லண்டன் நகருக்குள் செல்வதற்கு தினமும் நாங்கள் பேருந்து எண் 113 எடுத்து பின்னர் பேக்கர் ஸ்ட்ரீட் வந்து அங்கிருந்து செல்ல வேண்டிய இடங்களுக்குச் செல்வது வழக்கமாக இருக்கிறது.
நேற்று அப்படி பேருந்திலிருந்து இறங்கும்போது மக்கள் கூட்டமாக ஓர் இடத்திற்கு செல்வதைக் கண்டு அது எதுவாக இருக்கும் என்று அருகில் சென்று பார்த்த போது தான் தெரிந்தது, அதுதான் மிகவும் பிரபலமான டிடெக்டிவ் ஏஜென்ட் ஷெர்லாக்ஸ் ஹோம் கதாபாத்திரத்தின் அருங்காட்சியகம் என்று.
டிடெக்டிவ் கதைகள் என்றாலே நமக்கு நினைவிற்கு வருவது ஷெர்லாக் ஹோம்ஸ். அவரை நினைவு கூறும் வகையில் லண்டன் நகரில் அமைந்திருக்கிறது The Sherlock Holmes Museum . ஷெர்லாக் ஹோம் கதாபாத்திரங்களை பற்றிய தகவல்களை வெளிப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட தனியார் அருங்காட்சியகம் இது. 1990ஆம் ஆண்டில் இது திறக்கப்பட்டது. புனைக்கதையில் வருகின்ற அதே முகவரி 221B Baker Street.
இச்சாலையில் எண்கள் 237 க்கும் 241 க்கும் இடையில் இந்தக் கட்டிடம் இருந்தாலும் வெஸ்ட்மின்ஸ்டர் நகர சபையின் அனுமதியை பெற்று அதே என்னை இந்த கட்டிடத்திற்கு வைத்திருக்கிறார்கள்.
1815 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட ஜோர்ஜியன் வகை கட்டுமானம் கொண்ட கட்டிடம் இது. டிடெக்டிவ் ஏஜென்ட் ஷெர்லாக் ஹோம்ஸ் மற்றும் டாக்டர் வாட்சன் இருவரும் திருமதி ஹட்சன் என்பவரது வீட்டில் வாடகைக்கு தங்கி இருக்கும் இல்லமாக இது கதைகளில் காட்டப்படும். ஷெர்லாக் ஹோம் திரைப்பட தொடரில் இடம்பெறுகின்ற பல காட்சிகளின் ஓவியங்கள், நூல்கள், பொருட்கள் ஆகியவை இங்கு காட்சிப்படுத்தப்படுகின்றன.
இந்த அருங்காட்சியத்தைப் பார்த்துவிட்டு மீண்டும் பேக்கர் ஸ்ட்ரீட்டிலிருந்து மெட்ரோபோலிட்டன் ட்யூப் எடுத்து நாங்கள் பிரித்தானிய நூலகம் சென்றடைந்தோம். முதல் நாள் நாங்கள் பட்டியலில் கொடுத்திருந்த ஆவணங்கள் எங்களுக்காக அங்கு எடுத்து வைக்கப்பட்டிருந்தன. இணையர் கௌதம சன்னா தனது தேடலில் மூழ்கிப் போனார்.
நான் கடந்த நூற்றாண்டு அதற்கு முந்தைய நூற்றாண்டு ஆக இரு நூற்றாண்டுகளில் மலேசியா அதிலும் குறிப்பாக பினாங்கு சார்ந்த சஞ்சீவிகளைப் பட்டியலிட்டுக் கொடுத்திருந்தேன். பெரிய பெரிய பைண்டிங் செய்யப்பட்ட நூல் தொகுப்புகளாக அவை அங்கே வைக்கப்பட்டிருந்தன.
பினாங்கு ஞானாசிரியன், சிங்கை நேசன், ஜனோபகாரி, தேசோபகாரி, The Penang Times, The Penang News, பினாங்கு விஜயகேதனன் ஆகிய 1880கள் தொடங்கி வார மாத நாளிதழ் பத்திரிகைகள் அடங்கிய சில கட்டுகளைப் பார்வையிட வாய்ப்பு கிடைத்தது.
