Monday, June 15, 2015

விரும்பாமல் சென்று.. விரும்பிய டர்பன்..! -19

மறு நாள் காலையில் தங்கும் விடுதியில் நண்பர்கள் அனைவரும் காலை உணவு வேளையில் சந்தித்துக் கொண்டோம். நிகழ்ச்சி முடிந்து விட்டாலும் அன்று வரை எங்கள் தங்கும் விடுதியிலேயே குடும்பத்தாருடன் மிக்கி செட்டியும் அவர் துணைவியாரும் தங்கி இருந்தனர். காலையில் உணவு வேளையின் போது குறிப்பாக உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் தொடர் நடவடிக்கைகளைப் பற்றி பேசிக் கொண்டிருந்தோம்.ஜொஹான்னஸ்பெர்க் நகரில் வசிப்பவர்கள் மிக்கி செட்டி குடும்பத்தினர். காலை உணவு முடித்து அனைவருமாக ஜொஹான்னஸ்பர்க் திரும்பிச் செல்ல ஆயத்தமாகி இருந்தார்கள். டர்பனிலிருந்து ஜொஹான்னஸ்பெர்க் ஏறக்குறைய வடக்கு நோக்கி 600 கிமீ தூரம்.


திரு.மிக்கி செட்டியுடன்

தமிழ் பேசத்தெரியாவிட்டாலும் ஏனையோர் பேசுவதை மிக நன்கு புரிந்து கொள்ளும் திறமை படைத்தவர் திரு. மிக்கி செட்டி அவர்கள். தீராத தமிழ் தாகம் அவருக்கு இருக்கின்றது. வர்த்தகம் அவரது தொழில் என்ற போதிலும் தமிழ் சங்கங்களில் தம்மை நெடுங்காலமாக ஈடுபடுத்திக் கொண்டு பல தொண்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருபவர் இவர். இவர்து மனைவியாரும் மிக அன்பான பெண்மணி. சிறு குழந்தைபோல எல்லோருடனும் சிரித்து பேசி மகிழ்பவர். முதல் நாள் சின்னப்பன் குடும்பத்தாருடனும் திருமதி மிக்கியுடனும் சினிமா பார்க்கச் சென்றிருந்த போது என் மாலை நேரம் இவர்களுடன் பேசிக் களித்ததில் மிக மகிழ்ச்சியாகக் கழிந்தது.  மீண்டும் சந்திக்க வேண்டும் என்று உறுதி செய்து கொண்டோம். மிக்கி செட்டியின் குழந்தைகளும் பெற்றோருக்குச் சளைத்தவர்களல்ல. வந்திருந்த எல்லோரையும் அன்புடன் அரவணைத்து வேண்டிய எல்லா உதவிகளையும் உடனுக்குடன் செய்து கொடுத்து தம் சொந்தக் குடும்பத்தார் போல பார்த்துக் கொண்டனர்.  இப்போதுதான் சந்திக்கின்றோம் என்ற எந்த தயக்கமும் இல்லாமல் உறவினர் போல பழகும் தன்மை கொண்டவர்கள்  திரு.சின்னப்பன் குடும்பத்தாரும் திரு.மிக்கி செட்டி குடும்பத்தாரும்.


திருமதி. மிக்கி செட்டியுடன்


அவர்களுடன் பேசிக் கொண்டிருந்துவிட்டு விடைபெற்றுக் கொண்டேன். அடுத்து 2 நாட்கள்.. மீதமிருந்த நண்பர்களுக்கு நான் தான் பயண ஒருங்கிணைப்பாளர், வழிகாட்டி. இது ஒரு புதிய பொறுப்பு. இதனை ஏற்றுக் கொண்டதில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சி.

நான் இணையத்தில் தேடிப்பார்த்து டர்பனில் எந்தெந்த இடங்கள் செல்லலாம் என சில குறிப்புக்களைத் தயாரித்து வைத்திருந்தேன். அதில் சில அருங்காட்சியகங்கள், முக்கிய வரலாற்று இடங்கள், ஆலயங்கள் என்று இருந்தன. புற்று மாரியம்மன், டர்பன் முருகன் ஆகிய கோயில்கள் சென்று விட்டதால் ஏனைய பகுதிகளுக்கு செல்வது என திட்டமிட்டிருந்தேன். முதல் நாளே எங்களை அழைத்துச் செல்ல இரண்டு டாக்ஸிகளையும் தொலைபேசியில் அழைத்து ஏற்பாடு செய்து கொண்டேன். தங்கும் விடுதியில் நல்ல டாக்சி தொடர்பு ஏற்படுத்திதருமாறு கேட்டுக் கொண்டதால் அவர்கள் நம்பிக்கையான ஒரு டாக்ஸி ஓட்டுனரின் எண்ணை கொடுத்திருந்தார்கள். ஆக அவரை தொலைபேசியில் அழைத்து  ஒரு நாள் முழுதும் சுற்றிப் பார்க்க என்ற வகையில் மொத்தமாக எங்கள் அனைவருக்கும் ஒரு தொகையை நிர்ணயம் செய்து கொண்டேன். பயணச் செலவை அனைவரும் பகிர்ந்து கொள்வோம் என்றும் முடிவாகியது.

என்னுடன் இணைந்து கொண்டவர்களில் என்னுடன் ஜெர்மனியிலிருந்து வந்த இந்து, பிரான்சிலிருந்து வந்த நண்பர் சாம் விஜய், மலேசிய நண்பர்கள் சண்முகம், பொன்னி, ராமச்சந்திரன், அமுதா, ஜெயராமன், கனடா ராஜரட்னம் ஆகியோர் இருந்தனர்.  என்னுடன் சேர்த்து ஒன்பது பேர் இந்த சுற்றுலாவில். இரண்டு வாகனங்களில் பாதியாக பிரிந்து கொண்டோம். சரியாக காலை 9.30க்கு புறப்பட வேண்டும் என அனைவரிடமும் சொல்லியிருந்தேன். எல்லோரும்  குறிப்பிட்ட நேரத்திற்கு வந்து விட்டார்கள்.
டாக்சியோட்டிகள் இருவரும் டர்பன் தமிழர்களே. ஆனால் தமிழ் பேசத்தெரியாத தமிழர்கள். அந்த முழு நாள் பயணத்தையும் மிக்க அன்புடனும் அக்கறையுடனும் எங்களுடன் பேசி நாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கெல்லாம் எங்களை அழைத்துச் சென்று வழிகாட்டியாக இருந்து உதவினர்.

எங்கள் டர்பன் நகர பயணம் தொடங்கியது.
என் பட்டியலில் முதலில் இருந்தது மகாத்மா காந்தி 20 ஆண்டுகள் டர்பன் நகரில் வாழ்ந்த போது  அவர் தங்கியிருந்த இல்லம்.

தொடரும்...

சுபா

No comments:

Post a Comment