Friday, March 14, 2025

இங்கிலாந்தில் சில நாட்கள் - 7



லண்டன் நகரில் உள்ள ஒவ்வொரு சிற்றூரும் ஏதாவது ஒரு வரலாற்றுச் சிறப்பைக் கொண்டிருக்கிற பகுதிகளாகவே இருக்கின்றன. அப்படித்தான் நாங்கள் தங்கி இருக்கும் பகுதிக்கு அருகில் இருக்கும் க்ரிக்கல்வூட் பகுதி. இப்பகுதியில் வசித்த Amy Johnson
என்பவர்தான் இங்கிலாந்திலிருந்து 1930ல் ஆஸ்திரேலியாவிற்குத் தனியாக விமானம் ஓட்டிச்சென்ற முதல் பெண்மணி என்ற செய்தியை அறிந்து கொண்டேன். அதுமட்டுமல்ல, இங்கிலாந்தில் பெண்களுக்கான Votes for Women என ஓட்டுரிமை பற்றி பிரச்சாரம் செய்து அதற்காக போராட்டங்கள் நடத்திய Gladice Keevil என்பவர் வாழ்ந்த பகுதியும் இதுதான். இவர் 1908 ஆம் ஆண்டில் சிறைபிடிக்கப்பட்டார்.
ஏராளமான சிறு சிறு கடைகள் நிறைந்த பகுதியாக இப்பகுதி இன்று இருக்கின்றது. தேம்ஸ் லிங்க் என்ற பெயர் கொண்ட ரயில் போக்குவரத்து சேவையும் இப்பகுதியில் இயங்குகிறது.
அங்கிருந்து இன்று ஒரு நண்பரைச் சந்திப்பதற்காக ஹாலோவே பகுதிக்குச் சென்றிருந்தோம். அப்பகுதியில் ஒரு தேவாலயம் இருக்கிறது. இது மேரி மேக்தலின், அதாவது இயேசுவாகிய ஜீசஸின் மனைவி என அறியப்படுகின்ற சமய தூதராகக் கருதப்படுபவர். மிகப்பெரிய அளவிலான வியக்க வைக்கும் அளவில் அமைந்த ஒரு பழம் தேவாலயமாக இது காட்சியளிக்கிறது. செயின்ட் மேரி மெக்டலின் தேவாலயம் என இதற்குப் பெயர் வழங்கப்பட்டிருக்கின்றது. St Mary Magdalene, Hope Church Islington என்ன அழைக்கப்படுகின்ற இந்த தேவாலயம் இங்கிலாந்தின் அரசு மதமான Church of England கீழ் அமைகிறது.
இந்த தேவாலயத்தைப் பார்த்து புகைப்படம் எடுத்துக் கொண்டு அதன் கட்டுமானத்தைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தேன். அங்கிருந்து புறப்பட்டு வெளியே வரும்போது தற்செயலாக இடது பக்கம் பார்த்தபோது ஆச்சரியப்பட்டுப் போனேன். மெட்ராஸ் ப்ளேஸ் (Madras Place) என இச்சாலைக்குப் பெயர் வழங்கப்பட்டிருந்தது. ஆஹா என்ன ஆச்சரியம்.. நமக்குப் பிடித்த மெட்ராஸ் இங்கேயும் இருக்கிறதா என நினைத்து மனதிற்குள் சிரித்துக் கொண்டேன்.
நாங்கள் சந்திக்க வந்திருந்த நண்பரை பார்த்து பேசிவிட்டு புறப்பட்டோம். தோழர்கள் சுனிதா, ராஜா ஆகியோரது மகள் நந்தனா, இங்கே பட்டப்படிப்பு படிக்கும் பெண். எங்களைச் சந்திக்க வந்திருந்தார். அங்கேயே மதிய உணவே முடித்துக் கொண்டு அங்கிருந்து நாங்கள் லண்டன் நகர மையத்திற்குப் புறப்பட்டோம்.
இங்கிலாந்தின் சுப்ரீம் கோர்ட் வளாகம் இருக்கும் பகுதியைக் கடந்த போது உள்ளே சென்று பார்த்து வர ஆவல் ஏற்பட்டது. பார்வையாளர்களை உள்ளே வர அனுமதிக்கின்றார்கள். ஒரு கோட்டை போன்ற வெள்ளை நிற கட்டிட அமைப்பில் சுப்ரீம் கோர்ட் அமைந்திருக்கின்றது. அங்கிருந்த அதிகாரி எங்களை கோர்ட் அரை ஆறுக்குச் சென்று நடந்து கொண்டிருக்கும் ஒரு வழக்கை பார்க்க சொல்லி அனுப்பி வைத்தார்.
