லண்டனில் இருக்கின்ற அருங்காட்சியகங்களிவ் மிக முக்கியமான அரும்பொருட்களை காட்சிப்படுத்தும் அருங்காட்சியகங்களின் வரிசையில் முன்னணியில் இடம் பெறுகின்ற ஒன்று Natural History Museum. இங்குள்ள முகப்புப் பகுதி தொடங்கி இரு பக்கமும் உள்ள வெவ்வேறு அறைகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள விலங்குகள், உயிரினங்கள், அருங்கற்கள் பற்றிய தகவல்களும் மாதிரிகளும் பிரமிக்கத்தக்க வகையில் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து சேகரிக்கப்பட்டு கொண்டுவரப்பட்டு இங்கு பாதுகாக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இங்குள்ள மிக முக்கியமான ஒரு பகுதி இயற்பியல் துறை அறிஞரான சார்ல்ஸ் டார்வின் அவர்களது சேகரிப்புகள் ஆகும். டார்வின் தனது ஆய்வுப் பயணத்தின் போது பீகல்ஸ் கப்பலில் ஓராண்டுகள் பயணித்து பல்வேறு இடங்களில் தங்கி இருந்து பல உயிரினங்களைச் சேகரித்து அவை பற்றிய குறிப்புகளைப் பத்திரப்படுத்தி இங்கிலாந்து கொண்டு வந்திருந்தார். அந்த அனைத்து அரும் பொருட்களும் இந்த அருங்காட்சியத்தில் பத்திரமாகப் பாதுகாக்கப்படுகின்றன. அவர் ஆய்வுக்காகப் பயன்படுத்திய புறாக்கள் (Darwin's Pigeons) பதப்படுத்தப்பட்டு முக்கியத் தரவுகள் உள்ள பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இங்கு இருக்கின்ற பல்வேறு முக்கிய அரும்பொருட்களில் நிலவிலிருந்து கொண்டுவரப்பட்ட கல் ஒன்றும் அடங்கும். Lunar Anarthosite கல் Apollo 60015 விண்வெளி ராக்கெட்டில் பூமிக்குக் கொண்டுவரப்பட்டு நாசா ஆய்வுக்கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது. அக்கற்களில் ஒன்று இங்கு லண்டன் நகரிலும் இந்த அருங்காட்சியத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் அருகாமையில் இதே வகை கற்கள் உள்ளன என்பதை உறுதி செய்யும் வகையில் ஆய்வுகள் செய்யப்பட்டு இப்பல்கலைக்கழகத்தின் அருங்காட்சியத்திலும் இவ்வகை கற்கள் பாதுகாக்கப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. இது நிலவுக்கும் இந்த பூமிக்கும் உள்ள தொடர்புகளில் ஒன்றை உறுதி செய்வதாகவும் அமைகிறது.
மனித குல பரிணாமவியல் பற்றி விளக்கும் பகுதியில் ஏராளமான மண்டை ஓடுகளின் மாதிரிகள் வைக்கப்பட்டுள்ளன. ஆறு மில்லியன் ஆண்டுகள் கால வாக்கில் சிம்பன்சியிலிருந்து பரிணாமவியல் மாற்றம் கண்ட மனிதகுலம் பல்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு நிலப்பகுதிகளில் அதன் சூழலுக்கு ஏற்ப மாற்றங்களை உட்பகுத்திக் கொண்டு தனித்துவத்துடன் வளர்ச்சி கண்டன. தொல் மனித இனங்கள் மட்டுமின்றி அதன் பின்னர் தோன்றிய நியாண்டர்தால், டெனோசோவியன், ஃப்ளாரென்ஸிஸ், எராக்டஸ் போன்ற மனித குலங்களின் மண்டை ஓட்டு மாதிரிகளும் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. லூசி எலும்புக் கூட்டின் மாதிரியும் இங்கு வைக்கப்பட்டுள்ள காட்சிக்கூடத்தில் சேர்ந்துள்ளது.
ஜெர்மனியின் மேக்ஸ் பிளாங்க் ஆய்வுக்கூடத்தில் சேகரிக்கப்பட்ட இரண்டு மனித குல வகைகளின் டிஎன்ஏ-க்கள் இங்கு காட்சியில் இணைக்கப்பட்டுள்ளன. ஒரு குடுவையில் நியாண்டர்தால் மனித குல டிஎன்ஏ மற்றொரு குடுவையில் டெனொசொவியன் வகை மனித குலத்தின் டிஎன்ஏ இங்கு மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இவை மனித குலம் மரபணுவியல் ஆய்வில் சாதித்த மாபெரும் ஆய்வுப் புரட்சிக்குச் சாட்சி என்றால் அது மிகையல்ல.
