
கோட்டை நுழைவாயில் உள்ளே நுழைந்ததும் முதலில் நம்மை வரவேற்பது வெள்ளை வெளேர் என இருக்கும் Cathedral. இதனை அழகான கோபுரத்தோடு வடிவமைத்திருக்கின்றனர். இந்த Cathedral -லின் சுவர்களிலும் கதவுகளிலும் அருமையான வேலைப்பாட்டுடன் அமைந்த சித்திரங்களையும் சிற்பங்களையும் காணமுடிகின்றது. Cathedral உள்ளே உள்ள கலைப்பொருட்கள் மற்றும் ஒவ்வொரு
தனிப்பட்ட அங்கங்களைப் பற்றிய விபரங்களை guide உதவியின்றி தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்திருக்கின்றனர். 2 தொலைபேசிகளை இணைத்த ஒரு ஒலிப்பேழை இருக்கின்றது. அதில் 1 EUR நாணயத்தை போட்டால் உடனே நாம் தேர்ந்தெடுக்கும் மொழியில் ஒவ்வொன்றுக்குமான விளத்தைத் தருகின்றது.

அடுத்ததாக Pisa கோபுரத்திற்குள் செல்வதற்காக 15 EUR கொடுத்து டிக்கட் பெற்றுக் கொண்டேன். ஒவ்வொரு 30 நிமிடத்திற்கு ஒரு முறை என ஒரு அதிகாரி வரிசையாக அனைவரையும் நிற்க வைத்து பார்வையாளர்களை அழைத்துச் செல்கின்றார். [பள்ளியில் படித்த காலங்களில் சுற்றுலா செல்லும் போது இப்படித்தான் செல்வது வழக்கம். பல ஆண்டுகளுக்குப் பின்னர் இங்கே கிடைத்த அனுபவம் அந்த பழைய அனுபவங்களை ஞாபகப்படுத்தியது. கோபுரத்தின் மேலே செல்ல குறுகலான ஒரு படி
இருக்கின்றது. ஒரு படியில் ஒருவர் தான் நிற்க முடியும். மேலே செல்ல செல்ல, ஒரு பக்கம் சாய்ந்து நடப்பதை உணரமுடிகின்றது. ஒவ்வொரு தளத்திலும் சிறிய அளவிலான ஜன்னல்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதிலிருந்து Pisa நகரைக் காண முடிகின்றது.

ஆகக் கடைசியான தளத்திற்கு வரும்போது காற்று மிக பலமாக வீசிக் கொண்டிருந்ததால் படிகளோடு ஒட்டியிருந்த இரும்புக்கம்பியை அனைவரும் இருக்கமாகப் பிடித்துக் கொண்டே ஏறி வந்தோம். பலமான காற்றை சமாளிப்பது என்பது ஒரு சிரமமான காரியம்தான். மேல் தளத்தில் சுற்றிலும் 4 பெரிய இரும்பு ஆலயமணிகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. ஒவ்வொன்றும் ஏறக்குறைய 200 kg எடையாவது இருக்கும் என்று நினைக்கின்றேன். மேலேயிருந்து பார்க்கும் போது இந்த நகரை முழுமையாகக் காணமுடியும். அவ்வளவு நுணுக்கமாக இதனை வடிவமைத்துக் கட்டியிருக்கின்றனர். பாதுகாப்புக்காக மேலேயே எப்போதும் ஒன்றிரண்டு காவல் அதிகாரிகள் எப்போதும் இருக்கின்றனர்.
Piazza Duomo அனைவரும் கட்டாயமாக பார்க்க வேண்டிய ஒரு அதிசயம் தான். இதன் அழகை வார்த்தைகளால் விபரிக்க முடியாது. நேராகப் பார்க்கும் போதுதான் அதனை உணர்ந்து ரசிக்க முடியும்.
ஏறக்குறைய 4 மணி நேரங்கள் இங்கே இருந்து விட்டு ஞாபகத்திற்காக சில நினைவுச்
சின்னங்களையும் வாங்கிக் கொண்டு புறப்பட்டேன் Florence நகரத்திற்கு. அன்று மாலை எனது திட்டப்படி Stuttgart திரும்பவேண்டும். தொடரும்....
No comments:
Post a Comment