Monday, November 10, 2003

Travelog - Basel, Swizerland 1 [6 - 10 Nov]



சுவிஸர்லாந்தின் Basel நகரம் ஜெர்மனியின் எல்லையருகே உள்ள நகரங்களில் ஒன்று. அலுவலக வேலை காரணமாக நான் அங்கு சந்திப்புக்களுக்காகச் செல்வதுண்டு. சென்ற வியாழனன்று நான்கு நாட்களுக்கு Basel சென்றிருந்தேன். அலுவலக வேலையாக இருந்தாலும் இந்த நகரைச் சுற்றிப் பார்க்கக் கிடைத்த வாய்ப்பையும் வீணாக்க மனமில்லாமல் கிடைத்த நேரங்களில் நகர் வலம் வந்தேன். அந்த அனுபங்கள் இதோ சில நாட்களுக்கு.

எனது மேற்பார்வையில் இருக்கும் ஒரு நிறுவனத்திற்கு Storage Area Network என சொல்லப்படும் அதிநவீன தகவல் சேகரிப்பு தொழில்நுட்பத்தை அமைத்துக் கொடுக்கும் ஒரு திட்டத்திற்கு மேளாளராக பொறுப்பேற்றிருந்ததால் Basel நேரடியாக சென்று இந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டிய கட்டாயம். ஸ்டுட்கார்ட் நகரிலிருந்து Basel செல்வதற்கு ஏறக்குறைய 3 மணி நேரங்கள் தான் பிடிக்கும். எனது அலுவலகத்தின் Heidelberg கிளையில் வேலை செய்யும் நண்பன் பீட்டரும் இந்த திட்டத்தில் சில வேலைகளுக்குப் பொறுப்பேற்றிருந்ததால் அவனையும் Karlsruhe நகருக்குச் சென்று அழைத்துச் செல்ல வேண்டியிருந்தது. இப்போது இலையுதிர் காலம் அல்லவா? சாலைகளின் இரண்டு புறங்களிலும் கண்களை வலிக்கச் செய்யும் சிகப்பு நிறத்தில் மரங்களின் தோற்றம். காற்றின் வேகத்தில் இலைகள் பறந்து கண்ணாடியில் மோதும் போது கொஞ்சம் தடுமாறவும் வைத்தது.

3 மணி நேரத்தில் ஜெர்மனியின் எல்லையை தொட்டுவிட்டோம். இந்த எல்லைப்பகுதியில் ஒரு புறத்தில் ஜெர்மானிய எல்லை அதிகாரிகள் பாதுகாப்புக்காக நிற்கின்றனர். ஏறக்குறைய 1 km தூரத்திலேயே சுவிஸர்லாந்து அதிகாரிகள் கையில் துப்பாக்கியோடு நிற்கும் காட்சியை காண முடியும். ஏற்கனவே எனது மானேஜர் இந்தப் பகுதியில் 20 km/p மேல் காரை செலுத்தக் கூடாது என்று எச்சரிக்கைச் செய்திருந்தார். ஆக மனதில் சற்று எச்சரிக்கையோடே இந்த இடத்தைக் கடந்தோம். எங்களை சந்தோஷமாக வரவேற்பது போல ரைன் நதி அழகாக தென்பட்டது.

ரைன் நதியின் தொடர்ச்சியை ஜெர்மனியின் பல இடங்களில் ரசித்திருக்கிறேன். இந்தப்பகுதியிலும் சுவிஸர்லாந்தின் தனித்துவத்தோடு இந்த ஆற்றை ரசிக்க முடிந்தது. Basel ஒரு தொழில்துறை நகரம். எங்கு பார்த்தாலும் வர்த்தக நிறுவனங்கள். ஒரு வகையாக சற்று நேரத்தில் நாங்கள் செல்ல வேண்டிய இடத்தை அடைந்தோம். Basel நகரின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் Data Center என்று அழைக்கப்படும் கணினி அறைக்கு எங்களை அழைத்துச் செல்ல நண்பர்கள் காத்திருந்தனர்.




போப்லிங்கனில் பார்க்க முடியாத Tram பேருந்துகளை இந்த Basel நகரில் பார்ப்பதற்கு சந்தோஷமாக இருந்தது. வேலையை முடித்த பிறகு இந்த பேருந்தில் ஏறி சுற்றி வர வேண்டும் என மனதில் நினைத்துக் கொண்டேன். கணினி அறையின் எல்லா பாதுகாப்பு விபரங்களையும் எங்கள் இருவருக்கும் தெரிவித்துவிட்டு எங்களுக்குத் தரவேண்டிய அடையாள அட்டைகளையும் கொடுத்து விட்டு கணினி அறை அதிகாரிகள் சென்றவுடன் எங்கள் வேலையில் மூழ்க ஆரம்பித்தோம். தொடரும்...

No comments:

Post a Comment