பறவைகளுக்காக, ரெப்டைல் வகை விலங்குகள், பூச்சிகள், கடல் உயிரினங்கள் என வெவ்வேறு வகை உயிரினங்களுக்குத் தனித்தனி அறைகளில் பாடம் செய்யப்பட்ட மாதிரிகள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. உலகின் பல்வேறு பகுதிகளில் சேகரிக்கப்பட்ட டைனோசர் வகை விலங்குகள் இங்கு வருவோரைக் கவர்கின்ற பொருட்களாக அமைகின்றன.
இந்த அருங்காட்சியகத்தில் பார்வையிட்டு முடித்துவிட்டு ரஸல் ஸ்ட்ரீட் பகுதிக்கு விரைந்து அங்கு அமைந்திருக்கும் லண்டன் பல்கலைக்கழகத்தின் SOAS பகுதியில் முன்புறத்தில் அமைந்திருக்கும் திருவள்ளுவர் சிலையை நேரில் சென்று பார்வையிட்டும் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம்.
லண்டன் மாநகரில் திருவள்ளுவருக்குச் சிலை வைத்த தமிழ் அன்பர்களின் முயற்சியைப் பாராட்ட வேண்டும். இன்று லண்டனில் முக்கிய சுற்றுப்பயணிகள் வந்து பார்க்கும் ஒரு பகுதியாகவும் இது அமைந்துள்ளது என்பதோடு திருக்குறளின் மேன்மையும் திருவள்ளுவரின் புகழும் இங்கிலாந்து மக்களுக்கும் அறிமுகம் ஆவதற்கு இது வழி வகுத்திருக்கின்றது.
துரிதமாக மதிய உணவை முடித்துக் கொண்டு மீண்டும் பிரித்தானிய நூலகம் சென்று சேர்ந்தோம். அங்கு ஆப்பிரிக்க மற்றும் ஆசியவியல் துறையில் தமிழ் மொழிகளுக்குப் பொறுப்பாளராகப் பணியாற்றும் திருமிகு ஆரணி அவர்கள் எங்களுக்காகக் காத்திருந்தார். அவரிடம் எங்களை அறிமுகம் செய்து கொண்டோம். அன்போடு வரவேற்று உபசரித்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு நான் பிரித்தானிய நூலகம் செல்லும் போது அங்கு திருமதி நளினி அவர்கள் பணியாற்றிக் கொண்டிருந்தார். அவர் ஓய்வு பெற்று சென்ற பின்னர் தற்சமயம் இங்கே பிறந்து வளர்ந்த, தமிழில் முனைவர் பட்டம் பெற்ற ஒரு ஈழத்து தமிழ்ப்பெண் இங்கு தமிழ்த் துறையில் பணியாற்றுவது நமக்குக் கிடைத்திருக்கும் பெருமை.
வேள்விக்குடி செப்பேடுகள் இங்கு தான் பாதுகாக்கப்படுகின்றன. பாண்டியர்கள் வெளியிட்ட முக்கியமான செப்பேடுகளில் இவையும் அடங்கும். இவற்றை நேரில் பார்த்து, அதில் உள்ள கிரந்த மற்றும் தமிழ் எழுத்துக்களை வாசித்து பதிவு செய்து கொண்டேன். இச்செப்பேடு பற்றி தனியாக ஒரு பதிவு பின்னர் எழுதுகிறேன்.
இங்கு உள்ள ஆசியவியல் துறை சேகரிப்பில் தமிழ் சார்ந்த நூல்களின் சஞ்சிகைகளின் எண்ணிக்கை மிகப்பெரியது. தமிழ்நாடு மட்டுமின்றி பர்மா, சிங்கை மலாயா, இலங்கை மற்றும் உலகின் எந்தெந்த பகுதிகளில் ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்தார்களோ அங்கெல்லாம் வெளிவந்த தமிழ் தொடர்பான ஆவணங்கள் இங்கு பாதுகாக்கப்படுகின்றன. அந்த வகையில் காலணித்துவ கால மற்றும் கடந்த 300 ஆண்டுகளில் தமிழ் தொடர்பான வரலாறுகளை ஆய்வு செய்ய விரும்புவோருக்குப் பிரித்தானிய நூலகம் ஓர் அரும் பொக்கிஷம்.
நானும் எனது இணையர் திரு.கௌதம சன்னாவும் நாங்கள் எழுதிய நூல்களின் ஒவ்வொரு படிவங்களையும் நூலகத்திற்கு அன்பளிப்பு செய்தோம். தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகத்தின் நூல்களையும் பிரித்தான நூலகத்துக்கு அன்பளிப்பு செய்தேன். தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் பதிப்பகப் பிரிவின் நூல்கள் இங்கு இடம்பெறுவது லண்டனில் வாழ்கின்ற தமிழ் மக்கள் இந்த நூல்களை இங்கு வந்து நேரில் அமர்ந்து வாசித்து பயன்பெற நிச்சயம் உதவும் என்பதால் லண்டன் நகரில் வாழ்கின்ற தமிழ் மக்கள் இந்த பிரித்தானிய நூலகத்திற்கு வாருங்கள்; எமது பதிப்பகத்தின் நூல்களை இலவசமாகவே எடுத்து வாசித்து இந்த ஆய்வு நூல்கள் தரும் தகவல்களை உங்கள் ஆய்வுக்குப் பயன்படுத்தி பயன் பெறுங்கள்.
