Wednesday, November 12, 2003

Travelog - Basel, Swizerland 3 [6 - 10 Nov]



ஜெர்மனியில் ஆங்கிலப்படங்களை ஆங்கில மொழியிலேயே பார்க்க வாய்ப்பு கிடைப்பது குறைவு. காரணம் இங்கு வருகின்ற அனைத்து மொழி படங்களையும் மொழி மாற்றம் செய்து அதனை ஜெர்மானிய மொழியில் பேச வைத்து விடுவார்கள். திரைப்படங்களுக்கு மாத்திரம் இந்த கொடுமை இல்லை; மாறாக தொலைக்காட்சிகளில் ஒலிபரப்பு செய்யப்படுகின்ற எல்லா மொழி படங்களுக்கும் இதே நிலைதான். Harrison Ford-ன் வாயசைவுக்கு ஜெர்மானியர் ஒருவர் குரல் கொடுத்துக் கொண்டிருப்பார். இந்த பிரச்சனைகள் பொதுவாகவே சுவிஸர்லாந்தில் இல்லை; மாறாக எல்லா மொழிப் படங்களிலும் அதன் மொழியிலேயே தான் திரையிடப்படுகின்றன என மார்க்குஸ் சொல்லிக் கொண்டே எங்களை Freier Strasse வழியாக அழைத்து வந்தார். இந்த சாலையில் 10க்கும் மேற்பட்ட திரையரங்குகள் இருக்கின்றன. பார்க்கின்ற இடங்களிலெல்லாம், ஆங்கில, ப்ரான்ஸ், இத்தாலிய, ஜெர்மானிய படங்களின் விபரங்கள் போடப்பட்டிருந்தன.


பாசல் நகரத்தில் கேளிக்கைகளுக்குக் கொஞ்சமும் பஞ்சமில்லை என்பது தெரிந்தது. மக்கள் இரவு நேரத்திலும் 2 டிகிரி குளிரையும் பொருட்படுத்தாது நடந்து செல்வது எனக்கு போப்லிங்கனில் காணக்கிடைக்காத ஒரு காட்சியாகவே பட்டது. மாலை 9 மணிக்கெல்லாம் தூங்கி விடும் நகரம் போப்லிங்கன். பாசலை அதோடு நிச்சயமாக ஒப்பிட முடியாது. இரவு 12 மணிக்கும் இளைஞர்களும் சரி பெரியவர்களும் சரி சாலையோரங்களில் வேடிக்கைப் பார்த்து கொண்டு செல்கின்றனர்.




பொருளாதார ரீதியிலும் சுவிஸர்லாந்தின் மிகவும் முக்கியமான ஒரு நகரமாக பாசல் அமைந்திருக்கின்றது. கணினி தொழில் நுட்பம் மற்றும் ரசாயணப் பொருட்கள் உற்பத்தி போன்றவற்றில் ஐரோப்பாவிலேயே மிகப் புகழ்பெற்ற ஒரு நகரமாகத் திகழ்கின்றது பாசல். 1460ல் தொடங்கப்பட்ட பாசல் பல்கலைக்கழகம் இந்த நகரத்திற்குக் கிடைத்திருக்கும் மேலும் ஒரு சிறப்பு. மருத்துவம், சட்டம், உளவியல் போன்ற துறைகளில் மாணவர்களை உருவாக்கும் கூடமாகவும் இது அமைந்திருக்கின்றது என்றே சொல்ல வேண்டும்.

பாசல் நகரில் மட்டுமே 40க்கும் மேற்பட்ட தொல்பொருள்கூடங்கள் இருக்கின்றன. நகரின் மையைப் பகுதியிலும் சரி சற்று தள்ளிய பகுதியிலும் சரி பண்டைய நாகரிகத்தை விளக்கும் கூடங்கள், கலாச்சார மையங்கள் என சுற்றுப்பயணிகளைக் கவரும் பல இடங்களும் இங்கே இருக்கின்றன. சிவிஸர்லாந்திற்கு சுற்றுப்பயணம் வருபவர்கள் கட்டாயம் வருகை தரவேண்டிய ஒரு நகரம் பாசல்.

இப்படி பல விஷயங்களைப் பற்றி பேசிக்கொண்டே எங்களின் Data Center வந்து சேர்ந்தோம். மறு நாள் காலையில் செய்ய வேண்டிய வேலைக்கான ஏற்பாடுகளைச் செய்யலாமே என எங்கள் மடிக்கணினியை ஆரம்பிக்க மார்க்குஸ் எங்களிடமிருந்து விடைபெற்றுக் கொண்டார். சிறிய ஏற்பாடுகள் தானே என கணினியில் கையை வைத்த எங்களுக்கு ஏன் மாட்டிக் கொண்டோ ம் என சொல்லும் அளவுக்கு தொடர்ந்து நள்ளிரவு வரை வேலை அமைந்து விட்டது. எதிர்பார்க்காத நேரத்தில் தானே புதிய புதிய வேலைகள் தோன்றும்!

No comments:

Post a Comment