Sunday, May 11, 2014

புத்தரின் பூமி....தாய்லாந்து! பயணத் தொடர் - 6

அயோத்தையாவுக்குச் செல்வோமா?

டிசம்பர் 14ம் தேதி நான் ஆர்ட்ரியம் ஹோட்டலுக்கு வந்தவுடனேயே ரிஷப்ஷனில் என் பெயரைச் சொல்லி நான் பதிவு செய்திருந்த பயணக் குழுவைப் பற்றி விசாரித்து மறு நாள் காலை சரியாக 7 மணிக்கு எங்கள் பேருந்து புறப்படும் என்றும் அதற்கு 15 நிமிடங்களுக்கு முன்னரே நாங்கள் காலை உணவை முடித்து தயாராகி வாசலில் காத்திருக்க வேண்டும் என்ற தகவல் கிடைத்தது.பாங்காக் நகர டுக் டுக் வண்டிகள் (ஆட்டோ போல)


அறைக்குச் சென்று குளித்து தயாராகி நான் இரவு உணவு சாப்பிடச் செல்லலாம் என முடிவெடுத்து சாலையில் நடக்க ஆரம்பித்தே. பெரிய நகரங்களில் உள்ள மிகப்பெரிய பிரச்சனையே சுற்றுச்சூழல் மாசு தான், பாங்கோக் நகரின் அதிகப்படியான வாகனங்களினால் அந்த நகரமே புகை மூட்டமாகத்தான் காட்சியளிக்கின்றது. சாலைப் பகுதிகள் மிகத் தூய்மையாக இருந்த போதிலும் காற்று மிக அசுத்தமாகவே உள்ளது. எங்களுக்கு விருப்பமான சீதோஷ்ணமாக இருந்தாலும் இந்தக் காற்று அசுத்தத்தால் அதிகம் சாலையில் நடக்க இருவருக்குமே மனம் வரவில்லை. விரைவாக ஒரு ரெஸ்டாரண்டைத் தேடி அங்கே உணவை ஆர்டர் செய்தேன்.  தாய் க்ரீன் கறி (பச்சை குழம்பு) தான் எனக்குப் பிடித்திருந்தது. இது தாய் துளசி கொண்டு தயாரிக்கப்படும் ஒரு குழம்பு. சாதத்தோடு சாப்பிடப்படுவது.

மறு நாள் காலை ஆர்ட்ரியம் ஹோட்டலில் பஃப்பே வகையில் காலை உணவு. காரமான  உணவு வகைகள் கிடைத்தன.ஆசிய நாடுகள் வந்து விட்டால் கார உணவு வகைகள் தான் என்றுமே என் தேர்வு. உறைக்கின்றது என மனதில் நினைத்துக் கொண்டே விடாமல் சாப்பிடும் பழக்கம் எனக்கு. என் விருப்பத்திற்கு பிடித்தமான எல்லா வகை உணவுகளையும் கொஞ்சம் கொஞ்சம் ருசி பார்த்து முடித்தேன். என்ன ஆச்சரியம் என்றால் அங்கு வைக்கப்பட்டிருந்த பல வகை உணவுகளில் உப்புமாவும் வடையும் கூட இருந்தன.
ஏனைய பயணிகளையும் பேருந்தையும் அடையாளம் கண்டு கொள்ள நினைத்து நான்  சற்று முன்னதாகவே எனது எல்லா உடமைகளுடனும் வந்து வெளியே வந்து விட்டேன். எங்கள் பயணத்திற்காக ஒரு குளிர்சாதன வசதி கொண்ட பேருந்து, அதில் வாகன ஓட்டுனருடன் 'பஸ் போய்' என அழைக்கப்படும் உதவியாளர் ஒருவரும் எங்கள் பயண வழிகாட்டியும் இருந்தனர். என்னை அறிமுகம் செய்து கொண்டு, பாஸ்போர்ட் மற்றும் சுற்றுலா புக்கிங் ஆவணங்களையும் காட்டியவுடன் என் பெட்டிகளைப் பஸ்ஸில் ஏற்றி என்னையும் ஏனையோருக்கு அறிமுகப் படுத்தி வைத்தனர்.

என்னுடன் இப்பயணத்தில் இணைந்து கொண்டோர் மொத்தம் 22 பேர். அனைவரும் ஜெர்மானியர்கள். ஜெர்மனியில் இயங்கும் Berge & Meer  பயண நிறுவனத்தில் என்னைப் போல பதிந்தவர்கள் இவர்கள். இவர்கள் 22 பேருடனும் தான் எங்கனது அடுத்த 13 நாட்கள் பயணம்.

சிலர் தம்பதியர்.. சிலர் தனி நபர்கள்.. என்ன்னுடன்   தாய்லாந்தின் இந்த வடக்கு தெற்குப் பயணத்தை ரசிக்க வந்த ஜெர்மானியர்கள் அனைவருமே ஏறக்குறைய 40லிருந்து 60 வயதுக்குட்பட்டவர்கள்.

எங்களின் பயண வழிகாட்டி 46 வயது பெண்மணி ஒருவர். பார்ப்பதற்கு 30 வயது என்றே சொல்லலாம். அழகான, அன்பான பல வரலாற்று விபரங்களும் தகவல்களும் தெரிந்த ஜெர்மன் மொழி பேசும் தாய்லாந்து பெண்மணி அவர்.

அன்றைய எங்கள் பயணம் பாங்காக் நகரிலிருந்து நேராக அயோத்தையா சென்று பின்னர் இரவு சுக்கோத்தை நகரை அடைவது. இது 390 கிமீ தூரம். இதில் அயோத்தையாவில் சில இடங்களைப் பார்த்து விட்டு மதிய உணவு சாப்பிட்டு விட்டு சுக்கோத்தை செல்வது என்பதாக அவர் திட்டமிருந்தது.


சம்மொன்கோல் கோயிலில் ஒரு பகுதியில்
அயோத்தையாவில் ஏராளாமான புத்தர் கோயில்கள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒரு சிறப்பு மிக்கவை. எல்லா கோயில்களுக்கும் செல்வது என்பது சாத்தியப்படாது என்பதால் வாட் சம்மொன்கொல் மட்டும் செல்வது என்றும் நேரம் அமைந்தால்  மேலும் ஒரு புத்த விகாரையைப் பார்க்கலாம் என்று எங்கள் பயண வழிகாட்டி குறிப்பிட்டார்.

பாங்காக் நகரை விட்டு சரியாக காலை 7 மணிக்கு எந்தத் தாமதமும் இன்றி எங்கள் பஸ் புறப்பட்டது. ஏனைய பெரிய நகரங்களைப் போல உயர்ந்த கட்டிடங்களும் வர்த்தக நிலையங்களும்  பாங்காக்கிலும் காண முடிகின்றது.


பாங்காக் காலை 7 மணி வாக்கில்


பஸ்ஸில் ஏறி அமர்ந்து செல்லும் போது ஏனைய பயணிகளுடன் முதலில் எல்லோருக்குமே பேச ஒரு தயக்கம். முதல் நாள் காலையில் அவரவர் அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டு ஏதேனும் தகவல்கள் தேவைப்பட்டால் எங்கள் பயண வழிகாட்டியிடமே கேட்பது என ஒரு வித தயக்க உணர்வுடனே காணப்பட்டோம். இந்த நிலை அன்று இரவுக்குள் மாறிப் போனது. புதிய நண்பர்கள் அந்த முதல் நாள் பயணத்திலேயே ஒருவருக்கொருவர் அறிமுகமாக்கிக் கொண்டோம்.

தொடரும்...

சுபா

No comments:

Post a Comment