சில மணி நேரங்கள் ஆசியவியில் துறையில் இருந்து தமிழ் தொடர்பான நாள், வார, மாத சஞ்சிகைகள் சிலவற்றைத் தேடிக் கொண்டிருந்தேன். இடையில் லண்டன் நகரில் வாழும் தோழர் நவஜோதி அவர்கள் வந்து சேர்ந்தார். நவஜோதி இங்கு லண்டனிவ் வசிக்கும் ஈழத் தமிழர். தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு நடத்தும் வாராந்திர இணைய வழி திசைக்கூடல் நிகழ்ச்சியில் அடிக்கடி பங்கு பெறுபவர். தனது கருத்துக்களையும் பதிபவர். இங்கு ஆங்கிலப் பள்ளியில் ஆசிரியராகவும் ஒரு ஊடகவியலாளராகவும் பணியாற்றிக் கொண்டிருக்கின்றார்.
மாலையில் பணி முடிந்து சகோதரர் பஞ்சுமிட்டாய் பிரபு எங்களைச் சந்திக்க நூலகம் வந்து சேர்ந்தார். பிரித்தானிய நூலகத்தின் வரவேற்புப் பகுதியில் அமைந்திருக்கும் காபி அருந்தும் பகுதி நண்பர்கள் ஒன்று கூடி பேசுவதற்குப் பொருத்தமான ஓர் இடம். ஆகவே அங்கு அமர்ந்து காபி பலகாரங்கள் ஆர்டர் செய்து கொண்டு நீண்ட நேரம் உரையாடிக் கொண்டிருந்தோம்.
பஞ்சு மட்டாய் பிரபு தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். கணினித் துறையில் பணியாற்றினாலும் குழந்தை இலக்கியம் என்ற துறையில் மிகுந்த ஈடுபாட்டுடன் செயல்பட்டுக் கொண்டிருப்பவர். நீண்ட காலமாக குழந்தைகளுக்கான நூல்களை தமிழில் ஈடுபாட்டுடன் படைத்துக் கொண்டிருக்கின்றார். இன்றைய நிலையில் தமிழ் குழந்தை இலக்கியத் துறையில் ஈடுபாட்டுடன் செயல்பட்டுக் கொண்டிருப்பவர்களுள் முக்கியமானவர்களுள் ஒருவர். தமிழக சூழல், இங்கிலாந்தில் தமிழர்கள், அரசியல், சமூகம், கல்வி, தமிழ் நடவடிக்கைகள் என பல விஷயங்களை நீண்ட நேரம் உரையாடிக் கொண்டிருந்தோம்.
காஃபேடரியா பகுதியில் ஒரு குட்டி எலி அங்கும் இங்கும் ஓடிக் கண்டிருந்தது. ஆகா.. இங்கும் எலிகள் வந்து விட்டனவா என எங்கள் அனைவரின் கவனத்தையும் அது தன் பால் ஈர்த்தது.
எலிகளால் உலகில் ஏற்பட்ட பாதிப்புகள் அதிகம். கடந்த காலங்களில் ஐரோப்பாவில் மனிதர்களைக் கொன்று குவித்த பெருந்தொற்றுகள் ஏற்படுவதற்கும் எலிகளும் ஒரு காரணம். எவ்வளவுதான் தூய்மையாகப் பாதுகாத்தாலும் எலிகள் இங்கேயும் இந்த குளிர் பிரதேசத்தில் வாழ்வதற்குத் தன்னை தயார் படுத்திக் கொண்டு விட்டன. எலிகளைப் பிடித்துத் தின்ன பூனைகள் இப்போது தயாராக இல்லை. ஏனெனில் அவை சொகுசாக வீடுகளில் செல்லப் பிராணிகளாக சூப்பர் மார்க்கெட் உணவுகளை சாப்பிடும் பழக்கத்திற்கு மாறிவிட்டன. 

மனிதர்கள் மட்டுமல்ல, விலங்குகளும் கூட காலத்திற்கும் இடத்திற்கும் ஏற்ற வகையில் தன்னை மாற்றிக் கொண்டு தனது இருப்பை நிலை நிறுத்திக் கொள்ள தொடர்ந்து பாடுபட்டுக் கொண்டிருக்கின்றன. பரிணாமவியல் கோட்பாட்டை உலகுக்கு அளித்த சார்ல்ஸ் டார்வின் அவர்களது Natural Selection கோட்பாட்டை இங்கு நேரடியாகவே நம்மால் காண முடிகிறது; உணர முடிகிறது!
No comments:
Post a Comment