Monday, October 6, 2003

இத்தாலி - [Oct 3-5] - 1



எனது பல நாள் ஆசைகளில் ஒன்று உலக அதிசயங்களில் ஒன்றான பீசா கோபுரத்தைப் பார்க்க வேண்டும் என்பது. ஜெர்மனிக்கு வந்து ஏறக்குறைய 5 ஆண்டுகளில் இதுவரை இத்தாலிக்கு நான் சென்றதில்லை. பல முறை முயன்றும் எதாவது ஒருதடை வந்து விடும். சென்ற வெள்ளி எனக்கு அலுவலகத்தில் விடுமுறை. ஜெர்மனியில் Reunification நாள் என்பதால் ஜெர்மனி முழுதும் இந்த நாளை கொண்டாடிக் கொண்டிருக்க நான் இத்தாலிக்கு பறந்து விட்டேன்.




இத்தாலிக்கு ஜெர்மனியிலிருந்து செல்வதென்றால் விமானம் வழி அல்லது சாலையின் வழி அல்லது இரயில் வண்டி மூலமாகச் செல்லலாம். 3 நாள் மட்டுமே விடுமுறை என்பதால் (சனி, ஞாயிற்றுக்கிழமையைச் சேர்த்துத் தான்) விமானம் வழி செல்வதுதான் சிறந்தது என்று முடிவு செய்து விட்டேன். ஐரோப்பாவில் இயங்கும் பல சுற்றுலா நிறுவனங்கள் மலிவு விலையில் விமான டிக்கெட்டுக்களை வழங்குவதைப் பற்றி ஏற்கனவே எனது மற்றொறு வலைப்பூவில் குறிப்பிட்டிருந்தேன் அல்லவா? ( 17 Sep. தேதி வலைப்பூவைப் பார்க்கவும்) அதில் ஒன்றுதான் Opodo நிறுவனம். இந்த நிறுவனம் ஜெர்மனியிலிருந்து, அதுவும் எனக்கு வசதியான, வீட்டிற்கு அருகாமையிலேயே இருக்கின்ற Stuttgart விமான நிலையத்திலிருந்து உலகம் முழுமைக்குமான விமான சேவைகளைச் சற்று மலிவான விலையில் தருகின்றார்கள். ஆக இந்த நிறுவனத்திலேயே டிக்கெட்டை வாங்கிக் கொண்டு விட்டேன்.


எனது திட்டம் Stuttgart நகரிலிருந்து Milan சென்று பின்னர் அங்கிருந்து Rome நகருக்குச் சென்று அங்கு ஒரு நாளை கழித்து விட்டு பின்னர் வடக்கு நோக்கி Pisa வந்து, பின்னர் Florence வந்து அங்கிருந்து மீண்டும் Milan வந்து அதன் பின்னர் Stuttgart திரும்புவது. மூன்று நாட்களுக்குள் இத்தனை நகரங்களுக்கும் சென்று பார்க்க வேண்டிய முக்கியமானவற்றைப் பார்த்து விட்டு வீடு திரும்ப வேண்டும் அல்லவா? மனதைக் கவர்ந்த இந்தப் பயணத்தைப் பற்றிய தகவல்கள் அடங்கிய படங்களையும் எனது இந்தப் பயண அனுபவத்தையும் வரும் நாட்களில் உங்களோடு பகிர்ந்து கொள்வேன்.

நாளை தொடரும்.....

No comments:

Post a Comment