ஐரோப்பாவில் ஒரு பயணத்தை திட்டமிடுவது என்றால் நமது காரில் பொருத்தப்பட்டு இருக்கின்ற ஜி பி எஸ் சிஸ்டம் ஏறக்குறைய தெளிவான பயண நேரத்தை நமக்கு அறிவித்து விடும். அதன் அடிப்படையில் திட்டமிட்டு எவ்வளவு பெரிய நீண்ட தூர பயணம் ஆனாலும் நம்மால் ஏற்பாடு செய்த விட முடியும்.
பிரான்ஸ் வடமேற்கு எல்லையில் உள்ள கலே துறைமுகத்திலிருந்து புறப்படுகின்ற ஃபெரி மதியம் 1:15க்குப் பதிவு செய்திருந்தோம். ஆக காலை 3 மணிக்கு லியோன்பெர்க் கிராமத்திலிருந்து புறப்பட்டால் காலை 11 மணிவாக்கில் துறைமுகப் பகுதி வந்து வட முடியும் என ஜிபிஎஸ் சொல்லிவிட்டது. ஆகவே இடையில் ஓரிரு சிறிய ஓய்வு.. அவற்றையும் கணக்கில் சேர்த்துக் கொண்டு அதிகாலை 3 மணிக்கு வாகனத்தில் புறப்பட்டோம்.
வீட்டில் இருந்து துறைமுகம் வரை மொத்தம் 710 கிலோ மீட்டர் தூரம். இடையில் லக்ஸம்பர்க், பெல்ஜியம், பிரான்ஸ் ஆகிய மூன்று நாடுகளையும் கடந்து வர வேண்டும்.
ஐரோப்பாவில் மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு இடையில் நாட்டு எல்லையில் பாஸ்போர்ட் கண்ட்ரோல் இல்லை என்பதால் நேரத்தை விரயமாக்காத தொடர்ச்சியான பயணத்தை மேற்கொள்ள முடிகிறது. ஆகவே நேர்த்தியான சாலைகள், திட்டமிட்ட பயணம் என்ற அடிப்படையில் பயணத்தைத் திட்டமிட முடிகிறது.
ஒரே நாளில் ஜெர்மனியில் இருந்து மேலும் மூன்று நாடுகளைக் கடந்து இங்கிலாந்தில் மதியம் 2 மணிக்கு வந்து சேர்ந்தது அதிலும் சாலை வழியாக பயணம் என்பது சாத்தியமான ஒன்றுதான் என்பதை இந்தப் பயணம் நிரூபித்து விட்டது.
கலே துறைமுகப் பகுதி மிகத் திட்டமிட்ட வகையில் கட்டப்பட்டிருக்கின்றது. நீண்ட கனரக வாகனங்களுக்கு ஒரு பகுதி. பொதுமக்கள் பயணிக்கின்ற பேருந்துகளுக்கு ஒரு பகுதி. கார்களுக்கு வேறு பகுதிகள்.
ஒவ்வொரு காருக்கும் அது எந்த வரிசையில் கப்பலில் வந்து நிற்க வேண்டும் என்பது குறித்த தகவல் துறைமுகத்தில் நுழையும்போது நமக்கு வழங்கப்பட்டு விடுகின்றது.
ஐரோப்பிய எல்லையில் ஐரோப்பிய சுங்கத்துறை அதிகாரிகள் நமது பாஸ்போர்ட்டுகளை சோதிக்கின்றார்கள். அதன் பின்னர் வாகனத்தில் எவ்வகையான பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன என்பதை மற்றொரு இடத்தில் சோதிக்கின்றார்கள். இதனைக் கடந்து ஏறக்குறைய 50 மீட்டர் தூரம் வந்தவுடன் இங்கிலாந்து நாட்டின் சோதனை தொடங்குகிறது. ஊழியர்கள் அனைவருமே அன்பாக சிரித்த முகத்துடன் தான் பணியாற்றுகின்றார்கள். நமக்கு இன்றைக்கு அதிர்ஷ்டம் இருந்திருக்கும் என்று நினைக்கின்றேன். 

ஃபெரி ஏறக்குறைய 300-400 பேர் பயணிக்க கூடிய வகையில் அமைந்திருக்கிறது. உள்ளேயே உணவகங்கள் உள்ளன.. ஓய்வெடுக்கும் பகுதிகள் உள்ளன. ஏறக்குறைய 1 1/4 மணி நேர பயணம்.
