Saturday, April 18, 2015

விரும்பாமல் சென்று.. விரும்பிய டர்பன்..! -6

பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள  வந்திருந்த அனைவருக்குமே குதூகலம் மனம் முழுதும் நிறைந்திருந்தது என்றாலும் பட்டச் சான்றிதழை அந்தச் சிறப்பு மிக்க அரங்கில பல முக்கியஸ்தர்கள் முன்னிலையில் பெறக் காத்திருந்த மாணவர்கள் முகத்தில் தான் விவரிக்க முடியாத மகிழ்ச்சியும் பூரிப்பும் பெருமையும் குடிகொண்டிருந்தது. எப்போது அந்த பட்டமளிப்பு தருணம் வரும் என அவர்கள் ஆவலுடன் காத்திருப்பதை அவர்கள் முகத்திலேயே உணர முடிந்தது.



எங்களுக்கு உள்ளே சென்றதும் VIP  என்று பெயரிட்ட ஒரு அட்டையைக் கொடுத்து கழுத்தில் அணிந்து கொள்ளச் சொல்லி சிறப்பு பிரமுகர்களுக்கு ஒதுக்கபப்ட்ட முன் இருக்கைகளில் அமர வைத்தனர். குறித்த நேரத்தில் சிறப்பு விருந்தினர்களும் வந்து சேர நிகழ்ச்சி ஆரம்பமானது. எஸ்.ஆர்.எம் கல்லூரி வேந்தர், பின்னர் டாக்டர்.பொன்னவைக்கோ, திரு.மிக்கி செட்டி என ஒவ்வொருவராக தங்கள் உரையை ஆற்றினர். தங்கள் உரையில் எவ்வகையில் இந்த ஆசிரியர் பயிற்சி வகுப்பு சாத்தியமானது என்று விரிவாக எடுத்துரைத்தனர்.



அடுத்து பேச வந்த தென்னாப்பிரிக்க பாராளுமன்ற சட்ட சபை உறுப்பினர் திரு லூகி செட்டி அவர்கள் தோற்றத்தில் ஆப்பிரிக்க இனத்தவரைப் போல காட்சியளித்தாலும் அவர் தமிழர் தாம் என்பதை அவர் பெயரைக் கொண்டும் அவர் கூறிய தகவல்களைக் கொண்டும் அறிந்து கொண்டேன். இவருக்கு தமிழ் ஒரு வார்த்தையும் தெரியா விட்டாலும் தமிழ் சினிமா பாடல் இவருக்கு தமிழ் மொழி மேல் தீரா காதலையும் ஈர்ப்பையும் ஏற்படுத்தியிருக்கின்றது என்பதை அவரது பேச்சிலிருந்து உணர முடிந்தது.  பேச்சோடு நிறுத்திக் கொள்ளாமல் தமக்குத் தெரிந்த  ஒரு த மிழ்ப்பாடலையும் பாடினார். எங்கே அந்த வெண்ணிலா என்ற பாடலைப் பாடி அவையில் இருந்த அனைவரின் கைத்தட்டலையும் பெற்றார்.



தொடர்ந்து பேச வந்த தென்னாப்பிரிக்காவிற்கான இந்திய தூதர் திரு.ரங்கராஜன் அவர்கள் முதலில் தமிழ் தெரியாதவர் போல பேச ஆரம்பித்து பின்னர் இயல்பான தமிழில் பேசினார். தமிழரான இவரே தென்னாப்பிரிக்காவில் தூதரகத்தில் தமிழ் படிக்கும் மாணவர்களுக்கு இலவசமாக தமிழ் போதனை நடக்க ஏதாவது உதவிகள் செய்யலாம். ஆனால் செவதாக அறியமுடியவில்லை.




பட்டமளிப்பிற்குப் பின்னர் இலங்கை ​ தமிழ்த்தேசியக் கட்சியின் துணைத்தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. மாவை சோனாதிராஜா அவர்கள் பேச அழைக்கப்பட்டார். பேச்சின் போது ஒரு மனிதருக்கு எவ்வகையில் ஒழுக்கம் என்பது சிறந்த பண்பாக அமைகின்றது என்று நன்கு எடுத்துரைத்தார். தொடர்ந்து பேசுகையில் இலங்கையில் தற்போது தமிழ் மக்கள் இன்னமும் மீள் குடியேற்றம் செய்யப்படாமல் இருக்கும் நிலை பற்றியும் சில தகவல்கள் பேசத் தொடங்கினார். ஆனால் இப்பேச்சினை அவர் தொடர விடாத வகையில் இந்திய தூதர் நிகழ்ச்சி நடத்துனரை சைகை செய்து அழைத்து பேச்சை நிறுத்துமாறு கேட்டுக் கொள்ளச் செய்ததை மேடையின் கீழ் அமர்ந்திருந்த அனைவருமே பார்த்தோம்.




இலங்கை தமிழ் மக்களின் அகதிமிகாம்களின் நிலை பற்றிய செய்திகளை அவர் தொடர்ந்து சில நிமிடங்கள் பேச அனுமதிப்பதில் என்ன பிரச்சனை இருக்கின்றது என நண்பரக்ள் எங்களுக்குள் உரையாடிக் கொண்டோம். உலகின் ஒரு பகுதியில் தமிழ் மக்கள் மகிழ்ச்சியான சூழலில் நல்ல நிகழ்வில் பங்கெடுக்கும் அதே வேளை தங்கல் உடமைகளை இழந்து வசிப்பிடங்களை இழந்து தங்கள் தேசத்திலேயே அகதிகள் போல அகதி முகாம்களில்வாழும் தமிழர்கள் பற்றி ஒரு தமிழர்கள் கூடியிருக்கும் மேடையில் சில நிமிடங்கள் பேசக் கூடாதா..?  இந்தியத் தூதரின்  சைகை செய்து நிறுத்தச் சொல்லி கேட்டுக் கொண்ட இச்செயல் அவர் மேல்  கீழே அமர்ந்திருந்த பலருக்கு அதிருப்தியை உருவாக்கியது.

தொடர்வோம் டர்பனில்..

No comments:

Post a Comment