Sunday, March 9, 2025

இங்கிலாந்தில் சில நாட்கள் -2

 


டோவர் நகரில் ஒரு பெரிய அரண்மனை உள்ளது. ஏறக்குறைய 1000 ஆண்டுகள் பழமையானது. இது அமைந்திருக்கின்ற டோவர் நகரின் குன்றின் உச்சியில் இருந்து இங்கிலீஷ் சேனலின் விரிவை பார்க்கலாம்.
அதன் அருகாமையிலேயே knight templers உருவாக்கிய டெம்பிள் சர்ச் இருக்கின்றது. முழுமையான கட்டுமானத்தை இன்று காண முடியவில்லை என்றாலும் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட டெம்பிள் சர்ச்சின் அடித்தளத்தை அகழாய்ந்து வெளிக்கொண்டு வந்திருக்கின்றார்கள். இங்கிலாந்தின் வரலாற்றில் முக்கியத்துவம் பெறுகின்ற வரலாற்றுச் சின்னங்களில் ஒன்று இது. 1118ல் மிகப்பெரிய தாக்குதலை சந்தித்தது நைட் டெம்ப்ளர் எனும் இந்தப் பாதுகாப்பு குழு. அதன் பின்னர் ஜெருசலத்தில் உள்ள தேவாலயத்தில் இருந்து ஐரோப்பா முழுமைக்குமான நைட் டெம்ப்ளர் குழுவினர் பாதயாத்திரை செல்வதற்கான உதவிகளைச் செய்வதற்கும் அவர்களுக்குப் பாதுகாப்பினை ஏற்படுத்திக் கொடுப்பதற்கும் இந்தக் குழுவினர் செயல்பட்டனர். 1128இல் இந்த டெம்பிள் சர்ச் கட்டப்பட்டது.
இங்கிலாந்தில் இருந்து பிரான்சுக்கு வந்து அங்கிருந்து கால்நடையாக மற்றும் குதிரைகளில் பயணம் செல்லும் புனித பயணிகள் ஜெருசலம் வரை வந்து சேர்வதற்குத் தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் இவர்கள் மேற்கொண்டிருந்தனர். கடல் பகுதியில் கப்பல் வழியாக யாத்திரிகர்கள் பயணம் செய்வதற்கு ஏதுவாக இந்தப் பகுதி பாதுகாப்பு அரணாகவும் விளங்கியிருக்கக்கூடும். தங்கும் விடுதிகளும் வர்த்தக மையங்களும் இங்கு இயங்கி இருக்கக்கூடும். மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பகுதியாகவே இது அக்காலத்தில் திகழ்ந்திருக்க வேண்டும். இன்று இப்பகுதி பாதுகாக்கப்படுகின்ற ஒரு வரலாற்றுச் சின்னமாக அமைந்திருக்கின்றது. ஆனால் இதற்குத் தொடர்ச்சியாக வருகின்ற பகுதிகள் தனியார் உடமைகளாக அறிவிப்பு பலகைகள் போடப்பட்டு பொதுமக்கள் செல்ல முடியாதவாறு தடை செய்யப்பட்டுள்ளது என்பது இன்றும் கூட இங்கு நைட் டெம்பளர் அமைப்பைச் சார்ந்த தொடர்பாளர்கள் இயங்கிக் கொண்டிருக்கலாம் என்ற ஊகத்திற்கும் வழிவகுக்கின்றது.
டோவர் நகரில் இத்தகைய வரலாற்றுச் சின்னங்களைப் பார்வையிட்டு தகவல்களைச் சேகரித்துக் கொண்டு அங்கிருந்து கேன்டர்பரி நகருக்கு புறப்பட்டோம். ஏறக்குறைய 27 மைல் தூர சாலைப் பயணம்.
