Thursday, November 13, 2003

Travelog - Basel, Swizerland 4 [6 - 10 Nov]



முதல் நாள் இரவு 2 மணி வரை வேலை நீடித்து விட்டாலும் காலையில் 8:00 மணிக்கு வேலையைத் தொடங்கவேண்டும் என்பதால் காலையிலேயே ஆயத்தமானேன். தங்கும் விடுதியின் உணவகத்தில் காலை உணவு சாப்பிட நுழைந்த போது எனக்கு முன்னரே பீட்டர் வந்திருந்தான். அவனோடு நானும் சேர்ந்து கொண்டேன். சுவிஸர்லாந்தின் எல்லா பகுதிகளிலும் இலங்கைத் தமிழர்களைக் காணமுடியும். பாசலும் அதற்கு விதிவிலக்கல்ல. எங்களுக்குத் தேநீர் வழங்க வந்த இளைஞர் ஒரு இலங்கைத் தமிழர். இந்திய முகச் சாயலோடு இருந்ததால் எனக்கு கொஞ்சம் அதிகமாகவே புன்னகையையும் தெரிவித்து கொண்டார்.


உணவை முடித்துக் கொண்டு கணினி அறைக்குச் செல்வதற்கு சற்று தாமதமாக ஆகிவிட்டது. எங்களுக்கு முன்னராகவே டேனியலும் ஸ்டெபானும் வந்திருந்தனர். அவர்களோடு பேசிக் கொண்டே ஒரு வழியாக நேரம் போவது தெரியாமல் வேலையில் மூழ்கிப் போனோம். திட்டமிட்டபடி வேலையை முடிக்க மதியம் 3 ஆகிவிட்டது. பாசல் நகருக்குள் சென்று சீன உணவு சாப்பிடலாம் என டேனியல் கூறியிருந்தான். டேனியலுக்கு இந்தப் பகுதி மிகவும் பழக்கமான ஒரு பகுதி. அவனது அலுவலகம் ஏறக்குறைய 5 km தூரத்தில் தான் இருப்பதனாலும் அவனது வேலைகள் பெரும்பாலும் இந்த கணினி அறையிலேயே அமைந்து விடுவதாலும் அவனுக்கு பாசல் ஒரு புதிய இடமில்லை தான்.

Mr.Wong சீன உணவகம் Freier Strasse-விலேயே இருக்கின்றது. உள்ளே நுழைபயும் போதே மிகப் பெரிய புத்தர் சிலை ஒன்று நம்மை வரவேற்கின்றது. மலேசியாவில் உடனுக்குடன் செய்து தரப்படும் மீ கோரேங் மாதிரி இங்கேயும் உடனுக்குடன் உணவு தயாரித்துத் தருகின்றார்கள். உணவின் தரமும் சுவையும் ஜெர்மனியை விட வித்தியாசமாக இருந்தாலும், விலையைப் பொருத்தவரை ஜெர்மனி எவ்வளவோ மேல் என்றே சொல்ல வேண்டும். எந்த வகை உணவை எடுத்துக் கொண்டாலும் 20 சுவிஸ் ப்ராங்கிற்கு கீழ் கிடைக்காது என்றே சொல்லலாம் (Golden M இதில் அடக்கம் இல்லை.. )



சாப்பிட்டு விட்டு, சற்று நேர ஓய்விற்காகச் சாலையில் வேடிக்கைப் பார்த்துக் கொண்டே கேளிக்கை விழா நடந்து கொண்டிருந்த பகுதிக்கு வந்து சேர்ந்தோம். திருவிழா என்று சொன்னால் பொதுவாக இளைஞர்களுக்கும் குழந்தைகளுக்கும் தான் கொண்டாட்டம். அதனை இங்கும் காண முடிந்தது.




பாசல் நகரம் வர்த்தகத்துறையில் மேம்பட்ட நவீன நகரங்களில் ஒன்றாக இருந்த போதிலும் பழங்கால சின்னங்களை நினைவு கூறும் வகையில் பழைய கட்டிடங்கள் தேவாலயங்கள் போன்றவற்றை பாதுகாப்பதிலும் குறை வைக்கவில்லை. சாலைகளின் பல மூலைகளில், 400 ஆண்டுகளுக்கும் மேம்பட்ட சில கட்டிடங்களை இன்றளவும் பாதுகாத்து வைத்திருக்கின்றனர். பழைய மாதிரிகளிலான இல்லங்களையும் ஆங்காங்கே காண முடிகின்றது. சாலையில் எங்கே பார்த்தாலும் மரங்கள்; இலையுதிர் காலமாகையால் இலைகளெல்லாம் மஞ்சளாகவும், சிகப்பாகவும் மாறிக் காட்சியளித்துக் கொண்டிருந்தன. கோடை காலத்தில் பச்சை பசேலென அழகாகத் தான் இருக்க வேண்டும் என நினைத்துக் கொண்டேன். Industrialisation, modernisation என்ற பெயர்களில் காடுகள் அழிக்கப்பட்டாலும் எல்லா இடங்களிலும் இயற்கைச் சூழலை திட்டமிட்டு உருவாக்கி பாதுகாத்து வரும் பாசல் நகர அரசாங்கத்தைப்
பாராட்டத்தான் வேண்டும்.

No comments:

Post a Comment