Wednesday, August 20, 2014

காண்டெபெரி - யாத்திரை செல்வோமா..! - 1

கருத்தரங்கத்திற்காக இங்கிலாந்தின் தென் கிழக்கு நகரான காண்டபெரி வந்த எனக்கு இந்த நகரின் முழு விபரங்களையும் ஒவ்வொன்றாக அறிந்து கொள்ளும் போது ஆச்சரியத்தில் மூழ்கிப் போகின்றேன். இங்கிலாந்தின் மிக முக்கிய வரலாற்று நகர் காண்டபெரி என்பதும், ரோமன் அரசு இங்கிலாந்தில் இங்கு தாம் முதன் முதலில் தனது ஆட்சியை நிறுவியது என்பதையும், 6ம் நூற்றாண்டில் கெண்ட் நகரின் அரசியார் பெர்தாவின் தேவைக்காக ரோம் நகரிலிருந்து போப் இங்கு செயிண்ட் அகஸ்டின் பாதிரியாரை  அனுப்பி கிறிஸ்துவ மதம் பரவ வழியேற்படுத்தினார் என்பதும் வரலாறு.

இங்கு முதலில் கத்தோலிக்க மதம் பரவ ஆரம்பித்ததும் வழிபாட்டிற்காக தேவாலயம் எழுப்பப்பட்டது. தற்போது இருக்கும் கேத்திட்ரல் 11ம் நூற்றாண்டை சேர்ந்த வடிவம் என்றாலும் இதன் முதல் வடிவம் 6ம் நூற்றாண்டில் இங்கு அமைக்கப்பட்டு கத்தோலிக்க கிறிஸ்துவ மதம் பரவ விரிவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இன்று நேரம் கிடைத்தமையால் காலையில் கேத்திட்ரல், ரோமன் அருங்காட்சியகம், ஹெரிட்டேஜ் அருங்காட்சியகம், ஆகியன சென்று பார்த்து தகவல்கள் சேகரித்து வந்தேன்.

ஆர்ச்பிஷப் தோமஸ் பெக்கட் வரலாறு இந்த நகருக்கு மிக முக்கிய மாற்றத்தை 12ம் நூற்றாண்டு முதல் வழங்கியது.

இக்கதையைப் பற்றி விரிவாக தொடர்ந்து சொல்கின்றேன். முதலில் ...

கத்தோலிக்க கிறிஸ்துவர்களுக்கு புனித யாத்திரை செல்லும் இடங்கள் எனக் குறிப்பிடும் போது மிக முக்கியமாக அடையாளம் காட்டப்படும் 3 நகரங்கள் ஜெரூசலம், சண்டியாகோ டி கொம்பொஸ்டெலா (ஸ்பெயின்), காண்டெபெரி (இங்கிலாந்து)  ஆகியவை.

தோமஸ் பெக்கட்தான் கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் மிக முக்கிய புனித யாத்திரை நகராக இந்த நகரம் உருவாகக் காரணமாக இருந்தவர் என்பதோடு தொடங்குகின்றேன்.

இங்கு காணப்படுவது காத்திட்ரலில் ஆர்ச்பிஷப் தோமஸ் பெக்கட் 4 அரச வீரர்களால் (Knights) 1170ம் ஆண்டு கொல்லப்பட்ட இடம்.

தொடரும்..

No comments:

Post a Comment