பினாங்கு மாநிலத்தில் மற்றும் ஈப்போ, கோலாலம்பூர், சிங்கப்பூர் ஆகிய பகுதிகளில் நிகழ்ந்த சில செய்திகள் இவற்றில் வெளிவந்திருக்கின்றன. மதராஸ் பட்டினத்தில் இருந்து மலாயாவிற்கு வந்த கப்பல்கள் பற்றிய சில செய்திகளும், வியாபாரிகள் சங்கங்கள், நிகழ்ந்த சில கொலைகள் பற்றிய தகவல்கள், அதற்கு கிடைக்கப்பட்ட தண்டனைகள், நீதிமன்ற வழக்குகள் பற்றிய செய்திகள் போன்றவை இதில் இடம்பெறுகின்றன.
அயல்நாட்டு செய்திகள் அதிகமாக உள்ளன. குறிப்பாக இத்தாலிக்கும் துருக்கிக்கும் இடையிலான போர் பற்றிய செய்தி ஒவ்வொரு வாரமும் ஒரு பக்க செய்தியாக இடம்பெறுவது ஆச்சரியமூட்டுகிறது. அது தவிர இங்கிலாந்து செய்திகள், மகாராணியார் பற்றிய செய்திகள் ஆகியவை முக்கியத்துவம் கொடுத்து இடம்பெறுகின்றன.
பொதுவாகவே இந்த வார பத்திரிகைகளில் நான்கு பக்கங்கள் மட்டுமே உள்ளன. முதல் பக்கம் இந்த பத்திரிகை பற்றியும் சந்தாதாரர்கள் விவரம் பற்றியும் சில விளம்பரங்களும் இடம்பெறுகின்றன. இரண்டாம் பக்கமும் மூன்றாம் பக்கமும் மட்டும் தான் செய்திகளைக் கொண்டிருக்கின்றன. நான்காம் பக்கம் விளம்பரங்கள் அடங்கிய பகுதியாக அமைந்து விடுகிறது.
இப்பத்திரிகைகள் இங்கு பிரித்தானிய நூலகத்தில் நெடுங்காலமாக பாதுகாக்கப்படுகின்றன. ஆனால் எத்தனை பேர் இதனைத் திறந்து பார்த்திருப்பார்கள் என்பது முக்கியமான கேள்வி. மலாயாவின் கடந்த இரு நூற்றாண்டு வரலாற்றின் சில செய்திகளை அறிந்து கொள்ள இவற்றை ஆய்வு செய்ய வேண்டியது மிக மிக அவசியம். இவை மட்டுமின்றி மேலும் பல பத்திரிகைகள் இங்கு பாதுகாக்கப்படுகின்றன. வாய்ப்பு கிடைத்தால் ஜெர்மனிக்கு திரும்புவதற்கு முன் மீண்டும் ஒருமுறை சென்று அவற்றை ஆய்வு செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கின்றது.
பிரித்தானிய நூலகத்தின் அருகிலேயே மலேசிய உணவகம் ஒன்றும் இருக்கின்றது. இரு ஆண்டுகளுக்கு முன் வந்த போது நண்பர் ஒருவர் அறிமுகப்படுத்தியிருந்தார். அதே உணவகத்துக்குச் சென்று வருவோம் என்று நடக்கத் தொடங்கினோம். குறுக்குச் சந்துகளில் நடந்தால் ஏறக்குறைய ஆறு நிமிடத்தில் இந்த உணவகத்தை வந்து அடைந்து விடலாம். கட்டிடத்தின் அடித்தளத்தில் சிறிய அறையில் ஏறக்குறைய 50ல் இருந்து 60 பேர் அமரக்கூடிய வகையில் இந்த உணவகம் அமைக்கப்பட்டுள்ளது.
மலேசிய உணவுகளான நாசி லெமாக், ஆயாம் கோரேங், கொய்தியாவ் கோரேங் ஆகிவற்றை ஆர்டர் செய்து கொண்டோம். ரொட்டி சானாய் பார்த்தவுடன் அதிலும் ஒன்று இணைத்துக் கொண்டோம். பல மாதங்களாக உணவையே பார்க்காதவர்கள் உணவைப் பார்த்தால் எப்படி இருக்குமோ அப்படி ஒரு ஆவல்.. தாய்நாட்டின் உணவு அல்லவா?

ஆனால் என்னதான் நம் நாட்டு உணவு என அயல்நாடுகளில் தயாரித்துக் கொடுத்தாலும் சொந்த நாட்டின் உணவின் சுவை இங்கு கிடைப்பதில்லை. ஆனாலும் குறை சொல்வதற்கில்லை நல்ல சுவை தான். 