இங்கிலாந்தைப் பொறுத்தவரை இங்கு கிலோமீட்டர் அளவை பயன்பாடு இல்லை. மாறாக மைல், ஃபீட் அளவை முறை தான் பயன்பாட்டில் உள்ளது. ஐரோப்பாவில் இருந்து இங்கிலாந்து வந்தவுடன் நாமும் இந்த மாற்றத்தை உள்வாங்கிக் கொள்ள வேண்டும். வாகனத்தில் உள்ள ஜிபிஎஸ் சிஸ்டம் மிகத் துல்லியமாக எப்படி இடங்களுக்குச் சென்றடைகின்றதோ அதேபோல இங்கிலாந்துக்கு வந்தவுடன் அளவை மாற்றத்தையும் உடனடியாகச் செயல்படுத்தத் தொடங்கி விடுகிறது. மைல் அளவை கிலோமீட்டர் அளவில் நமக்குத் தெரிவிக்க தொடங்கி விடுகிறது. ஜிபிஎஸ் அதன் சாட்டிலைட் சிஸ்டம் என்பது இன்றைய நூற்றாண்டில் நாம் எல்லோருக்குமே கிடைத்திருக்கும் மிகப்பெரிய ஒரு வரம் என்று தான் சொல்ல வேண்டும்.
கேண்டபரி நான் எனது முனைவர் பட்ட ஆய்வை செய்த பல்கலைக்கழகம் இருக்கும் நகரம். ரோமானிய அருங்காட்சியகம் மற்றும் மேக்னா கார்ட்டா எனப்படும் முக்கியமான வரலாற்று ஆவணம் இருக்கக்கூடிய ஆவண பாதுகாப்பகம் இருக்கின்ற ஒரு பழம் நகரம். இங்கிலாந்து முழுமையாக கத்தோலிக்க மதத்தை உள்வாங்கிக் கொண்டதற்குத் தொடக்கப் புள்ளி இங்குதான் அமைந்தது. இங்கு அமைந்திருக்கும் பெரும் தேவாலயம் அதன் கட்டுமானத்திற்கும் புகழ்பெற்றது. இங்கு வாகனத்திலேயே சில பகுதிகளைச் சுற்றி பார்த்து கோட்டை வளாகங்கள் பகுதியில் சிறிது நேரம் செலவிட்டு பின்னர் அங்கிருந்து லண்டன் நகரை நோக்கி புறப்பட்டோம்.
ஏறக்குறைய 90 கிலோமீட்டர் தூரம். ஒரு மணி நேரத்தில் செல்லக்கூடிய தூரம் தான். ஆனால் லண்டன் நகரை நெருங்க நெருங்க வாகனங்களின் எண்ணிக்கை நமக்கு தலை சுற்றலை ஏற்படுத்தி விடுகிறது.
நேரடியாக ஹைகேட் செமிட்ரி இருக்கின்ற பகுதிக்குச் செல்வதற்காகத் திட்டமிட்டு இருந்தோம். லண்டனின் மையப் பகுதியில் இருந்து இங்கு செல்வதற்கு அதாவது 18 கிலோ மீட்டர் தூரத்தைக் கடப்பதற்கு இரண்டே கால் மணி நேரம் ஆனது.
லண்டன் நகருக்குள் வாகனத்தில் வராமல் இருப்பது சிறப்பு. வெளிப்புறங்களில் வாகனத்தில் எளிதாகப் பயணிக்க முடிகின்றது. ஆனால் லண்டன் நகருக்குள் வந்த பின்னர் பொது போக்குவரத்து வாகனங்களைப் பயன்படுத்துவது தான் சிறப்பு.
திட்டமிட்ட நேரத்திற்கும் 40 நிமிடங்கள் தாமதமாக ஹைகேட் பகுதிக்கு வந்து சேர்ந்தோம். அங்கு லண்டன் நகரில் வசிக்கும் தோழர் பாஸ்கர் எங்களுக்காகக் காத்திருந்தார். மதிய உணவிற்கு ஒரு இங்கிலீஷ் உணவகம் சென்றோம். பிரித்தானிய உணவு வகைகளில் ஒன்றான Chicken Pie with Smashed potatoes சாப்பிட விரும்பியதால் அதனை ஆர்டர் செய்து சாப்பிட்டோம். எந்த ஊருக்கு வருகின்றோமோ அந்த ஊரின் முக்கிய உணவுகளைச் சாப்பிட்டு பார்ப்பது தானே அந்த ஊரை பற்றி நாம் அறிந்து கொள்ள உதவும். ஒரு நாட்டின் அல்லது நகரின் பண்பாடு என வரும்போது மக்கள் சுற்றுச்சூழல் ஆகிவற்றோடு உணவும் முக்கியத்துவம் பெறுகின்றது அல்லவா?