நமது வாகனத்தை அடித்தளத்தில் நிறுத்திவிட்டு மேல் தளத்தில் சென்று உணவருந்தலாம். ஓய்வெடுக்கலாம்.
வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலின் ஒரு பகுதியான இங்கிலீஷ் சேனலைக் கடந்து இங்கிலாந்து நாட்டின் கடற்கரையான டோவர் துறைமுகப் பகுதியை வந்தடைந்ததும் அங்கிருந்து எந்தவிதமான சோதனைகளும் இல்லாமல் வாகனத்தை உடனடியாக எடுத்துக் கொண்டு பயணிக்க முடிகிறது.
டோவர் இப்பகுதியில் முக்கியமான துறைமுக நகரம். வரலாற்றுப் பழமை கொண்டது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம் தொடக்கம் ரோமானியப் பேரரசு இங்கிலாந்தைக் கைப்பற்ற வேண்டும் என திட்டமிட்ட போது ஜூலியஸ் சீசரின் படைகள் வந்திறங்கிய பகுதி இது. ஏறக்குறைய 300 ஆண்டுகள் பழமையான வீடுகள் பல இங்கிருக்கின்றன. இன்றும் ஈராயிரம் ஆண்டு சிதலமடைந்த ரோமானியக் கட்டிடங்களைக் காண முடிகிறது.
அதற்கு அருகில் Folkestone அமைந்திருக்கின்றது. முதலாம் உலகப் போர் இரண்டாம் உலகப்போர் மட்டுமின்றி இங்கிலாந்தில் நடந்த பல போர்கள் இந்த நகரின் வரலாற்றோடு பின்னிப் பிணைந்து இருக்கின்றன.
இரண்டாம் உலகப் போரில் பாதிக்கப்பட்ட ஒரு தேவாலயத்தின் மணிக்கூண்டு பகுதி மாத்திரம் எஞ்சிய நிலையில் உள்ள ஒரு வளாகத்தை போர்களை நினைவுபடுத்தவும் போரில் உயிர் நீத்தவர்களுக்கு மரியாதை செலுத்துவதற்காகவும் என சிறப்பித்துப் பூங்காவாக அமைத்திருக்கின்றார்கள். இந்த நகரம் முழுவதும் இங்கிலாந்து வரலாற்றில் சந்தித்த பல போர் பற்றிய அடையாளங்கள் தான் அதிகமாக இருக்கின்றன.
இன்றைய பயணத்தில் பார்த்து பதிந்தவை:
-டோவர் ரோமானிய வளாகம்
-டோவர் பூங்கா
-Folkestone War Memorial
- The Battle of Britain Memorial
- Folkestone Town
- Folkestone World War I Memorial
-Folkestone Normandy War Memorial
இவை ஒவ்வொன்றும் பற்றியும் விரிவாக எழுதலாம் ஆனால் இப்போது நேரம் போதாது.
மாலை வேலைகளில் Folkestone நடைபாதைகளிலும் கடற்கரை ஓரங்களிலும் பிச்சைக்காரர்கள் தங்களது மூட்டைகளை இழுத்துக் கொண்டு அங்கும் இங்கும் நடப்பதையும் காணமுடிகிறது. மனநலம் பாதிக்கப்பட்ட சிலரும் இப்படி அங்குமிங்கும் நடந்து கொண்டிருக்கின்றார்கள்.
Folkestone பகுதியில் இந்தியர்களின் எண்ணிக்கை கணிசமாக இருக்க வேண்டும். ஏனெனில் ஆங்காங்கே இந்திய உணவகங்கள் தென்படுகின்றன.
இங்கிலாந்தின் ஒவ்வொரு நகரமும் ஏராளமான வரலாற்றையும் வரலாற்று சின்னங்களையும் கொண்டிருக்கின்றன. கடந்த காலங்களில் இங்கிலாந்துக்கான எனது முந்தைய பயணங்களில் பல தகவல்களை வழங்கி இருக்கின்றேன். இந்தப் பயணத்தில் புதிதாகச் செல்லும் பகுதிகளில் நான் காண்கின்ற வரலாற்றுத் தகவல்களை வாய்ப்பு கிடைக்கும் போது பகிர்கிறேன்.
No comments:
Post a Comment