெர்க் எனும் மாநிலத்தைச் சார்ந்தது. எப்படி இந்தியாவில் தமிழகத்திற்கு கேரளாவிற்கு ஆந்திராவிற்கு என்று தனித்தனியாக சிறந்த உணவு வகைகள் இருக்கின்றதோ அதேபோல ஜெர்மனியிலும் ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனி ஷ்பெஷல் உணவு வகை உண்டு. உணவு வகைகளில் சிறந்ததாக இந்த பாடன் உர்ட்டெம்பெர்க் மற்றும் முன்ஷன் நகரம் இருக்கும் பாயர்ன்(Bavaria) மாநிலமும் கருதப்படுகின்றன. இதில் என்ன வித்தியாசம் என்றால், பாடன் உர்ட்டெம்பெர்க் மாநிலத்தில் இத்தாலிய சைவ உணவுகளோடு இந்த மாநிலத்திற்கு உரியதான பல சைவ உணவு வகைகளையும் எல்லா உணவு விடுதிகளிலும் பெற்று விட முடியும். ஆனால் பாயர்ன் மாநிலம் அசைவப் பிரியர்களுக்கு அதிகமான வகைகளை வழங்குவதில் சிறந்து விளங்குகின்றது.

பொரித்த பன்றி இறைச்சி, கொஞ்சம் பச்சை காய்கறிகள், மற்றும் உள்நாட்டு பியர் இங்கு மிகப் பரவலாக எல்லா உணவகங்களிலும் கிடைக்கக்கூடிய ஒன்று. அதோடு சால்மன் மீன், வைன், இவற்றோடு காய்கறிகள் கொண்ட ஒரு வகை உணவும் உண்டு. பன்றி மாடு, கோழி, வான்கோழி இறைச்சி வகைகளில் பல வகையான உணவுகளை இங்குள்ள உணவகங்கள் வழங்குகின்றன. மீன் வகைகள் கொஞ்சம் ஷ்பெஷல் என்று தான் கூற வேண்டும்.
பாயர்ன் மாநிலத்தின் புகழ் கூறும் மற்றொரு உணவு வகை ப்ரெட்ஸல் என அழைக்கப்படும் ஒரு வகை ரொட்டி.


இது இந்த மாநிலத்தில் தான் முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டதாக ஜெர்மானியர்கள் கூறுகின்றார்கள். (ப்ரேட்ஸலைப் பற்றி சற்று அறிந்து கொள்ள http://en.wikipedia.org/wiki/Brezel) ஜெர்மனியின் எல்லா இடங்களிலும் இந்த வகை ரொட்டி கிடைத்தாலும், இதன் மிகச் சுவையான இந்த ரொட்டியை பாயர்னிலும் பாடன் உர்ட்டெம்பெர்க் மாநிலத்திலும் தான் பெற முடியும். முதன் முதலில் இந்த ரொட்டியைச் சாப்பிடுபர்களுக்கு ஒரு வித்தியாசமான சுவையைக் காட்டுவதால் இது பிடிக்காமல் போய்விடக் கூடும். ஆனால் பழகி விட்டால் ப்ரெட்ஸல் இல்லாமல் காலை உணவே இல்லை என சொல்லும் அளவிற்கு பழகி விடுவோம். இந்த ரொட்டியில் உள்ள சிறப்பு அதன் மேலே பூசப்படும் ஒரு விதமான பொருள் தான். இதன் சுவை கொஞ்சம் துவர்ப்பாகவும் இருக்கும். ரொட்டியின் மேல் உப்புத் துகள்கள் சேர்க்கப்பட்டிருக்கும். பட்டர் சேர்த்து சாப்பிடும் போது இதன் சுவையே தனிதான்.

சாதரணமாக சிறிய அளவில் ஜெர்மனி முழுதும் கிடைக்கக்கூடிய இந்த ப்ரெட்ஸல், அக்டோபர் மாதம் மட்டும் மூன்ஷன் நகரில் ஒரு பெரிய பீஸா அளவிற்கு கடைகளில் கிடைக்கும். இந்த பெரிய ப்ரெட்ஸலை ஒருவரால் நிச்சயமாக சாப்பிட்டு முடிக்க முடியாது.
மூன்ஷன் வந்திருப்பதால் இந்த நகரத்தின் ஸ்பெஷல் தான் சாப்பிட வேண்டும் என்று முடிவெடுத்து மெனு அட்டையில் எனக்குப் பிடித்த உணவைத் தேடினேன். ஒரு சைவ உணவு அகப்பட்டது. அடுத்த பதினைந்து நிமிடத்தில் எனது உணவு வந்து சேர்ந்தது. பெரிய அளவிலான ஒரு உருளைக் கிழங்கு இரண்டாக பிரிக்கப்பட்டு வேகவைத்து வருக்கப்பட்டு அதோடு காய்கறிகளை சோயா சோஸ் சேர்ந்து மெலிதாக வருத்து வைத்திருந்தார்கள். உணவை சுவைக்க ஆரம்பித்தோம். சுவை பிரமாதம்.

No comments:

Post a Comment