மதிய உணவிற்குப் பிறகு ஹைகேட் கல்லறை பகுதிக்குச் சென்றடைந்தோம். இங்குதான் கால் மார்க்ஸ் மற்றும் ஜெனி மார்க்ஸ் இருவரது உடல்களும் புதைக்கப்பட்ட கல்லறை பகுதி இருக்கின்றது. சில ஆண்டுகளுக்கு முன் இங்கு நேரில் சென்றிருக்கின்றேன். ஆயினும் மீண்டும் செல்வது மாமேதை கால் மார்க்சை மீண்டும் சந்திக்கும் ஒரு வாய்ப்பு போல மனதிற்கு நெருக்கமான ஒரு விஷயமாகவே தோன்றுகின்றது என்பதால் மீண்டும் அங்கு சென்று வந்தோம். ஏராளமான கல்லறைகள் இருந்தாலும் நடு நாயகமாக கார்ல் மார்க்ஸ் தலைப்பகுதியின் உருவச் சிலையுடன் இந்தக் கல்லறை இங்கு வருவோரை கவரும் வகையில் அமைந்திருக்கின்றது. ஒரு கல்லறைக்கு இவ்வளவு வருகையாளர்களா என வியக்க வைக்கும் அதிசயம் இந்தப் பகுதி. கல்லூரி மாணவர்கள் ஆய்வாளர்கள் பொதுமக்கள் எல்லா வயதினர் இனம் மதம் மொழி கடந்து இங்கு வந்து நின்று கார்ல் மார்க்ஸை பல நிமிடங்கள் உற்றுப் பார்க்கின்றார்கள், சிந்திக்கின்றார்கள், அருகே தரையில் அமர்ந்து கொள்கின்றார்கள், இந்த வளாகம் முழுவதும் சுற்றி வருகின்றார்கள். லண்டனுக்கு வருகின்ற சுற்றுப்பயணிகளை ஈர்க்கின்ற ஒரு முக்கிய இடமாக இப்பகுதி அமைந்திருக்கின்றது.
அங்கிருந்து நாங்கள் தங்கியிருக்கும் தங்கும் விடுதிக்குச் சென்று சேர்ந்தோம். சிறிய இடைவேளை எடுத்துக்கொண்டு மீண்டும் நகரை நோக்கி புறப்பட்டோம்.
இசைஞானி இளையராஜாவின் சிம்பனி அரங்கேற்றம். Eventim Apollo அரங்கில் இந்த பிரம்மாண்ட நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நாங்கள் காரில் வராமல் பொது போக்குவரத்தை எடுத்து இப்பகுதிக்கு வந்து சேர்ந்தோம். ஏழு மணிக்கு நிகழ்ச்சி தொடங்குவதாக இருந்தது. ஆனால் முன்னரே பார்வையாளர்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது.
லண்டன் நகரை அதிசயிக்க வைக்கும் வகையில் தமிழ் மக்கள் கூடி நிறைந்து அரங்கம் காட்சியளித்தது. தமிழ் இசை ஜாம்பவான் இங்கிலாந்தின் புகழ்மிக்க இசை அரங்கத்தை ஆக்கிரமித்திருந்தார். தமிழுக்கும் தமிழருக்கும் பெருமை சேர்க்கும் மாபெரும் நிகழ்வு. இந்த இசை பிரமாண்டத்தோடு இன்றைய நாளின் பயணம் இனிதே நிறைவடைந்தது.
-சுபா
8.3.2025
லண்டன், இங்கிலாந்து




















No comments:

Post a Comment