Monday, April 2, 2012

கிருஷ்ணகிரிக்கு போகலாம் வாங்க...! - 14

ஒவ்வொரு ஊருக்குச் செல்லும் போதும் ஒவ்வொரு அனுபவம். அதிலும் நல்ல நண்பர்களும் சேர்ந்து விட்டால்..... பயணத்தில் குதூகலத்திற்குக் குறைவிருக்காது, இல்லையா?

எங்கள் இரண்டு நாள் கிருஷ்ணகிரிப் பயணம் பல புதிய விஷயங்களையும் அனுபவங்களையும் எங்கள் அனைவருக்குமே வழங்கியது.

மல்லிகார்ஜுனர் கோயிலில் பதிவை முடித்து வழிபாட்டையும் முடித்துக் கொண்டவுடன் நாங்கள் தர்மபுரியிலிருந்து ஈரோடு செல்ல பயணமானோம். தர்மபுரியிலிருந்து ஈரோடு செல்ல இரண்டு பஸ்கள் மாறி மாறிச் செல்ல வேண்டும். தர்மபுரியிலிருந்து முதலில் சேலத்திற்குச் செல்லும் பஸ்ஸில் பயணம் செய்து பின்னர் சேலத்திலிருந்து ஈரோடு செல்ல வேண்டும். அப்போதே மணி மாலை 7 ஆகிவிட்டது.

செல்வமுரளி, ஸ்வர்ணா ஆகியோரையும் வழி அனுப்பி விட்டு நானும் கண்ணனும் சேலம் செல்லும் பஸ்ஸில் ஏறிக்கொண்டோம். இப்போது பஸ்ஸில் பயணம் செல்ல தயக்கம் இல்லாமல் போய்விட்டது. சேலத்திற்குச் சென்றதும் அங்கிருந்து எங்களை ஈரோடு செல்லும் பஸ்ஸிற்குச் செல்லும் வழியைக் காட்டும் படி பஸ் ஓட்டுநரிடம் சொல்லி விட்டு முன் வரிசை சீட்டிலேயே உட்கார்ந்து கொண்டோம் நானும் கண்ணனும்.

பஸ்ஸில் பயணம் சுவாரஸியமாக இருந்தது. ஓட்டுநரிடமும் பேசிக் கொண்டே பயணித்தோம். ஒரு மணி நேரம் பயணம் செல்வதே தெரியாமல் பயணம் அமைந்திருந்தது. சேலம் வந்து சேர்ந்ததும் எங்கள் பெட்டிகளை இறக்கிக் கொண்டதும் பஸ் ஓட்டுனரே எங்களை ஈரோடு செல்லும் பஸ் இருக்கும் இடம் வரை வந்து காட்டி அனுப்பி வைத்து விட்டுச் சென்றார். நல்ல மனிதர்களையே எல்லா இடங்களிலும் பார்ப்பதற்கும் கொடுத்து வைத்திருக்க வேண்டுமல்லவா? இதனை நினைத்துக் கொண்டே அடுத்த ஊருக்குப் பயணமானோம்.

நண்பர்களே.. எனது கிருஷ்ணகிரி பயணம் தொடர் பகிர்வு இத்துடன் நிறைவடைகின்றது. என்னுடன் நீங்களும் இந்த நிழல் வெளியில் பயணம் செய்திருப்பீர்கள் என்றே நினைக்கின்றேன். இந்தப் பயணம் உங்கள் மனதையும் கவர்ந்திருக்கும் என்றே கருதுகின்றேன். இதுவரை கிருஷ்ணகிரி சென்றிராவிட்டால்.. உங்கள் பயண பட்டியலில் இந்த ஊரை கட்டாயம் சேர்த்துக் கொள்ளுங்கள்.

முற்றும்.



அன்புடன்
சுபா

No comments:

Post a Comment