Wednesday, April 16, 2014

புத்தரின் பூமி....தாய்லாந்து! பயணத் தொடர் - 2

பயணம் ஆரம்பம்


டிசம்பர் 13ம் தேதி மதியம் இல்லத்திலிருந்து பயணப்பட்டு வாகனத்தை ஏர்ப்போர்ட் பார்க்கிங் பகுதியில் வைத்து அதற்கான பாதுகாப்பு கட்டணத்தையும் செலுத்தி அங்கிருந்து ஷட்டல் பேருந்தில் ஏறி ப்ராங்க்பர்ட் விமான நிலையம் வந்து சேர்ந்தேன். டிசம்பர் மாதம் வேறு என்பதால் குளிர் ஏறக்குறை 3டிகிரி செல்ஸியஸ் என இருந்தது. இந்தக் குளிர் பிரதேசத்திலிருந்து தப்பித்து மூன்று வாரங்கள் நன்கு வெயிலில் காயப்போகின்றேன் என்பதில் எனக்கு அலாதியான சந்தோஷம்.

தாய்லாந்தில் அரசியல் சூழல் இந்த வேளையில் கவலை தரும் வகையில் வேறு அமைந்திருந்தது. எதிர்க்கட்சி அணியினரின் தலைவர் தலைமையில் முக்கிய சாலையில் மக்கள் பேரணி, எதிர்ப்பு போராட்டம் என வேறு நிகழ்ந்து கொண்டிருந்தது.    ஆக தினம் தினம் தொலைக்காட்சி செய்திகளை நான்   உன்னிப்பாக கவனித்து, செல்லலாமா.. இல்லை இறுதி நேரத்தில் தடை செய்து விடுவோமா என  யோசித்துக் கொண்டிருந்தேன்.  பயண நாளும் நெருங்க கவலையையெல்லாம் தூக்கி போட்டு விட்டு பயணத்துக்கு ஆயத்தமாகி விட்டேன்

ப்ராங்க்பர்ட்டிலிருந்து ஏர் சைனா எடுத்து தாய்லாந்து செல்வதாக நான் பயண டிக்கட் போட்டிருந்தேன். எங்கள் பயணத்தில் 13ம் தேதி புறப்பட்டு மறு நாள் 14 மாலை தாய்லாந்து அடைவது என்றும் அதற்கு மறு நாள் காலை அதாவது 15ம் தேதி காலை ஒரு ஜெர்மானிய சுற்றுலா குழுவுடன் இணைந்து 13 நாட்கள தாய்லாந்து சுற்றுலா மேற்கொள்வது என்றும் ஏனைய நாட்களை நானே  சொந்தமாக திட்டமிட்டு கழிப்பது என்றும் முடிவாகியிருந்தது.

ப்ராங்பர்ட் ஏற்போர்ட்டில் ஏர் சைனா கவுண்டர் பகுதிக்கு வந்தால் அங்கே நீண்ட க்யூ. அதிலே பொறுமையாக நின்று   டிக்கட்டை எடுக்கும் போதே  கொஞ்சம் சந்தேகம் தோன்றியது. சீனர்கள் எல்லோரும் அளவில் சிறியவர்களாக இருக்கின்றனரே. விமான பயணிகள் சீட்டும் குட்டி குட்டியாக இருக்குமோ.. ஏறக்குறைய 9 மணி நேரம் முதலில் பீக்கிங்கிற்குப்  பயணிக்க வேண்டும். பின்னர் அங்கிருந்து அடுத்த விமானம் எடுத்து பாங்கோக் வந்து சேர வேண்டும். ஆக விமான இருக்கைகள் எப்படி இருக்குமோ என்ற கவலை மனதில் எழுந்தது.


பீக்கிங் நகரை நெருங்கும் சமயம், விமானத்திலிருந்து எடுத்த புகைப்படம்


உள்ளே வந்து பார்த்தால் ஆச்சரியப் பட வைக்கும் வகையில் நல்ல தாராளமான இருக்கைகள்  ஏர் சைனாவில். விசாலமான இருக்கை கிடைத்த மகிழ்ச்சி ஒரு புறம். அத்துடன் இதுவரை நான் சீனா சென்றதில்லை என்பதால் இந்த பயணத்தின் வழி பீக்கிங் நகரைக் கடந்து போகவிருக்கின்றோம் என்ற மகிழ்ச்சியும் ஒரு புறம்.


