Thursday, October 16, 2003

இத்தாலி - [Oct 3-5] - 11



Pisa விலிருந்து Florence செல்வதற்கு இரயிலிலேயே சென்று விடலாம். ஏறக்குறை 30 நிமிடங்கள் தான் தேவை. Florence மலைப்பாங்கான ஒரு இடம். மலைகள் சூழ்ந்த இந்த இடத்தில் பார்க்க வேண்டிய பல இடங்கள் இருக்கின்றன. ஆனால் என்னுடைய பயணத்தை ஞாயிற்றுக்கிழமையே முடித்துக் கொள்ள வேண்டிய நிர்பந்தம்
இருந்ததால் இங்கு அதிக நேரம் இருந்து பார்க்க முடியவில்லை.

Florence வந்த சில நிமிடங்களிலேயே அங்கிருந்து விமானம் வழி மிலான் புறப்பட வேண்டும். அதன் பின்னர் மிலானிலிருந்து Stuttgart வரவேண்டும். அதனால் Florence நகரைச் சுற்றிப்பார்க்கும் எண்ணத்தை சுத்தமாகக் கைவிடவேண்டிய நிலை வந்து விட்டது. Florence விமான நிலையத்தில் எதிர்பார்த்ததைவிட கூட்டம் அதிகம். விமானம் புறப்பட 10 நிமிடம் இருக்கும் வரை என்னுடைய டிக்கட் திக்கப்படவில்லை. அவசரத்தில் பதற்றம் அதிகரிக்கவே அதிகாரியிடம் சென்று எனது அவசரத்தைத் தெரிவித்தேன். உடனே அவர், எந்த பதற்றமும் இல்லாமல் எனது டிக்கட்டை சோதித்து அனுப்பிவைக்கவே, எனது Gate எண்ணைத் தேடி விரைந்தேன்.

அது ஒரு மறக்க முடியாத விமானப் பயனமாக ஆகிவிட்டது. இந்த Airitalia விமானம் சற்று சிறியது. அன்று வானிலையும் சரியாக இல்லை. பலத்த மேக மூட்டம், காற்று என்பதால் விமானம் மிக வேகமாக அதிர்வுகளைக் கொடுக்க ஆரம்பித்து விட்டது. எனக்கு 2 வரிசைகளுக்குப் பின்னால் அமர்ந்திருந்த ஒரு இத்தாலியப் பெண்மனிக்கு இதனைத் தாங்கிக் கொள்ள முடியாது ரத்த அழுத்தம் அதிகரித்து மூர்ச்சையாகி விட்டார். உடனே விமான முழுவதும் பதற்றம் அதிகரித்து விட்டது. அவருக்குத் தேவையான சிகிச்சை அளித்து விமானம் தரையிறங்கியவுடன் அவரை ஆம்புலன்ஸ் வரவழைத்து அனுப்பி வைத்தனர்.

மிலான் விமான நிலையத்தை அடைந்தவுடன் சற்று நேரமிருந்ததால் மிலான் நகரைச் சுற்றிப் பார்க்கக் கிளம்பினேன். விமானம் மாலை 7:40க்கு. ஆக இடையில் அவ்வளவாக நேரம் இல்லை.

நகரத்தின் சில பகுதிகளில் நடந்து விட்டு அங்கிருந்து டெக்ஸி எடுத்து மீண்டும் விமான நிலையம் வந்து Luftansa விமானத்தில் Stuttgart புறப்பட்டேன். 75 நிமிட பயணம் இது. விமான நிலையம் அடைந்து அங்கிருந்த S-Bahn இரயில் நிலையம் வரும்போது மணி இரவு 9:30ஆகிவிட்டது.

இத்தாலியில் இரயிலில் பயணம் செய்தபோது இருந்த கூச்சல் சத்தம் இங்கில்லை. ஆனால் இதனைப் பொய்யாக்கும் வகையில் ஒரு நிலையத்தில் சில இளைஞர்கள் ஏறினர். அனைவரும் குடி போதையில் இருந்தது அவர்களது நடையிலேயே தெரிந்தது. அதில் ஒருவனுக்கு நடக்கவே முடியவில்லை. இவனை தூக்காத குறையாக இழுத்து வந்து உட்கார வைத்தனர் அவனது நண்பர்கள். சற்று நேரத்தில் அவர்களில் ஒருவன் பக்கத்தில் அமர்ந்திருந்த என்னிடமும் எனக்குப் பக்கத்தில் இருந்த மற்றொரு ஜெர்மானியரிடமும் கொஞ்சம் பணம் கொடுக்கும் படி கெஞ்சினான். சில சில்லறைகளை நானும் கொடுத்தேன். எங்களிடம் பெற்றுக் கொண்டு அடுத்த வரிசையில் அமர்ந்திருந்தவர்களிடமும் அதே வசனம் பேசி சில்லறை சேர்க்க ஆரமித்தனர் இந்த இளைஞர்கள். மனிதர்களில் பல வகைகள். அதிலும் எல்லா வகையிலும் வாழ்க்கையில் வசதிகளையும் சௌகரியங்களையும் அனுபவிக்கும் நிலை இருந்தாலும் வாழ்க்கையைக் கெடுத்துக் கொள்ளும் இந்த இளம் தலைமுறையினரின் போக்கு வருந்தும் வகையில் தான் இருக்கின்றது. இதையெல்லாம் நினைத்துக் கொண்டு வீட்டை அடையும் போது இரவு 10:30 ஆகிவிட்டது.

இனிமையான இந்த 3 நாட்களில் கிடைத்த அனுபவங்கள் பல; இவை என்றும் மனதை விட்டு நீங்காதவை !

முற்றும்.

No comments:

Post a Comment