Thursday, October 9, 2003

இத்தாலி - [Oct 3-5] - 4




மாலை 3:30 மணியளவில் Rome நகரை வந்தடைந்தேன். 'Rome Centrale' இரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து ஏற்கனவே நான் இணையம் வழியாக பதிவு செய்திருந்த தங்கும் விடுதிக்குச் செல்ல ஆயத்தமானேன். Pisana Palace என்ற இந்த தங்கும் விடுதிக்கு எப்படிச் செல்லவேண்டும் என்ற சில குறிப்புக்களும் கொடுத்திருந்தார்கள். அதன்படி 'Rome Centrale' -லிருந்து Carolina நிலையத்தை மற்றொரு இரயில் மூலமாக அடைய வேண்டும். அதன் பின்னர் நடந்தே சென்று விடலாம் என ஓரளவு விளக்கம் தரப்பட்டிருந்தது. குறிப்பை வைத்துக் கொண்டு 0.77 செண்ட் கொடுத்து டிக்கெட்டைப் பெற்றுக் கொண்டேன். [ ஜெர்மனியின் இரயில்
கட்டணத்தை ஒப்பிடும் போது இது மிக மிக மலிவு.]

இந்த இரயில் ஏறக்குறைய 12 இடங்களில் நின்று விட்டு பின்னர்தான் Carolina வை அடையும். இடையில் Subaugusta என்ற ஒரு நிறுத்தமும் இருந்தது. ஆச்சரியம் தான். எனது பெயரிலும் Rome நகரில் ஒரு ஊர் இருக்கின்றதே என்று.. Carolina நிலையத்தில் இறங்கி நடக்க ஆரம்பித்தேன். Hotel Pisana Palace -ஐ காணவில்லை. அருகில் இருந்த கடையில் விசாரித்ததில் 889 என்ற எண் கொண்ட பஸ் எடுத்துச் செல்லவேண்டும் என்று குறிப்பிட்டார்கள். அந்த பஸ்ஸை எடுத்து ஓட்டுநரிடம் 'இந்த பஸ் Pisana Palace போகுமா' என்று விசாரித்தேன். அவருக்கு ஆங்கிலம் சுத்தமாகப் புரியவில்லை. அடுத்த நிறுத்ததில் இறங்கி 892 என்ற பஸ் எடுத்தால் செல்லலாம் என் அருகில் இருந்த மற்றொருவர் சைகை மொழியிலேயே தெரிவித்தார்.

அடுத்த இறக்கத்தில் இறங்கி 892 பஸ்ஸில் ஏறிக் கொண்டேன். பஸ் ஓட்டுநரிடம் 'Pisana செல்லுமா' என்று கேட்டு 'நிச்சயம் செல்லும்' என அவர் சொன்னதும் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. 4 நிறுத்தங்களுக்குப் பிறகு அவரிடம் மீண்டும் சென்று ஆங்கிலத்தில் எப்போது Pisana வரும் என்று கேட்டேன். அவருக்கு நான் சொன்னது புரியவில்லை. அடுத்த நிறுத்ததில் என்னை அழைத்து கதவை திறந்து விட்டு "இங்கே இறங்கிக் கொள்" என்று சொன்னார். Pisana வந்து விட்டது என்று நினைத்துக் கொண்டு சந்தோஷமாக இறங்கி சுற்றும் முற்றும் தேடினால் எனது தங்கும் விடுதியைக் காணவில்லை. என்னை நடு வழியிலேயே இறக்கி விட்ட அந்த பஸ் ஓட்டியை மனதிலேயெ திட்டிக் கொண்டு நடக்க ஆரம்பித்தேன்.


வழியில் ஒரு நபரிடம் விசாரித்ததில் பஸ் 881 தான் Hotel Pisana Palace வாசலில் நிற்கும் என்பதை அறிந்து அந்த பஸ்ஸில் ஏறிக் கொண்டேன். இந்த முறை யாரையும் ஒன்றும் கேட்கவில்லை. 'பஸ் எங்கே தான் போகிறது பார்க்காலாம்' என நினைத்துக் கொண்டு ஏறி அமர்ந்தேன், டிக்கெட் வாங்கிக் கொள்ளாமலேயே! [Rome நகர பஸ்களுக்குள் டிக்கெட் விற்கப்படுவதில்லை. வெளியே கடைகளில் 0.77 செண்ட் டிக்கெட் வாங்கிக் கொண்டால் 75 நிமிடங்கள் எங்கே வேண்டுமானாலும் பயணிக்கலாம் என்பதை பின்னர் ஹோட்டலில் தெரிந்து கொண்டேன்] என்ன ஆச்சரியம் 5 நிமிடங்களில் பஸ் Hotel Pisana Palace வாசலை அடைந்தது.



Pisana Palace ஒரு 4 நட்சத்திரத்திர தங்கும் விடுதி. மிக அழகாக வடிவமைக்கப்பட்டிருந்தது. எனது அறையின் சாவியை பெற்றுக் கொண்டு அறைக்குச் சென்று 15 நிமிடத்திற்குள் அவசர அவசரமாக குளித்து விட்டு ஹோட்டலில் விசாரித்து பஸ் டிக்கெட்டையும் பெற்றுக் கொண்டு Rome நகரைச் சுற்றிப் பார்க்கக் கிளம்பிவிட்டேன்.

No comments:

Post a Comment