பீக்கிங் நகரை நெருங்கும் சமயம், விமானத்திலிருந்து எடுத்த புகைப்படம்
கீழே தெரியும் கட்டிடங்கள்

அழகானப் பணிப் பெண்கள் வந்து ஓரளவு உபச்சாரம் என்ற வகையில் சில பணிகளைச் செய்து விட்டு போயினர். கொடுமையான ஆங்கிலம் இவர்கள் பேசுவது. என்ன சொல்கின்றார்கள் என்பதை புரிந்து கொள்வதில் சிரமம் ஏற்பட்டதால் அடுத்து கேள்வியே கேட்க வேண்டாம் என முடிவு செய்து விட்டேன். என் கையில் DK Thailand Travel Guide  இருந்தது. அத்துடன் எனது iPadல் சில பிடிஎஃப் நூல்களையும் தரவிறக்கி வைத்திருந்தேன். இவற்றை எடுத்து கையில் வைத்துக் கொண்டேன். வாசித்துக் கொண்டே சென்றால் தாய்லாந்து வந்ததும் பயணத்தில் நன்கு பங்கெடுத்துக் கொள்ளலாம் என்ற முன் யோசனையுடன். தாய்லாந்துக்குச் செல்கின்றோம் எனும் போது ஓரளவு அந்த நாட்டையும், அதன் வரலாற்றையும், அதன் சிறப்புக்களையும் வாசித்து முன்னரே அறிந்து கொள்வதும் நம்மை தயார் படுத்திக் கொள்ள மிக உதவும் என்பது என் எண்ணம். எந்தத் தயாரிப்பும் இல்லாமல் செல்வதை நான் விரும்புவதில்லை. செல்லும் ஊர், அதன் சிறப்பு அம்சங்கள், அங்கு எதனை முக்கியமாகக் காண வேண்டும் என அறிந்து செல்லும் போது பயணம் பயனுள்ளதாக அமைவதை அனுபவத்தில் உணர்ந்திருக்கின்றேன்.பீக்கிங் நகரை நெருங்கும் சமயம், விமானத்திலிருந்து எடுத்த புகைப்படம்
ஆங்காங்கே தெரியும் சில உயர்ந்த நிலப்பரப்புகள்


விமானத்தில் கொடுத்த ஒரு உணவை சாப்பிட்டு பார்த்து அடுத்து விமானப் பணிப்பெண் எதைக் கொடுத்தாலும் சாப்பிடக் கூடாது என முடிவு செய்து கொண்டேன். ருசியற்ற ஒரு உணவு இவர்கள் தருவது.

குளிர் காலத்தில் ஜெர்மனிக்கும் சீனாவிற்கும் 7 மணி நேர வித்தியாசம். மாலை 19.15க்கு ப்ராங்பர்ட்டில் கிளம்பிய விமானம் 8900 கிமீ தூரம் பயணித்து  பீக்கிங் நகரில் உள்ளூர் நேரம்  காலை மணி 11.45க்கு தரையிறங்கியது. மனதில் குதூகலம் தான் என்றாலும் விரைந்து சென்று கனெக்டிங் ப்ளைட்டை எடுக்க வேண்டும் என்ற அவசரத்துடன் நான்  அவசரம் அவசரமாக ஓட்டமும் நடையுமாக சென்றேன். நான் மட்டுமல்ல தாய்லாந்து செல்பவர்கள் என்பதை என்னோடு ஓடிவந்த ஏனையோரையும் பார்த்த போது தெரிந்து கொண்டேன். அதில் ஒரு மகிழ்ச்சி.

​​
பீக்கிங் நகரை நெருங்கும் சமயம், விமானத்திலிருந்து எடுத்த புகைப்படம்
கீழே தெரியும் வயல் பகுதிகள், ஆறு.


பீக்கிங் விமான நிலையத்தில் பாஸ்போர்ட் கவுண்டரில் நின்று அங்கு விசா அனுமதி பெற்று செக்கீயூரிட்டி பகுதிக்கு ஓடிச் சென்று நின்றால் அங்கு நம்மை நிற்கவைத்து வீடியோவிலும் கேமராவிலும் புகைப்படமும் பதிவும் செய்து கொண்ட பின்னரே அங்கிருந்து அடுத்த விமானம் எடுக்க அனுமதிக்கின்றனர். ஆக சீனாவிற்கு வந்து சென்றோர் பயணிகள் ஆவணத்தில்  என்னுடைய புகைப்படமும் வீடியோ பதிவும் இணைந்து விட்டது என்பதும் ஒரு மகிழ்ச்சியான் விஷயம் அல்லவா? :-)

மதியம் 13.40க்கு பீக்கிங் நகரிலிருந்து நான் பயணித்த விமானம் தொடங்கி பாங்காக் நகரில் மாலை 18.35க்கு தரையிறங்கியது. விமானத்தில் கொடுத்த உணவை தவிர்த்து விட்டேன். பாங்கோக் சென்றதும் அங்கு தாய் உணவை ருசிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில்.

பாங்காக் வந்திறங்கியதும் ஒரு இனம் புரியாத குதூகலம் என் மனதில் ..

என் தாய்நாடான மலேசியாவுக்கு அருகில் வந்து விட்டோம் என்பது தானோ அது..!

தொடரும்..

1 comment:

Ranjani Narayanan said...

எந்த நாட்டிற்குச் சென்றாலும் அந்த நாட்டைப்பற்றிய சில தகவல்களையாவது அறிந்துகொண்டு போவது நல்ல பழக்கம் தான். நீங்கள் பார்ப்பதற்கு மட்டுமல்ல, எங்களுக்குச் சொல்லவும் உதவுமே!
தாய்நாடான மலேசியாவுக்கு அருகில் வந்துவிட்டோம் என்ற உங்கள் குதூகலம் எங்களையும் தொற்றிக் கொண்டது.

Post a Comment