மதிய உணவை முடித்துக் கொண்டு மீண்டும் பிரித்தானிய நூலகம் வந்தடைந்தோம். அங்கு நான் பார்ப்பதற்காக ஆர்டர் செய்து வைத்திருந்த தரங்கம்பாடியின் வரைபடம் 1679 ஆம் ஆண்டில் தயாரித்து உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்ட வரைபடம் இது. டேனிஷ் அரசினால் வெளியிடப்பட்ட இந்த வரைபடம் இணையத்தில் இருந்தாலும் நேரில் பார்க்கும் பொழுது துல்லியமாக அதில் குறிப்பிடப்படும் தகவல்களைக் காண முடிகிறது. 1600 காலகட்டங்களில் குறிப்பாக 1620 டேனிஷ் அரசு தரங்கம்பாடியில் அதிகாரப்பூர்வமாக கால் பதித்த பின்னர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து அங்கு கோட்டையைக் கட்டி டேனிஷ் கிழக்கு இந்திய கம்பெனியின் வர்த்தக நடவடிக்கைகளைத் தொடங்கிய காலகட்டம். 17 ஆம் நூற்றாண்டின் தரங்கம்பாடியின் நிலையை இந்த வரைபடம் துல்லியமாகக் காட்டும் வகையில் அமைக்கப்பட்டிருக்கின்றது. கோட்டை பகுதி அருகாமையில் உள்ள டேனிஷாரின் கட்டிடங்கள் பூங்காக்கள் ஆகியவை இதில் இடம்பெறுகின்றன.
பிலிப் பால்டியூஸ் டச்சு அதிகாரியாக இலங்கையிலும் பின்னர் நாகை, தூத்துக்குடி போன்ற பகுதிகளில உள்ளடங்கிய சோழமண்டல கடற்கரை பகுதிகளில் பணியாற்றியவர். ஒரு டச்சு பாதிரியார் மற்றும் அரசு அதிகாரி. இவர் எழுதிய ஒரு பெரும் தொகுப்பு இன்றைக்கு ஏறக்குறைய 300 ஆண்டுகள் கால வாக்கில் சோழமண்டல கடற்கரையின் நிலையை நமக்கு கண்கூடாக காட்டும் ஒரு ஆவணமாகத் திகழ்கிறது.
அவரது கையெழுத்துப் பிரதி ஆவணமான இதனைக் காண்பதற்கு அனுமதி கேட்டிருந்தேன். அதனையும் எடுத்து வைத்திருந்தார்கள். ஏறக்குறைய மூன்று கிலோ எடை கொண்ட நூல் தொகுப்பு அது. முழுவதும் கையெழுத்தால் ஆனது. புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என்பதால் அதனை எடுக்க முடியவில்லை. இன்று இணையத்தில் இந்த நூல் pdf கோப்பாக கிடைக்கின்றது. தமிழ்நாடு மற்றும் இலங்கை தொடர்பான இன்றைக்கு 300 ஆண்டுகள் கால வாக்கிலான சூழலை அறிந்து கொள்ள ஆய்வு செய்பவர்கள் ஒவ்வொருவரும் பயன்படுத்த வேண்டிய நூல் இது.
இந்த அரிய ஆவணங்களைப் பார்வையிட்டு ஒரு முழு நாளும் ஏறக்குறைய 8 மணி நேரங்கள் பிரித்தானிய நூலகத்தில் எங்கள் இருவரது நேரமும் செலவானது.
பழைய தாட்களைத் திறந்து பார்த்து ஆய்வு செய்யும் போது ஒவ்வொரு முறையும் அது வெளிப்படுத்தும் தூசிகள் எனக்கு மூச்சு பிரச்சனையை ஏற்படுத்தும். இருமல் ஏற்படத் தொடங்கி விடும். நேற்று முழு நாள் பழைய பத்திரிகைகளைப் பார்த்துக் கொண்டிருந்ததால் இந்தத் தொல்லை ஏற்படத் தொடங்கியது. இதிலிருந்து விடுபடுவது என்றால் காலாற ஒரு மணி நேரமாவது வெளியே தூய காற்றில் நடந்தால் சிறப்பாக இருக்கும் என வெளியே நடக்கத் தொடங்கினோம். ஆனால் குளிர் காற்று மற்றும் மழை வரும் அறிகுறி தென்பட்டதால் நடைப்பயணத்தைக் குறைத்துக் கொண்டு ட்யூப் மற்றும் பேருந்து எடுத்து எங்கள் தங்கும் விடுதிக்கு வந்து சேர்ந்தோம்.
ஒரு நாள் முழுமையாக பழம் ஆவண ஆய்வில் முடிந்தது. மணமும் நிறைந்தது.
No comments:
Post a Comment