அந்த வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் அறைக்குச் சென்றோம். மூன்று நீதிபதிகள், அவர்களில் நெடுவில் அமர்ந்திருந்த பெண் நீதிபதி வழக்குக்கான தீர்ப்பை வாசித்துக் கொண்டிருந்தார். இது ஒரு பெண் குழந்தை கொலை பற்றிய ஒரு வழக்கு. கொலை செய்ததாக நம்பப்படும் கைதி சிறையில் இருந்து வரும் கணினி தொடர்பில் கேமராவில் இரண்டு ஸ்கிரீன்களில் காட்டப்பட்டுக் கொண்டிருந்தார். கணினியில் தெரிந்த அந்த அறை வெள்ளை நிறத்தில் இருந்தது. இங்கு வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற அறையில் கொலை செய்யப்பட்ட குழந்தையின் தாயாராக இருக்க வேண்டும் ஒரு பெண்மணி, முகத்தில் ஆழ்ந்த சோகத்துடன் கூண்டில் வைக்கப்பட்டிருந்த நாற்காலியில் அமைதியாக அமர்ந்து நீதிபதி வாசிக்கும் தீர்ப்பை கேட்டுக் கொண்டிருந்தார்.
சில வழக்கறிஞர்கள் தலையில் வெள்ளை நிறத்திலான போலி முடியை அணிந்திருந்தார்கள். பண்டைய காலத்தில் வழக்கறிஞர்கள் அணிகின்ற இந்த முறை இன்றும் தொடர்வது ஆச்சரியப்படுத்தியது. தீர்ப்பு முழுவதும் வாசிக்கப்படும் முன்பே நாங்கள் அறையை விட்டு வெளியே வந்தோம். இக்கொலை வழக்கை கேட்க மனம் வரவில்லை என்பது தான் உண்மை.
நாங்கள் வெளியே வரும்போது வாசல் பகுதியில் ஓர் இளைஞர் கணினியோடு நின்று கொண்டிருந்தார். அவர் ஆங்கிலத்தில் வருவோர் போவரிடம் "நீதி சரியில்லை நீதிபதிகள் சரியில்லை" என "அவர் கடமையை அவர் செய்வதுபோல" பேசிக் கொண்டிருந்தார். அவரைக் கடந்து புறப்பட்டோம்.
டெம்பிள் சர்ச் - இப்பெயர் கேட்பதற்குச் சற்று ஆச்சரியம் அளிக்கலாம். ஆம். நாவலாசிரியர் டேன் பிரவுன் தனது புகழ்பெற்ற டாவின்சி கோட் என்ற நாவலில் குறிப்பிட்டிருக்கும் வரலாற்றுச் சின்னங்களில் இதுவும் ஒன்று. நாவலில் பேராசிரியர் லாங்டன் சோஃபியுடன் ஹோலி கிரேயிலைத் தேடிக்கொண்டு லண்டனுக்கு வந்தவுடன் அவர் வருகின்ற முதல் தேவாலயம் இதுவாகக் காட்டப்படும்.
இந்த தேவாலயத்தில் இன்றைக்கு ஆயிரம் ஆண்டுகள், அதாவது கிபி 1000 காலவாக்கில் கொல்லப்பட்ட நைட் டெம்ப்ளர் 10 பேரின் உடல்கள் புதைக்கப்பட்டுள்ளன. நான்கு உடல்கள் ஒரு பகுதியிலும் மற்றொரு பகுதியில் நான்கு கல்லறைகளும் மறுபுறத்தில் மேலும் இரண்டு கல்லறைகள் ஆகியவையும் இங்கு வைக்கப்பட்டுள்ளன.
ஜெருசலத்தில் புனித தேவாலயத்தில் பாதயாத்திரை செய்ய வருவோருக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என அரச கட்டளையிட்டு சட்டம் இயற்றிய பிறகு இங்கிலாந்தின் டோவர் பகுதியில் முதலில் ஒரு பாதுகாப்பு அரணாக டெம்பிள் சர்ச் உருவாக்கப்பட்டது. அதன் பின்னர் உருவாக்கப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க ஒரு கோயில் இந்த டெம்பிள் சர்ச். இந்தக் கோயில் சிதலமடையாமல் இன்றுவரை முழுமையாகக் காட்சியளிக்கிறது. போரின் போது ஒரு பகுதி சேதம் அடைந்தாலும் மீண்டும் அது புனரமைக்கப்பட்டு இன்று முழுமையாகவே காட்சியளிக்கின்றது.
பிரம்மாண்டமான இந்த தேவாலயத்தின் ஒவ்வொரு பகுதியையும் நுணுக்கமாக நேரம் எடுத்து பார்வையிட்டு குறிப்புகளைப் பதிந்து கொண்டேன். நைட் டெம்ப்ளர் பற்றிய ஒரு நூலையும் இங்குள்ள கடையில் வாங்கிக் கொண்டேன். நைட் டெம்ப்ளர் பற்றிய விரிவான முழுமையான செய்திகளை வழங்குகின்ற புகைப்படங்கள் நிறைந்த அருமையான நூலாக இது இருக்கின்றது. பல தகவல்களை இது வழங்குகின்றது.
கிறித்துவ மதம் என்பது வாத்திக்கனை அடிப்படையாகக் கொண்ட கத்தோலிக்க மதம் அல்லது ப்ரொடஸ்டென்ட் மதம் அல்லது மெதடிஸ் சர்ச் அல்லது யோகோவா விட்னஸ் மட்டும்தான் என நான் நினைத்து விட முடியாது. ஏராளமான கிளைகள் கொண்டது கிருத்துவ மதம். அதன் ஒவ்வொரு கிளைகளும் தனித்துவமிக்கவை. அவற்றுள் பல சடங்குகளும் இணைகின்றன.
இந்த நினைவுகளோடு அங்கிருந்து புறப்பட்டு வெஸ்ட் மின்ஸ்டர் பகுதிக்கு வந்து சேர்ந்தோம். அங்கிருந்து நடந்து சீனா டவுன் அமைந்திருக்கும் பகுதிக்கு வந்தோம்.
திருவிழா கூடியது போல கூட்டம் நிறைந்திருந்தது. பார்க்கின்ற இடமெல்லாம் சிவப்பு நிற விளக்குகள் வரிசை வரிசையாக கயிறுகளில் கட்டப்பட்டு தோரணங்கள் போல சாலை முழுவதும் தொங்கிக் கொண்டு காட்சியளித்தன.
ஏராளமான உணவுக் கடைகள் இப்பகுதி முழுவதும் நிறைந்திருக்கின்றன. வெவ்வேறு வகையான சீன உணவு வகைகள் விற்கப்படும் கடைகள் இப்பகுதி முழுவதும் நிறைந்துள்ளன.
இரவு உணவுக்காக ஒரு அழகிய உணவகத்திற்குள் சென்றோம். சோயா சாஸ் கலந்து க்ரில் செய்யப்பட்ட கோழி மற்றும் அரிசி சோறு கண்களை கவர்வதாக இருந்தது. அதோடு சிங்கப்பூர் மீகூன் ஒன்றும் ஜெஸ்மின் தேநீரும் ஆர்டர் செய்துவிட்டு சீனா டவுனை ரசித்தோம்.
சீனர்கள் லண்டனில் இப்பகுதியில் மையம் கொண்டிருக்கின்றார்கள். இப்பகுதியில் உள்ள ஏராளமான கடைகளையும் சீனர்கள் நடத்துகின்றார்கள். முன் பகுதியில் நுழைவாயில் போன்ற ஒரு பகுதியை அமைத்து சீனர் கோயிலுக்குள் செல்வது போல உணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒரு பகுதி இருக்கின்றது. சீனா டவுன் முழுவதும் சிவப்பு நிற காகித விளக்குகள் தொஙகுவது இரவில் கண்கொள்ளா காட்சியாக உள்ளது.
சீனர்கள் எந்த நாட்டிற்குச் சென்றாலும் மிக உறுதியாக ஆழமாக வர்த்தகத்தின் வழி தங்கள் கால்களை ஊன்றி விடுகின்றார்கள். வணிகம், பொருளாதாரம் இவற்றில் முழுமையான கவனத்தை வைத்து தங்களின் பொருளாதார மேன்மையை சீனர்கள் தக்க வைத்துக் கொள்கின்ற


































னர்.
இங்கிலாந்திற்குள் இருக்கின்றோமா அல்லது சீனாவில் இருக்கின்றோமா என நம்மை திகைக்க வைக்கும் அளவில் லண்டனின் சீனா டவுன் இருக்கின்றது.
-சுபா
14.3.2025
லண்டன், இங்கிலாந்து


No comments:

Post a Comment